செவ்வாய், 1 அக்டோபர், 2024

இனி மகான்கள் தோன்ற மாட்டார்கள் ஏன்? ஏன்? ஏன்?



- தந்தை பெரியார்

றிவில்லாத காலத்திலே காட்டுமிராண்டி தன்மையில் ஆழ்ந்திருந்த காலத்திலே -

அரசனுக்கு. மதிப்பு கொடுத்தோம்-

ஜமீன்தாரனுக்கு மதிப்பு கொடுத்தோம்-

செல்வனுக்கு, பணக்காரனுக்கு மதிப்பு கொடுத்தோம்.

ரிஷிக்கு கொடுத்தோம்- 

மதிப்பு இது மாத்திரமா? அவதாரத்திற்கு மதிப்பு கொடுத்தோம்-

தெய்வீகத்தன்மை பொருந்தியவனுக்கு மதிப்பு கொடுத்தோம்- 

மகான்களுக்கு, மகாத்மாவுக்கு மதிப்பு கொடுத்தோம்- குருமார்களுக்கு மதிப்பு கொடுத்தோம்-

ஸ்தலத்திற்கு மதிப்பு கொடுத்தோம்- தீர்த்தத்திற்கு மதிப்பு கொடுத்தோம்- மந்திரத்திற்கு மதிப்பு கொடுத்தோம்-

ஜோசியத்திற்கு மதிப்பு கொடுத்தோம்-

சூனியம் செய்யப்படுவதற்கு மதிப்பு கொடுத்தோம்- அரசியல், சமுதாய இயல் தலைவர்களுக்கு மதிப்பு கொடுத்தோம்.

"நிபுணர்"களுக்கு மதிப்பு கொடுத்தோம்.

இவர்கள் எவ்வளவு மோசடிக்காரர்களாக, அயோக்கியர்களாக, போலி வேஷ தாரிகளாக, பித்தலாட்ட சுயநல பிழைப்புக்காரர்களாக இருந்தாலும், அவர்கள் விளம்பரங்களையும் செல்வாக்கையும் பணம் முதலிய உதவி பெருமை பெறுவதையும் பார்த்து மதிப்பு கொடுத்தோம்.


இந்த முப்பது வருஷ கால பகுத்தறிவு பிரசாரமும், விஞ்ஞான வளர்ச்சியும் மக்களுக்கு இவைகளில் உள்ள நம் பிக்கை, மூடநம்பிக்கை, கண்மூடித்தனமாக பக்தி மரியாதை காட்டுவது, பின்பற்றுவது என்பவை பெரிய அளவுக்கு மறைந்து வருகிறது.

இனி அரசன், தெய்வீகம், தலைவர், பிறவி நிபுணர் முதலிய எவரும் தோன்றமாட்டார்கள்.

அனுபவத்தில் பார்த்தாலும் இந்தத் தன்மை உடையவர்கள் எல்லாம் செத்து மடிவதில் அந்தத் தன்மைகளும் அவர்களோடேயே செத்து மடிந்து மறந்து வருகின்றன.

நம் நாட்டில் இன்று அரசர் எங்கே, மகான்கள் எங்கே, அரசியல் தலைவர் எங்கே, சமுதாயத் தலைவர் எங்கே, நிபுணர்கள் எங்கே உற்பத்தி ஆகிறார்கள்?

புத்தருக்குப்பின் புத்தர் இல்லை. கிறிஸ்துவுக்குப் பின் கிறிஸ்து இல்லை. மகமதுவுக்குப் பின் மகம்மது இல்லை.

ஆயிரத்து அய்நூறு ஆண் டுகளாக மதத் தலைவர்கள் மதத்தை உண்டாக்கினவர்கள், உண்டாக்குகிறவர்கள் தோன்றவே இல்லை.

புராண இதிகாசங்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், சித்தி பெற்ற பெரியார்கள் தோன்றவே இல்லை.

நாம் அறிய தெய்வீக அற்புத அதிசயங்களும் தோன்றவில்லை.

இவை எப்படியோ போகட்டும், ஸ்தாபனங்கள் இருக்கிறபோது, கொள்கைகள் இருக்கிறபோது அவைகள் தேவை இருக்கிறபோது அவைகளுக்கு அதுபோன்ற தலை வர்கள் ஏன் தோன்றுவதில்லை?

இராமகிருஷ்ணருக்குப்பின் 'இரா' எங்கே? விவேகானந்தருக்குப்பின் 'விவே' எங்கே? இவர்கள் போன்றவர்கள் தோன்றவில்லையா? தோற்றுவிக்கப்படவில்லையா? அல்லது இனி தோற்றுவிக்க முடியாமல் போய்விட்டதா?

அப்படித்தானே வரிசையான தென்னாட்டு திராவிட சமுதாயத்தில் தோன்றிய தலைவர்கள், நாயர், தியாகராயர்,பனகல், பன்னீர்செல்வம், சி.டி.நாயகம் போன்ற வர்கள் மறைந்ததற்குப் பின் இவர்களுக்கு பதில் எங்கே? 'பெரியார்" மறைந்த பிறகு பெரியார் யார்?

அப்படியே காங்கிரசில் தான் ஆகட்டும் மோதிலால்நேரு, லஜபதி, திலகர், பெசண்டு முதலியவர்களுக் குப்பின் அந்த இடங்களுக்குப் பதில் எங்கே? இப்போது இந்த 2,3 ஆண்டுகளில் மறைந்த காந்தி மகாத்மா, ரமணரிஷி, அரவிந்தபகவான் என்பவர்களுக்கு பதில் எங்கே?' 

ஸ்தாபனங்கள் இருக்கின் றன, செல்வங்கள் இருக்கின் றன, "கொள்கைகள்" இருக்கின்றன. ஆள்கள் ஏன் தோன்றவில்லை? ஜின்னாவுக்குப் பதில் ஆளைக் காணோமே- ஏன்?

பார்ப்பனர்களின் சமுதாயப் பாதுகாப்புக்கு, பொது வாழ்வு பெயரால் தலைவர்கள் ஆன சதாசிவ அய்யர், சிவசாமி அய்யர், சீனிவாச சாஸ்திரி போன்றவர்களுக்குப் பதில் அந்த சமுதாயத்திற்கு பின் வாரிசு எங்கே?

இப்போதுதான் ஆகட்டும்; சி. ராஜகோபாலாச்சாரியார், சர். சி.பி. ராமசாமி அய்யர், டி.ஆர். வெங்கட்ராம சாஸ்திரியார் முதலிய இவர்களுக்குப் பின் அந்த சமுதாயப் "பாதுகாப்புக்கு" ஆள்கள் எங்கே?

பண்டித ஜவஹர்லாலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி "தலைமைக்கு" ஆள் எங்கே? வைத்தியத்தில் குருசாமி முதலியார், லட்சுமணசாமி முதலியார், சடகோப முதலியார், சுந்தரவதன முதலியார் ஆகியவர்களுக்கு அப்புறம் வைத்திய "நிபுணர்" எங்கே? வக்கீல் பதவியில் அல்லாடி, எதிராஜ், டி.ஆர். வெங்கட்ராம சாஸ்திரி ஆகியவர்களுக்குப் பிறகு "கெட்டிக்கார” வக்கீல் எங்கே? ஜி.டி. நாயுடுவுக்குப் பிறகு தொழில் "நிபுணர்" எங்கே? 

இவ்வளவு ஏன்; பர்னாட் - ஷாவுக்குப் பிறகு பர்னாட்ஷா - தோன்றவில்லை.

சாக்ரடீஸ், பிளேட்டோ, சன்யெட்சென், இங்கர்சால், மார்க்ஸ், ஏன்ஜல்ஸ் இவர் களுக்குப்பின் இவர்கள் போன்றவர்கள் எங்கே?

'எனவே, இனி அதிசய மனிதர், குறிப்பிடத் தகுந்த மனிதர், இல்லாமல் முடியாத மனிதர்கள் தோன்ற மாட்டார் கள்.

தோன்ற மக்கள் விடமாட் டார்கள். காரணம் என்ன?

அதுபோன்ற ஆட்கள் இப்போது ஏராளம் என்பது ஒன்று.

மக்கள் அந்தப்படி மரியாதை கொடுக்க மாட்டார்கள் என்பது இரண்டு.

நாட்டில் இது சம்பந்தமாக இருந்துவந்த கட்டுப்பாடு, ஒழுக்கம் மரியாதை குலைந்துவிட்டதாலும், பிரிவினை, பொறாமை அதிகமாகி விட்ட தாலும், பலர் சேர்ந்து ஒருவருக்கு மரியாதை காட்ட மாட்டார்கள் என்பது மூன்று.

ஆராய்ச்சி சுதந்தரத்தின் காரணமாக, கடவுள், தெய் வீகம் என்பவைகளின் தன் மையே வெளியாகி வருவதால் கண்மூடிபின்பற்றும் மவுடீகம் மறைந்துவிடுவது நான்கு ஆகிய இவைகளால்தான் இனி நாட்டில் தெய்வீக மக்கள் பெரியார்கள், தலைவர் கள், அறிஞர்கள், நிபுணர்கள் என்பவர்களை சமீபத்தில் தோன்றவோ, தோற்றுவிக் கவோ முடியாத நிலை ஏற் பட்டுவருகிறது.

ஆனால் இந்தப்படியான நிலை ஏற்பட்டது. ஏற்படுவது நல்லாதா என்றால் நல்லதல்ல; தீமையுங்கூடத்தான். ஆனால் இந்தத் துறையில் அதிகமான அளவுக்கு, கேடு ஏற்படும்படியான அளவுக்கு, மதவாதிகளும், சூழ்ச்சிக் காரர்களும் சேர்ந்து மோசமான அளவுக்கு கற்பனை செய்து மக்களை ஏமாற்றி சூதும், வஞ்சகமும் செய்துவிட்டதன் காரணமாய் இந்தப் புரட்டு உச்சிக்குப் போய்விட்டதன் பயனாய்; இனி மேலே போவதற்கு இல்லாமல் கீழே இறங்குகிறது.

அதன் பலன்தான் இந்த நிலைமை.

உதாரணமாக,

எந்தக் கரரணத்திற்கு ஆக என்ன உண்மைக்கு ஆக காந்தி, மகாத்மா வாக்கப்பட்டார்?

 ரமணர் ரிஷியாக்கப்பட்டார்? 

அரவிந்தர் பகவான் ஆக்கப்பட்டார்?

சாயபு சாய்பாபா ஆக்கப்பட்டார்?

 இவர்களால் மக்களுக்கு ஒழுக்கத்திற்கு ஏற்பட்ட நலம் என்ன? இப்படியே போனால் மனித சமுதாயம் என்ன ஆவது? பழைய காட்டுமிராண்டி ஆக வேண்டாமா, ஆதலால் இந்த நிலை ஏற்பட்டது, கேட்டை விட நன்மை அதிகத்திற்கே.

- விடுதலை நாளேடு, 08.02.1953

- விடுதலை ஞாயிறு மலர், 21.01.2001

















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக