புதன், 2 அக்டோபர், 2024

ஏன் வேண்டும் தமிழிசை?

ஏன் வேண்டும் தமிழிசை?



- தந்தை பெரியார்

தமிழன் தான் நுகரும் இசையை 'தமிழில் இசை தமிழில் பாடு தமிழர்களைப் பற்றித் தமிழர்களுக்கு ஏற்றதைத் தமிழர்களுக்குப் பயன்படுமாறு பாடு' என்கின்றான். இதை யார்தான் ஆகட்டும். ஏன் ஆட்சேபிக்க வேண்டும்? ஏன் குறை கூறவேண்டும் என்று கேட்கிறேன். அதிலும் தமிழன் இப்படிக் கேட் பதை தமிழனால் தமிழனல்லாதவன் என்று கருதப்பட்டவன் ஏன் மறுக்க வேண்டும்? இது மிக மிக அதிசயமானதும் தமிழனால் மிக மிக வருந்தத்தக்கதுமாகும். தமிழன் தமிழ் மக்கள், தமிழில் பாட்டுக் கேட்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். பணம் கொடுப்பவன், தனக்குத் தமிழ்ப் பாட்டுப் பாடப்படவேண்டு மென்று ஆசைப்படுகிறான்; பாட்டுக் கேட் பவன் தமிழில் பாட்டுப் பாடவேண்டும் என்று ஆசைப்படுகிறான் இந்த ஆசையில் பழந்தமிழர் அல்லாதார் அதை மறுக்கவோ, குறை கூறவோ, குற்றம் சொல்லவோ எப்படி உரிமையு டையவர்கள் என்று கேட்கிறேன்.

தமிழரென்றும், தமிழரல்லாதவர் என்றும் பேதம் பாராட்டக் கூடாது' என்பதாகத் தமிழர்களுக்கு அறிவுரை கூறும் இந்தப் பெருமான்களே, 'தமிழில் பாடவேண்டும் என்பது பொதுநலத்துக்குக் கேடு, கலைக்குக் கேடு, கலை நலத்துக்குக் கேடு' என்று சொல்ல வந்தால் இவர்கள் உண்மையில் தமிழர் தமிழரல்லாதவர் என்கின்ற உணர்ச்சியைக் குறையச் செய்பவர்களா?, அல்லது நெருப்பில் நெய்யை ஊற்றி எரியச் செய்யும்படியான மாதிரியில் வளரச் செய்பவர்களா? என்று கேட்கிறேன். அன்றியும், இப்படிப்பட்ட இவர்கள் தங்களைத் தமிழர்களென்று சொல்லிக் கொள்ளக்கூடுமா? காது, கண் மனம் ஆகியவை எல்லா விஷயங்களுக்கும்

எல்லாருக்கும் ஒன்றுபோல் இருக்க முடியாது என்பது அறிஞர் ஒப்ப முடிந்த விஷயமாகும்.

'தமிழில் பாடு' என்றால், சிலர் - அதுவும். ஒரு வகுப்பாரே பெரிதும் ஆட்சேபணை சொல்ல வந்ததாலேயே, 'தமிழ் இசை இயக்கம்" வகுப்புத் துவேஷத்தையும் உண்டு பண்ணக் கூடிய இயக்கமாகவும், பலாத்காரத்தை உபயோகித்தாவது தமிழ் இசையை வளர்க்க வேண்டிய இயக்கமாகவும் ஆகவேண்டியதாய் விட்டது.

'இத்தனை பெரியவர்கள் எதிர்ப்பும். தமிழரல்லாதவர்களின் பத்திரிகைகளின் எதிர்ப்பும் ஏற்பட்ட பிறகேதான் இது ஒரு இயக்கமாக விளங்க வேண்டியதாயும். சில இடங்களில் பாட்டுப் பிழைப்புக்காரர்களை நிர்ப்பந்தப்டுத்தி, பயமுறுத்தித் தமிழில் பாடச் செய்ய வேண்டியதாயும், பாட்டுப் பிழைப்புக் காரர்கள் சில இடங்களுக்குப் போகும்போது பந்தோபஸ்துக்கு ஆட்களைக் கூட்டிக்கொண்டு போகவேண்டியதாயும் ஏற்பட்டுவிட்டது. பாட்டுப் பிழைப்புக்காரனான சிலர்மீது தமிழர்களுக்கு வெறுப்புக்கூட ஏற்படும்படி நேர்ந்துவிட்டது. கூடிய சீக்கிரத்தில் இசைக் கலை வியாபாரம் தமிழர்கள் அல்லாதவர்களை விட்டு விலகினாலும் விலகிவிடலாம் அல்லது. அவர்களே அதை விட்டு விலகினாலும் விலகிவிட நேரிடலாம் என்றுகூடக் கருத வேண்டியதுமாகிவிட்டது. 

பொதுவாகச் சொன்னால், இந்த நிலை யானது நாட்டின் நலத்துக்கும் ஒற்றுமைக்கும் ஏற்றதல்ல என்றே சொல்லுவேன். இன்று தமிழனின் நிலைமை 'தமிழன் அன்னிய மொழியைக் கற்கவேண்டும்' என்று  சொல்வது தேசாபிமானமும் நாட்டு முற்போக்கு இயல்கலை அபிவிருத்தியாக ஆகிவிடுகிறது.

-உண்மை இதழ், 1-15, ஜனவரி, 2008 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக