புதன், 29 மே, 2019

நாகரிகமும் நமது கடமையும் (1)



10.01.1948 - குடிஅரசிலிருந்து...


நாகரிகம் என்கின்ற வார்த்தைக்குப் பொருளே, பிடியில் சிக்காத ஒரு விஷயமாகும். ஒவ்வொருவரும் நாக ரிகம் என்பதற்கு ஒவ்வொரு தனிப் பொருள் கூறி வருகிறார்கள். கண் ணோட்டம் என்கிற தலைப்பின் கீழ், குறளில் நாகரிகம் என்கிற வார்த்தை வள்ளுவரால் உபயோக ப்படுத்தப் பட்டிருப்பதாக நான் 10, 20 வருஷங் களுக்கு முன்பு பார்த்ததாக ஞாபகம். அது தாட்சண்ணியம், அடிமை என்கிற பொருளில் உப யோகப் படுத்தப்பட்டிருப்பதாகவும் எனக்கு ஞாபகம்.

நாகரிகமும், மக்களின் மாறுதல்களும்


நாகரிகம் என்கிற வார்த்தைக்கு எந்தக் கருத்தை வைத்துக்கொண்டு பேசினாலும் மக்கள் சமுகம், நடை, உடை, ஆகாரம் மற்றும் எல்லாப் பாவனைகளிலும் பெரிதும் மாறுப் பட்டிருக்கிறது. எந்த ஆதாரத்தினால் தான் இவைகள் வேறுபட்டிருக் கின்றது என்று கூறமுடியாது. எப்படியோ எல்லாம் மாறுதலில்தான் போய்க்கொண்டிருக்கிறது. நம் முடைய பெண்கள் முன்பு முழங் கைக்குக் கீழும் இரவிக்கை அணிந்து வந்தார்கள். பின்பு மேலேறியது. மறுபடி கீழே இறங்கியது. இப்பொ ழுது மறுபடியும் மேலேயே போய்க் கொண்டிருக்கிறது. மேல் நாட்டு ஸ்திரீகளும் - தெருக்களில் தெருக் கூட் டுவது போன்ற ஆடைகளை முன்பு அணிந்து வந்தார்கள். அந்தக் காலத்தில் துணிகளைத் தூக்கிப் பிடித்துக் கொள்ள பணம் படைத் தவர்கள் ஆள்களை நியமித்துக் கொண்டிருந்தார்கள். அது அக்கால நாகரிகம் இப்பொழுதோ என்றால், ஆடை விஷயத்தில் மேல் நாட்டுப் பெண்களும் எல்லாவற்றையும் சுருக் கிக் கொண்டு விட்டார்கள். அதை நாம் இப்பொழுது நாகரிகமென்று தான் கருதுகிறோம்.

பற்றுகளை விடுத்துப் பார்ப்பீர் உண்மையை!


நாம் இவைகளைப் பற்றி எல்லாம் பேசும் பொழுதும், யோசிக்கும் பொழுதும் எந்த விதப் பற்றுதலும் இல்லாமல், அதாவது, ஜாதி, மதம், தேசம் என்பன போன்ற பற்றுகளை விட்டுவிட்டுச் சுயேச்சையாகக் சீர் தூக்கிப் பார்த்தால் தான், விஷயங் களை நன்றாகத் தெரிந்து கொள்ள லாம். அதன் உண்மையும் அப் பொழுதுதான் விளங்கும்.

ஒரு காலத்தில் சாம்பலைப் பூசிக் கொண்டு சிவசிவா என்று ஜெபிப்பது தான் யோக்கியமாகக் கருதப்பட்டது. இன்றைய கால தேச வர்த்தமானங்கள், மேல் சொன்ன விஷயத்தைக் கேலி செய்கின்றது.

புருஷன், பெண் ஜாதி என்கிற இரு சாரர்களை எடுத்துக் கொண் டாலும், முன்பு கல் என்றாலும் கணவன்,  புல் என்றாலும் புருஷன்  என்று மதித்து அடுப்பூதுவதே ஒரே கடமையென்று நடந்துவந்த பெண் களைப் பற்றிப் பெரிதும் மதித்து வந்தார்கள். ஆனால், இன்றோ புருஷனிடம் மனைவியானவள் நான் உனக்கு வேலைக்காரியா? அடிமைப் பட்ட மாடா? ஜாக்கிரதையாய் இருந்தால் சரி, இல்லாவிட்டால் எனக்கும் சம அந்ததும், சம உரிமை யும், சர்வ சுதந்திரமும் உண்டு என்று கர்ஜனை செய்யும் பெண்களையே நாகரிகம் வாய்ந்தவர்களென்று கருதுகிறோம். முன்பு புராணத்தைப் பற்றியும், மதத்தைப் பற்றியும் பேசுவதுதான் வித்வத்தன்மையாக இருந்தது. ஆனால் அது இன்று குப்பையாகிப் பரிகசிக்கத்தக்கதாக ஆகிவிட்டது. புத்திக்கும் அறிவிற்கும் பொருத்தமில்லாத முரட்டுப் பிடி வாதத்தில் முன்பு நம்பிக்கையிருந்ததைச் சிலாக்கித்துப் பேசி னோம். ஆனால் இன்றைய தினம் பிரத்தியஷமாக எதையும் எடுத்துக் காட்டித் தெளிவுபடுத்துவதையும் - விஞ்ஞானம் போன்றதான அறிவியக்க நூல்களைக் கற்றுணர்ந்த வல்லுனர்களையுமே நாம் பெரிதும் மதித்து வருகின்றோம்.

இடம் காலங்களுக்கு ஏற்ப நாகரிகம்


நாகரிகம் என்பது நிலைமைக்கும் தேசத்திற்கும் - காலப்போக்கிற்கும் தக்கவாறு விளங்குகிறது. கால தேச வர்த்தமான - வழக்கத்தையே ஒட்டி நாகரிகம் காணப்படுகிறது.

காலப் போக்கானது எந்தத் தேக் கத்தையும் உண்டாக்குவதில்லை-ஒன்றிலிருந்து மற்றொன்று தோன் றவும் - புரட்சி ஏற்படவும் செய்கிறது.

மீசை, தலைமயிர் இவைகளைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டுப் பேசினீர்கள். எது நாகரிகமென்று கருது கின்றோமோ, அது பெருத்த அஜீர ணத்துக்கு வந்து விடுகிறது. மீண்டும் அந்த நிலைமையானது மாறிக் கொண்டு போகத்தான் செய்கிறது.

ஒரு விஷயமானது வாய்ச் சாமர்த்தியத்தினால் செலாவணியாகி விடும். அது மெய்யோ, பொய்யோ - சரியோ - தப்போ எப்படியும் இருக்க லாம்.

நாகரிகத்தின் முடிவு


நாம் ஏன், எதற்காக உழைத்துப் பாடுபட வேண்டும்? பகுத்தறிவு படைத்த நாம் பாடுபட்டுத்தான் ஆக வேண்டுமா? நாகரிகம் என்பது சதா உழைத்துத்தான் உண்ண வேண்டுமா? என்கின்ற கேள்விகள் எழுந்து மக்கள் சமுகம் கஷ்டம் தியாகமின்றி-நலம் பெற முயற்சிக்கலாம். இது நாகரிக மாகக் கருதப்பட்டு பயன் அடைந்தாலும் அடையலாம்.

இன்றைய அரசியல் விஷயத்தில் இராட்டை சம்பந்தப்பட்டிருக்கிறது. இது ஆயிர வருஷங்களுக்கு முன்பு ஏற்பட்டு நாகரிகமாகப் பாவிக்கப் பட்டிருந்தது, பின்பு குப்பையில் தள்ளப்பட்டது. பிறகு மீண்டும் அது வெளிப்படுத்தப் பட்டு, அதற்குக் கொஞ்சம் மதிப்புக் கொடுக்கப்பட்டு, இராட்டை சுற்றுவதும் - தக்ளி நூல் நூற்பதும் நாகரிகமாகக் கருதப் பட்டது. ஆனாலும் அதுவும் ஒழிந்து போயிற்று என்றே சொல்லலாம். இவைகளையெல்லாம் எந்தவிதமான (தேசம், மதம்,ஜாதி) பற்றுதலுமில்லாத பொது மனிதன், பொது நோக்கோடு கவனித்தால் உண்மை விளங்காமல் போகாது.

நாம் ஒரு காலத்தில் தேசம் - தேசியம் - தேசப்பற்று என்பதை நாகரிகமாகக் கருதி வந்திருக்கிறோம். ஆனால் இன்றோ அவைகளை எல்லாம் உதறித்தள்ளி, மனித ஜீவகா ருண்யம், உலக சகோதரத்துவம், மக்கள் அபிமானம் (Citizen of the world) என்று கருதுவதையே பெரிதும் நாகரிகமாகக் கருத முன் வந்து விட்டோம்.

நாமே நாகரிகமென்றோம் நாமே பரிகசிக்கின்றோம்


ஒரு காலத்தில் நாகரிமாகக் கருதி வந்ததை இன்று நாம் பரிகசித்து வரு கிறோம். ஒரு மனிதன் தான் நாயக்கன், முதலி, வைணவன், சைவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை போராடிக் கொண்டு, ஒவ்வொரு வனும் தான் அதிக மேல் சாதிக்காரனா வதற்கு சைவ, வை ணவப் போக்கைப் பற்றிக் கொண்டு, பூணூலையும் நாமத் தையும் போட் டுத் தனது மதத்தையும் சிலாகித்துப் பிதற்றிக் கொண்டும் வந்தான். ஆனால் இன்றைய தினம் இவைகளை யெல்லாம் புத்தி கெட்டதனமென்றும், முற்போக்குக்கு முரணானதென்றும் கூறி, வெகுவாகக் கண்டனம் செய்து வருகிறோம். ஒரு காலத்தில் தனித் தனி தத்துவம் நாகரிகமாகக் கருதப் பட்டது. உதாரணமாக, ஒரு தனித்தனி ஜாதி நன்மையும் - தேச நன்மையும் சிலாக்கியமாகக் கருதப்பட்டது. ஆனால் ஒரு ஜாதியின் அனுகூலம் பிற ஜாதியானுக்குப் பாதகம் என்பதையும், ஒரு தேச நன்மை மற்றொரு தேசத்திற்குப் பொல்லாங்கு என்பதையும், நாம் இன்று நன்கு உணர ஆரம்பித்துவிட்டோம்.

அனுபவம், அறிவு, ஆராய்ச்சியால் முற்போக்கு

தோழர்களே! நான் குறிப்பாக ஒரு விஷயத்தைப்பற்றி வற்புறுத்தி இங்கு கூற விரும்புகிறேன். அதாவது நாம் அனுபவ முதிர்ச்சியால், அறிவு ஆராய்ச்சியால், நாம் முற்போக்காகிக் கொண்டு வருகிறோம் என்பதேயாம். நாம் எல்லா மனிதர்களையும் அறிவின் உணர்ச்சியால் ஆழ்ந்து கவனிக்கிறோம். உதாரணமாக, வியாபாரிகளை-மக்கள் சமுகத்தின் நலனைக் கெடுத்து லாபமடையும் கோஷ்டியைச் சேர்ந்தவர்களென்றும், லேவாதேவிக்காரர்களை - மனித சமுக நாச கர்த்தாக்களென்றும், மத ஆதிக்கங்கொண்ட வர்க்கத்தினர்களை-மனித சமூக விரோதிகளென்றும் கண்டிக்கின்றோம்.

நாகரிகம் என்பது பிடிபடாத ஒரு விஷயமென்று முன்பே கூறினேன். நம் நாட்டுப் பெண்கள் எப்படி பெல்ட் கட்டாமல் சேலை கட்டுகிறார்களென்றும் அது இடுப்பில் எவ்வாறு தங்கி இருக்கிறதென்றும், தலைக்கு ஊசி இல்லாமல் பெண்கள் எவ்வாறு மயிர்களைச் சேர்த்து முடிந்துகொள்ளுகிறார்களென்றும், நாம் சாப்பாட்டுக்கு தினம் ஒரு இலை எப்படிச் செலவு செய்கின்றோம், என்ன மகத்தான நஷ்டமென்றும், மேனாட்டார் ஆச்சரியப்பட்டு நம்மவர்களைக் கேட்பதையும் கேட்டிருக்கிறோம். ஒவ்வொருவரும் அவர்களின் செய்கையைச் சரியாக உணராததினால் சிலவற்றை ஆச்சரியமாகக் கருத நேரிடுகிறது.

நம்மிடையேயுள்ள சாதி அபிமானம், சொந்தக்கார அபிமானம், பாஷா அபிமானம், தேசாபிமானம் எல்லாம் தொலைய வேண்டும். இல்லாவிட்டால் எந்த நல்ல விஷயத்திலும் நாம் முடிவு காணுவது சரியாக ஆகிவிடாது.

காந்தியார் மேனாட்டில் முழுங்கால் துண்டோடு-போதிய ஆடையின்றிப் போன பெருமையைப்பற்றி ஒரு நண்பர் குறிப்பிட்டார். இது எவ்வளவு தூரம் புத்திசாலித்தனமானதாகும். சவுகரியத்திற்காகவும்-நன்மைக்காகவும் அங்கு அதிக ஆடைகளைப் பந்தோபதுக்காக அணிந்து கொள்ளாமல், பிடிவாதத்தோடு-கேவலம் இந்திய தர்மம் என்ற வெறும் எண்ணத்திற்காக, குளிரில் விரைத்துப் போக இங்கிலாந்து வாசம் செய்தது எவ்வளவு தூரம் நியாயமான செய்கையாகும்?

பகுத்தறிவுகொண்டு பாடுபட வாரீர்!

புதிய எண்ணங்களும், புதிய எழுச்சிகளும்-புதிய காரியங்களும் நிகழுகின்றன. நீங்களும் காலப்போக்கின் உயரியபலனை வீணாக்காது பகுத்தறிவை மேற்போட்டுக் கொண்டு ஜனசமுதாய நன்மையைத் தேடி பாடுபட முன் வாருங்கள். உங்களுடைய முயற்சிக்கு எல்லாம் வெற்றியே உண்டு. வெறும் கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தவர்களும் கூட, தங்களுடைய போக்கை மாற்றிக் கொண்டு முயற்சி மெய்வருத்தக் கூலி தரும் என்று சொல்லி வருகிறார்கள். ஆகவே தோழர்களே! நீங்கள் தன்னம்பிக்கை கொண்டு-மக்களின் விடுதலைக்குச் சரியான வழிகளில் பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டு போராட வாருங்கள்.

- விடுதலை நாளேடு 25. 5. 2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக