திங்கள், 29 அக்டோபர், 2018

தானாக ஏற்பட்டதல்ல! (கடவுள், மதம்)

20.11.1932 - குடிஅரசிலிருந்து...


தோழர்களே! கடவுள், மதம், ஜாதியம், தேசியம், தேசாபிமானம் என்பவைகள் எல்லாம் மக்களுக்கு இயற்கையாக தானாக ஏற்பட்ட உணர்ச்சிகள் அல்ல. சகல துறைகளிலும் மேல்படியிலுள்ளவர்கள் தங்கள் நிலை நிரந்தரமாயிருக்க ஏற்படுத்திக்கொண்டிருக்கும் கட்டுப் பாடான தாபனங்களின் மூலம் பாமர மக்களுக்குள் புகுத்தப்பட்ட உணர்ச்சிகளேயாகும். இந்தப்படி புகுத்தப் படவேண்டிய அவசியமும், காரணமும் என்னவென்று பார்த்தால் அவை முற்றும் பொருளாதார உள் எண்ணத்தையும், அன்னியர் உழைப்பாலேயே வாழ வேண்டும் என்கின்ற உள் எண்ணத்தையும் கொண்ட பேராசையும், சோம்பேறி வாழ்க்கைப் பிரியமுமேயாகும்.

ஆதியில் மனிதர்கள் காடுகளில் தனிமை யாய் சுயேச்சையாய்த் திரிந்த - இயற்கை  வாழ்க்கையிலிருந்து சமுக கூட்டு வாழ்க்கைக்கு வரும் போது அவனவன் தன் தனக்கு வேண்டிய சகல காரியங்களையும் தானே செய்து கொண் டும், அவசியமான பரபர  உதவிகளை வழங்கிக் கொண்டும் ஒரே சமுகமாய், சமத்துவமாய் வாழலாம் என்று எண்ணினானே ஒழிய, மற்றபடி மற்றொரு வனை அடிமைப் படுத்தி அவனிடம் தனக்கு வேண்டிய எல்லா வேலையையும் வாங்கிக் கொண்டு ஏய்த்து, அவனை உலக சுகபோகங் களில்  பட்டினிப் போட்டு தான் மாத்திரம் சோம்பேறியாய் இருந்து வாழ்ந்து கொண்டு எல்லா சுகபோகங்களையும் தானே அனுபவித்துக் கொண்டு இருப்பதற்கோ அல்லது மற்றவனுக்கு அடிமையாய் இருந்து கஷ்டப்பட்டு உழைத்து அவ்வுழைப்பின் பெரும் பயனை மற்றவன் அனுபவிக்க விட்டு விட்டு தான் பட்டினி கிடப்பதற்கோ அல்ல என்பது நேர்மையுள்ள மனிதர் யாவரும் ஒப்புக் கொள்ளத் தக்க விஷயமாகும்.

ஆனால், நாள் ஏற ஏற மக்களுக்குள் சிலருக்குப் பேராசையும், பொறாமையும், சோம் பேறித்தனமும் வலுக்க வலுக்க அவற்றிலிருந்து செல்வவானும் அரசனுக்குக் குருவும் ஏற்பட்டு பிறகு அவற்றை நிலை நிறுத்தி ஆத்மா, கடவுள், வேதம், ரிஷிகள், மகாத்மாக்கள், ஆகியவை களைக் கற்பித்து பிறகு அவைகளின் மூலம் கடவுள் செயல், முன் ஜென்மம், பின் ஜென்மம், கர்மம், பாவம், புண்ணியம், மேல் உலகம், கீழ்உலகம், தீர்ப்பு நாள், மோட்சம், நரகம் ஆகியவைகளும் கற்பிக்க வேண்டியதாய் விட்டது. இந்த கற்பனைகளின் பயன் தான் பெரும்பான் மையான மக்கள் பாமரர்களாகவும் ஏமாற்றப்படவும், கொடுமைக்குள் ளாகவும் மற்றவர்களுக்கு அடிமையாகி உழைக்கவும் உழைத்தும் சரியான கூலி கிடைக்காமல் பட்டினிக் கிடந்துழல்வதைப் பொருமையுடன் பொருத்துக் கொள்ளவுமான காரியங்கள் நடந்து வருவதுடன் அவை எங்கும் என்றும் நிலைத்தும் நிற்கின்றன. எப்படியாயினும் இந்த நிலை அடியோடு அழிபட வேண்டும். அதற்காக அதன் காப்புகளான மேற் குறிப்பிட்ட கடவுள், மதம், தேசியம், ஜாதியம் என்பவைகளும் அவற்றின் பேறுகளான ஆத்மா, முன் ஜென்மம், கர்மம், தீர்ப்பு, மோட்ச நரகம், பாவ புண்ணியம், ஆகியவைகளாகிய போலி உணர்ச்சிகளும் அவற்றின் ஸ்தாபனங்களும் உடைத்தெரியப்பட வேண்டும்.

- விடுதலை நாளேடு, 26.10.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக