பெரியார் ஒரு மகத்தான தத்துவம்.
மாண்புமிகு முதல்வர் திரு.எம்.ஜி.ஆர். தமிழ்நாடு அரசின் சார்பில் வெளியிடப்பட்ட தந்தை பெரியார் நூற்றாண்டு விழா மலரில் எழுதிய கட்டுரை
பெரியார் ஒரு தனி மனிதரின் பெயரல்ல. ஒரு நாட்டின் நூற்றாண்டு வரலாறு. மனித சமுதாயத்தின் ஒரு மகத்தான தத்துவம்.
உலகில் தோன்றி மறையும் கோடானுகோடி மனிதர்களில், மிகச் சிலரே இப்படி வரலாறாக, வாழ்க்கையின் தத்துவமாக வாழ்ந்து மறைகின்றனர்.இத்தகைய ஒரு பெருஞ்சிறப்பு, பெறற்கரிய பேறு, தமிழ் மண்ணிற்குக் கிடைத்தது.
உலகில் தோன்றி மறையும் கோடானுகோடி மனிதர்களில் மிகச்சிலரே இப்படி வரலாறாக வாழ்க்கையின் தத்துவமாக வாழ்ந்து மறைகின்றனர். இத்தகைய ஒரு பெருஞ்சிறப்பு பெறற்கரிய பெறு, தமிழ் மண்ணிற்கு கிடைத்தது. இந்த மண்ணிலேதான் பெரியார் பிறந்தார். “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்-புகழ் கொண்ட தமிழ்நாடு’’ என்று முழங்கினார் பாரதியார். அந்தத் தமிழகம்தான், இருபதாம் நுற்றாண்டின் இணையற்ற சிந்தனையாளரை, விடுதலை வீரரை, பகுத்தறிவுப் பகலவனை, புத்துலகச் சிற்பியை _ தந்தை பெரியாரை _ உலகிற்கு வழங்கியது.
ஆனால், துரதிருஷ்டவசமாக, அவர் தமிழகத்திலே பிறந்து விட்டதால், உணர வேண்டிய அளவிற்கு உலகம் அவரை உணர-வில்லை. ஏன் _ இந்தியத் துணைக் கண்டமே முழுமையான பெரியாரை, இன்னும் உணர-வில்லை என்பதைவிட, திட்டமிட்டு மறைத்தார்கள் என்றே கூறலாம். என்றாலும்
“காரிருளால் சூரியன்தான் மறைவ துண்டோ,
கறைச்சேற்றால் தாமரையின் வாசம் போமோ,
பேரெதிர்ப்பால் உண்மைதான் இன்மை யாமோ,
பிறர்சூழ்ச்சி செந்தமிழை அழிப்ப துண்டோ
சீரழகே, தீந்தமிழே பெரியோய் உன்னைச்
சிறையிட்டு மறைத்துவிட்டால் அழிந்தா போவாய்?”
என்று பாவேந்தர் பாரதிதாசன் கேட்டதைப்-போல், பெரியாரின் ஆற்றலை, அறிவை, அவர் உருவாக்கிய தத்துவத்தை முழுவதுமாக அழிக்க _ அல்லது மறைக்க _ அவர்களாலே முடிய-வில்லை. ஆனால், முழுமையான பெரியாரை, தமிழகத்தின் நீடுதுயில் நீக்கப் பாடி வந்த நிலவை,. உலகம் அறியச் செய்யும் முயற்சியில் இந்த ஆண்டில் தமிழக அரசும், தமிழ் மக்களும் ஈடுபட இருக்கிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசியலிலே நுழைந்த அவர், அரசியற் பணியின் அறுவடை, அரசுப் பதவிதான் என்று எண்ணி, அதிலே ஈடுபட்டிருந்தால், இன்று நாடு முழுவதும் இன்னும் அதிக அளவிலே அறிமுகமாகி இருப்பார்; பாராட்டும் புகழும் பல மடங்கு பெருகியிருக்கும். ஆனால், அவர் வாழ்க்கையை ஒரு போராட்டக் களமாக மாற்றி, வாழ்நாள் முழுவதும் சமூக அநீதிகளை எதிர்க்கும் போராட்ட வீரராகவே விளங்கி மறைந்தார்.
சீமான் வீட்டுப் பிள்ளையாகப் பிறந்தார்¢; சீமான்கள், செல்வாக்குப் பெற்றவர்கள் மட்டுமே, சொந்தமாக்கிக் கொண்டிருந்த நகராட்சி மன்றத்திலேதான் பொது வாழ்வைத் தொடங்கினார்; ஆனால், அரசியல் அவரை ஈர்த்தபொழுது, அஞ்சாநெஞ்சம் படைத்த விடுதலை வீரராய் நுழைந்தார்; போராட்டக் களங்களிலே தலைமை ஏற்கும் தளநாயகனாக விளங்கினார். ஆம் _ பெரியார் ஒரு பிறவித் தலைவர்!
ஆனால், விடுதலை இயக்கம், ஒரு காட்டாற்று வெள்ளம் போல் கரை புரண்டு ஓடியபொழுது, அந்த வெள்ளத்திலே அடித்துச் செல்லப்பட்ட ஆயிரமாயிரம் உண்மைத் தொண்டர்களுக்கு மத்தியிலே, குறுகிய உள்ளம் படைத்தோர் சிலரும் இடம் பிடித்து, தூய இயக்கத்தை தங்களின் சுயநலத்திற்குப் பயன்படுத்தும் தீய செயலைக் கண்டு, கொதித்தெழுந்தார்; கொடுமைகளைக் களைந்தெறியப் போர்க்கோலம் பூண்டார்; புரட்சிக் கனலாக மாறினார்.
மென்மையாக உடலைத் தீண்டி, மெய்சிலிர்க்க வைக்கும் தென்றல் காற்றல்ல பெரியார்; சுழன்றடிக்கும் சூறாவளி.
சல சல வென்று ஒலி எழுப்பி, கண்களுக்கு விருந்தாய், கானிலே வளைந்தோடும் சிற்றாறல்ல பெரியார்; பொங்கிப் பாயும் கங்கை நதி.
காண்போர் மனம் கவரும் வெள்ளிப் பனிமலையல்ல பெரியார்; வெடித்துச் சிதறும் எரிமலை.
ஆம்! அவர் சித்தார்த்தனாகத்தான் பிறந்தார். ஆனால், புத்தராக மாறவில்லை.
போர்க்கோலம் பூண்டார்; சமூக அநீதிகளை, அக்கிரமங்களை அழிக்கப் புறப்பட்டார்.
கொடுமைகளைக் கண்டு அஞ்சுவது கோழைத்தனம், ஒதுங்குவது ஈனத்தனம் என்று வீர முழக்கமிட்டார்.
ஒரு நூற்றாண்டுக்கால வீர வரலாறு படைத்தார்.
கொடுமைகள், அநீதிகள், ஆட்சியிலே இருந்தாலும் சரி _ அரசியலில் இருந்தாலும் சரி _ சமுதாயத்தில் இருந்தாலும் சரி _ தனிமனித வாழ்க்கையில் இருந்தாலும் சரி _ எதிர்த்து ஒழிக்கப்பட்டாக வேண்டும் என்று முழங்கினார்.
சமுதாயத்திலே உள்ள அநீதிகளுக்கு எல்லாம் அஸ்திவாரம், ஜாதி, சமய பேதங்கள் _ மூடநம்பிக்கை முறைகள் என்று உணர்ந்தபொழுது அந்த அஸ்திவாரத்தையே தகர்க்கப் போரிட்டார்.
இப்படி வாழ்நாள் முழுவதும் போராட்ட வீரராகவே தன்னை மாற்றிக் கொண்டார். எடுத்துக் கொண்ட முயற்சிகள் எதிலுமே, தனக்கென்ன இலாபம் என்று எண்ணிப் பார்க்காததால்; யாருடைய தயவுக்கும் தாட்சண்யத்திற்கும் அவர் காத்து நிற்கவில்லை; அவருடைய சிந்தனை முழுவதும் தமிழ்-நாட்டைப் பற்றியே இருந்தது; தமிழ் மக்களைப் பற்றியே இருந்தது; பொதுவாக மனித இனத்தைப் பற்றியே சுழன்றது.
மலைகளைப் பிளந்து, காடுகளை அழித்து நல்ல கழனிகளாக்கும் முயற்சியிலே ஈடுபட்டார்.
அதனால் பாறைகளைப் பிளக்க வெடிவைத்துத் தகர்ப்பதைப் போல், காடுகளை அழிக்க, புதர்களை, மரங்களை வெட்டி வீழ்த்துவது போல், அவர் கையாண்ட வழி முறைகளும் இருந்தன. அந்த வழி முறைகளைக் கண்டு மருண்டவர்கள் பல பேர்.
ஆனால், அவர் அடித்தளம் அமைத்துக் கொடுத்ததற்குப் பிறகுதான் இன்றைக்கு நாம் கட்டிடம் எழுப்பிக் கொண்டிருக்கிறோம். அவர் பாறைகளை அகற்றிப் பாதை அமைத்ததற்குப் பிறகுதான், நாம் பயணம் செய்து கொண்டிருக்-கிறோம்.
இவ்வளவும் ஏற்படுத்திக் கொடுத்த அவர், அந்த மாளிகையில் வாழ நினைக்கவில்லை; அந்தப் பாதையில் சொகுசான பயணம் செய்ய விரும்பவில்லை. ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று எப்பொழுதோ, யாரோ சொன்ன வார்த்தைகட்கு உயிரளித்தார்; அதற்கு ஒரு இலக்கியமாய் வாழ்ந்தார்.
“பெரியார் மட்டும் பிறக்காவிட்டால்!’’ என்ற கேள்வியை எண்ணிப் பார்க்கவே, இதயம் நடுங்குகிறது. பெரியார் இல்லையானால், பேரறிஞர் அண்ணா நமக்குக் கிடைத்திருக்க மாட்டார். பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் இல்லை யானால், இருண்டு கிடந்த தமிழ்நாட்டிற்கு ஒளி கிடைத்திருக்காது.
இன்றைக்குத் தமிழ்நாடு, தமிழ்ச் சமுதாயம், தமிழ் மொழி என்று எக்காளத்தோடு பேசுகிறோமே, இவைகளெல்லாம் ஊமையன் கண்ட கனவாக, கேட்பாரற்று மங்கி, மறைந்து போயிருக்கும். விடுதலைப் போராட்ட வெள்ளத்திலே அடித்துச் சென்று, தமிழ் இனம் _ மொழி _ கலை _ கலாச்சாரம் என்ற சுவடே தெரியாமல் அழிக்கப்பட்டிருக்கும்.
செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே…’’
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்’’
“கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே
வாளொடு முன்தோன்றி மூத்த குடியினர்’’
என்ற இலக்கியப் பெருமைகளெல்லாம், காற்றோடு கலந்து, காலத்தோடு மறைந்திருக்கும். அதனால்தான் 1967ஆம் ஆண்டு தமிழகத்திற்கு, அமரர் பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல்வரானவுடன், நன்றி மறவாமல், “இந்த அரசையே பெரியாருக்குக் காணிக்கையாக்குகிறேன்’’ என்று அறிவித்தார்கள்.
ஆனால், நமக்காக, இவ்வளவு பெருமை-களையும் காப்பாற்றுவதற்காக அறுபதாண்டுக் காலத்திற்கு மேல் உழைத்தார்; போராடினார். அந்தப் போராட்டத்தில் வெற்றி பெற்ற வீரராக, வெண்தாடி வேந்தர் பெரியார் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அந்த வரலாற்று நாயகனுக்கு, தத்துவத்தின் தந்தைக்கு, பகுத்தறிவுப் பகலவனுக்கு இந்த ஆண்டு செப்டம்பர் 17ஆம் நாள் நூறாவது ஆண்டு துவங்குகிறது. வாழ்நாளெல்லாம் நமது நல்வாழ்வுக்காகப் போராடிய அந்த மாவீரனுக்கு, தமிழகம் விழா எடுக்கத் திட்டமிட்டிருக்கிறது.
பேரறிஞர் அண்ணா அவர்கள் காணிக்கை-யாக்கிய தமிழக அரசு, இப்பொழுது அமைந்துள்ள, “அண்ணாவின் அரசு’’, அதிகாரப்பூர்வமாக, ஆண்டு முழுவதும் விழா எடுக்க எண்ணியுள்ளது. விழாவோடு நின்று விடாமல், பெரியாரின் இலட்சியங்களை _ ஜாதி, மதமற்ற, சமத்துவ சமுதாயத்தை _ ஏழை பணக்காரன் என்ற பேதமற்ற சமதர்ம சமுதாயத்தை அமைக்கும் பணிகளை _நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்-கிறோம் என்ற செய்தியைத் தமிழக அரசின் சார்பில், தந்தை பெரியாருக்குக் காணிக்கை-யாக்குகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக