செப்டம்பர் 16-30

கவிஞர் கலி.பூங்குன்றன்

பேதமற்ற இடம்தான் மேலான திருப்தியான இடம் என்றார் தந்தை பெரியார். அந்தப் பேதம் எந்த வடிவத்தில் வந்தாலும் பெரியாரிடம் மரண அடி வாங்கும்!

மற்ற மற்ற இடங்களில் எல்லாம் பேதம் பளிச்சென்று தெரியும். பாமர மனிதன்கூட அதனைக் களைய வேண்டும் என்று கனைப்பான்!

 

அதே பேதம் கடவுள் பெயரில், மதத்தின் வடிவில் சாத்திர சம்பிரதாய சாக்கில் வந்தால் சகலத்தையும் பறிகொடுத்து சாஷ்டாங்கமாக அவற்றிற்கு அடிபணிவான்.

இந்த நிலைக்கு ஆளானவனின் கண்ணுக்கு நண்பர்கள் யார்? பகைவர்கள் யார் என்ற அடையாளம் தெரியாது _ தெரியவே தெரியாது.

தந்தை பெரியார் இந்த மனிதர்களிடத்தில்தான் போர்ப் பரணி பாடினார். மனிதன் மூளையைக் கவ்விப் பிடித்த பக்தி என்னும் விலங்கிலிருந்து இவனை விடுவிக்காதவரை இவன் விளங்கப் போவதில்லை என்பதைத் திண்ணமாகத் தீர்மானித்தார்.

புலி வேட்டைக்கு போகிறவன் கடிபடத்தான் நேரிடும். பாம்பு பிடிக்கிறவன் கதையும் அதுதான்.
அல்லல் வரும், இன்னல் துரத்தும், இழப்புகளும் நேரிடும் என்றாலும் இந்தப் பணியை நான் செய்தே தீருவேன் என்று தீரமான முடிவெடுப்பவர்கள் எத்தனைப் பேர்? அப்படி முடிவெடுத்து வென்றவர்களின் கணக்கு உண்டா?

பெரும்பாலும் இல்லை என்பதுதான் விடையாகக் கிடைக்கும்!
அதிலும் பெரும்பாலும் வென்றவர் என்ற கிரீடம் தந்தை பெரியார் அவர்களுக்கு மிகுதியும் உண்டு.
ஜாதி ஏன் என்று கேட்டார் _ கடவுளைக் காரணம் காட்டினார்கள். நீ ஏன் படிக்க வேண்டும்? எனக்கு ஏன் அந்த உரிமை இல்லை என்று கேட்டார். மதத்தைக் காட்டினார்கள். மதத்தை எதிர்க்கக் கூடாதா என்று கேட்டார். சாஸ்திர சம்பிரதாயங்களை விளக்குப் போட்டுக் காட்டினார்கள்.

தந்தை பெரியார் அவர்களுக்கு ஒன்று தெளிவாகவே புரிந்துவிட்டது. மூலவேரை அழிக்காமல் இந்த மூளைகெட்ட மனிதர்களைக் கரை ஏற்ற முடியாது என்ற முடிவுக்கு வந்து _ அந்த மூர்க்கமான போர்க்களத்தில் தன்னையே நம்பிக் குதிக்கவே செய்தார்.

புத்தர் தொடங்கினார். ஓரளவு வெற்றியும் பெற்றார். ஆனாலும், அவரின் மார்க்கத்தை ஊடுருவி ஒழித்தனர் _ விரட்டினர். புத்தம் தோன்றிய மண்ணில் காட்சிசாலையில் காணும் பொருளாகிவிட்டது அது.

சித்தர்கள் பாடினார்கள். கந்த மூலாதிகளை உண்டு காட்டுக்குள்ளேயே தங்கள் வாசத்தை வைத்துக் கொண்டார்கள்.

புலவர்கள் அங்குமிங்கும் பாடி வைத்துச் சென்றனர். பிள்ளை பிழைத்த பாடில்லை.

பெரும்பாலான அரசர்கள் ஆரியத்தின் கைக்கூலி என்ற நிலைக்கு ஆளாகிய அவலம்தான். அவர்கள்தான் ராஜகுருக்கள். அவர்கள் வைத்தால் குடுமி, சிரைத்தால் மொட்டை என்ற ராஜ பரிபாலனம்தான்.

மனுநீதிச்சோழன் என்று ஒருவன் தனக்குப் பட்டம் சூட்டிக் கொண்டான். அதையே பெருமையாகக் கருதினான் என்றால், நம் மன்னர்கள் எந்த அளவிற்கு அறிவுச் சோரம் போனவர்கள் என்பதை அறியலாம்.

நமது மன்னர்கள் கல்விக் கழகங்களைக் கண்டனர் என்று கதையளக்கலாம்; கண்டனர் -_ உண்மைதான்; ஆனால், அது யாருக்குப் பயன்பட்டது? அதுதானே முக்கியம்?

11ஆம் நூற்றாண்டில் சோழ அரசன் தென்னாற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த எண்ணாயிரம் என்னும் ஊரில் கல்விக் கழகம் கண்டான். 140 மாணவர்கள் பயின்றனர். 14 ஆசிரியர்கள் அமர்த்தப்பட்டனர். 45 வேலி நிலம் அக்கல்லூரிக்கு அளிக்கப்பட்டது. அதெல்லாம் சரி. அங்கு சொல்லிக்கொடுக்கப்-பட்ட பாடங்கள் என்ன? வேதங்களும், சமஸ்கிருத இலக்கணமும்தான்.
பாண்டிச்சேரிக்கு அருகே திருபுவனத்தில் இதேபோல ஒரு கல்விக்கழகம். 260 மாணவர்கள், 12 ஆசிரியர்கள். கற்பிக்கப்-பட்டவையோ மனுதர்ம சாஸ்திரம்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவாவடுதுறையில் ஒரு கலைமன்றம். சொல்லிக் கொடுக்கப்-பட்டவைகளோ சாரகசமிதை, அஷ்டாங்க இருதய சமிதை.

எல்லாம் சமஸ்கிருத மயம்தானே. இந்தத் தமிழ் வேந்தர்களைத்தான் நம் நாட்டுப் புலவர் பெருமக்களும் இலக்கியப் ‘பிழைப்பாளர்களும்’, அரசியல்வாதிகளும் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு தை தை ஆட்டம் போடுகின்றனர்.

தந்தை பெரியாருக்கு இந்தச் சோரம்போன சோழ வேந்தர்கள் உள்ளிட்ட மூவேந்தர்கள் மீது மூண்டெழுந்தது சினத்தீ என்றால், அதில் அறிவுடைமை ஓங்கி நிற்கவில்லையா?

கண்ணுக்கு எட்டியவரை கல்வி என்பது கானல் நீராக இருந்த வரலாற்றில் திராவிடர் இயக்கம்தானே வாராது வந்த மாமணியாய் வந்துதித்தது?

டாக்டர் சி.நடேசனாரின் திராவிட சங்கமும், வெள்ளுடை வேந்தர் முன்னின்று முடுக்கிய தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற நீதிக்கட்சியும் இங்குக் கால்பதிக்கவில்லை என்றால், கால் பதித்த அந்த இயக்கத்தைத் தாய்ச் சுவராக நின்று தந்தை பெரியார் அடைக்காக்கத் தவறியிருந்தால், இந்தக் கல்வி விளைச்சலும் ஏது, ஏது? ஒரு கணம் எண்ணிப் பார்க்க வேண்டாமா? தாழ்த்தப்பட்டவர்களைப் பள்ளியில் சேர்க்காவிட்டால் மானியம் ரத்து, தாழ்த்தப்பட்டவர்களை பேருந்தில் ஏற்றாவிட்டால் உரிமம் ரத்து என்பதெல்லாம் சாதாரணமானதுதானா?

வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்ற சட்டத்தை நீதிக்கட்சி கொண்டுவந்ததற்காக காலாகாலத்திற்கு பிர்மாவின் காலில் பிறந்ததாக ஆக்கப்பட்ட மக்கள், அய்ந்தாம் ஜாதியாக விரட்டப்பட்ட மக்கள் நன்றி பாராட்ட வேண்டாமா?

மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற சூழ்ச்சியை என்னவென்று சொல்வது! தந்தை பெரியார் அவர்களின் சினம் அன்றைய சென்னை மாநிலப் பிரதம அமைச்சர் பனகல் அரசர் மூலம்தானே தணிக்கப்பட்டது.

அன்றைக்கு அந்த நிபந்தனையை நெட்டித்தள்ள வில்லையென்றால் இன்று குப்பன் எம்.டி, சுப்பன் எம்.எஸ். என்ற பெயர்ப் பலகைகளை வீதிகளில் காண முடியுமா?

இரண்டு முறை ஆச்சாரியார் (ராஜாஜி) சென்னை மாநில ஆட்சிக்கு வந்தாரே -_ உடம்பெல்லாம் மூளை என்று வருணிக்கப்-பட்ட அந்த ‘மாமேதை’ என்ன செய்தார்? இரண்டு முறையும் இருந்த பள்ளிகளை இழுத்து மூடினார். 1938இல் 2500 கிராமப் பள்ளிகளை மூடினார் என்றால், 1952_54 இடையே 6000 பள்ளிகளை மூடியதோடு முடிந்துவிடவில்லை.

அரை நேரம் படித்தால் போதும். மீதி அரை நேரம் அவனவன் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும் என்று சட்டம் செய்யவில்லையா? பிற்பகலில் ஆசிரியர்களின் பணி என்ன தெரியுமா? அப்பன் தொழிலை பிள்ளைகள் ஒழுங்காக செய்கிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.

ஒற்றை சொல்லில் ஒழித்துக்கட்டினார் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தந்தை பெரியார். இது தொழில்கல்வியல்ல _ ‘குலக்கல்வி’ என்றாரே பார்க்கலாம்.

அந்த ஒற்றைச் சொல் என்ற பூகம்பம் ஆச்சாரியாரின் அரசியல் வாழ்க்கையையே அஸ்தமிக்கச் செய்தது.

ஆட்சியை விட்டே ஓடினார். அவரை விரட்டியடித்தவர் பெரியார் என்பதுதான் சரியான கணிப்பாகும்.
விரட்டப்பட்ட ஆச்சாரியாரைத் தொடர்ந்து அந்த முதல் அமைச்சர் ஆசனத்தில் காமராசரைத் தேர்வு செய்து அமர்த்தியதும் தந்தை பெரியார்தானே.

கல்வி ஓடை கரைபுரண்டு ஓடச் செய்யப்பட்டதே! காமராசர் வாயைத் திறந்தாலே பள்ளிக்கூடம், பள்ளிக்கூடம் என்ற பேச்சுதானே! கல்விக் கண்ணைத் திறந்த காமராசர், பச்சைத் தமிழர் காமராசர் என்று தந்தை பெரியார் தோளில் தூக்கிக் காட்டியதன் விளைவைத் தமிழர்கள் அனுபவித்தனரே!
பள்ளிகளில் கடவுள் வாழ்த்துப் பாடாதீர் _ காமராசர் வாழ்த்துப் பாடுங்கள் என்று தந்தை பெரியார் சொன்னார் என்றால் அதன் தன்மையைத் தமிழர்கள் கொஞ்சம் எண்ணிப் பார்க்கட்டும்.

இன்றைக்கு இந்தியத் துணைக் கண்டத்தி-லேயே 69 சதவீத இடஒதுக்கீட்டை சட்டப்படி தமிழ்நாட்டு மக்கள் அனுபவிக்கிறார்கள். அதனைத் தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் சாதித்துக் காட்ட முடிந்தது என்றால், அதற்குக் காரணம் அறிவுலக ஆசான் போட்டுக் கொடுத்த அஸ்திவாரம்தானே!

தந்தை பெரியார் காலத்திலேகூடக் கிடைக்கப் பெறாத மத்திய அரசுத் துறைகளில் கல்வி, வேலை வாய்ப்புகள் பிற்படுத்தப் பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு இந்தியா முழுதும் இன்று கிடைத்துள்ளது என்றால், அது தந்தை பெரியார் அவர்களால் உருவாக்கப்பட்ட திராவிடர் கழகம், அடையாளம் காட்டப்பட்ட  திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அல்லவா அடிப்படைக் காரணம்.

சமஸ்கிருதப் படையெடுப்பு என்றால், புதிய கல்வித் திட்டம் என்றால் மத்திய அரசின் இந்தப் பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்கும் முழக்கம் தந்தை பெரியார் பிறந்த தமிழ்நாட்டிலிருந்துதானே கிளம்ப வேண்டியுள்ளது.

தந்தை பெரியார் உடலால் மறைந்திருக்-கலாம். உணர்வால் ஒடுக்கப்பட்ட மக்களின் உள்ளங்களில் எல்லாம் நிறைந்திருக்கிறார். விடுதலைக் கிளர்ச்சி என்ற போர்க் குணத்தால் ஒளிவிட்டுக் கொண்டுதானிருக்கிறார்.

எங்கெங்கெல்லாம் அடிமைத் தளைகள் அறுபட, ஆதிக்கச் சக்திகளின் ஆணிவேர் எரிக்கப்பட, புரட்சிகர எண்ணங்களும், உணர்வுகளும் தேவைப்படும் நிலையில் தந்தை பெரியார் தேவைப்படுபராகிவிட்டார்.

பெரியார் பன்னாட்டு மய்யம் என்ற அமைப்பால் மட்டுமல்ல _ புத்தாக்கத்தின் புரட்சி மாற்றமேற்பட  தேவைப்படுகிறார்.

அவை பெரியார் சிந்தனைகளாகவே இருக்கின்றன.

மதம் யானைக்குப் பிடித்ததோடு இருக்கட்டும் _ மனிதனுக்கு வேண்டவே வேண்டாம் என்பதே மதமற்ற உலகுக்கான திறவுகோல் தந்தை பெரியார் தம் தத்துவச் சீலங்களே!

“வெள்ளை முதலாளிகளை ஒழித்து கருப்பு முதலாளிகளைக் காக்கும் வேலைக்கு ‘புரட்சி’ ஏடு வெளிவர-வில்லை. அல்லது வெள்ளை ஆட்சியை ஒழித்து கருப்பு ஆட்சியை ஏற்படுத்த புரட்சி தோன்றவில்லை.

அதுபோலவே இந்துமதத்தை ஒழித்து இஸ்லாம், கிறிஸ்தவ மதத்தை பரப்பப் புரட்சி (ஏடு) தோன்றியதல்ல. அதுபோலவே இஸ்லாம், கிறிஸ்தவ மதத்தை ஒழித்து இந்து மதத்தை நிலை-நிறுத்த ‘புரட்சி’ வெளியாகவில்லை. சர்வ முதலாளி வர்க்கமும், சர்வ சமயங்களும் அடியோடு ஒழிந்து மக்கள் யாவரும் சுயமரி-யாதையுடன் ஆண் _ பெண் அடங்கலும் சர்வ சமத்துவமாய் வாழச் செய்ய வேண்டும் என்பதற்காக புரட்சி செய்யவே ‘புரட்சி’ தோன்றியிருக்கிறது. அது உயிருள்ள வரையும் அதன் கடமையைச் செய்து கொண்டு இருக்கும். ஆதலால் புரட்சியில் ஆர்வம் உள்ள மக்கள் ‘புரட்சியை’ ஆதரிக்க வேண்டும்.’’
(‘புரட்சி’ ஏட்டின் தலையங்கம் 26.11.1933)

இது ஏதோ ஓர் ஏட்டுக்கான தலையங்கம் அல்ல நாட்டுக்கான போர்ப்பரணி!

இன்று மதம் என்ற பேரிருள் மனித குலத்தைச் சூழ்ந்து அரற்றிக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் தந்தை பெரியார் காண விரும்பிய மதமற்ற உலகினை நிர்மாணிக்க வேண்டியது காலத்தின் கட்டாய-மாகும்!

அதற்கான புரட்சி வெடிக்-கட்டும்! வெடிக்கட்டும்!!