வியாழன், 25 அக்டோபர், 2018

தேவஸ்தான இலாகாவும், திமுக ஆட்சியும்

தேவஸ்தான இலாகா என்பது கடவுள், மதம் சம்பந்தமான இலாகாவாகும். திமுக ஆட்சியென்பது கடவுள் - மத நம்பிக்கை இல்லாத கொள்கையுடைய ஆட்சியாகும். இப்படிப்பட்ட, அதாவது, ‘கடவுள் - மத நம்பிக்கையில்லாத கொள்கையை உடையது’ என்று சொல்லப்படும் ஆட்சியானது - அந்த ஆட்சியினுடைய அரசாங்க ஆதிக்கத்திற்கு உட்பட்ட தேவஸ்தான இலாகாவை பரிபாலிக்கலாமா என்கிற பிரச்சினையை சில ஆஸ்திகர்கள் என்பவர்கள் கிளப்பி இருக் கிறார்கள் மற்றும் பார்ப்பனத் தலைவரைக் கொண்ட கட்சிகளும் ‘கோயில் நிர்வாகத் திற்கு திமுக கட்சியை சேர்ந்தவர்களை நியமிக்கக்கூடாது’ என்று தீர்மானங்கள் போட்டிருக்கின்றன. இந்தக் கேள்வியையும், தீர்மானத்தையும் திமுக கட்சி இந்த நாட்டில் மூன்றரை ஆண்டு காலம் ஆட்சி செய்த பிறகு கேட்டும், செய்தும் இருக்கிறார்கள்.


மனுதர்ம பார்ப்பனர்கள் மனித தர்மத்தை நிர்வகிப்பதா?

“ஒரு இலாகாவை, ஒரு கொள்கை கொண்ட நிர்வாகத்தை அதில் நம்பிக்கை இல்லாதவர்கள் நிர்வாகம் செய்யலாமா?” என்பதுதான் இப்பிரச்சினையின் தத்துவ மாகும். நிர்வாகம் என்பதும், நியமனம் என்பதும் எந்த ஸ்தாபனமானாலும் அந்த ஸ்தாபனத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டி ருக்கும் கிரமப்படி, முறைப்படி நாணயமாய் காரியத்தில் நடந்து வருகிறதா என்று பார்ப்பதற்குத்தானே  ஒழிய, அந்த ஸ்தாபனத் திற்குண்டான (கடவுள் - மத சம்பந்தமானமான வற்றில்) நம்பிக்கை கொண்டிருக்கிறாதா என்பதற்கு அல்ல என்பது எந்த மனிதனுக்கும் தெளிவாகத் தெரிந்த விஷயமேயாகும்.

உதாரணமாக சொல்ல வேண்டுமானால் பார்ப்பனர்கள் மனித தர்மத்தில் நம்பிக்கை கொண்டவர்களே அல்ல, அவர்கள் அத்தனை பேரும் மனு தர்மத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் ஆவார்கள். அப்படிப்பட்ட வர்களை எல்லா மக்களையும் சமமாக நடத்தப்படவேண்டிய மனித தர்ம காரியத்தில் நிர்வகிக்க, காரியம் செய்ய நாம் ஏற்றுக் கொள்கிறோம். எல்லா மக்களும் ஏற்றுக் கொள்கிறார்கள்.

தொட்டால் பாவம் என்கிறவனுக்கு டாக்டர் பதவியா!

பார்ப்பனர் பார்ப்பனரல்லாத எந்த மனிதரையும் தொடுவதும் தொடப்படுவதும் பாவமான “தோஷமான காரியம்” என்று கருதுகிறவர்கள்; கருதி நடத்தையிலும் அதுபோல் நடப்பவர்கள். இதை முக்கியமான கொள்கையாகவும் கொண்டவர்கள். அது மாத்திரம் அல்ல. மற்ற மக்கள் சாவதன் மூலம் (இறப்பதன் மூலம், வரும்படி இலாபம் அனுபவிக்கும் சமுதாயத்தினருமாவார்கள். அப்படிப்பட்ட இவர்கள் மக்கள் எல்லோ ரையும் தொட்டுத் தீர வேண்டிய டாக்டர் களாக, வைத்தியர்களாக வருகிறார்கள். “கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கடவுள் மத சம்பந்தமான நிர்வாகத்தில் இருக் கலாமா?” என்றால், மனிததர்ம நம்பிக்கை இல்லாதவர்களும், மனிதனைத் தொட்டாலே பாவம் என்ற கொள்கையுடையவர்களுமான பார்ப்பனர்களை இந்த அரசாங்கம் டாக்டராக நியமிக்கலாமா என்று கேட்க வேண்டியிருக்கிறது.

மற்றும் கடவுள் பக்திக்கும், அது சம்பந்தமான காரிய நிர்வாகத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? பக்தி என்பது எவனுக்கும் மனதில் இருக்கவேண்டிய தாகும். காரிய நிர்வாகம் என்பது மனித னுடைய நாணயத்தையும், நேர்மையையும் கொண்டதாகும், நிர்வாகஸ்தனுக்கு, நிர் வாகத்திற்கு ஆளான மக்கள் யோக்கியமாய், நாணயமாய் நடந்துகொள்கிறார்களா என்றும், அதன் நிதி நாணயமாய் செலவழிக்கப்படுகிறதா என்றும் கவனிக்க வேண்டியதுதான் பொறுப்பே ஒழிய பக்தியாய் நடந்து கொள்கிறார்களா என்று பார்ப்பது பொறுப்பல்லலவே!

தாசி, விபச்சாரிக்கும் கூட

பக்தி இருக்கிறதே

பக்தி என்பது காணமுடியாதது, கண்டு பிடிக்க முடியாததுமாகும். பக்தி என்பது தாசி, விபச்சாரி, திருடன், முடிச்சவிழ்க்கி, கொலை காரன், வியாபாரி, வக்கீல், பார்ப்பனர்கள், பிரபுக்கள், காலிகள் முதலிய எல்லோருக்கும் உண்டு, இவர்களில் யார் நேர்மையாய் நடந்து கொள்கிறார்கள் என்று சொல்ல முடியும்? ஆதலால் பக்திக்கும், நிர்வாகத்திற்கும் சம்பந்தமேற்படுத்துவது நேர்மையற்ற தனத்தால் ஏற்படும் பலனை, பக்திவானே அனுபவிக்க வேண்டும் என்பது தானே ஒழிய, வேறு கருத்து அதில் ஒன்றும் இருப்பதாலல்ல. ஆதலால் பக்தி என்பதும், நம்பிக்கை என்பதும், கடவுள், ஆத்மா, பேய் என்பது போல் நினைத்துக் கொள்ளவேண்டிய ஒன்றேயல்லாமல், தெரிந்துகொள்ளக் கூடிய ஒன்றல்ல.

அவை உண்மையாக இருந்தாலும் நிர்வாகத்திற்கும் அதற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை.

நலனுக்குக் கேடு என்பதாலேயே பார்ப்பனர்கள் கூப்பாடு

பார்ப்பனர்கள், கூப்பாடு போடுகிறார் களென்றால் கோயில்களின் பேரால், சாமிகளின் பேரால் செய்யாத அக்கிரமம் செய்து அடையாத இலாபம் அடைகிறார்கள் என்பதால், அவர்கள் (பார்ப்பனர்) நலனுக்கு கேடு வந்துவிடுமே என்கின்ற கவலை தானாகும். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் ஆட்சியைவிட கடவுள் நம்பிக்கை இல்லா தவர்களின் தணிக்கையும் மேற்பார்வையும்  கூடாததாக ஆகிவிடாது.

‘சீ’ மார்க் ‘ஹி’ மார்க் தென்கலை, வடகலை நாமங்கள்

ஆகவே, மேற்கண்ட கூப்பாடுகள் எல்லாம் பாமர மக்களை ஏய்க்க அரசாங் கத்தின் மீது குறைகூற செய்யப்படும், போடப்படும் கூப்பாடுகளேயாகும். இதைக் கண்டு நம்மக்கள் ஏமாந்துவிடமாட்டார்கள். ஏனென்றால் சாஸ்திரத்திற்கு ஆகமத்திற்கு தர்மத்திற்கு மாறாத பஞ்சமர் என்பவர்கள் தர்மகர்த்தாவாக மாத்திரமல்லாமல் அர்ச்ச கராகவே நியமிக்கப்படுவார்கள் என்றால், அதற்கும் கூட கடவுள் நம்பிக்கை இருக் கிறவனா அல்லவா என்று பார்க்க முடியாத நிலை இருக்கிறது என்றால், கோயில்களுக்கு, சாமிகளுக்கு என்று ஏற்படுத்தப்பட்ட முறைப் படி, நியதிப்படி, திட்டப்படி காரியங்கள் நடக் கின்றனவா என்று பார்க்க இன்ன தான் வேண்டும் என்று கூற என்ன அவசியம் இருக்கிறது? என்ன ஆதாரம் - இருக்கிறது?

ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் சாமிக்கு, கடவுளுக்கு உரியது வடகலை நாமமா? தென்கலை நாமமா? என்ற பிரச்சினை பற்றி ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது. அதில் அந்த - அய்ரோப்பிய ஜட்ஜ் கட்சிக்காரர்களை குறிப் பிட்ட ஒய்-’சீ’ மார்க்கு கட்சி என்றும், யூ-’ஹி’ மார்க்கு கட்சி என்றும் தீர்ப்பே கூறி இருக்கிறார்.

முதல் தீர்த்தத்துக்காக இரட்டைக்குழாய்

மற்றொரு, முதல் தீர்த்தம் யாருக்கு?  முதலில் தீர்த்தம் கொடுக்கும் மரியாதை உரியது என்னும் வழக்கில் தீர்ப்பு கூறும்போது இரண்டு துவாரத்தில் ஏககாலத்தில் தண்ணீர் விழும்படியான ஒரு தண்ணீர் குழாய் செய்து அதன் தலைப்பில் உள்ள ஒரு கிண்ணத்தில் அர்ச்சகர் தண்ணீர் விட வேண்டியது; கட்சிக்காரர்கள் இருவரும் ஏக காலத்தில் தண்ணீர் பிடித்து கொள்ள வேண்டியது என்று தீர்ப்பு செய்தார்.

கடவுள் - மதநம்பிக்கைக்காரர்கள் இப்படிப்பட்ட நீதிபதிகளின் கடவுள் சம்பந்தமான நீதிக்கே சென்றிருக்கிறார்கள். இந்தநிலையில் நிர்வாகம் பார்ப்பவனுக்கு கடவுள் நம்பிக்கை வேண்டுமென்பது எவ்வளவு கேலிக்கூத்தானதென்பதை பொது மக்கள் உணரவேண்டுமென்று விரும்பு கிறேன்.

(தலையங்கம், விடுதலை -9.10.1970)

- விடுதலை ஞாயிறு மலர், 13.10.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக