தந்தை பெரியார்
அருமைத் தோழர்களே, இப்போது நமக்கு வேண்டியதெல்லாம் மான உணர்ச்சி வேணும்; நமக்கு இருக்கிற இழிவு நீங்கணும். அப்புறம் மேலே போகலாம்; போகணும். மனுஷனுக்கு இருக்கிற உரிமை என்ன தெரியுமா? மனுஷனுக்கு இருக்கிற சக்தி, உரிமை. ஒவ்வொரு மனுஷனும் குறைந்தது 500 வருஷம் இருக்கலாம் - 500 வருஷம் இருக்கலாம் (அழுத்திச் சொல்கிறார்); இப்போ இல்லையே, இப்போ 52 வயசுதான் இருக்கிறோம் - சராசரி. எனக்கு இப்போ 95; இன்னும் எவனாவது ஒரு பத்துப் பேர் இருப்பான் 100 வயசானவன். இருக்க முடியலையே, வெள்ளைக்காரன் வந்ததனாலே இந்த அளவாவது இருக்கிறோம். வெள்ளைக்காரன் வருவதற்கு முன்னே, அவன் வந்த அன்றைக்குக்கூட நமக்கு 10 வயது இல்லை - 7 வயது - வெள்ளக்காரன் வர்ற போது இந்த நாட்டுக்குச் சராசரி. அவன் வந்ததற்கப்புறம், அவன் வைத்தியம், அவன் ஆஸ்பத்திரி, அவனுடைய முயற்சி, அவனுடைய சுகாதாரம் இதெல்லாம் நமக்கு ஏற்றதற்கு அப்புறம், இப்போது நாம் சராசரி 50 வருஷம் இருக்கிறோம். மேல்நாட்டிலே 75 வயசு இருக்கிறான்; ரஷ்யாவிலே கிட்டத்தட்ட 100 வயசு இருக்கிறான். நாமும் இன்னும் 10, 20 வருஷத்திலே 75 வருஷத்துக்கு வந்துவிடுவோம்; வெள்ளைக்காரன் 120 வருஷத்துக்கு போய்விடுவான். இப்படியே நாளாக, நாளாக 500 வருஷம் வரைக்கும் இருப்போம். அதற்கு மேலே வேற என்ன வரணும்? இருக்கிறது ஒரு கஷ்டமல்ல - சாகிறதுதான் கஷ்டம். அவ்வளவு வசதிகளை எல்லாம் பண்ணியிருக்கிறான் நாட்டிலே. அவ்வளவு அற்புத அதிசயங்களையெல்லாம் கண்டுபிடித்திருக்கிறான். நமக்கு ஒன்றும் இல்லாததற்குக் காரணம், நாம் தேவடியாள் மக்களாய் இருந்ததினாலே.
நாங்கள் வராதிருந்தால் படிப்பு ஏது? சொல்லுங்கள், சுயமரியாதை இயக்கம் ஆரம்பிக்கிறபோது, நாம் 10 பேருகூட படிக்கவில்லையே, 100-க்கு! அது வந்ததற்கு அப்புறம், ஆரம்பித்தோம், அறிவைப்பற்றி. சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்தபோது அதற்கு என்ன கொள்கை தெரியுமோ? அய்ந்து கொள்கை.
என்ன கொள்கை?
1. கடவுள் ஒழியணும்
2. மதம் ஒழியணும்
3. காந்தி ஒழியணும்
4. காங்கிரசு ஒழியணும்
5. பார்ப்பான் ஒழியணும்.
அன்றைய முதற்கொண்டு இன்றைய வரைக்கும் இந்த அய்ந்து கொள்கைகள்தான் நடக்கின்றன. காந்தியை ஒழித்தான், ஒழித்துவிட்டான். நாம் ஒழிக்கிறதற்கு முன்னே பார்ப்பானே ஒழிச்சு போட்டான். காந்தி நம்ம பேச்சைக் கேட்டு நம்ம பக்கம் திரும்பினார். 'இன்னமும் கடவுள்னு சொல்றியே முட்டாள்'ன்னான். உடனே காந்தி, 'கடவுளுக்கும், காங்கிரசுக்கும் சம்பந்தம் இல்லைடா' என்றார்; 'காங்கிரசுகாரன் கடவுளை இப்போது சேர்க்க வேண்டியதில்லை' என்று சொல்லிவிட்டார். சொன்ன 30 நாளில் கொன்று போட்டானுங்கய்யா அவரை! 'ஓ, இவன் ராமசாமி ஆகிவிட்டான்! அவனுக்காவது நாதி இல்லை; இவன் காந்தின்னா இந்தியாவிற்கே பெரியவன். எல்லாரும் நம்பிடுவாங்க'ன்னு சட்டென்று கொன்று போட்டுட்டான் அவரை.
அடுத்தாற்போல ஒழியவேண்டியவன் காங்கிரசு. காங்கிரசு ஒழிந்தது; அது ஒன்றும் உருப்படியாகாது - உருப்படியாகாது; இப்பொழுதே இரண்டு பேர் தொங்குறாங்களே - இரண்டாகப் பிரிந்தது - ஒன்றுக்கொன்று மானங்கெட்டு திரியுது. இப்போது ஒருவருக்கொருவர் சேர்ந்து பார்க்கலாம் என்று. சேர்ந்தால் இனிமே என்ன மரியாதை இருக்கப் போகிறது? என்ன ஆகப் போகுது. இனிமேல் எவன் காங்கிரசை ஆதரிப்பான், பொறுக்கித் தின்கிறவனைத் தவிர? காங்கிரசுக்கு என்ன கொள்கை இருக்கிறதென்று, ஒருத்தன் கேட்பான். இன்றைக்கு இருக்கிற நம்முடைய காமராசர் வாயிலே 'ஜாதி ஒழிக' என்று ஒரு வார்த்தை வருமா? சொல்ல முடியுமா? சொன்னால், அவர் காங்கிரசிலே இருக்கக்கூடாதே! காங்கிரசு வேலையே ஜாதியைக் காப்பாற்றுவதுதானே முதலில் எடுத்ததும். பார்ப்பானாலே உண்டாயிற்று; அவன் நன்மைக்கு அவன் பண்ணிக்கிட்டான். போகிறவன் அதை ஒத்துக்கிட்டுத்தானே ஆகணும்? காமராசர் நம்மோடு சேர்ந்ததால், கொஞ்சம் காரியம் செய்தார். பக்தவத்சலம் வாயிலே வருமா 'ஜாதி ஒழிக' என்று. இல்லை, சுப்பிரமணியம் வாயிலே வருமா 'ஜாதி ஒழிக' என்று. சொன்னால் அவர் காங்கிரசில் இருக்க முடியாதே! அந்த மாதிரித் திட்டத்தோடு இருக்கிறானுங்க; அது இனிமேல் உருப்படியாகுமா?
முன்னேற்றக் கழகம் ஒழிந்தாலும், 'காங்கிரசு ஒழிக'ங்கிற, 'ஜாதி ஒழிக'ங்கிற ஒரு சீர்திருத்த உணர்ச்சி உள்ளவர்கள்தான் இனி வருவாங்க; அதனாலே, இனி வந்துட முடியாது. காந்தியும் போய்ட்டான்; காங்கிரசும் ஒழிந்து போச்சு; கடவுளும் தெருவிலே சிரிப்பாய் சிரிக்குது. அதுதான் வீரமணி சொன்னாரு, செருப்பாலே அடிச்சாங்களே கடவுளை, என்ன ஆயிப்போச்சு? 'கடவுளை செருப்பாலே அடித்தான்; அதனாலே ஓட்டுப் பண்ணவேண்டாம்' என்று காமராசர் முதற்கொண்டு தப்பட்டை அடிச்சாங்க. ஆனால், என்றைக்கும் வராத அளவுக்கு 200 பேருக்கு மேலே வந்துட்டாங்களே! முன்னேற்றக் கழகத்துக்காரன் 185 பேர்; அவர்களை ஆதரிக்கிறவர்கள் 20 பேர். காங்கிரசு, காந்தி, கடவுள், வெங்காயம் எல்லாம் சேர்ந்து 20 பேர்கூட வரவில்லையே! சாமியைத் திட்டுறான் என்று சொல்லுகிறீர்களே - புத்தி இல்லாமல் சொல்றானே தவிர, சாமியைச் செருப்பாலே அடித்த பிரச்சினை மேலே 200 பேர் வந்துட்டாங்களே. ஆனதினாலே மக்கள் அறிவு பெற்றுக்கிட்டு வருகிறார்கள். பயன்படுத்திக்க வேணும். அவங்களுக்கு விஷயங்களை எடுத்துச் சொல்லணும் - தெரியாது வெகு பேருக்கு.
எனவேதான், இப்போது நாம் முன்னேற்றம் அடையணும்; மேலே வருவதற்குள்ளே பள்ளத்திலே இருந்து நிலத்துக்கு வரணும்; மேட்டுக்கு வரணும்; அப்புறம் மேலே ஏறணும். இப்போது நாம் பள்ளத்திலே கிடக்கிறோம். என்ன? நாலாவது ஜாதி, அய்ந்தாவது ஜாதி, தீண்டப்படாத ஜாதி, பார்ப்பானுடைய வைப்பாட்டி மக்கள் இப்படியல்லவா இருக்கிறோம் நாம். இது மாறவேணும், அப்புறம் மேலே போகணும்; மாறாது மேலே போக முடியுமோ? யாரும் கவனிக்கலே... கவனிக்காமல் போனால், நாங்கள் சும்மா இருக்கலே; ஒன்று போனால் ஒன்று செய்துகிட்டே இருக்கிறோம். நாளுக்கு நாள் கொஞ்சம் மாறிக்கிட்டேதான் வந்தது. இன்னும் மாறணும். எங்களால்தான் முடியும்னு இருக்கிறது நிலைமை. வேற எந்தக் கட்சிக்காரனுக்கும் இதிலே கவலை இல்லை. 'இவங்களோடு சேர்ந்தால் ஓட்டுப் போய்விடுமே' என்று பார்க்கிறான்; மானம் போறதைப்பத்தி அவனுக்கு வெட்கமில்லை. ஆகவே, நாம் மகாநாடு போட்டோம். இந்த மகாநாடு போட்டதற்குக்கூட காரணம் சொன்னாரே! 'தீண்டாமை இல்லை'ன்னு சட்டத்திலே எழுதிப் போட்டான்; 'எந்த விதத்திலேயும் தீண்டாமை இல்லை'ன்னுட்டான். ஆனால், 'மதத்திற்கு மாத்திரம் உண்டு'ன்னு ஓர் அடையாளம் வைத்துவிட்டான் - நிபந்தனை. இல்லாதிருந்தால், நாம் அந்தத் தீர்மானத்தின் மேலேயே எல்லாக் காரியத்தையும் நடத்தி இருப்போம். அதுதான் சொன்னேனே, எல்லோரும் கோவிலுக்குப் போகலாம் என்று சட்டமே பண்ணினால், அந்தச் சட்டம் செல்லாதுன்னு ஆயிப்போச்சே! அதேமாதிரிதானே சாஸ்திரத்திற்கு விரோதமாய் இருக்கிற எந்தக் காரியமும் இனிமேல் செல்லாது. இனிமேல் நாம் இழிமகன். எனவேதான், மாத்திக்க வேண்டிய அவசியத்திற்கு வந்துட்டோம்; அவைகளையெல்லாம் பார்த்தோம், மாத்தி ஆகணும். சட்டத்திலேயும், சாஸ்திரத்திலேயும் இருக்கிறதினாலே, முதலிலே அதைக் கேட்டோம். சட்டத்திலே இருக்கிறது ஒழியவேணும் என்றால், சட்டம் ஒழிந்தால் உண்டு. சட்டத்திலே ஒழிக்கவில்லையானால், ஆட்சியை ஒழித்தால்தான் உண்டு. அவ்வளவுக்கு இப்போ நாம் பக்குவமாகணும். ஆட்சியை ஒழியும்படியாக இல்லாமல் பாதுகாத்துக்கிட்டான். 'தனியாக இருந்தால், எவனும் ஒன்னும் பண்ணமாட்டான்; கூட்டாக இருந்தால் எல்லாம் ஒன்று சேர்ந்துக்குவாங்க'ன்னு 15, 16 நாடுகளாகப் பிரித்தான். அந்தந்த நாட்டை, அந்தந்த நாட்டோட வச்சு, மற்ற நாட்டோடு சம்பந்தமில்லை என்று சொல்லிட்டான். அவனைப்பற்றி இவன் கவனிக்கக் கூடாது; இவனைப்பற்றி அவன் கவனிக்கக் கூடாதுன்னுட்டான். 16 மாகாணங்களில் ஜனங்கள் இருக்கிறாங்க, ஒருத்தருக்கு ஒருத்தர் சம்பந்தம் இல்லையே! அவனும், நானும் தாராளமாகப் பேசிக் கொள்ள முடியாதே! அவன் மொழி வேறு - இந்தப் பக்கம் இருக்கிறவன் வந்தால் மலையாளம் பேசுவான்; இந்தப் பக்கம் இருக்கிறவன் வந்தால் தெலுங்கு பேசுவான்; இந்தப் பக்கம் இருக்கிறவன் வந்தால் கன்னடம் பேசுவான்; இன்னும் கொஞ்சம் தாண்டினால் மராட்டி; இன்னும் கொஞ்சம் தாண்டினால் குஜராத்தி; இன்னும் கொஞ்சம் தாண்டினால் இந்தி; அப்புறம் வங்காளி. அந்தந்த பாஷை ஒன்று சேராமல் இருப்பதற்கு என்ன பண்ணணுமோ அதையெல்லாம் பண்ணிட்டான்.
தனித்தனியாக இருந்தால் ஒன்று சேர்ந்துவிடுவான் என்று 15ம், 1 ம் 16 என்று சொல்லிட்டான். வேறு நாதி இல்லையே! இப்போது நாம் ஏற்பாடு பண்ணினோம். 'சூத்திரன் என்கிறதை ஒழிக்கணும்' என்று. நாம் மாத்திரமா சூத்திரன்? இந்தியாவில் உள்ள மக்களிலே (தமிழ்நாட்டிலே உள்ள) நாலரை கோடி மக்களில், ஏறக்குறைய மூன்று கோடி மக்கள் சூத்திரர்கள்தானே - துலுக்கன், கிறிஸ்தவன் தவிர; அவர்கள் இரண்டு பேரையும் சேர்த்தால் இன்னும் ஒரு 50 லட்சம் கூட இருக்காதே; கிறிஸ்தவன் ஒரு 3 லட்சம் இருக்கலாம்; முஸ்லிம் ஒரு 6 லட்சம் இருக்கலாம்; இரண்டும் சேர்த்தால் 10 லட்சமாகும். மற்றவன் எல்லாம் சூத்திரன். பார்ப்பான் ஒரு இரண்டு, மூணு லட்சம்தான் இருப்பான். அவ்வளவு பெரிய சமுதாயம் இந்த மாதிரி இருக்கிறதையே சிந்திக்க முடியவில்லையே.
ஆகவே, இதை மாற்றியாகணும். பெரிய விஷயம்தான்; பெரிய முயற்சி பண்ணணும். பெரிய முயற்சி பண்ணனும். என்ன அவசியம்? அரசியல் சட்டம், அரசாங்கம் நடத்துவதற்கு வேணும்; ஒரு அரசாங்கம் நடக்கவேணும் என்றால், ஒரு சட்டம் இருக்கணும், ஒத்துக்கிறேன். அரசாங்கம் நடத்துவதற்கு சூத்திரன் இருக்கணுமோ? அரசாங்கம் நடக்கணும்னா பார்ப்பான் இருக்கணுமோ - மனுஷன்தானே இருக்கணும்? அமெரிக்காவிலே அரசாங்கம் நடக்குது. அங்கே மனுஷன் தவிர வேற எவன் இருக்கிறான்? பார்ப்பான் இருக்கிறானா? சூத்திரன் இருக்கிறானா? பறையன் இருக்கிறானா? யார் இருக்கிறான் அங்கே?
ஆனதினாலே, அவன் வைத்திருக்கிற பாதுகாப்பெல்லாம்... 'ஒன்று சேரக்கூடாது. அவர்களை உள்ளே கட்டிப் போட்டு வைத்திருக்கிற கயிற்றை அவுத்துவிடக்கூடாது. அடிமையாகவே இருக்கணும். அப்படி அடிமையாய் இருந்தால், நூற்றுக்குத் தொண்ணூறு பேரை 3 பேர் ஆளலாம்.' அதற்குத் தகுந்தபடி செய்துகிட்ட ஏற்பாடு. இப்போது நாம்தான் அதைப்பற்றி கவலைப்படுகிறோம். 'மாற்றியாகணும்'ங்கிறோம்.
நேற்று நடந்த மகாநாட்டுக்கு வேற கட்சிக்காரங்க ஆதரவு ஒன்னும் வரவில்லையே, வரலாம் அல்ல? அவனவன் சக்திக்கு, அனுசரணையா எங்களுக்கு வந்து உதவி பண்ணலாமல்ல. ஒருத்தரும் வரவேயில்லை. எங்க ஆளுங்கதான். அவன் - டில்லிக்காரன் சி.அய்.டி.யைப் போட்டுவிட்டான் - வேற கட்சிக்காரன் எவனாவது உள்ளே போறானா பார் என்று. அதைப் பார்த்து ஒருத்தனுமே வரவில்லை. மந்திரிகளோ, அவனோ, மற்ற கட்சிக்காரனோ, மற்றவனா... ஊம்! இழிவு ஒழிய வேணும்னு சொன்னால், இழிவுக்கு ஆளானவன் எல்லாம் வரணுமே, வந்து உதவி செய்யணுமே. (இல்லை) நாங்கள்தான். ஆனதினாலே, விஷயம் ரொம்ப முக்கியமானது; மாறியே ஆகணும், மாறாவிட்டால் சாகணும்; அந்த உணர்ச்சி உள்ளவன்தான் மிஞ்சுவான். மாறியாகவில்லை என்றாலும் சோறு தின்கணும், என்ன பண்ணியாவது வயிறு ரொப்பணும் அப்படி என்றால், அவனாலே என்னாகும்? நினையுங்க நீங்க! நம்மை அப்படி பண்ணி விட்டான்.
(19.12.1973 அன்று சென்னை தியாகராயர் நகரில்
தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய இறுதிப் பேருரையிலிருந்து....
- விடுதலை நாளேடு, 23.12.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக