Published April 21, 2024
விடுதலை நாளேடு
இந்திய நாடு எவ்விதமான வளத்திலும் மற்ற நாடுகளை விட இளைத்ததல்ல என்பதும், இந்தியாவில் இராஜாக்கள், ஜமீன்தாரர்கள் முதலிய செல்வவான் களும், மற்றும் அவர்களுக்குச் சமானமான மடாதிபதிகள், ஆச்சாரிய பீடங்கள், கோடீஸ்வரர்கள் ஆகியவர்களும் ஆனபிரபுக்கள் மற்றநாடுகளுக்கு இளைக்காத அளவில் தாராளமாய் இருந்து வரு கின்றார்கள் என்பதும் யாவரும் அறிந்த உண்மை யாகும். அதுபோலவே, வியாபாரிகளும், வியாபாரப் பொருள்களும் கூட மற்ற நாடுகளைப் போலவேதான் இங்கு இருந்துவருகின்றன.
விவசாயத் துறையிலும் ஏராளமான பூமிகள் இருப்பதும், அவற்றுக்கு அனுகூலமான இயற்கைநீர் பாசன வசதிகள் இருப்பதும், ஒவ்வொரு மிராசுதாரர்கள் 1000 ஏக்ரா, பதினாயிரம் ஏக்ரா, சிலர் லட்சம் ஏக்ரா-பூமிகளையும் உடையவர்களாக இருப்பதும், விவ சாயம் செய்யப்பட வேண்டிய பூமிகள் இன்னும் எவ் வளவோ இருப்பதுமான நாடாகவும் இருப்பதின் மூலம் விவசாயத் துறையிலும் இந்தியா மற்றநாடுகளுக்கு இளைக்காததாகவே இருந்து வருகின்றது.யோசிக்க வேண்டியவை
இப்படிப்பட்ட பல்வளமும் பொருந்திய இந்தியநாடு ஏன் தரித்திரமான நாடு என்றும், அடிமையான நாடு என்றும், ஏழைகள் பெருத்த நாடு என்றும் சொல்லப் பட்டு வருகின்றது என்பதைத் தேச முற்போக்கில் கவலை கொண்டவர்கள் யோசிக்கத்தக்கதேயாகும்.
முதலாவது, இந்தியாவின் மேல்கண்ட வளமுள்ள செல்வம் எல்லாமக்களும் அடையத்தக்க மாதிரியான சமூக அமைப்பு இல்லாமல் செல்வங்கள் சில வகுப்பு மக்களுக்கே உரியதாகவும் அனுபவிக்கத் தக்கதாக வுமான சமூக அமைப்பு முக்கியமான காரணமாகும். அதாவது, வருணாச்சிரம தருமப்படி இன்ன இன்ன வகுப்புக்கு இன்ன இன்ன தொழில் இன்ன இன்ன உரிமை என்பதான திட்டமே நாட்டின் செல்வம் எல்லோருக்கும் பரவுவதற்கில்லாமல் தடைப்படுத்திக் கொண்டிருக்கிறது.
இரண்டாவது, ஒரு வகுப்பு மக்கள் அதாவது 100க்கு 90 பேர்களுக்கு மேலாகக்கொண்ட சமூக மக்கள் அவர்களது வயிற்றுக்குப் போதுமான அளவுக்கு மேல் பெற முடியாத நிபந்தனைக்குள்ளாக்கி வைக்கப் பட்டதுடன், அவர்கள் கையில் தங்கள் வயிற்றுக்கு வேண்டிய ஆகாரத்தின் அளவுக்கு மேற்பட்ட எந்தப் பொருளையும் வைத்திருக்க உரிமையில்லாதவர் களாக்கப்பட்டிருக்கின்றது என்பது இரண்டாவது காரணமாகும். இந்த உண்மைக்கு ஆதாரம் மனுதர்ம சாஸ்திரத்தில் நன்றாய்க் காணலாம். அதாவது, “சூத்திரன் பொருள் சேர்த்து வைத்திருந்தால் பிராம ணனுக்கு ஆபத்தாக முடியும்;” “சூத்திரன் பொருள் வைத்திருந்தால் பிராமணன் பலாத்கார மாகப் பிடுங்கிக் கொள்ளலாம். சூத்திரன் பொருளைப் பிராமணன் எப்படிவேண்டு மானாலும் கொள்ளை அடிக்கலாம்.”
“அடிமையான சூத்திரன் பொருள் வைத்திருக்க உரிமை உடையவனல்ல” என்கின்ற அநேக ஆதாரம் இந்து மத தரும சாஸ்திரங்களில் இருக்கின்றன. (இங்கு சூத்திரன் என்பதற்கு பொருள் தொழிலாளிகள் என்பதேயாகும்.)
இந்த மாதிரியான திட்டங்களை ஏற் படுத்த ஆதாரமாயிருந்தது வருணாசிரம தருமமேயாகும்.
மாற்றம்
வெள்ளைக்கார அரசாங்கத்தின் பயனாய் இந்த தர்மங்கள் சிறிது சிறிது மாற்றமடைந்து ஏதோ 100இல் ஒருவர், ஆயிரத்தில் ஒருவர் செல்வவான்கள் ஆகவும் வருண முறை வரி பணம் சம்பாதிக்க உரிமை உடையவர்களானாலும் கூட அந்தப் பணமானது மனுதரும சாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ளது போல் அதாவது, ‘சூத்திரன்’ செல்வத்தை பிராமணன் எந்த விதத்திலானாலும் கொள்ளை கொள்ளலாம் என்கின்ற தருமப்படி சூத்திரன் செல்வத்தை கொள்ளை கொள்ளவே தலம், கோவில், குளம், புண்ணியம், பாவம், சடங்கு முதலிய காரியங்களின் மூலம் கொள்ளை அடிக்கப்பட்டு விடுகின்றன.
இந்தக்காரணத்தாலேயே ‘சூத்திரர்கள்’ என்கிற வகுப்பினரில் 100-க்கு 75 பேர்கள் கடன்காரர்களாவே இருக்க நேரிட்டு இருக்கின்றது.
இவை ஒருபுறமிருந்தாலும், இன்று பொருளாதாரக் கஷ்டத்தையே பெரும்பாலும் எடுத்துச் சொல்லி அதை நிவர்த்திப்பதற்காக இந்தியாவுக்குச் சுயராஜ் ஜியம் வாங்கித் தருகின்றதாய்ச் சொல்லும் அரசியல் தலைவர் காந்தியார் அவர்களும் இந்த வருணாசிரம முறையை அடிப்படையாக கொண்ட சுயராஜ்ஜிய மேதான் வேண்டும் என்று சொல்லி அதற்காகவே பாடுபட்டு வருகின்றார்.
இதற்கு உதாரணம் வேண்டுமானால், அவர் அவ்வப்போது பேசியிருக்கும் பேச்சுகளும், வெளியிட் டிருக்கும் அபிப்பிராயங்களுமே போதுமானதாகும்.
முதலாவது காந்தியார் அவர்கள் தன்னை ஒரு வருணாசிரம தர்மி என்றும், இந்தியாவில் வருணாசிரம தருமம் குறைந்ததாலேயே அந்நிய ஆட்சி ஏற்பட்ட தென்றும், அதனால் வருணாசிரம தரும ஆட்சியை ஏற்படுத்தவே தான் பாடுபடுவதாகவும் பல தடவை களில் தாராளமாய், வெளிப்படையாய் எடுத்துச்சொல்லி இருக்கிறார். அந்தப்படியே சொல்லி யும் வருகின்றார்.
வருணாசிரம தர்மம்
ஆனால், இந்த இடத்தில் வாசகர்களுக்கு ஒரு மயக்கம் ஏற்படலாம், அது என்னவென்றால், காந்தி யாரால் வருணாசிரம தருமத்தைப்பற்றிப் பேசும்போது, தனது ‘வருணாசிரம தருமம் வேறு’ என்று சொல்லி வருகின்றதால் அது வேறாயிருக்கலாம் என்று கருதி இருக்கலாம். அது எப்படியிருந்த போதிலும் அதாவது, ஜாதி உயர்வு, தாழ்வு சம்பந்தமான காரியம் எப்படியிருந்தபோதிலும், வித்தியாசம் இருக்க வேண்டும் என்பதிலும், அவனவனுடைய பரம்பரைத் தொழிலையே அவனவன் செய்ய வேண்டுமென்ப திலும், அவர் சந்தேகத்திற்கு இடம் இருக்கும்படியாகக் கூடப் பேசாமல் தெளிவாகவே ஜாதி பாகுபாடுகளும், சுதர்மமும் அதாவது அவனவன் குலத்தொழிலும்) கண்டிப்பாய் அனுஷ்டிக்கப்படவேண்டும் என்றே சொல்லு கின்றார். (இது அவர் எழுதியிருக்கும் பகவத்கீதை மொழி பெயர்ப்பில்கூட இருக்கின்றது. 18ம் அத்தியாயம் 41 முதல் 48 வரை உள்ள சுலோகங்கள்.)
இவை ஒருபக்கம் இருந்த போதிலும். சமீபத்தில் அவர் பரோடா சமதானத் தில்பேசிய போதும் இந்தக் கருத்தையே வற்புறுத்திப் பேசிக் காட்டியிருக்கின்றார்.
அதாவது, “கிராமவாசிகள் செருப்பு தைத்தல், ஆடு, மாடு மேய்த்தல் முதலிய தொழில்களைச் செய்ய வேண்டும், அவர்கள் பெட்டிகளில் அதிகப் பணம் வைத்திருக்கக் கூடாது. அவர்கள் பம்பாய் வியாபாரி களைப்போல் (வைசியர்களைப்போல்) பணக்காரர் களாக இருக்க நினைக்கக் கூடாது” என்று பேசி இருக்கின்றார். ஆகவே, இப்போது காந்தியாரால் கேட்கப்படும் சுயராஜ்ஜியம் என்பது இந்திய மக்களின் பொரு ளாதார நிலைமையை எப்படி முன்னுக்கு கொண்டு வரக்கூடியதாகும்? என்பது யோசிக்கத்தக்கது. நிற்க, நமது நாட்டு மக்களின் பொருளாதார நிலைமை மோசமா யிருப்பதற்கு மற்றும் சில காரணங்களும் உண்டு.
மாயை
அதாவது நமது ஜனங்களின் மதத் தத்துவமே இவ்வுலகவாழ்க்கை ‘பொய்’ என்பதும் ‘மாயை’ என்பதும் செல்வத்தை மோட்சத்தில் இடம் பிடித்து வைக்கவும், அடுத்த ஜன்மத்தில் நல்ல பிறவியாய் பிறக்க ஏற்பாடு செய்து கொள்ளவும் செலவழிக்க வேண்டும் என்கின்றதான எண்ணங்கள் செல்வங் களைப் பாழாக்கி விடுகின்றன. அன்றியும் பாடு படுகின்ற மக்களுக்குத் தங்கள் மதக் கடமை, ஜாதிக் கடமை என்பது மாத்திர மல்லாமல் முன் ‘ஜன்ம கர்மத்தின்’ பயன் என்றும் எண்ணும் எண்ணங் களையே புகுத்தப்பட்டு தங்கள் கஷ்டங்களையும் தரித்திர நிலைமையையும் உணராமல் இருந்து வருகின்ற குணமும்தகுந்த பயனை அடையமுடியாமல் செய்துவிடுகின்றன. இவை தவிர நமது நாட்டு தர்மஸ்தாபனங்கள் ஏராளமான செல்வங்களைத் தன்னுடைய தாக்கிக்கொண்டு அவைகள் மக்களுக்குப் பயன்படாமல் வீணாக்கப்படுகின்றன.
சாதாரணமாக, சென்னை மாகாணத்தின் சர்க்காரார் வரி எவ்வளவு ரூபாய் இருக்குமோ, அதில் 4-இல் ஒரு பங்குக்குக் குறையாமல் இம்மாகாணத்தில் வரும்படி வரத்தக்க சொத்துக்கள் தர்ம ஸ்தாபனங்களாய் இருக்கின்றன. அவற்றின் மற்ற செலவு களுக்கு என்று நமது மக்களால் செய் யப்படும் செலவுகளின் மொத்தம் நாம் செலுத்தும் வரித் தொகைக்குக் குறையாத தென்றே சொல்லலாம். இவை இந்த நாட்டு மக்களுக்குப் பயன்படாததோடுவீண் செலவினமாகவே ஏற்பட்டு விடுகின்றன.
அன்றியும் தர்ம ஸ்தாபனங்களில் வரும்படி இல்லாமல் வெறும் முடக்கமாய் இருக்கும் சொத்துக்கள் தங்கம், வெள்ளி, கல் நகைள், இடங்கள் முதலியன கோடிக்கணக்கான ரூபாய் வரும் படி வரக்கூடிய அளவு உள்ள சொத்துக்கள் யாதொரு பிரயோஜனமும் இல்லாமல் முடங்கிக் கிடக்கின்றன.
இவை ஒருபுறமிருக்க இராஜாக்கள் என்றும் ஜமீன்தாரர்கள் என்றும் ஏற்பட்டக் கூட்டங்கள் அனுபவிக்கும் பொருள்கள், மற்றும் அவர்கள் நகை, பொக்கிஷம், புதைத்து வைத்திருப்பது முதலிய செல்வங்களின் அளவு நூற்றுக்கணக்கான கோடி என்றே சொல்லலாம்.
இவ்வளவும் தவிர இந்திய மக்களின் வருமானம் என்பதோ அவர்கள் தங்களது தொழில் முறைகளைச் சிறிதும் மாற்றிக் கொள்ளாததால் பிரயாசை அதிகமும், சாமான் யோக்கியதை குறைவும், உற்பத்திக்குறைவும் இதனால் வரும்படிக் குறைந்தது மாக இருப்பதுடன் மனிதனுடைய தேவைக்கும் போக போக்கியங் களுக்கும் வேண்டியவைகளுக்கெல்லாம் ஏழை முதல் செல்வவான், மகாராஜாக்கள் வரை வெளிநாட்டுப் பொருள் களையே உபயோகிக்க வேண்டியவர்களாகி அதன்மூலம் செல்வம் ஏராளமாய் வெளியில் போய் விடுவதால் ஒருவித நஷ்டத்தை அடைய வேண்டிய தாக ஏற்பட்டு விடுகின்றது.
ஏழைகள்
ஆகவே, இத்யாதி காரணங்களால் நாட்டின் பெரும் பாகமான மக்கள் ஏழைகளாக-தரித்திரர்களாக இருக்கக் கடமைப்பட்டவர்களாகவே இருக்கின்றார்கள்.
பொருளாதாரத் துறையில் இந்திய நாடு முற்போக்கடைய வேண்டுமானால், அதன் அஸ்தி வாரமான காரணங்ளையெல்லாம் கவனிக்காமல் மக்களுடைய மதியீனத்தையும், பகுத்தறிவற்ற தன்மை யையும் ஆதரவாய் உபயோகித்துக்கொண்டு வெளி நாட்டுத் துணியை மறியல் செய்வதாலும், கதரை வாங்கிக்கட்டுவதாலும் கள்ளுக் கடைகளை மூடிவிடு வதாலும் பொருளாதாரத் துறையை சரிப்படுத்தி விடலாம் என்று சொல்லுவது ஒருநாளும் நாணய மானதோ, அறிவுடைமையானதோ, காரியத்தில் பயன் கொடுக்கக் கூடியதோ என்பதாகச் சொல்லி விட முடியாது.
இந்தியாவின் பொருளாதாரத் துறை சீர்படுவதற்கு முதலாவது வருணாசிரம முறை ஒழியவேண்டும். இரண்டாவது, மத சம்பந்தமான எண்ணங்கள் அகற்றப் படவேண்டும். மூன்றாவது கோவில், குளம், சடங்கு, சாத்தான், சனிவிலக்கு ஆகிய எண்ணங்கள் அழிக்கப்படவேண்டும். பிறகு, அரசன், ஜமீன்தாரன் முதலிய தத்துவங்கள் அழிக்கப் பட்டாக வேண்டும்.
இவைகளையெல்லாம் மறைத்து வைத்துக்கொண்டு – இந்தத் துறைகளில் எல்லாம் புகுந்து அழிக்க வேலை செய்யாமல் இருந்துகொண்டு இருப்பதுடன், வருணாசிரம தருமத்தையும், புராண மரியாதையையும் பலப்படுத்திக்கொண்டு பொருளாதாரத் துறை சீர்படுத் துவதற்குச் சீமைக்குப்போய் “வெள்ளைக்காரனிடம் வியாபாரம் பேசப் போகின்றேன், என்று சொல்லுவது அடியோடு அர்த்தமற்றும், நாணயமற்றதுமாகுமா? அல்லது இல்லையா? என்று யோசித்துப் பாருங்கள்.”
குடிஅரசு – தலையங்கம் – 13.09.1931
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக