31.01.1948 - குடிஅரசிலிருந்து....
சென்ற வாரத் தொடர்ச்சி
அவர்களுடைய ராஜ்யத்தில் அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என்று தானே அர்த்தம். ஆகவே மகா ஜனங்களின் ராஜ்யத்தில் மகாஜனங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம், இந்த வெட்கங் கெட்ட பசங்கள் இங்கு என்னத்துக்கு வந்து கேள்வி கேட்பாடு இல்லையா என்று பல்லைக் காட்டிக் கெஞ்சுவது என்பது.
இந்தப் பயல்கள் நான் ஒருவன் இருக்கிறேன் என்பதாக நினைத்தார்களா? இந்த ராஜ்யம் என்னுடையது என்பதை மதித்தார்களா? என்னால் எதுவும் செய்ய முடியும் என்பதை ஒப்புக்கொண்டார்களா? இது கடவுள் ராஜ்யம், இது கடவுள் செயல், என்பதை நினைத்தார்களா? இப்படிப்பட்ட பயல்கள் உதைப்பட்டால், அடிபட்டால், சோத்துக்குத் திண்டாடினால், துணிக்குப் பறந்தால், பெண்டு பிள்ளைகளைக் கண்டவன் அடித்துக் கொண்டு போனால் எனக்கு என்ன? உனக்குத்தான் என்ன? கவலைப்படட்டும்! இன்னும் படட்டும்! சுயராஜ்யம் என்பதிலுள்ள சுயம் என்பது ஒழியும் வரை படட்டும்! நாசமாகட்டும்! எவன் ராஜ்யம் எப்படி போனால் எனக்கு என்ன கவலை?
மகாஜனங்கள்: சுவாமி! சுவாமி! இந்தச் சங்கதி இதுவரையில் எங்களுக்குத் தெரியவில்லையே. பூலோகத்தில் எவனோ நாலு வயது சோத்துப் பிள்ளைகள் சுயராஜ்யம், சுயராஜ்யம் என்று கூப்பாடு போட்டான்களே என்று நாங்களும் தெரியாமல் கூப்பாடு போட்டு இந்தக்கதி ஆகி விட்டோம். இனி அது தங்களுடைய ராஜ்யம் தான். தாங்கள்தான் எங்களை ஆள வேண்டும். சுயராஜ்யம் என்பதே நாதீகத் தன்மை என்பதையும் முட்டாள் தனம் என்பதையும் இப்போது நாங்கள் நன்றாய் உணர்ந்து விட்டோம். எங்களைக் காப்பாற்றி அருள வேண்டும்.
கடவுள்: இது மாத்திரமா? உங்கள் நாஸ்திகத் தன்மைக்கு உதாரணம் இன்னும் எவ்வளவு அக்கிரமம் செய்கிறீர்கள்? சுயராஜ்யம் என்று சொல்லிக் கொண்டு உங்கள் இராஜ்யத்தில் நீங்கள் ஒருவொருக்கொருவர் உதைத்துக் கொண்டால் அமெரிக்காவுக்கு எதற்கு ஆகப் பிராது கொண்டு போவது.
அவன்களென்ன என்னைவிடப் பெரிய சக்தி வாய்ந்தவன்கள், இது எனக்கு எவ்வளவு அவமானமாக இருக்கிறது. நினைத்தால் கொதிக்கிறதே இரத்தம். நான் கல்லுப்போல் - ஏன் கல்லாகவே ஊருக்கு 100, 200 ஆயிரம் என்கின்ற கணக்கில் இருக்கிறேன். எனக்கு என்று தினம், மாதம், வருஷம் என்கின்ற கணக்கில் எத்தனையோ கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்கிறீர்கள் தொட்டதற் கெல்லாம் பிரார்த்தனை, அர்ச்சனை, தொழுகை செய்கிறீர்கள். இந்தக் காரியத்துக்கு என்னைக் கொஞ்சம் கூட மதிக்காமல் நினைக்காமல் நான் ஒருவன் இருக்கிறேன் என்பதைச் சிறிது கூட தெரிந்தவர்களாகக் காட்டிக் கொள்ளாமல் ஓடுகிறீர்களே அமெரிக்காவுக்கு வெட்கமில்லை மானமில்லை, நீங்கள் ஆத்திகர்களா? கடைந் தெடுத்த நாஸ்திகர்கள் அல்லவா? மகா ஆணவம் பிடித்த அகங்காரிகளல்லவா? போங்கள்! என் முன் நில்லாதீர்கள்! உங்களைப் பார்க்கப் பார்க்கப் பதறுகிறது, கொதிக்கிறது, துடிக்கிறது, போங்கள் வெளியே! டேய் துவார பாலகா! டேய் நந்தி! டேய் கணங்களே! இந்தப் பசங்களை வெளியேற்றுங்கள்.
அம்மன்: சுவாமி! கோபித்துக் கொள்ளா தீர்கள். தாங்கள் சர்வ சக்தர், சர்வ தயாபரர். தாங்கள் கோபிக்கப்படாது. அவர்கள் நம்ம பிள்ளைகள் தானே.
கடவுள்: போடி, போடி! நம்ம சர்வ சக்திக்கும், சர்வ காரணத்துக்கும் ஆபத்து வருகிற போது என்ன பொறுமை என்ன மன்னிப்பு? நாம் மிஞ்சிய பிறகல்லவா மற்ற சங்கதிகள் போ, போ! உனக்கு ஒன்றும் தெரியாது. உனக்கு ஒன்றுமே தெரியாது. தையல் சொற்கேளேல் தெரியுமா? நமக்கு ரத்தக்கொதிப்பு ஏற்பட்டுவிட்டது. சிறிது சாந்தி வேண்டும்! போங்கள்! யாவரும் வெளியில்.......
(தர்பார் மண்டபக் கதவு அடைக்கப்பட்டு விட்டது)
பெரியார் சிந்தனைகள்
கலை என்பதெல்லாம் மக்கள் வாழ்க்கைக்கும், அறிவுப் பெருக்கத்துக்கும் பயன்பெறக் கூடியதாய் இருக்க வேண்டுமே தவிர, வெகு சிலருக்கு மாத்திரம் புரியும் படியான, ஆனந்தப்படும் படியான வெறும் அற்புதத்தையும், அதிசயத்தையும், பண்டிதத் தன்மையையும் மாத்திரமே காட்டுவதற்கு ஆக என்று இருக்கக் கூடாது. எப்படிப்பட்ட கலையும் ஒழுக்கக் குறைவுக்கும் மூட நம்பிக் கைக்கும் சிறிதும் பயன்படக் கூடாததாய் இருக்க வேண்டும்.
- தந்தை பெரியார்
- விடுதலை நாளேடு, 17.5.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக