திங்கள், 20 மே, 2019

‘‘தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழி என்று தந்தை பெரியார் கூறியது ஏன்?''



கவிப்பேரரசு வைரமுத்து ஆய்வுக் கட்டுரையில் விளக்கம்


திருச்சி, மே 19   தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழி என்று தந்தை பெரியார் கூறியது ஏன்? என்ற விளக்கத்தை எடுத்துரைத்தார்  கவிப்பேரரசு வைரமுத்து.

5.5.2019  அன்று திருச்சியில் உள்ள கலைஞர் அறிவால யத்தில் நடைபெற்ற ‘‘கருஞ்சூரியன்'' நூல் வெளியீட்டு விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் உரை யாற்றினார்.

அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

வேட்டையாடும் சிங்கம் சைவமாயிருக்க முடியாது - அரசியல்வாதி நேர்மையாயிருக்க இயலாது என்பது பெரியாருக்குத் தெரியாதிருக்க முடியாது; அதைச் சொல்லிக்காட்ட அவர் தயங்கியதும் கிடையாது.

மக்கள் யாராக இருந்தாலும் அரசியலில் சுயநலமற்று நேர்மையாக நாணயமாய் நடந்துகொள்வார்கள் என்பது இயற்கைக்கு விரோதமான காரியமாகும்

என்பது பெரியாரின் ஒரு கூற்று.

அரசியலில் உழல்வதென்பது என்றைக்கிருந்தாலும் ஒரு நாளைக்காவது மனிதன் தன்னை அயோக்கியனாக்கிக் கொள்ளாமலும், தேசத்தையும் சமுகத்தையும் காட்டிக் கொடுக்காமலும் வாழும்படி செய்யவே முடியாது

என்பது பெரியாரின் மற்றொரு கூற்று.

நான் என்றும் கட்சிக்காரனாக இல்லவே இல்லை; கொள்கைக்காரனாகவே இருந்தேன்

என்பது இன்னொரு கூற்று.

நான்கு இயக்கங்கள்


பெரியார் கண்டது எதற்காக?


காங்கிரஸ்,  சுயமரியாதை இயக்கம்,  நீதிக்கட்சி , திராவிடர் கழகம் என்று பெரியார் நான்கு இயக்கங்கள் கண்டது, பதவிக்குப் பக்கத்தில் தன்னைக் கொண்டுசெல்லவன்று; தன் கொள்கைக்குப் பக்கத்தில் இயக்கத்தைக் கொண்டுவர மட்டுமே.

இந்துமதம்  கடவுள் என்ற இரண்டையும் தாண்டி ஒருவர் சிந்திப்பது அரிது; மற்றும் பெரிதினும் பெரிது. கட்டுப்பாடற்ற சுதந்திரமும், கருத்துகளுக்கான சகல சர்வாதிகாரமும், பதவிகளை எதிர்பாராத பற்றறுப்பும், எதையும் எதிர்கொள்ளும் இதய சுத்தியும், பிரபஞ்சத்தைப் பிழிந்து பருகிய பேரறிவும், கருகிக் கிடக்கும் மனிதக்கூட்டத்தின் மீது கண்ணீர் சொரியும் கருணையும் கூடிப்பெற்ற ஒருவருக்கே அந்த வலிமை என்பது வரப்பெறும்.

இந்துமதம், அவருக்கென்ன எதிரியா? கடவுளென்ன வைரியா? எவன் இந்த மண்ணுக்குரியவனோ, எவன் உழைக்கும் வெளியில் கதிர் வெப்பம் தாங்கிக் கறுத்துக் கிடக்கிறவனோ, எவன் உற்பத்தியில் நேரடியாய் உதிரம் கொட்டுகிறவனோ அவன் சூத்திரன் என்றும் தாசிமகன் என்றும் அடிமை என்றும் இழிவு செய்யப்படுவதைத்தான் பெரியார் எதிர்த்தார். கடவுளோ மதமோ அந்த இழிவை நியாயப்படுத்தும் கேடயமாக்கப்படும்போது அந்தக் கேடயங்களையே நொறுக்க முற்பட்டார்.

(என் சகோதரிகளே, சகோதரர்களே நீங்கள்தான் இன்னும் 80 வருஷம் உயிரோடு இருக்கப் போகிறீர்கள். நீங்கள் சொல்லவேண்டும். இப்பொழுது நான் சொல்லப் போகின்ற நான்கு வரியை, உங்கள் வாழ்வில், ஒரு அடித்தளமான சித்தாந்த வரிகளாக எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த வரிகளை, உங்கள் பிள்ளை களுக்கு, உறவுகளுக்கு, தோழர்களுக்கு, தோழியர் களுக்குச் சொல்லிக் கொடுக்கவேண்டும் என்றார் கவிஞர் வைரமுத்து).

விஞ்ஞானம் பிரிப்பதற்கும் -


மதம் பிரிப்பதற்கும் வேறுபாடு இருக்கிறது!


மனிதக் கூட்டத்தை விஞ்ஞானம் பிரிப்பதற்கும் மதம் பிரிப்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. விஞ்ஞானம் திராவிட இனம், ஆரிய இனம், மங்கோலிய இனம், காக்கேசிய இனம் என்று கபால அடிப்படையில் மனிதர்களை நான்காகப் பிரிக்கிறது. ஆனால் மதமோ பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்று கடவுள் அடிப்படையில் நான்காகப் பிரிக்கிறது.

(ஒருவன் மேடையில் கவிதைப் படித்துக் கொண் டிருந்தான்.

அவள் கண்களிலே மைதானம்

கூந்தலிலே பூபாளம்

நெஞ்சிலே தனபாரம் என்றான். கீழே ஒருவன் அபாரம் என்றான். அதாண்ட பெரியார் என்றார் கவிஞர் வைரமுத்து.

நான் ஒரு அரை மணிநேரம் கட்டுரைப் படித்தாலும் சரி, ஒருவன் ‘ஆ' என்று சொல்வதும் சரி என்றார் கவிஞர் வைரமுத்து).

இந்த மண்ணின் பெரும்பான்மை மக்களை, மண் ணுரிமை பறிக்கப்பட்டவர்களை, கல்வி மறுக்கப்பட்ட வர்களை, தூரத்தில் நிறுத்தித் தனக்குத் தொண்டுசெய்ய வைத்துக்கொண்டது வருணப் பிரிவு. தீண்டாமை,  ஜாதி என்ற இரண்டும் அந்த வசதியைத் தக்கவைத்துக் கொள்ளும் பக்கபலமாக்கப்பட்டன. பெண்கள்,  சூத்திரர்கள் இந்த இருவரையும் ஒரே பட்டியலில் ஒதுக்கியதும், ஒடுக்கியதும்தான் மனுதர்மம் செய்த மகத்தான தவறு.

வரலாற்றில் மன்னிக்கவே முடியாத மனிதம்


ஜபம் - தபசு - தீர்த்த யாத்திரை - சந்நியாசம் - கடவுள் தோத்திரம் -  ஆராதனை இவைகளைப் பெண்களும், சூத்திரர்களும் ஒருபோதும் செய்யக்கூடாது என்று தர்மம் தடுத்தது.

ஜப ஸ்தப தீர்த்த யாத்திர பிரவர்ஜ்ஜய மந்த்ர சாதனம் தேவாராதனம் சகசய்வஸ்திரீ சூத்திர பததானிஷள்  - என்பது தர்ம சாஸ்திரம்.

ஒரு சூத்திரன் கொலை செய்தால் அவன் தலை வெட்டப்பட வேண்டும். ஒரு பிராமணன் கொலை செய்தால் அவன் தலைமுடியை வெட்டினால் மட்டும் போதும். இது வெறும் தர்மமாக அல்ல, சட்டமாகவும் இருந்தது என்பதுதான் இன வரலாற்றில் மன்னிக்க முடியாத மனிதப்பிழை.

மனுதர்மம் முன்மொழிந்ததைத்தான், இலக்கியங்களும் வழிமொழிந்தன. சீல குணங்கள் அற்றவனாயினும், பிரா மணனை வணங்கு. ஞானமுற்றவனாயினும் சூத்திரனை வணங்காதே என்ற பொருளில்,

பூஜிய விப்ர சீலகுண ஹூனா

சூத்ர நகுணகன் ஞானபிர வீனா என்று எழுதிப் போகிறது துளசிதாச ராமாயணம்.

இந்த இழிசட்டம்தான் ஒரு சூத்திரனின் பிறப்பு  வளர்ப்பு - இருப்பு - கல்வி - தொழில் -  திருமணம் -  கலாச்சாரம் -  உணவு-  உடை  - வழிபாடு  - வாழ்வு  - இறப்பு  - சுடுகாடு என்று எல்லா நிலைகளிலும் அவனை இழிவிலே வாழ வைத்து அவமானத்தில் புதைக்கிறது. எத்தனையோ நூற்றாண்டுகளாய்த் திணிக்கப்பட்ட இந்த இழிவு வேந்தர்களின் காலம்கடந்து வெள்ளைக்காரன் காலம்வரை ஓர் இனத்தைப் பன்றிகளின் தொழுவில் படுக்க வைத்தது.

1915 அய்ப் பாருங்கள்!


(ஒரு புள்ளி விவரம் கொண்டுவந்திருக்கிறேன் பாருங்கள் என்றார் கவிஞர் வைரமுத்து)


1915 இல் கல்வித் துறையின் அரசுப் பணியிடங்கள் 518,

அவற்றுள் பிராமண அலுவலர்கள் 399 பேர்,

கிறித்துவர் - ஆங்கிலோ இந்தியர்கள் 73 பேர்,

முகமதியர் 28 பேர்,

பார்ப்பனரல்லாத இந்துக்கள் ஆதிதிராவிடர் உட்பட வெறும் 18 பேர்

என்றொரு புள்ளிவிவரம் சொல்லிப் போகிறது.

84 விழுக்காட்டு மக்களுக்கு வெறும் 18 இடங்கள்,

3 விழுக்காட்டு மக்களுக்கு 399 இடங்கள்.

இந்த ஓரவஞ்சனை ஒரு நாளில் நிகழ்ந்ததன்று.

இதிகாசங்களில் ஏகலைவன் என்ற சூத்திரன் கட்டை விரல் வெட்டப்பட்டான்; சம்புகன் என்ற சூத்திரன் தலை வெட்டப்பட்டான்.அந்தப் பழைய கதைதான் ஆங்கிலேயர் காலத்திலும் வேறு வடிவங்களில் வினைப்படுகிறது என்ப தைக் கண்டு கொதித்துக் கண்ணீர்விட்டவர் பெரியார்.

வைக்கம் வீரரின்


சிறை வாழ்வு எத்தகையது!


தீண்டாமை மண்டிக்கிடந்த கேரளத்து வைக்கத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் வீதிகளில் நடந்து செல்லும் உரிமைக்குப் போராடிக் கைது செய்யப்பட்ட பெரியாரின் சிறைவாழ்வை இப்படி விவரிக்கிறார் தேசாபிமானி பத்திரிகையின் கே.பி.கேசவ மேனன்: காலிலே விலங்கு, தலையிலே குல்லாய், கழுத்தில் கைதி எண் பொறிக்கப்பட்ட மரப்பட்டை, கொலைகாரக் கொள்ளைக்காரக் கைதி களோடு வேலை. ஒரு கடுங்காவல் தண்டனைக் கைதி ஒருநாள் செய்யும் வேலையைப் போல் இருமடங்கு வேலை செய்துகொண்டிருக்கிறார் பெரியார்.

முனிவர்களைப் போலவும் தபசிகளைப் போலவும் பெரியார் வெறும் சொல்தானம் செய்ய வந்தவர் அல்லர். களம் கண்டவர்; கைதி ஆனவர்; ஊர்மானம் காக்கவந்து தன்மானம் தாக்கப்பட்டபோது தாங்கிக்கொண்டவர்; மெய்யைக் காப்பதற்கு மெய்வருத்தம் கண்டவர்.

ஒரு தலைவன் புரிந்து கொள்ளப்படுவதில் இருக்கிறது ஒரு சமுகத்தின் உயரம். தமிழ் காட்டுமிராண்டி மொழி என்ற பெரியாரின் பெருங்கூற்று தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.

(நான் சொல்கிறேன், நான் தமிழ் எம்.ஏ.வை முறைப்படி படித்தவன். இன்னும் தமிழ் மாணவன். எனக்கு கொஞ்சம் தமிழ் அறிவு இருக்கிறது, அதனால் சொல்கிறேன், பெரியார் சொன்னதற்குப் பொழிப்புரை என்னவென்று என்றார் கவிஞர் வைரமுத்து)

தமிழ்மீது பூட்டப்பட்ட கடவுள் தன்மையைக் கழற்றி எறிந்தவர் பெரியார்


‘‘தமிழ் மீது தீராக் காதல் கொண்டவர் பெரியார். ஆனால், தமிழ் மீது பூட்டப்பட்ட கடவுள் தன்மையைக் கழற்றி எறிந்தவரும் அவரே. எனக்குத் தமிழ் பாஷை யிடம் எவ்விதப் பற்றும் இல்லை. மிகப் பழைய பாஷை - சிவபெருமான் பேசிய பாஷை என்பதற்காகவோ, அகஸ்தியரால் உண்டாக்கப்பட்ட பாஷை என்பதற் காகவோ எனக்கு அதில் பற்று இல்லை. நான் எதிர்பார்க்கும் நன்மையும் அது மறைய நேர்ந்தால், அதனால் நஷ்டம் ஏற்படும் அளவையும் உத்தேசித்தே நான் தமிழிடம் அன்பு செலுத்துகிறேன்'' என்பது பெரியாரின் தர்க்க வாக்குமூலம்.

(தமிழ் இருந்தால் எனக்கு என்ன லாபம்? தமிழ் இல்லாமல் போனால், எனக்கு என்ன நஷ்டம்? நஷ்டம் கூடுதலாக இருக்கிறது, அதனால் நான் தமிழை நேசிக் கிறேன். கணக்குப் போட்டு காதலித்தவர் பெரியார் மட்டும் தான். காதலில்கூட கணக்கு இருக்கிறது; நீ எவ்வளவு கொடுப்பாய், நான் இவ்வளவு கொடுப்பேன். கணக்கோடு காதல். தாம்பத்தியத்தில்கூட கணக்கு வைத்திருப்பார் போலிருக்கிறது என்றார் கவிஞர் வைரமுத்து)

‘‘ஒரு மொழியின் தொன்மை மட்டுமே அதன் சிறப்பன்று.நிகழ்காலத்தின் உலக நீரோட்டத்தில் தன்னைப் பேசும் மக்களை நீந்த வைக்கிறதா என்பதே அதன் உயிர்ப்பு. விஞ்ஞானப் பெருவெளியில் உலகம் விரிந்து விரைந்து சென்றுகொண்டிருக்க, தமிழைப் பிற்போக்குப் பெட்டிக்குள் பூட்டிவைத்துக்கொண்ட பெருங்கோபத்தை அந்த ஞானக்கிழவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. துருப்பிடித்த கருத்துகளையே துடைத்து வைத்துக் கொண்டிருப்பதா தமிழ்? எல்லாவற்றையும் சொல்லி முடித்தாகிவிட்டது என்று மொழிக்கு முற்றுப்புள்ளி வைப்பதா தமிழ்? தமிழில் இரண்டு சொற்கள் முட்டிக்கொண்டால் திருநீறு கொட்டியது ஒருகாலம். ஒரு வாக்கியத்தை நுகர்ந்து பார்த்தால் துளசி வாசமடித்தது ஒருகாலம். மேற்குலகம் வானத்தில் விண்மீன்களையும், கோள்களையும் தேடிப் பயணிக்கும் அதே கால அலைவரிசையில் வானத்தில் கடவுள்களையும், தேவர் களையும் தமிழ் தேடிக்கொண்டிருந்தால், தமிழன் எப்படிப் பிரபஞ்சக் குடியாக உயரமுடியும் என்று பெரியார் பெருங்கவலையுற்றிருக்கலாம். பக்தியைக் கழித்துவிட்டால் தமிழில் என்ன இருக்கிறது  இந்தப்  பழஞ்சரக்கை வைத்துக்கொண்டு உலகச் சந்தையில் எப்படி நிற்பது, விற்பது என்ற  அறிவுத் துயரம்தான் தமிழைக் காட்டுமிராண்டிமொழி என்று கதற வைத்தது பெரியாரை.

தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று


பெரியார் கூறியது ஏன்?


‘‘தமிழ் படித்த புலவர்கள், வித்வான்கள் பெரிதும், நூற்றுக்குத் தொண்ணூற்று ஒன்பது பேருக்கு ஆங்கில வாசனையே இல்லாது வெறும் தமிழ் வித்வான்களாக தமிழ்ப் புலவராகவே வெகுகாலம் இருக்க நேர்ந்து விட்டதால் அவர்களுக்கும், பகுத்தறிவுக்கும் வெகுதூரம் ஏற்பட்டதோடு, அவர்கள் உலகம் அறியாத பாமரர்களாகவே இருக்க வேண்டியவர்கள் ஆகிவிட்டார்கள். தமிழ் மொழி மூவாயிரம், நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்தி ஏற்பட்ட மொழி என்பதைத் தமிழின் பெருமைக்கு ஒரு சாதனமாய்க் கொண்டு பேசுகிறார்கள். நானும் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்பதற்கு அதைத்தானே முக்கியக் காரணமாகச் சொல்லுகிறேன்'' என்பது பெரியார் கூற்று.

(எங்களுடைய உறவினர் ஒருவருக்கு கண்ணில் ஒரு சிறிய பிரச்சினை. கண் இமைக்குமேலே ஒரு சிறிய பரு வந்து, அது இமைக்க  விடாமல் செய்கிறது. அதற்கும், இமை நரம்புகளுக்கும் சம்பந்தம் இருக்கிறது, மூளைக்கும், அந்த நரம்பிற்கும் சம்பந்தம் இருக்கிறது என்று அதற்கு ஒரு நோயின் பெயரை டாக்டர் சொன்னார். அதைப்பற்றி மட்டும் ஆங்கிலத்தில் 2000 பக்கம் கொண்ட ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார்களாம். தமிழ்ப் பழைமையான மொழிதான். நிகழ்கால உலகத்தை, நிகழ்கால வானியலை, நிகழ்கால அறிவியலை, அடுத்த நூற்றாண்டுக்குத் தேவையான நுட்பத்தை சொல்லிக் கொடுப்பதற்குத் தமிழில் நூல்கள் இல்லை. மருத்துவ நூல்கள் இல்லை, அறிவியல் நூல்கள் இல்லை. பொறியியல் நூல்கள் இல்லை. ஏன்? தமிழில் பயிற்று மொழியாக்க முடியவில்லை என்றால், பாட நூல்கள் இல்லை. அதுதான் பிரச்சினை.

தமிழ்ப் புலவர்களைப்பற்றி பெரியார்!

மொழியை வளர்க்கின்ற பண்டிதர்கள், மொழியை வளர்க்கின்ற அரசு, மொழியை வளர்க்கின்ற பல் கலைக் கழகங்கள் இன்னும் ஈறுகட்ட எதிர்மறை பேரெச் சத்தையே பேசிக்கொண்டிருந்தால், எப்படி தமிழ் மாறும்?

ஒரு பையன் ஓடி வருகிறான், தமிழ் வாத்தியாரை நோக்கி அவன் ஓடி வருகிறான், அய்யா, அய்யா என்று.

தமிழ் வாத்தியார் ‘‘ஏன்? ஏன்? என்ன காரியம்பற்றி இப்படி பதறி ஓடிவருகிறாய்?'' என்கிறார்.

அய்யா, உங்கள் வீட்டில் தீ பிடித்துவிட்டது, உங்கள் வீட்டில் தீ பிடித்துவிட்டது என்கிறான் அந்தப் பையன்.

அட, மடையனே, தீ பிடித்துவிட்டது என்று ஒற்று இல்லாமல் சொன்னால், என்ன அர்த்தம்? ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பிறகு  ஒற்று எழுத்து வருமடா மடையனே! என்கிறார் அந்த தமிழாசிரியர்.

உங்கள் வீட்டில் தீ பிடித்திருக்கிறது என்று சொல்ல வந்திருக்கிறான், அந்தப் பையன். தமிழ் வாத்தியார் ஒற்றுப் பிழையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்படி யென்றால், தீயை எப்பொழுது அணைக்கப் போகிறீர்கள்?

பூ பறித்தான், பூ பறித்தான், ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பிறகு ஒற்று மிகும். தீப்பிடித்தது  ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பிறகு ஒற்று மிகும்.

நான் சொல்லிக் கொடுத்த தமிழை மறந்துவிட்டாயே, வீடு தீப்பிடித்தது என்று சொல்லவேண்டும் என்று சொல்பவர்கள்தான் தமிழ் வாத்தியார்கள். இவர்கள்தான் தமிழ்ப் புலவர்கள். இவர்களைப் போல இருந்தால், எப்படி தமிழ் வளரும்? பெரியாரின் கேள்வி நியாயமா? இல்லையா?  என்றார் கவிஞர் வைரமுத்து).

எழுத்து - சொல் - கருத்து - அறிவு - பயன்பாடு - படைப்பிலக்கியம் போன்றவைகளைக் காலந்தோறும் புதுப்பித்துக் கொள்ளாத மொழி காட்டுமிராண்டி மொழிப்பட்டியலில் சேர்ந்து விடுமே, தமிழுக்கும் அது நேர்ந்துவிடக்கூடாதே என்ற பெருங் கவலைதான் பெரியாரை அப்படிப் பேசவைத்தது.

(சில நேரத்தில் திட்டு மொழிகளுக்கெல்லாம் நேரடி பொருள் இல்லை. தாய் மகனைத் திட்டுவாள், ‘‘நீ எங்கே போனாலும் உருப்பட மாட்டாய்'' என்பார். அதற்கு அர்த்தம் என்ன? எப்படியாவது உருப்பட்டுத் தொலைடா!

காதலன், காதலியை விரட்டுகிறான், ஒரு முத்தம் கேட்டான், அதெல்லாம் முடியாது என்று காதலி ஓடு கிறாள்; உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன் என்று காதலன் துரத்துகிறான், அதற்குப் பெயர் கொலை செய்யப் போகிறான் என்று அர்த்தமா? அவளுடைய முத்தம் கொலையைவிட உயர்ந்தது என்கிறான் காதலன்.

சொல்லுக்குச் சொல் நேரிடையாகப் பொருள் கொள்ளக்கூடாது பல நேரங்களில்  என்றார் கவிஞர் வைரமுத்து).

மொழி ஒரு போர்க்கருவி என்பது


பெரியார் கருத்து


உலையில் இட்டுக் காய்ச்சிக் கொல்லன் ஓங்கி அடிப்பது இரும்பின் மீதுகொண்ட கோபத்தால் அன்று, அது ஆயுதமாக வேண்டும் என்ற ஆசையினால். தமிழ் ஆயுதமாக வேண்டும் என்ற ஆசை இருந்தது பெரியாருக்கு.

மொழி என்பது உலகப் போட்டிப் போராட்டத்திற்கு ஒரு போர்க் கருவியாகும். போர்க்கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும் என்ற பெரியார் தமிழ் எழுத்தைச் சீர்மை செய்தார். உலக மொழிகளின் எழுத்துகள் இரண்டு வகையில் அமைந்தவை. ஒன்று சித்திர வடிவம்; இன்னொன்று ஒலி வடிவம். தமிழ் எழுத்துகள் ஒலி வடிவம் சார்ந்தவை.

(சீன எழுத்தெல்லாம் சித்திர வடிவம்; தமிழ் எழுத்து கள் எல்லாம் ஒலி வடிவம் என்றார் கவிஞர் வைரமுத்து)

247 ஒலிவடிவங்களோடு வழங்கிவந்தது தமிழ் எழுத்து கள் மிகுதியான ஒரு மொழி கற்பதற்குக் கடினமாகிறது; புழங்குதன்மையில் விரைவு குறைகிறது; அறிவியற் கருவிகளில் ஏறுவதற்கு இடர்ப்படுகின்றது. சுமைகள் குறைந்த பயணம் எளிமையாய் இருப்பது போல எழுத்துகள் குறைந்த மொழி பறவைப் பாய்ச்சலில் பயணமாகிறது. தமிழின் 247 ஒலி வடிவங்களை 131 ஆக குறைத்த பெரியார் குடிஅரசு, பகுத்தறிவு, விடுதலை,  உண்மை ஆகிய தமது பத்திரிகைகளில் சீர்திருத்த எழுத்துகளைப்புழக்கத்திற்கு விட்டு வழக்கத்தை மாற்றி னார். புலவனோ, புரோகிதனோ, அரசனோ, அரசோ, பண்டிதக் கூட்டமோ, மடமோ, பல்கலைக் கழகமோ செய்யத் துணியாத இந்தச் சீர்திருத்தத்தைச் செய்து முடித்தார் பள்ளிக்கூடம் தாண்டாத ஒரு பாமர மேதை. இந்த 131 ஒலிவடிவங்களும் 100 ஆகக் குறைந்து 31 ஆக முடிகிறபோதுதான் தமிழ் உலகப் பாய்ச்சல் கொள்ளும் என்பது என் எண்ணம்.

பெரியார் இந்தியை எதிர்த்தது ஏன்?


இந்தித் திணிப்பைப் பண்டிதர் கூட்டம் எதிர்த்ததற்கும், பெரியார் எதிர்த்ததற்கும் பெரியதொரு வேறுபாடு உண்டு. தமிழின் தனித்தன்மை கெடும் என்றும், வடமொழி யினின்றே தமிழ் வந்ததென்றாகிவிடும் என்றும், தங்கள் பிழைப்புக்கே பெரியதோர் ஊறு நேர்ந்துவிடும் என்றும், பண்டிதக் கூட்டம் இந்தியை எதிர்த்தது. ஆனால் தமிழ்ப் பண்பாட்டுக்கே ஆபத்து வந்துவிடும் என்று விஞ்ஞானப் பார்வையோடு எதிர்த்தவர் பெரியார் ஒருவரே.

(தொடரும்)

(குறிப்பு: கவிஞர் வைரமுத்து அவர்கள் ஆற்றிய ‘‘கட்டுரையின்'' இடையிடையே கூறியவை அச்சு எழுத்தில் அடைப்புக் குறிக்குள் தரப்பட்டுள்ளன)

-  விடுதலை நாளேடு, 19.5.19
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக