செவ்வாய், 21 மே, 2019

"வானத்தின் கீழே பெரியார் பேசாத பொருளேயில்லை- ஆதாரமும், ஆராய்ச்சியும் இல்லாமல் எதையும் அவர் சொன்னதேயில்லை!''

கவிப்பேரரசு வைரமுத்துவின் ஆய்வுக் கட்டுரை அரங்கேற்றம்

திருச்சி, மே 20  தந்தை பெரியார் தொடாத துறையேயில்லை; அதேநேரத்தில் அவை அத்தனையும் ஆதாரத்தையும், ஆய்வையும் அடிப்படையாகக் கொண்டது என்றார்  கவிப்பேரரசு வைரமுத்து.

5.5.2019  அன்று திருச்சியில் உள்ள கலைஞர் அறிவால யத்தில் நடைபெற்ற கருஞ்சூரியன்'' நூல் வெளியீட்டு விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் உரை யாற்றினார். அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

ஒரு தமிழ் மகன் திருமணம் செய்ய வேண்டுமானால் வாழ்க்கைத் துணைநலம் என்பான். ஆனால் ஆரியக் கருத்தில் பேசும்போது கல்யாணம், விவாகம், கன்னி காதானம் என்கிறான்.வார்த்தை வரும்போது கருத்தும் மாறிவிடுகிறது. வாழ்க்கைத் துணை என்பதில் சம உரிமையும், கன்னிகாதானம் என்பதில் அடிமைத்தன்மையும் புகுத்தப்பட்டு விடுகிறது. இம்மாதிரியே ஆரியக் கலப்பால் தமிழின் தன்மை, உரிமை, நேர்மை எல்லாம் கெட்டு ஆரியருக்குத் தமிழன் அடிமை என்பதுதான் மிஞ்சி விடுகிறது என்று கண்டறிந்து சொன்னவர் பெரியார்.


இப்பொழுது புரிகிறதா? ஏன் மொழி கலக்கக்கூடாது என்பது. வாழ்க்கை துணை நலம், எனக்கு நீ துணை; உனக்கு நான் துணை. கன்னிகாதானம் என்றால், என் கன்னியை உனக்குத் தானம் செய்கிறேன். அவள் என்ன பொருளா? பசுமாடா?  உருளைக்கிழங்கா? அவளுக்கென்று உணர்ச்சியில்லையா? உரிமையில்லையா? ஆணுக்கு என்ன உரிமை இருக்கிறதோ, அதே உரிமை பெண்ணுக்கும் இருக்கிறது  என்று வாழ்க்கை துணைநலம் சொல்லுகிறது. கன்னிகாதானம் அப்படி சொல்லவில்லை என்று பெரியார் சொல்கிறார், என்றார் கவிஞர் வைரமுத்து)


வாழ்க்கைத் துணைநலமும் - கன்னிகாதானமும்!


வாழ்க்கைத் துணை என்பதில் பெண் உயிராகிறாள்; கன்னிகாதானம் என்பதில் பெண் பொருளாகிறாள்.


ஒரு மொழிக்குள் இன்னோர் மொழி வெறும் சொல்லை மட்டும் அழைத்து வருவதில்லை. ஓர் இனத்தின் மரபணுக்களை மாற்றும் கலாசாரக் கிருமிகளோடுதான் அது நுழைகிறது என்பதை ஆய்ந்தறிந்த பண்பாட்டு விஞ்ஞானி பெரியார். இந்த மாபெரும் கண்டறிதலுக்குப் பின்புதான் பிறமொழி நுழைவுக்குத் தமிழில் தடைச்சுவர் கட்டப்பட்டது.


சங்க இலக்கியத்தில் பிறமொழிக் கலப்பு 2 விழுக் காடு.திருக்குறளில் 3 விழுக்காடு. சிலப்பதிகாரம் மணி மேகலையில் 6 விழுக்காடு.தேவார திவ்வியப் பிரபந்தங் களில் 15 விழுக்காடு.வில்லி பாரதம், கம்பராமாயணத்தில் 20 முதல் 25 விழுக்காடு.தலபுராணங்களிலும் திருப்புகழிலும் 60 முதல் 70 விழுக்காடு என்பது தமிழ்ச்சொல்லியல் வரலாறு. பெரியார் கொடுத்த பெருங்குரலுக்குப் பிறகுதான் பிறமொழிகளின் ஊன்றுகோல் இல்லாமல் தன் சொந்தக் கால்களால் நடக்கத் தலைப்பட்டது தமிழ்.


தமிழிசையின்மீது பெரியார் காதலுற்றது ஏன்?


கலைத்துறையின் மீது பெரிதும் காதலுறாத பெரியார் தமிழிசையின் மீது மட்டும் தனிப்பார்வை செலுத்தினார். காரணம் கல்லா மக்களின் கல்வி காதுவழி புகுகிறது என்பதுதான். தெலுங்கில் இருப்பதால் தெலுங்குக் கீர்த்தனை, வடமொழியில் இருப்பதால் வடமொழிப்பாட்டு என்பதுபோல், தமிழில் இருந்தாலே அது தமிழிசை என்பதைப் பெரியார் ஒப்புக்கொள்ளவில்லை. தமிழிசை இயக்கம் தோன்றியவுடன் மயக்கம் தீர்ந்துவிடும் என்று இறுமாந்திருந்த பெரியாருக்கு ஏமாற்றமே காத்திருந்தது. பாட்டு தமிழாகிவிட்டது; ஆனால் உள்ளடக்கம் பழைய பஞ்சாங்கமாகவே இருந்தது.


கண்ணன் சேலை திருடிய சிருங்காரங்களும், கந்தபுராணத்தின் களிறுதரு புணர்ச்சியும், சிவன் ஆடிய திருவிளையாடல்களும், பாற்கடலில் பரந்தாமன் பள்ளி யெழுச்சிகளும் தமிழிசைக்குள் புகுந்து சம்மணங்காலிட்டு அமர்ந்துகொண்டன. பெரியார் அதிர்ச்சிக்குள்ளானார். தமிழில் பாடுவது மட்டுமா தமிழிசை? தமிழின் அறிவை பண்பாட்டை விரிவு செய்வதல்லவோ தமிழிசை! இதே உள்ளடக்கம் வேறு மொழியில் இருந்தபோது விளை வேதுமில்லை. அதுவே தமிழில் பாடப்படும்போது பல்லவி பல்வலி தருகிறதே, சரணம் மரணம் தருகிறதே என்று பெரியார் கலங்கியிருக்கக்கூடும். கதை ஒன்று சொல்லித் தன் கலக்கத்தை விளக்கினார்:


(பெரியார் எவ்வளவு பெரிய சிறுகதை ஆசிரியர் பாருங்கள்; பெரியார் மட்டும் துறையை மாற்றியிருந்தால், பல எழுத்தாளன் காலியாகி இருப்பான். அவர் சீர்திருத்தத் திற்குப் போனதினால், நிறைய பேர் பிழைத்துக் கொண் டார்கள் என்றார் கவிஞர் வைரமுத்து)


பல் விளக்கச் சோம்பேறித்தனப்பட்ட மருமகனைப் பார்த்து ஒரு மாமியார், பல் விளக்கும்படி மருமகனுக்குச் சொல்ல வெட்கப்பட்டு, கரும்பு சாப்பிட்டால் பல் வெள்ளையாகும் எனக்கருதி, மறைமுகமாய், மாப்பிள்ளை! இந்த ஊர்க் கரும்பு நல்ல ருசியாக இருக்கும். ஒரு துட்டுக்குக் கரும்பு வாங்கிச் சாப்பிடுங்கள் என்று சொல்லிக் காசு கொடுத்தாள். மாப்பிள்ளை அதை வாங்கிக் கொண்டுபோய் எள்ளுப் பிண்ணாக்கு வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, பல்லை இன்னும் கேவலமாக்கிக்கொண்டு கரும் எண்ணெய்ப் பசையுடன் வந்தால் மாமியாருக்கு எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்! அது போலல்லவா இந்தத் தமிழிசைக் கிளர்ச்சி இந்நாட்டில் நடந்து வருகிறது என்று கருத வேண்டியிருக்கிறது.''


மூன்றே வாக்கியங்களில் சொல்லப்பட்ட உணர்ச்சியும், உண்மையும், நகைச்சுவையும் பயன்பாடும் மிக்க சிறு கதையிது.  பெரியார் ஒரு புனைவியல் மேதை!


தொலைநோக்குச் சிந்தனை என்பது ஒரு விஞ்ஞானியின் குணம்.


பெரியார் ஒரு விஞ்ஞானி!


(விஞ்ஞானிதான் சொல்வான், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று. பெரியார் ஒரு விஞ்ஞானி என்றார் கவிஞர் வைரமுத்து)


ஒரு தலைவனுக்கும் அது வாய்த்திருந்தால் அது அச்சமுகம் செய்த பேறு. பெரியாருக்கு அது வாய்த்திருந்தது. விஞ்ஞான விமோசனத்தால் மக்களின் பிறப்பு விகிதம் குறையும். சாவும்கூடக் குறைந்து போகும். தனிநபர் சொத்துரிமை ஒழிந்து போவதால் பிள்ளைபெறும் தொல்லை, வளர்க்கும் தொல்லை அதற்கு சொத்து சுகம் தேடும் தொல்லை ஒழிந்துபோகும். கல்யாணம் என்பதே ஒழிந்துபோகும் என்பதனால் விதவை என்ற ஒரு ஜாதி இல்லாமல் போகும்.


(கேட்க சாதாரணமாக இருக்கிறது; இந்த உலகத்தில் மிக உயர்ந்த பொருள்கள் எல்லாம் சாதாரணமாகத்தான் இருக்கும்; சூரியன்தான்  உலகத்தின் உயர்ந்த பொருள், அது எல்லோருக்கும் கிடைக்கிறது. காற்று தான் உலகத்தின் மிகப்பெரிய பொருள். இரண்டு நிமிடத்திற்குமேல் ஆக்சிஜன் இல்லை என்றால், முடிந்து போனது கதை. மூளையின் மரணம்தான், மரணம். அந்தக் காற்று எவ்வளவு வலிமையாக இருக்கிறது. எல்லாவற்றையும்விட முக்கியம், மூக்குக்குப் பக்கத்தில் அது வந்து உட்கார்ந்துவிட்டுப் போகிறதே, காற்று. எது மிகமிக உயர்ந்ததோ, அது இலவசமாக உங்கள் கிட்டே வந்து நிற்கும். பெரியார் காற்றைப் போல, சூரியனைப் போல என்றார் கவிஞர் வைரமுத்து)


குழந்தை பிறப்பதற்கு ஆண்  - பெண் சேர்க்கை அவசியமில்லை. தரைவழிப் போக்குவரத்து குறைந்து தனிமனிதர்கள் வானத்தில் பறக்கத் தொடங்குவார்கள் என்ற பெரியாரின் தொலைநோக்குச் சிந்தனைகளையெல்லாம் ஓர் அறிவியல் அனுமானம் என்று கருதலாம்.


(இதையெல்லாம்கூட சொல்லிவிடலாம், இப்படி வரும், அப்படி வரும் என்று. நான்கூட எழுதினேன், அழகிய நிலவில், ஆக்சிஜன் நிரப்பி, அங்கே உனக்கு ஒரு வீடு செய்வேன்; எனக்குத் தெரியும், அங்கே ஆக் சிஜன் இல்லை என்று.  ஆக்சிஜன் இல்லாத இடத்தில், அய்ஸ்வர்யா ராயை கொண்டு போய் வைக்க முடியுமா? அழகிய நிலவில், ஆக்சிஜன் நிரப்பி, அங்கே உனக்கு ஒரு வீடு செய்வேன், இது ஒரு கவிதை, கற்பனை - இதையெல்லாம் சொல்லிவிடலாம். பெரியார் சொன்ன தைக்கூட அனுமானிக்க முடியும். இப்பொழுது நான் சொல்லப்போவதுதான் பயங்கரமான விஷயம், மிகமிக முக்கியமான விஷயம் என்றார் கவிஞர் வைரமுத்து).


காந்தி கொல்லப்படுவார் என்று காந்தியாரிடமே சொன்ன பெரியார்!


ஆனால், மகாத்மா காந்தி கொல்லப்படுவார் என்ற செய்தியை அவரிடமே சொல்லிப்போன தொலை நோக்குதான் இன்னும் இந்த நாட்டின் நூற்றாண்டு ஆச் சரியமாய் உறைந்து கிடக்கிறது. 1927இல் பெங்களூருவில் உத்தமர் காந்தியடிகளுக்கும், தந்தை பெரியாருக்கும் நேர்ந்த உரையாடலை இப்போது இங்கே பதிவு செய்கிறேன்:


(உங்களுடைய கவனம் அப்படி, இப்படி என்று சிதறக்கூடாது. என் சொற்களுக்குப் பக்கத்தில் உங்கள் இருதயம், உங்கள் கண், உங்கள் மூளை அப்படியே இருக்கட்டும் என்றார் கவிஞர் வைரமுத்து)


பெரியார்: இந்து மதம் இருப்பதால் பிராமணன் இருக் கிறான்.  நானும்  தாங்களும் சூத்திரர்களாக இருக்கிறோம்.


எல்லாவித ஆதிக்கமும் பிராமணர்கள் கையில் இருக்கிறது.


காந்தியார்: அப்படி அல்ல. நான் இப்போது சொல்வதை பிராமணர்கள் கேட்கவில்லையா? இந்தச் சமயத்திலே நாம் எல்லோரும் சேர்ந்து, நீங்கள் கருதுகிற குறைபாடுகளை இந்துமதத்தின் பேராலேயே நீக்கிவிடலாமல்லவா?


பெரியார்: தங்களால் அது முடியாது என்பது எனது தாழ்மையான கருத்து. முடிந்தாலும்கூடத் தங்களுக்குப் பிறகு மற்றொரு மகான் தோன்றி, முன்பு இருந்து வருவதை இப்போது தாங்கள் மாற்றுவதைப் போல், இன்று தாங்கள் செய்வதை அந்த இன்னொரு மகான் மாற்றிவிடுவார்.


காந்தியார்: இனிவரும் காலத்தில் அந்தப்படி மாற்ற எவராலும் சுலபத்தில் முடியாது.


பெரியார்:நான் சொல்லுகிறேன்; தாங்கள் மன்னிக்க வேண்டும். இந்து மதத்தை வைத்துக்கொண்டு இன்று தங்களாலேயே நிரந்தரமாக ஒன்றும் செய்துவிட முடியாது.   தங்கள் கருத்து அவர்களுக்கு விரோதமாகச் சற்றுப் பலிதமாகிறது என்று கண்டால் அப்படிப்பட்ட ஒருவரையும் பிராமணர்கள் விட்டுவைத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.


(பெரியார் என்ன மனுஷனா? விஞ்ஞானியா? சரித்திர ஆய்வாளனா? என்றார் கவிஞர் வைரமுத்து).


1927 இல் சொன்னது; 1948 இல் நடந்தேறிவிட்டது.21 ஆண்டுகளுக்குப் பிறகு பலித்தே போயின பெரியார் காந்தியிடம் சொன்ன கவலைச் சொற்கள். வருத்தம்தான். ஆனால், பெரியார் ஒரு சமுக விஞ்ஞானி.


(இன்றைக்குத் தலைவர்கள் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளிக்கும்பொழுது, அவர்கள் அன்று சொல்ல நினைத்ததை மட்டும் சொல்லிவிட்டு, திரும்பி விடு கிறார்கள்; அடுத்த கேள்விகளுக்கு முன்பாக, காருக்குச் சென்றுவிடுவார்கள். ஆனால், பெரியார், இன்னும் ஏதாவது கேள்வி இருக்கிறதா? திட்டுகிறாயா? திட்டு'' என்பார் என்றார் கவிஞர் வைரமுத்து)


எந்தக் கேள்வியையும் எதிர்கொள்ளத் தயங்காதவர் பெரியார்!


எந்தக் கேள்வியையும் எதிர்கொள்ளத் தயங்காதவர் பெரியார். முட்டாள்களின், வஞ்சகர்களின், கோழைகளின் கேள்விகளையும் அவர் இயல்பாக எதிர்கொண்டிருக்கிறார். அவரை வெல்ல முடியாத கூட்டத்திலிருந்து வெறுப்பின் உச்சத்தில் அவர்மீது ஒரு கேள்வி வீசப்பட்டது. நீ யாருக்குப் பிறந்தவன்?


(நாம் எல்லாம் எவ்வளவு நினைக்கின்றோம் அவரை; அவர் எவ்வளவு கீழே கிடத்தப்பட்டு இருந்திருக்கின்றார். மக்கள் கூட்டத்தில் இருந்த ஒருவன், அவரிடம் கேட்கிறான், நீ யாருக்குப் பிறந்தவன்?'' என்று. நீங்களும், நானுமாக இருந்தால், என்ன செய்திருப்போம்? என்றார் கவிஞர் வைரமுத்து)


இந்தக் கேள்வி கேட்கப்பட்டால் மண்புழுகூடப் படமெடுக்கும்; கரப்பான் பூச்சியும் மீசை முறுக்கும். ஆனால், அணுவளவும் அதிரவில்லை பெரியார். நான் யாருக்குப் பிறந்தவன் என்பது பற்றிக் கவலையில்லை. அது என் அம்மா சிந்திக்கவேண்டிய காரியம். நான் யாருக்குப் பிறந்தவன் என்று என்னாலும் சொல்ல முடியாது. தம்பி நீ யாருக்குப் பிறந்தாய் என்று உன்னாலும் சொல்ல முடியாது. அந்தப் பிரச்சினையே முட்டாளுக்கும், அயோக்கியனுக்கும்தான் தேவை. யாருக்குப் பிறந்தாலும் மனிதனுக்கு மானம் தேவை.  அது உன்னிடம் இருக்கிறதா? என்னிடம் இருக்கிறதா? என்பதுதான் இப்போது சிந்திக்க வேண்டிய தேவை.


(இந்த உலகத்தில் வேறு யார் இப்படி பதில் சொல்ல முடியும்?  யாரிடம் இந்தக் கேள்வி வீசப்பட்டிருந்தாலும், அவருடைய பாதுகாவலர்கள் சும்மா இருப்பார்களா? என்னைப் பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்கிறான்; என்னைப் பார்த்து அம்பு தொடுக்கிறவன் எல்லாம், தூர நின்றுதான் பேசுகிறான்; நேரில் நின்று யாரும் பேசவில்லை. அப்படி பேசினால், நீங்கள் எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பீர்களா? தமிழ்ச்செல்வன் பார்த்துக் கொண்டிருப்பாரா? செல்லத்துரை பார்த்துக் கொண்டிருப்பாரா? மணி பார்த்துக் கொண்டிருப்பாரா? பாலகாலிங்கம் பார்த்துக் கொண்டிருப்பாரா? மறைந்து நின்று வம்பை வளர்ப்பது அவர்களுக்கு எளிதாக இருக்கிறது. பரவாயில்லை, அதெல்லாம் முடிந்து போனது; தமிழுக்காகத் தாங்கிக் கொள்வோம் என்றார் கவிஞர் வைரமுத்து).


ஞானமும், மானமும் உள்ளவன்தான் இந்த இழிந்த கேள்விக்கு இப்படி உயர்ந்த விடைசொல்ல முடியும். பெரியார் விடைசொல்லாத கேள்விகளே இல்லை என்று சொல்லிவிடலாம். ஆனால், பெரியார் விட்டுச்சென்ற பல கேள்விகளுக்கு இன்றுவரை விடையில்லை. இந்த இருட்டுப் பிடித்த சமுகத்தைப் பார்த்துப் பெரியார் கேட்ட நூற்றுக்கணக்கான கேள்விகளில் சில கேள்விகளை மட்டும் பதிவு செய்கிறேன்.


சிறுவயதில் குழந்தைகள் சாமி வைத்து விளை யாடுவார்கள். கல்லடுக்கி, குச்சிபரப்பி, அதன்மேல் துணி இலை காகிதத்தால் கூரை செய்து கோயிலாக்கி, பொம்மைகளைச் சாமிகளாக்கித் தகரங்களை வாத்தியங்களாக்கி விளையாடுவார்கள். 7, 8 வயதுவரை பெற்றோர்கள் ரசிப்பார்கள். 13 வயதில் ஆணும், பெண்ணும் அதே விளையாட்டைத் தொடர்ந்தால் அடே குட்டிச் சுவரே! அரைக்கழுதை வயதாகி இன்னமும் சாமிவைத்து விளையாட வெட்கமில்லையா என்று கடுத்த முகத்தோடு கேட்பார்கள். வயதான பிறகும் சாமி விளையாட்டு விளையாடும் பெற்றோர்களைப் பார்த்து அதே குழந்தைகள் திருப்பிக் கேட்டால் என்ன சொல்வோம்?


ஒரு பறவை இறப்பதற்கு முன்னிட்ட முட்டையாய் இந்தக் கேள்வி அனாதையாய் நிற்கிறது.


ஒடுக்கப்பட்ட மக்கள் மாட்டிறைச்சி உண்பது குற்றமா?


ஒடுக்கப்பட்ட மக்கள் மாட்டிறைச்சி உண்பது பற்றிய சமுக அரசியலை முன்வைத்துப் பெரியார் தொடுத்த வினா முக்கியமானது.


(இன்றைய பிரச்சினையை 1920 லேயே சந்தித்தி ருக்கின்றார் பெரியார் என்றார் கவிஞர் வைரமுத்து)


பெரியார் கேட்கிறார்:


மாடு தின்பதும் மது அருந்துவதும் நீங்கள் பறையர்களாக இருப்பதற்குக் காரணமென்று சொல்வது கொஞ்சமும் யோக்கியமான காரியமல்ல. மாடு சாப்பிட்டுக்கொண்டும் மது அருந்திக்கொண்டும் இருப்பவர்கள்தான் இன்று உலகத்தையே ஆண்டுகொண்டிருக்கிறார்கள். தவிரவும் நீங்கள் மாடு சாப்பிடுவதன் குற்றம் உங்களைச் சார்ந்ததல்ல. உங்களை மற்றவர்களைப் போலச் சரியானபடி சம்பா திக்கவும் தாராளமாகச் சாப்பிடவும், தெருவில் நடக்கவும் வழியில்லாமல் செய்துவிட்டதால் கொஞ்சப்பணத்தில் அதிக ஆகாரம் ஆகக் கூடியதான மாட்டு மாமிசத்தைப் புசிக்க வேண்டியதாயிற்று. கோழியும், மீனும், பன்றியும், எச்சிலையும், பூச்சி புழுக்களையும், அழுக்குகளையும், மலத்தையும் தின்கின்றன. இப்படி இருக்க - புல்லும் பருத்திக் கொட்டையும், தவிடும், பிண்ணாக்கும் தின்கிற மாட்டின் இறைச்சி சாப்பிடுவதால் மாத்திரம் எப்படி ஒரு மனிதன் தாழ்ந்தவனாவான்?


உணவு குறித்த இந்தக் கேள்வி இன்னும் பசியோடு அலைந்து கொண்டேயிருக்கிறது விடையென்ற இரையின்றி.


பெண்ணுரிமைபற்றி பெரியார் கேள்வி - ஆண்கள் நிசப்தம்!


பெண்ணுரிமைக்காகக் கேட்கப்பட்ட பெரியாரின் இன்னொரு கேள்வி ஆணாதிக்கத்தின் அடிப்படையை அசைத்துப் பார்க்கிறது.


பிள்ளைப் பேறில்லை என்ற காரணத்தைக் காட்டியும், வேறு அற்பச் சண்டைகளைக் கொண்டும் ஆண்கள் ஒரு மனைவியிருக்கும்போது மற்றொரு பெண்ணையும் மணந்து கொள்கின்றனர். பெண்ணும் இதே காரணத்தைக்கொண்டு சர்வாதிகாரத்துடன் மற் றொரு ஆணை மணந்து வீட்டில் சேர்த்துக்கொண்டால் கணவன் சும்மாயிருப்பானா?''


பெண்ணுரிமைக்குப் பரிவு காட்டிய பெரியாரின் கேள்விக்கு ஆணாதிக்கத்தின் பதில் நீண்ட நிசப்தமாகவே இருக்கிறது.


பொதுவெளியில் தன்னைக் கரைத்துக்கொண்ட ஒரு தலைவன் தன் தனிப்பட்ட இழப்புகளை எப்படி எதிர்கொள்கிறான் என்பதிலிருக்கிறது அவனது சமுகத் தொண்டின் மெய்த்தன்மை.


(ஊருக்கெல்லாம் ஆருடம் சொல்லலாம்; உனக்கு வருகிறபொழுது எப்படி நடந்துகொள்கிறாய் என்பதுதான் முக்கியம். சுத்தம் என்பது என்ன? என்று என்னிடம் கேட்டார்கள். கண் காணாத இடத்தைத் தூய்மையாக வைத்திருப்பது சுத்தம். ஒழுக்கம் என்றால் என்ன? என்று கேட்டார்கள். சாட்சி இல்லாத இடத்தில் நேர்மையாய் இருப்பது ஒழுக்கம் என்று சொன்னேன். அதுபோன்று, ஒரு தலைவனின் பெருமை, அவன் சொந்த வாழ்க்கையில் எப்படி நடந்துகொள்கிறான் என்பதுதான் முக்கியம் என்றார் கவிஞர் வைரமுத்து)


நாகம்மையார்பற்றிய பெரியாரின் இரங்கல் இலக்கியம் உலகப் புகழ் பெற்றது


தன் முதல் துணைவி நாகம்மையார் 1933 இல் மறைந்தபோது பெரியார் எழுதிய இரங்கல் அறிக்கை ஓர் உலக இலக்கியம் என்றே என்னைக் கருதச் சொல்கிறது. உலகத்தின் எந்தக் கல்லறைக் கவிதைக்கும் அது குறைந்ததில்லை. சொல்லப்போனால் துணைவியின் மரணத்தை இப்படிப் பொருள் கொண்டவர் எவருமில்லை. துணைவியாரின் மரணத்தைக் கொண்டாடி இப்படி எழுதுகிறார் பெரியார்:


நாகம்மாளை நான்தான் வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டிருந்தேனே அல்லாமல் நாகம்மாளுக்கு நான் வாழ்க்கைத் துணையாக இருந்தேனோ என்பது எனக்கே ஞாபகத்திற்கு வரவில்லை. பெண்கள் சுதந்திர விசயமாகவும், பெண்கள் பெருமை விசயமாகவும், பிறத்தியாருக்கு நான் எவ்வளவு பேசுகிறேனோ, போதிக்கிறேனோ அதில் நூற்றில் ஒரு பங்கு வீதமாவது என்னருமை விஷயத்தில் நான் நடந்துகொண்டிருந்தேன் என்று சொல்லிக்கொள்ள எனக்கு முழு யோக்கியதை இல்லை.


(என்னருமை நாகம்மாள்'' இதைவிடவா கவிதை வரிகள்; ஒரு கிழவன், கிழவி செத்த பிறகு கொஞ்சுகிறான் பாருங்கள் என்றார் கவிஞர் வைரமுத்து)


ஆகவே, நாகம்மாள் மறைந்தது எனக்கு ஓர் அடிமை போயிற்றென்று சொல்லட்டுமா? ஆதரவு போயிற்றென்று சொல்லட்டுமா? இன்பம் போயிற்றென்று சொல்லட்டுமா? உணர்ச்சி போயிற்றென்று சொல்லட்டுமா? ஊக்கம் போயிற்றென்று சொல்லட்டுமா? எல்லாம் போயிற்றென்று சொல்லட்டுமா? எதுவும் விளங்கவில்லையே! நாகம்மாள் செத்ததை ஒரு துக்க சம்பவமாகவும், நஷ்ட சம்பவமாகவும் கருதாமல் அதை ஒரு மகிழ்ச்சியாகவும், லாபமாகவும் கருத வேண்டுமென்றே நான் ஆசைப்படுகிறேன். ஆசைப்படு வது மாத்திரமல்லாமல் அதை உண்மை யென்றும் கருதுகிறேன். நான் இனி இருக்கும் வாழ்நாள் முழுவதையும் சங்கராச்சாரிகள் போல சஞ்சாரத்திலேயே சுற்றுப் பிரயா ணத்திலேயே இருக்க வேண்டும் என்று கருதி இருந்த துண்டு. அதற்கு வேறு எவ்விதத் தடையும்  இருந்திருக்க வில்லையென்றாலும் நாகம்மாள் பெரிய தடையாய் இருந்தார். இப்போது அந்தத் தடை இல்லாமல் போனது ஒரு பெரிய மகிழ்ச்சிக்குரிய காரியமாகும். ஆதலால், நாகம்மாள் முடிவு நமக்கு நன்மை தருவதாகுக.


உலகத்திலேயே இறப்பைக் கொண்டாடிய இரங்கல் செய்தி இதுவாகத்தான் இருக்க முடியும்.


வானத்தின்கீழ் பெரியார் பேசாத பொருளே இல்லை!


சூரியன் வந்து வந்து போகும் இந்த வானத்தின் கீழே பெரியார் பேசாத பொருளில்லை. கடவுள் - மதம் - ஜாதி - ஆண் - பெண்  கல்வி  - காதல் - இலக்கியம்  - கலை - அறிவியல் - அறவியல்  - அரசியல்  - உலகியல் - உளவியல் - இறந்தகாலம் - நிகழ்காலம் - எதிர்காலம் - ஜனனம் - மரணம் என்று அவர் தொடாத துறையில்லை. ஆனால் ஆதாரமும், ஆராய்ச்சியும் இல்லாமல் எந்தக் கருத்தையும் அவர் சொன்னதில்லை.  அவர் மொழியில் அலங்காரம் இல்லை;  ஆடம்பரம் இல்லை. சத்தியம் சவுக்காரம் போட்டுக் குளிக்கவேண்டியதில்லை. மனித குலத்தின் சமத்துவத்துக்காகப் பேராசைப்பட்ட துறவி அவர். திராவிடர்களின் மேன்மைக்காகத் துன்பத்தை இழுத்துத் தோளில் போட்டுக் கொண்டவர். அடக்குமுறைக் கும், சிறைவாசத்துக்கும், இழிவுக்கும், ஏளனத்துக்கும் அடிக்கடி ஆளானவர். இவரைப்போல் இப்படி ஒரு தலைவர் இந்தியப் பரப்பில் முன்னுமில்லை; பின்னு மில்லை.


94 ஆண்டுகள் 3 மாதங்கள் 7 நாட்கள் வாழ்ந்த பெரு வாழ்வில் எண்ணாயிரத்து இருநூறு நாட்களைச் சுற்றுப் பயணத்திற்கே செலவிட்டவர். எட்டு லட்சத்து இருபதாயிரம் மைல்கள் சுற்றுப்பயணம் செய்தவர். அதாவது பூமியின் சுற்றளவைப் போல் 33 மடங்கு சுற்றி வந்தவர். இருபத்தோராயிரத்து நானூறு மணி நேரம் சொற்பொழிவு ஆற்றியவர். அவரது அத்தனை சொற்பொழிவுகளையும் ஒலிப்பதிவு செய்து ஓடவிட்டால் 2 ஆண்டுகள்  5 மாதங்கள் 11  நாட்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்திருக்கும்.


தமிழர்களின் மனித அதிசயம் பெரியார். காற்றைப் போல் தண்ணீரைப்போல் தமிழர்களுக்கு எப்போதும் தேவைப்படுகிறவர்.


90 வயதுக்கு மேல் வாழ்ந்து முடித்த தமிழ்ப் புலத்தின் பேரறிஞர் ஒருவர் தன் மரணத்தின் முன்நிமிடத்தில் இப்படிச் சொல்லிப் போனார்: இந்த நூற்றாண்டின் தமிழ்வெளியில் இரண்டே இரண்டு பேர் மட்டுமே நிலை பெறுவார்கள். ஒருவர் பிரபாகரன்; இன்னொருவர் பெரியார்.


வாழ்க பெரியார்! நன்றி, வணக்கம்!


- இவ்வாறு கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் உரையாற்றினார்.


(குறிப்பு: கவிஞர் வைரமுத்து அவர்கள் ஆற்றிய கட்டுரையின்'' இடையிடையே கூறியவை அச்சு எழுத்தில் அடைப்புக் குறிக்குள் தரப்பட்டுள்ளன)


- விடுதலை நாளேடு, 20.5.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக