வெள்ளி, 28 டிசம்பர், 2018

குழந்தைகளுடன் மணமக்கள் திருமணம் (2)

28.09.1930- குடிஅரசிலிருந்து...

இம்மாதிரி மணம் புதியதென்று சொல்லு வதற்கோ, அல்லது இயற்கைக்கும் மனிதத் தன்மைக்கும் விரோதமான தென்றோ யாரும் சொல்லிவிட முடியாது. இதை ஆட்சேபிப் பவர்களை நான் மனிதர்கள் என்றே ஒப்புக் கொள்ளமாட்டேன். அவர்களுக்குச் சுய மரியாதை இருக்கும் என்றும் நான் கருத மாட்டேன்.

சாதாரணமாக, நமது நாட்டில் விதவைகள் உள்ள வீடுகளில் நடக்கும் காரியங்கள் எனக்கு நன்றாய்த் தெரியும். அநேகச் சிசு கொலைகளும் அநேக மன வருத்தங்களும் இயற்கைக்கு விரோதமான காரியங்களும் ஏதாவது ஒன்றும் நடந்த வண்ணமாகவே இருந்து வருகின்றது. இதனால் பல கொலைகளும் நடக்கின்றன. சில இடங்களில் பெண்கள் வெளியில் ஓட ஓட அழைத்து வந்து பந்தோபஸ்தில் வைக்கப் படுகின்றனர். சில இடங்களில் முறைகள் என்பது தவறியும் நடத்தப்படுகின்றன. இவற்றிற்கெல்லாம் காரணம் என்னவென்று பார்த்தால் இயற்கை உணர்ச்சியைக் கட்டுப்படுத்தி வைப்பதேயாகும். இயற்கை உணர்ச்சியைக் கட்டுப்படுத்தும்படியான எந்தக் கொள்கைகளும், சட்டங்களும் ஒரு நாளும் சரியாக நடை பெறவே நடைபெறாது. அப்படி எங்காவது நடை பெற்றாலும் அது நிலைத்திருக்கவே முடியாது. இந்தக் கொடுமைகள் இப்படி இருக்குமானால் 4 பெண்கள் 5 பெண்கள் கூடி ஒரு ஆணைத் தங்கள் இன்பத்திற்கென்று ஏற்படுத்தி அவனுக்கு நல்ல போஷணையும், அழகும் செய்து அடைத்து வைத்து அவனைத் தங்களது காம இச்சைத் தீர்க்கும் இன்பப் பொருளாய் அனுபவிக்கும் காலமும், வீட்டு அடிமையாய் நடத்தப்படும் காலமும் வந்து விடும் என்று நான் கருதுகிறேன். அப்படி வந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். ஆண்களினது கருமத்தின் பயன் என்றுதான் அதைக் கருதுவேன்.

தவிர சுயமரியாதைக் கலியாணம் என் பதில் புதிய முறையோ, புதிய சடங்கோ ஒன்றுமில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். அர்த்தமற்றதும், பொருத்த மற்றதுமான சடங்குகள் வேண்டாம் என்பதும் அனாவசியமான அதிகச் செலவும், அதிகக் காலக் கேடும் இருக்கக்கூடாது என்பதும்தான் சுயமரியாதைக் கலியாணத்தின் முக்கியத் தத்துவமாகும். ஆதலால் உள்ள சடங்கு களையும், பணச்செலவையும், காலச் செல வையும் குறைத்து நடத்துவதே இத்திருமணத் தின் முக்கிய கொள்கை என்பதைத் தெரிவித் துக் கொள்ளுகிறேன்.

மற்றும் திருமணம் என்பது ஒரு பெண்ணுக்கும் ஒரு ஆணுக்கும் ஏற்பட்டக் கூட்டு வாழ்க்கையின் ஒப்பந்தம் என்பதும் இத்திருமணம் இந்த மணமக்களின் இந்த உலக மானுஷிக வாழ்க்கைக்கேதான் என் பதும் உணர்ந்து மணமக்கள் மணம் செய்து கொள்ளவேண்டும் என்பது சுயமரியாதைத் திருமணத்தில் மிகவும் முக்கியமானதாகும். அதாவது கலியாணம் மனிதத்தன்மைக்கு மேற்பட்ட தென்றும் ஆத்மார்த்தத்திற்கு என்றும், அதில் ஏதோ தெய்வீகம் இருக்கிற தென்றும் கருதி வாழ்க்கையில் உள்ள சுதந் திரங்களையும், இயற்கை இன்பங் களையும் அடையமுடியாமல் செய்யும் ஜீவனற்ற உணர்ச்சியை ஒழிக்க வேண்டுமென்பதே முக்கியமானதாகும்.

தெய்வீகம் என்கின்ற பதமே சாதாரண மாக நமக்குத் தெரியாது என்பதற்குத்தான் பெரிதும் பயன் படுத்தப்பட்டு வருகின்றது. அதோடு ஆத்மார்த்தம் என்பதும் புலனறி வற்ற சூனியத்திற்குச் சமமானதற்கே பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது. ஆகவே மனித வாழ்க்கையின் முக்கியமான தத்துவமான இன்ப உணர்ச்சியின் இயற்கை அனுபவத்தை அடைய முடியாமல் தடைசெய்வதற்கு மாத்திரம் பயன்படும்படியாகத் தெரியாத, அர்த்தமற்ற தெய்வீகத்தையும் ஆத்மார்த்தத் தையும் இப்படிபட்ட விஷயத்தில் கொண்டு வந்து புகுத்தியதானது மனிதனை வெறும் பிணம் ஆக்குவதற்கும் அடிமையாக்குவதற் குமே பயன்படுத்தச் செய்த புரட்டே யொழிய வேறில்லை. தெய்வீகக் கலியாணத்தில், ஆத் மார்த்த கலியாணத்தில் புருஷனுக்கும் பெண் ணுக்கும் வித்தியாச நிபந்தனைகளும் எஜ மான் அடிமைத் தன்மைகளும் எதற்காக ஏற் படுத்த வேண்டும். தெய்வீகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் வித்தியாசமுண்டா? ஆத் மார்த்தத்தில் ஆண் ஆத்மா; பெண் ஆத்மா வென்கின்ற பிரிவுண்டா?

எவ்வளவு பெரிய புரட்டுகளை இந்த முக்கியமான காரியத்தில் கொண்டு வந்து போட்டு, இன்பமும், சுதந்திரமும் பாழக்கப் பட்டு விட்டது என்பதை யோசித்துப் பாருங்கள். ஆகையால் புருஷனுக்காகப் பெண்ணும், பெண்ணுக்காக புருஷனும் இரண்டு பேரும் சேர்ந்து இன்பமடைவதற்கு என்பதைத் தவிரத் திருமணத்தில் வேறு தத்துவமொன்றும் இல்லவே இல்லை என்பது தான் திருமணத்தைப் பற்றிய நமது அபிப் பிராயம். இம்மாதிரி மணமக்கள் இருவரும் ஒரு பொது வாழ்க்கையை ஏற்படுத்திக் கொண்டதற்கு அவர்களுக் குள் செய்துகொள் ளும் ஒப்பந்தத்திற்குச் சாட்சியத்தைத் தவிர நமக்கு இதில் வேறு வேலை இல்லை. ஆகவே நாம் எல்லோரும் சாட்சியத் திற்காகவே அழைக்கப்பட்டிருக்கின்றோம், கூடி இருக் கின்றோமென்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த மாதிரியான சமுதாய உதவி கூட்டு வாழ்க்கையில் கலந்துள்ள ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் செய்து கொள்ள வேண்டி யதேயாகும். இதில் மணமக்கள் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென் றால் தங்களில் எவருக்கும் எந்த விதத்திலும் வாழ்க்கை நடத்துவதில் பொறுப்போ உரி மையோ ஜாஸ்த்தி கம்மியாய் இருக்கின்றது என்று யாரும் கருதிக் கொள்ளக் கூடாது என்பது தான். அதாவது பெண் தான் புருஷ னுக்கு அடிமை யாயிருக்க கடவுளால் பிறப் பிக்கப்பட்ட ஒரு சுய உணர்ச்சியற்ற ஜீவ னென்றோ கல்லென்றாலும் கணவன் புல் லென்றாலும் புருஷன், அவன் அடித்தாலும், உதைத்தாலும் அன்னியருக்கு கூட்டிவிட்டு ஜீவித்தாலும் புருஷனே தெய்வம் என்று கருதுகின்ற அடிமை உணர்ச்சிக் கண்டிப்பாய் பெண்ணுக்கிருக்கவே கூடாது. நமது கண வனும் நம்மை போன்ற மனித ஜீவனேயாகும். பெண்ணிடம் அவன் எப்படி நடந்து கொள்ளு கிறானோ அப்படி தான் அவள் தன்னிடமும் நம்மை நடந்து கொள்ள எதிர்பார்க்க முடியும். ஒழுக்கத்திலோ, சுதந்திரத்திலோ உணர்ச்சியிலோ நமக்கும் அவனுக்கும் வித்தியாசம் கிடையாதென்று எண்ணவேண்டியது மாத் திரமல்லாமல் ஒவ்வொருத் துறையிலும் அனுபவத்தில் கொண்டு வர வேண்டும்.

- விடுதலை நாளேடு, 22.12.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக