புதன், 16 அக்டோபர், 2024

விஞ்ஞானமும் சனாதனமும்… தந்தை பெரியார் …

 


2024 கட்டுரைகள் பிப்ரவரி 16-29, 2024 பெரியார்

இன்றைய கூட்டம் வெளியில் மைதானத்தில் நடந்து இருக்கவேண்டும். பல காரணங்களால் அனுமதி கிடைக்காததனால் இங்கு ஏற்பாடு செய்து உள்ளார்கள். கன்னடத்தில் பேசவேண்டும் என்று சிலரும், தமிழில் பேசவேண்டும் என்று கோருபவர் பலரும் அவர்கள் ஆசைப்படுகின்றார்கள். இது பெரிதும் தமிழ் மக்கள் அழைப்பின் பேரில் வந்துள்ளதால் தமிழில் பேசுகின்றேன்.
தலைப்பு “விஞ்ஞானமும் சனாதனமும்” என்று தலைப்பு கொடுத்துள்ளார்கள். இதற்கு தமிழில் ஏற்ற சொல் இல்லை. இதற்கு தமிழில் நான் உணர்ந்தவரை “அறிவும், அறியாமையும்” என்று சொல்லலாம். பகுத்தறிவும் மூடநம்பிக்கையும் என்று சொல்லலாம். சுயமரியாதையும் புராண மரியாதையும் என்று சொல்லலாம். அவ்வளவு கருத்துகள் அதில் அடங்கி இருக்கின்றது.

விஞ்ஞானத்தின் காரணமாக சினிமா,ரேடியோ, மின்சாரம் போன்ற அரிய சாதனங்கள் எல்லாம் அறிவின் – ஆராய்ச்சியின் காரண
மாகக் கண்டுபிடிக்கப்பட்டு நடைபெறுகின்றது.

சனாதனம் என்பதற்கு அது எதைக் கண்டுபிடித்தது என்ற சொல்ல முடியாது. கடவுள், மதம், சாஸ்திர சம்பிரதாயங்களை விளக்குவது; அதன் மூலம் மக்களை மடமையாக்குவது என்ற அளவில்தான் நடைபெறுகின்றது.

விஞ்ஞான வளர்ச்சி ஏற்பட்டது காரணமாகத்தான் உலகம் வளர முடிகின்றது. சனாதனமே நிலைத்து இருந்திருக்குமானால் உலகமே தேய்ந்து இருக்கும்.
சுமார் 500, 600 ஆண்டுகளுக்கு முன்பு உலக ஜனத்தொகை சுமார் 45 கோடிதான் ஆகும். இன்றைக்கு சமார் 400 கோடியாக வளர்ந்து உள்ளது.
சுமார் 20 ஆண்டுக்கு முன்பு பெங்களூர் ஜனத்தொகையே 5 லட்சம்தான். மதராஸ் ஜனத்தொகை சுமார் 6 லட்சம். இன்றைக்கு பெங்களூர் ஜனத்தொகை சுமார் 16 லட்சம். சென்னை ஜனத்தொகை சுமார் 25 லட்சம் ஆகும்.

எனவே, உலக வளர்ச்சிக்குத் தடையாக இருந்து வந்தது சனாதன தர்மமாகும். இதன் காரணமாகத்தான் மக்கள் ஆராய்ச்சி அறிவு அற்றவர்களாக மூடநம்பிக்கை உடையவர்களாக ஆகி இருந்த காரணமாகத்தான் மனித சமுதாயத்தில் அறிவு, பண்பு வளர்ச்சி ஏற்படவே இல்லை.
சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு 45 கோடியாக இருந்த உலக ஜனத்தொகையாக இன்றைக்கு 400 கோடியாகப் பெருகி இருக்கும்போது அதற்கு முன்பு 10 லட்சம் 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே உலகம் இருந்தும் ஏன் வளர்ச்சி அடையவில்லை? காரணம் மக்கள் அறிவு, பண்பு வளர்ச்சி அடையவில்லை என்பது தானே பொருள்?

இன்றைக்கு மக்கள் சமுதாயம் வளர்ச்சி அடைந்து வரக்கூடிய வேகத்தைப் பார்த்து அரசாங்கம் மக்கள் தொகை வளர்வதை கட்டுப்படுத்த கர்ப்பத்தடைப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார்கள்.

இப்படி கர்ப்பத்தடை பற்றி அவசியம் வேண்டும் என்று நாங்கள் 25 ஆண்டுகளுக்கு முன்பே இருந்து கூறிவருகின்றோம். ஆரம்பத்தில் முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களும், சனாதனிகளும் எதிர்த்தார்கள்.

ஆனால், எங்கள் பிரச்சாரத்தின் பயனாக அரசாங்கமே இன்றைக்கு கர்ப்பத்தடைக்கு ஏற்பாடுகள் செய்யவும் முற்பட்டு உள்ளது.
சுமார் 10 ஆண்டுக்கு முன்புவரை நமது மக்களுடைய சராசரி வயது 32தான். காமராஜரின் 10 ஆண்டுகால நல்லாட்சியின் காரணமாக இன்றைக்கு மக்களுடைய சராசரி வயது 50ஆக உயர்ந்து உள்ளது.

அரசாங்கம், சுகாதார வளர்ச்சி, மருத்துவம் முதலியவைகளில் நாட்டம் செலுத்தியதன் காரணமாக மக்கள் அற்ப ஆயுளில் இறப்பது கம்மியாகியுள்ளது.
எப்படி இந்த நிலை? சனாதனம் தோற்றது, விஞ்ஞானம் வளர்ச்சியுற்றதன் காரணமாக மக்களுடைய ஆயுட்காலம் வளர்ந்து உள்ளது.
காமராஜர் திட்டம் (K Plan) முழுமையும் வெற்றி பெற்றுவிடுமானால் மக்களுடைய சராசரி வயது சுமார் 80க்கு அல்லது 100க்கு மேல் ஆகிவிடும். விஞ்ஞான வளர்ச்சி, மேற்கொண்டும் தடையின்றி வளர்ந்தால் மக்களுடைய சராசரி வயது 100 என்ன 150 ஆகக் கூட உயர்ந்துவிடும். ஏன் 150 வயது வாழ முடியாது? சேற்றினால் கட்டப்பட்ட கட்டடத்தினை கண்ணாம்பால் கட்டி தேக்குமரத்தையே உபயோகப்படுத்திச் செய்தால் 200 வருஷம் நிலைத்திருக்கும் என்கின்றார்கள். இப்படி இருக்க மனிதன் ஆயுள்காலம் நீளும்படியாக வசதி செய்தால் ஏன் வயது வளரமுடியாது?

முன்பு காலரா கண்டவர்கள் இறந்தார்கள். இன்றைக்கு காலரா கண்டவர்கள் 100 பேர் என்றால் 10 பேர்கள் கூட சாவதில்லையே! அந்த அளவுக்கு வைத்திய வசதி ஏற்பட்டு உள்ளது.
நோய்க்கு வைத்தியம் பார்க்கவேண்டும் என்பவன் விஞ்ஞானி; கர்மத்தின்படி நடக்கும் என்று கருதி கடவுளை வேண்டிக்கொண்டு சும்மா இருப்பவன் சனாதனி ஆவான். காய்ச்சல் வந்தால் முன்பு வைத்தியனிடம் போவதற்குப் பதில் கோயிலுக்குச் சென்று பூசாரியிடம் குறி கேட்பார்கள்; இன்றைக்கு அந்த நிலையானது மாற்றம் அடைந்துவிட்டது.
இப்படி எல்லாம் மாறுதல் அடைந்துவரும் மனிதன் கடவுள் விஷயத்திலோ, மத விஷத்திலோ பேச ஆரம்பித்தால் நாத்திகன் என்கின்றான்.
இன்றைக்கு உலகில் பல நாடுகளும் மூடநம்பிக்கையை விட்டு, சனாதனத்தை விட்டு அறிவியலில் நம்பிக்கை வைத்து அறிவுகொண்டு பல அரிய அற்புத சாதனங்களை எல்லாம் கண்டுபிடிக்கின்றன.

நாம் மற்ற நாட்டில் கண்ட விஞ்ஞான சாதனங்களை அனுபவிக்கின்றோமே ஒழிய, நாமாக ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை. காரணம், நாம் பழமையினை மாற்றிக் கொண்டு புதுமையில் நம்பிக்கை வைக்காததே காரணமாகும்.

விஞ்ஞானத்தின் பெருமையினை நாம் பார்க்கின்றோமே. அமெரிக்கா எத்தனை ஆயிரம் மைலுக்கு அப்பால் இருக்கின்றது. அங்கிருந்து ஜான்சன் பேசினால் அதே நேரத்தில் நாம் இங்கு ரேடியோ, டெலிஃபோன் போன்ற சாதனங்களால் கேட்க முடிகின்றதே – பார்க்கமுடிகின்றதே! எப்படி முடிகின்றது? இடையில் யாராவது காயத்திரி மந்திரம் ஜபிக்கின்றானா? வேதம் ஜபிக்கின்றானா? எப்படி முடிகின்றது?

இன்றைக்கு சனாதன தர்மத்தை வைத்துக் கொண்டு என்ன அக்கிரமம் வேண்டுமனாலும் பண்ணலாம், ஒழுக்கக் கேடாக துரோகமாக வேண்டு
மானாலும் நடக்கலாம்; ஆராயக்கூடாது. ஆராய்ந் தால் நாத்திகன் என்பார்கள்.
இராமாயணம் 20 லட்சம் வருஷத்துக்குமுன் நடந்ததாக புராணம் கூறுகின்றது. ஆனால், அந்த இராமாயணத்தில் 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த புத்தன் சங்கதி கூறப்பட்டு உள்ளது. எப்படி புத்தன், 20 லட்சம் வருஷத்துக்கு முன்பு வாழ்ந்த இராமாயணத்தில் வரமுடியும்? முட்டாள்தனமாக எழுதி இருக்கின்றான்.
இராமன் தனது வாயாலேயே கூறுகின்றான் – மனிதன் 100 வயதுவரைதானே வாழ வேண்டியவன் என்று ஒரு சந்தர்ப்பத்தில் கூறி இருக்கின்றான்.
ஆனால், இராமனுடைய அப்பனுக்கு 60,000, அவன் பெண்டாட்டிகளுக்கு எல்லாம் 60,000 வயது என்று கூறப்பட்டு உள்ளதே! இவன்கள் எல்லாம் சாதாரணமான மனிதர்கள் தானே? எப்படி இத்தனை ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து இருக்கமுடியும்?
புராணம் எழுதியவன்- முட்டாளாகவும், காட்டுமிராண்டிகளாக மக்கள் இருந்த காலத்திலும் எழுதியவை ஆகும் இந்தக் கதைகள்!

அறிவுக்கு மரியாதை ஏற்பட்டு இருக்குமானால் நமது நாட்டில் உள்ள கடவுள், மதம், சாஸ்திரம், முன்னோர்கள் நடப்பு இதுகள் நிலைத்து இருக்க முடியுமா?
எனவே, மனிதனுக்குப் பகுத்தறிவில்தான் நம்பிக்கை இருக்கவேண்டும். மூடநம்பிக்கையை ஒழிக்கவேண்டும். பழமையினை விட்டு ஒழிக்க வேண்டும்.
நமது நாட்டில் நமது மதம் இந்துமதம் என்று கூறப்படுகின்றது. இப்படி இந்துமதம் என்ற ஒரு மதம் கிடையாது. எதிலும் இதற்கு ஆதாரம் இல்லை.
மக்களையெல்லாம் பிற்காலத்தில் மனதைக் கலைத்து ,குழப்பி அடிமைப்படுத்தி வைக்கக் கண்டுபிடிக்கப்பட்ட சொல்தான் இந்துமதம் என்பது. இப்படிப்பட்ட முட்டாள்தனமான மதம் உலகில் எங்குமே கிடையாது. கிறிஸ்துவ மதத்தை எடுத்துக்கொண்டால் கிறிஸ்து ஏற்படுத்தியது; ஆதாரம் பைபிள்; வருஷம் 1964 ஆகின்றது.
முஸ்லிம் மதத்தை எடுத்துக் கொண்டால் 1400 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டது; ஆதாரம் குரான்;
முகமது நபியால் செய்யப்பட்டது.

இப்படி இந்து மதத்தைச் செய்தவர் யார்? எப்போது ஏற்பட்டது? என்ன ஆதாரம்? என்று கூற வகையே இல்லையே?
என்னுடைய வேலை மக்கள் சமுதாயத்தைத் திருத்துகின்ற வேலை. எனக்கு மதமோ, கடவுள் நம்பிக்கையோ, நாட்டுப் பற்றோ, மொழிப்பற்றோ கிடையாது. சமுதாய வளர்ச்சிப்பற்று ஒன்றுதான் உண்டு.
100 வருஷத்துக்கு முன்னமேயே நாம் அறிவுக்கு மதிப்புக் கொடுத்து நடக்க ஆரம்பித்து இருப்போமேயானால் எவ்வளவோ வளர்ந்து இருப்போம்.

(16.11.1964 அன்று பெங்களூர் சிட்டியில் பெரியார் ஆற்றிய உரை.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக