திங்கள், 20 மே, 2019

"தமிழாற்றுப்படை பெரியார்!'' அரங்கேற்றம்

வெள்ளைச் சூரியனால் விரட்ட முடியாத இருட்டை கருஞ்சூரியனாய் வந்து விரட்டியடித்தவர் பெரியார்!''


கவிப்பேரரசு வைரமுத்துவின் கட்டுரைக் காவியம்




திருச்சி, மே 18   சூரியனாலேயே விரட்டப்பட முடியாத காரிருளை, கருஞ்சூரியனாக உதித்து அவ்விருட்டை விரட்டியவர் பெரியார் என்று கட்டுரைக் காவியம் படித்தார் கவிப்பேரரசு வைரமுத்து.

5.5.2019  அன்று திருச்சியில் உள்ள கலைஞர் அறிவால யத்தில் நடைபெற்ற கருஞ்சூரியன்'' நூல் வெளியீட்டு விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு: தீராப் புகழ்கொண்ட திருச்சி மாநகரத்தில், தமிழாற்றுப் படையின் நிறைவு கட்டுரைக்கு தலைமை ஏற்க வந்திருக்கும், தமிழர் தலைவர் எங்கள் வணக்கத்திற்குரிய பெருமகன் அய்யா வீரமணி அவர்களே,

ஒட்டப்பிடாரத்தில் இருந்தாலும், இதயமெல்லாம் இந்தக் கலைஞர் அரங்கத்திலேயே ஒட்டிக் கிடக்கும் என் ஆருயிர் அண்ணன் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு அவர்களே,

ஒரு அற்புதமான வாழ்த்துரையை, ஆய்வுரையாக வழங்கி அமர்ந்திருக்கும் நாத்திகப் பேரறிஞர் பேராசிரியர் அருணன் அவர்களே,

இன்று அரங்கேற்றப்படுகின்ற இந்தக் கட்டுரையை வரும் புதன்கிழமை தனது நடுக்கூடத்தில் வெளியிட காத்திருக்கும் நக்கீரன் பத்திரிகை நண்பர்களே,

வெற்றி தமிழர் பேரவையின் திருச்சி மாவட்டத் தலைவர் என் அன்புத் தம்பி, செயல் தும்பி பி.வி.பாஸ்கர் அவர்களே,

முன்வரிசையில் அமர்ந்திருக்கும் திருச்சியின் முன்னணி யாளர்களே, கல்வியாளர்களே, படைப்பாளிகளே, அனைத்துக் கட்சி நண்பர்களே, என் கண்ணுக்குக் கண்ணான மாணவக் கண்மணிகளே, நான் வணங்கும் தாய்க்குலத்து தங்கங்களே, அரங்கம் வழிய வழிய நிறைந்திருக்கும் வெள்ளம் போன்ற தமிழர்களே, வீரம் கடந்தும், நேரம் கடந்தும் ஓடோடி வந்திருக்கும் தமிழ் உறவுகளே, விழாவின் வெற்றிக்குப் பாடுபட்ட என்னருந் தோழர்கள் சீதாராமன், மாருதி கண்ணன், பிரகாஷ், கவிஞர் நந்தலாலா, தமிழ்ச்சங்கம் மருதராஜன், கதிரேசன், பேராசிரியர் குபேந்திரன், பீர்முகமது, ஜெயகர்ணா, டாக்டர் லித்யாஸ் அகமது, ஜெரால்டு, ராஜ், வானதி உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகளின் செயல் வீரர்களே,

இந்த விழாவை தமிழ் மணக்க மணக்க தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் என் அன்புத் தம்பி கவிஞர் தஞ்சை இனியன் அவர்களே,

பாசத்திற்குரிய பத்திரிகையாளர்களே, தொலைக்காட்சி தோழர்களே, ஊடக உறவுகளே உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காவிரி வற்றிவிட்டது என்று யார் சொன்னது? அது இன்று கலைஞர் அறிவாலயத்திற்குள் வெள்ளமாகப் புகுந்திருக்கிறது.

முக்கொம்பில் காணாத வெள்ளம், முத்தமிழுக்குக் கூடியிருக்கிறது இங்கே!

பெரிய திருவிழாவிற்குக் கூடாத கூட்டம், பெரியாருக்குக் கூடியிருக்கிறது இங்கே!

பெரியாரைப்பற்றி பேசினால் பேரப் பிள்ளைகளும் கூடுகிறார்கள்


பெரியாரைப்பற்றி பேசினால், கன்னத்து முடி நரைத்த வர்களும், காதோரம் நரைத்தவர்களும், கழுத்தில் சுருக்கம் விழுந்தவர்களும், கை நடுக்கம் கொண்டவர்களும், மெய்த் தப்பிப் போனவர்களும், நெடுஞ்சாண் கிடையாக விழுகிற வர்கள் மட்டும்தான் வருவார்கள் என்று இருந்த நிலையை மாற்றி, இளைய தலைமுறை வரும், 18 வயது வரும், 24 வயது வரும், பெரியாரின் பேரப் பிள்ளைகள் வருவார்கள் என்று இந்தக் கூட்டம் மெய்ப்பித்து இருக்கிறது. உங்களுக்கெல்லாம் வணக்கம். என் நோக்கம் இதுதான்!

பெரியாரைப்பற்றி, தமிழர் தலைவருக்குச் சொல்லவா நான் கூட்டம் போட்டேன்? பேராசிரியர் அருணனுக்கு சொல்லவா கூட்டம் போட்டேன்? செல்வேந்திரனுக்குச் சொல்லவா? சுகுமாறனுக்குச் சொல்லவா கூட்டம் போட்டேன்? இல்லை, பெரியாரின் பேரப் பிள்ளைகளுக்குச் சொல்வதற்காகத்தான் நான் கூட்டம் போட்டேன். புதிய தலைமுறையினர் தெரிந்துகொள்ளவேண்டும்.

உங்களுக்கெல்லாம் பெரியாரைப்பற்றித் தெரிந்தால், உங்களுக்கு சிறகு தொழட்டும்; தன்னம்பிக்கை பிறக்கும். அறிவைத் தேடி வாழ்க்கை நகரும். உங்களுக்கு ஞானம் உங்கள் ரத்தத்தில் எழுதப்படும். பகுத்தறிவு உங்கள் மூளையில் பதியமாகும்.

யாரையும் சார்ந்திருக்கும் வாய்ப்பை அல்ல - நீங்கள் நீங்களே சார்ந்திருக்கும் வாய்ப்பு மட்டும் உங்களுக்கு வழங்கப்படும்.

பெரியாரைப்பற்றிப் பேச வைரமுத்துவுக்குள்ள பூரண உரிமை!


இந்த மேடையில் நான் மீண்டும் மீண்டும் கேட்டேன். பேராசிரியர் அருணன் இங்கேபேசும் போது, வைரமுத்துவிற்குப் பூரண உரிமை இருக்கிறது பெரியாரைப்பற்றி பேச என்று சொன்னார். ஒருமுறையா சொன்னார்? இருமுறை சொன்னார்; இருமுறையா சொன்னார்? மும்முறை சொன்னார்.

கூறியது கூறலே என்று நான் கலங்கிப் போனேன். வைரமுத்துவிற்குப் பூரண உரிமை இருக்கிறது. தமிழர் தலைவர் வந்தார், அவரும் சொன்னார், வைரமுத்துவிற்குப் பெரியாரைப்பற்றி சொல்ல உரிமை இருக்கிறது என்று சொன்னார்கள்.

அது எந்தெந்த உரிமை அடிப்படையில் உரிமை இருக் கிறது என்று அந்தப் பெருமக்கள் சொன்னார்களோ எனக்குத் தெரியாது. ஆனால், தோழர்களே, தாய்மார்களே, என் அரு மைத் தமிழ்ச் சிங்கங்களே, மாணவக் கண்மணிகளே, எனக்கு ஓர் உரிமை இருக்கிறது. அது என்ன உரிமை தெரியுமா?

மற்றவர்கள் எல்லாம் பிறந்த பிறகு கருப்புச் சட்டை அணிந்தவர்கள். இரவல் சட்டையைத் தைத்துப் போட்டுக் கொண்டவர்கள். தாயின் கர்ப்பத்திலேயே கருப்புத் தோலோடு பிறந்தவன் வைரமுத்து.

அந்த உரிமையிலேதான் எனக்குப் பெரியாரைப்பற்றி பேச உரிமை உண்டு என்று இந்த சிவப்புத் தோல் கொண்டவர்களும் சொன்னார்கள் என்கிறபொழுது எனக்கு மகிழ்ச்சிதான்.

எவ்வளவு பேச்சு இன்று; அருணன் அவர்களின் பேச்சும், தமிழர் தலைவர் அவர்களின் பேச்சும்.

ஒரு தேசியப் பல்கலைக் கழகம் ஆசிரியர் வீரமணி!


தமிழர் தலைவர் அய்யா பேசி முடித்துவிட்டு, நாற்காலியில் அமர வந்தபொழுது, அவர் உள்ளங் கையைப்பற்றி, அந்தச் சூட்டை என் விரல்களின் வழியே இருதயத்திற்குள் இறக்கிக் கொண்டு, அவரிடம் சொன்னேன். பெரியார் இருந்திருந்தால், என்னை எப்படி வாழ்த்தியிருப்பாரோ, அப்படி நீங்கள் என்னை வாழ்த்தினீர்கள் அய்யா'' என்றேன்.


இன்றைக்குத் தமிழ்நாட்டில், நடமாடும் நூலகம் இருக்கிறது என்றால், தமிழர் தலைவர் வீரமணி அவர்கள்.


ஒரு தேசிய பல்கலைக் கழகம் இருக்கிறது என்றால், அது தமிழர் தலைவர் அவர்கள்தான்.


தமிழகத்தின் வரலாற்றை, தமிழ் இனத்தின் வர லாற்றை, உலக வரலாற்றை, பகுத்தறிவின் வரலாற்றை விரல் நுனியில் வைத்திருக்கிறார் என்றால், அப்படிப்பட்ட அறிவியல் நம்முடைய கி.வீரமணி அய்யா அவர்கள்.


அந்தப் பெருமகனார் இங்கே வந்திருப்பதற்கு நான் பெருமிதப்படுகிறேன். நான் இவ்வளவு பெரிய பெருந்தலைப் பில் பேசுவதற்கு நான் ஒன்றை இழந்து நிற்கிறேன்.


தமிழ் என்னோடு இருக்கிறது

பகுத்தறிவு என்னோடு இருக்கிறது

தமிழர்கள் என்னோடு இருக்கிறார்கள்

தமிழர் தலைவர் என்னோடு இருக்கிறார்

அருணன் போன்ற அறிஞர்கள் இருக்கிறார்கள்

இவ்வளவு பெரிய கூட்டத் திருச்சபை என்னோடு இருக்கிறது.

ஒரே ஒரு தலை இல்லை.

இன்று கட்டுரை அரங்கேற்றத்தைக் கேட்பதற்கு, என் முத்தமிழ் ஆசான், மூதறிஞர் கலைஞர் இல்லை.

கலைஞர் இல்லாத ஒரு மன்றத்தை, தமிழர் தலைவர் அவர்களைத் தவிர யார் ஈடுகட்ட  முடியும்? அதனால் அவர் வந்திருக்கிறார், அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உடம்பெல்லாம் மார்க்சியம்; இதயத்தில் பெரியார் - அவர்தான் பேராசிரியர் அருணன்


பேராசிரியர் அருணனை இந்த மன்றத்தின் மூலமாக, நான் அவரை எவ்வளவு நேசிக்கிறேன், மதிக்கிறேன் என்பதையும் பதிவு செய்ய விரும்புகிறேன்.

இவரைப் போன்ற ஒரு கல்வியாளர், தமிழகத்தில் என் ஒரு கை விரலுக்குள் எண்ணிவிடலாம் என்பதை இந்த மன்றத்தில் பதிவு செய்கிறேன்.

வாழ்க்கையெல்லாம் கல்வி - கல்வியே வாழ்வு - வாழ்வே கல்வி - உடம்பெல்லாம் மார்க்சியம் - உணர்வெல்லாம் தமிழ் - இருதயத்தில் பெரியார் - ஒடுக்கப்பட்ட மக்களை, அடக்கப் பட்டவர்களும், நசுக்கப்பட்டவர்களும் என் பாடுபொருள் என்று வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒரு அறிவியல் அருணன் அவர்கள். அவருடைய நூல்களைப் படித்து நான் வியந்திருக்கிறேன். அந்த நூல்களைப் படித்தபொழுது, நான் என்ன சொல்லி பாராட்டினேன் என்பதை இந்த மன்றத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்.

காரல்மார்க்சைப் படித்துவிட்டு, ஏங்கல்ஸ் என்ன சொன் னானோ, அதையே அருணனுக்கு நான் பதிவு செய்யவேண்டும் என்று ஆசைப்படுகின்றேன். இது உங்களுக்கு மிகையாகத் தோன்றலாம். கல்லாதவர்களுக்கு இது மிகை; அவர் நூலை கற்றவர்களுக்கு அது சரி.

மார்க்சைப் படித்துவிட்டு, ஏங்கல்ஸ் சொன்னான், இவர் நூல்களையெல்லாம் படிக்கின்றபொழுது, இவர் காலமெல்லாம் எழுதிக் கொண்டே இருந்தார் என்று தோன்றுகிறது. அந்த நூல்களின் அடிக்குறிப்புகளையெல்லாம் பார்க்கின்றபொழுது, இவர் காலமெல்லாம் படித்துக் கொண்டிருந்தார்'' என்று தோன்றுகிறது.

இதைவிடப் பெரிய, ஒரு புகழ் ஒரு படைப்பாளிக்கு இருக்க முடியாது.

இந்தப் புகழுரையைத்தான் நான் அருணனுக்கு சமர்ப்பித்தேன். இரண்டு பெருமக்கள் இந்த மேடையில் இருக்கிறார்கள் என்றால், நான் பூரிப்படைகின்றேன்.

என் தமிழ் செழுமை பெறுகிறது. இன்னும் 50 ஆண்டுகளுக்குப் பணியாற்றவேண்டும் என்று என் விழி துடிக்கிறது. உங்களுக்கெல்லாம் வணக்கம்.

சில செய்திகளைச் சொல்லி என் கட்டுரைக்குள் பயணப் படவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

இந்த விருந்து ரொம்பப் பெரிது. நான் இலை போட்டுக் கொண்டே இருக்க விரும்பவில்லை. இலை போடுவதிலேயே நேரமாகி விட்டால்,  விருந்து எப்படி சமைப்பது? ஆகவே, ஒவ்வொரு தமிழாற்றுப் படையிலும் நான் சற்று நேரம் உரையாற்றுவேன். பிறகு கட்டுரைக்குள் பயணிப்பேன்.

அந்த உரை என்பது என்ன தெரியுமா?

அந்த உரை என்பது என் அரிசியைப் போடுவதற்கு  நான் சுட வைக்கின்ற உலை.

என் பொன்னை உருக்குவதற்கு நான் காட்டுகின்ற வெப்பம். ஆனால், ஏற்கெனவே உலை இது. பெரியாரைவிட கொதிக்கின்ற உலை உண்டா? இதை எதற்குச் சுட வைத்துக் கொண்டு! பெரியாரைவிட பொன் உண்டா? இதை ஏன் உருக்கிக்கொண்டு! சுத்தமான தங்கம். ஆனாலும்கூட, தமிழர் தலைவர் இங்கே ஒரு வினாவை வீசிவிட்டுப் போனாரே, அதற்கு விளக்கம் சொல்லிவிட்டு, என் உரைக்குள் புக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

தமிழாற்றுப்படையில் பெரியாருக்கு என்ன இடம்?


தமிழாற்றுப் படையில் பெரியாருக்கு என்ன இடம் என்று சில பேர் கேட்கிறார்களாம். தமிழே அறியாதவர்கள் அப்படி கேட்பார்கள்.

நான் ஒன்று சொல்கிறேன் தோழர்களே, இந்தத் தமிழாற்றுப் படை என்ற வரிசையில் மட்டும், பெரியார் இல்லை என்றால், அது தலை இல்லாத கிரீடம் - உயிரற்ற உடல் - வெறும் அலங்காரம். சொல்லப்போனால், என்னைப் போன்றவர்கள் தமிழ் படிக்க வந்த முதல் அன்னை பெரியார்தான். இன்று இந்த சபை சேர்ந்திருக்கிறதே, தமிழர்கள் ஒன்று சேர்ந்திருக்கிறார்களே, இது பெரியார் கொடுத்த படை. இந்தக் கலைஞர் அறிவாலயம் என்கிற கட்டடம் பெரியார் கொடுத்த படை. இதற்கு வழங்குகிற பெயர் பெரியார் கொடுத்த  படை.

இன்றைக்குத் தமிழர்கள் உற்சாகமாக களப் பணி புரிகிறீர்களே, தமிழர் தலைவர் சொன்னாரே, வெளியே வராத எங்கள் தாய்க்குலத்துத் தங்கங்கள், 80 விழுக்காடு இந்த மன்றத்தை நிரப்பியிருக்கிறார்களே, இது பெரியார் கொடுத்த படை. மற்றவர்கள் எல்லாம், மற்ற படைப்பாளர்கள் எல்லாம் தமிழில் எழுதினார்கள்; பெரியார்தான் தமிழையே எழுதினார். மற்ற படைப்பாளிகள் எல்லாம் தமிழர்கள் படிக்க எழுதினார்கள்;

பெரியார்தான் தமிழர்களைப் படித்து எழுதினார்.

மற்றவர்கள் எல்லாம் யாரோ இட்டுக் கொடுத்த இரவல் எழுத்தில் எழுதினார்கள்.

பெரியார்தான், தான் எழுதுவதற்குத் தமிழுக்குச் சொந்த எழுத்தை உண்டாக்கிக் கொடுத்தார்.

இவ்வளவு பெரிய தமிழ்ப் பேரகனை விட்டுவிட்டு, நான் எப்படி என்னுடைய தமிழாற்றுப் படையை நிறைவு செய்ய முடியும்?

நவீன எழுத்தாளர்களே - ஒரு பெரியாரைப்போல இன்னொரு பெரியாரை எழுதவே முடியாது!


நவீன எழுத்தாளர்களே, விமர்சகர்களே, பெரியாரைப் பிடிக்கவில்லை என்று சொல்லிக் கொண்டே நேசிக்கிறவர்களே, உங்களுக்கு ஒன்றைச் சொல்லவேண்டும்.

எழுத்து எனில் எது? நாவலா? அலங்காரம் உள்ள கவிதையா? கற்பனையா? கட்டுரைப் பதிப்புரையா? ஈற்றடி முச்சீராய், ஏனைய அடிகள் நாற்சீராய், இயற்சீரும், வெண்சீரும்வந்து, இயற்சீர் வெண்டளையும், வெண்சீர் வெண்டளையும் விரவி வந்து, செப்பலோசையோடு நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்ப்பாடுகளோடு முடிகின்ற வெண்பாவா? இதுவா இலக்கியம்? இதுவும் இலக்கியம் என்று சொல்லலாம்.

ஆனால், ஒரு வெண்பாவைப் போல, இன்னொரு வெண்பா எழுதிவிட முடியும். ஒரு கட்டுரைப் பதிப்புரையைப் போல, இன்னொரு கட்டுரையை எழுதிவிட முடியும். ஒரு குறுந்தொகையைப் போல, இன்னொரு குறுந்தொகையை எழுதிவிட முடியும். ஒரு நளவெண்பாவைப்போல, இன் னொரு நளவெண்பாவை எழுதி விட முடியும். ஒரு தொல்காப்பியத்தைப்போல, இன்னொரு தொல்காப்பியத்தை எழுதிவிட முடியும். ஒரு கள்ளிக்காட்டு இதிகாசத்தைப்போல, ஒரு கவிபாட்டுப் பா எழுதிவிட முடியும். ஒரு பொன்னியின் செல்வன் போல ஒரு நந்தினார்க்கு நாயகி எழுதிவிட முடியும். ஒரு பொன்னர் சங்கரைப்போல, ஒரு தென்பாண்டி சிங்கத்தை எழுதிவிட முடியும். ஒரு பெரியாரைப்போல, இன்னொரு பெரியாரை எழுதவே முடியாது.

நகல் எடுக்கப்பட முடியாத தலைவர் பெரியார்!


பெரியார் மட்டும்தான் நகல் எடுக்க முடியாத அசல். அவரை இந்தத் தலைமுறைக்கு நான் அறிமுகம் செய்யாவிட்டால், நான் இந்த நூற்றாண்டில் இருந்த பேனா பிடித்த எழுத்தாளன் என்கிற தகுதியை இழக்கிறேன்.


என் காலத்தில் என்ன நிகழ்ந்தது என்பதை, என் காலத்தில் என் தமிழால், என் தமிழர்களின் கடைசித் தமிழனுக்கு என்ன கொண்டு போய் சேர்ப்பேன் என்பதும் என் வரலாறு. அதுதான் எனக்குப் பிறகு கணக்குப் பார்க்கப்படும் எண்கள். அந்த எண்களில் ஒன்றுதான் தமிழாற்றுப் படை தோழர்களே. இந்தத் தமிழாற்றுப் படைக்காக நான் விழிந்திருந்த இரவுகள், விழித்திருந்த பகல்கள், படித்த நூல்கள், இழந்த திரையுலகம், திருடப்பட்ட மானம், என்மீது எய்யப்பட்ட அம்புகள், என் வாழ்வைப் பழித்த பழிமுறைகள், என் தாயைப் பழித்த இழிமொழிகள், தனிமையில் இருக்கிறபொழுது, பேனாவை சற்றே நகர்த்தி வைத்துவிடலாமா என்று எண்ணச் செய்த வினைகள். இப்படி ஒரு நிலையை 50 ஆண்டுகளில் நான் எந்தப் படைப்புக்கும் கொடுத்ததில்லை. அதனாலேயே இது எல்லா படைப்புகளையும்விட சிறந்ததாக இருக்கிறது.


ஊர் உறங்கியிருக்கும்; உலகம் உறங்கியிருக்கும். இலைகளுக்கு மத்தியில் காற்று உறங்கியிருக்கும். பூவிழியில் பனித் துளி உறங்கியிருக்கும். நட்சத்திரங்களை காவலுக்கு வைத்துவிட்டு, நிலாகூட உறங்கியிருக்கும். நானும், என் தமிழும் மட்டும் விழித்திருப்போம்.


"எத்தனை எத்தனை முறை திருத்தியிருப்பேன்?''


என் இரண்டு விரல்களுக்கு மத்தியில் ஒரு பேனா, என்னை சற்று கீழே வைக்கமாட்டாயா என்று  கெஞ்சும். என் விரல்களே எனக்குத் துணை இருக்கும்பொழுது, அஃறிணையே நீ துணை இருக்கக்கூடாதா என்று நான் பேனாவை செல்லமாக வைவேன். இந்தக் குறிப்பு போதாது என்று, உ.வே.சா. நூலகம் செல்வேன், பெரியார் நூலகம் செல்வேன். கன்னிமாரா நூலகம் செல்வேன். என் வீட்டு நூலகம் என்பது எனக்குப் பத்தாது. என் வீட்டு நூலகம் என்பது நான் படிக்க மட்டும். இது உலகத் தமிழே படிக்கவேண்டுமே! உலகத் தமிழர்கள் படிக்கவேண்டுமே! பிறகுதான், ஒருமுறை எழுதுவேன், கிழிப்பேன், தூர எறிவேன்.

வைரமுத்து எங்கே உன் முத்திரை!

எங்கே உன் தமிழ்?

இதுவா உலகிற்கு நீ அரங்கேற்றக் கூடிய கட்டுரை - கிழித்தெறி!

ஒருமுறை, இருமுறை கிழித்தெறிவேன் - மீண்டும் அமர்வேன். முதல் வரி தொடங்குவதற்கு மூன்று நாள்கள் காத்திருப்பேன். இறுதி வரி என்ன என்று யோசிப்பேன். யோசித்து, முதலில் சில நேரங்களில் முதல் வரி வராது; இறுதி வரி வந்துவிடும். இறுதி வரியிலிருந்து முதல் வரிக்கு முடிச்சுப் போடுவேன். 2,200 சொற்களில் என் கட்டுரையை எழுதி முடிக்கவேண்டும் என்று என்னுடைய மூளை உத்தரவு போடும். இந்த மூளையின் உத்தரவைக் கேட்குமா, முத்தமிழ்? அது 3,500 சொற்களில் சென்று முடியும். பிறகு, நான் பெற்ற குழந்தையை நானே கொல்வதுபோல,  கள்ளிப்பால் ஊற்றிக் கொல்வதுபோல, என் வார்த்தைகளை நானே தேய்த்துத் தேய்த்து சுருக்குவேன். பிறகு 2,200 சொற்களாக ஆக்குவேன். பிறகு அய்ந்து முறை திருத்துவேன். திருத்தி முடித்துவிட்டு, குளிக்கப் போவேன், குளியல் அறையிலிருந்து என் தொலைப்பேசியில் என் உதவியாளரை அழைத்து, டைப் செய்யாதே, நிறுத்து, நான் வந்துவிடுகிறேன் என்பேன்.

ஈரத் துண்டை கட்டிக்கொண்டே, மேலே வரச்சொல்லி, அதைத் திருத்திக் கொடுப்பேன். ஒரு எழுத்துப் பிழை வந்துவிட்டால், என்னை நானே நொந்துகொள்வேன்.

சொற்றொடர் அமைவது என்பது அய்ந்து சொற்றொடர்கள் ஒரே நிலையில் இல்லாமல் பார்த்துக் கொள்வேன்.

ஒரே ஓசை விழுந்து, உயரத்தில் ஒரு தொடர் முடிந்தால், அடுத்த நான்கு வாக்கிய தொடர் உயரத்தில் முடியாமல் பார்ப்பேன். இயல்பாக நான் கவிஞன் என்பதினால், கவிதைச் சொற்கள் வந்து ஆங்காங்கே மண்டியிடும். ஆங்காங்கே கூடாரம் இடும் - என்னை அறியாமல்! மல்லிகைப் பூ விற்ப வரின் வீட்டுக்காரி வீட்டில், மல்லிகைப் பூ வாசம் அடிக்காமல் என்ன செய்யும்?

அவள் மீன் விற்றுக்கொண்டு தெரு வழியே போனாலும், அவள் பூ வாசனை மறைக்குமா?

நான் உரைநடை எழுதப் போகின்றபொழுதும், கவிதை என்னை துரத்திக் கொண்டே வருகிறதே, நான் என்ன செய்வேன்?

அதை நான் செல்லமாகக் கிள்ளி வீட்டிற்குப் போ என்று அனுப்புவேன்.

வீட்டிற்குப் போன கவிதை, பாதி வழியில் திரும்பி வந்து, நான் போய்ட்டு வந்துட்டேன்'' என்று சொல்லும்.

சில நேரம் அந்தக் கவிதை சொல்லும், நீ நினைக்கிறாய், உன் கட்டுரைக்குள் கவிதை வந்தால், தமிழர்கள் கொஞ்சமாட்டார்கள் என்று நினைக்கிறாய். அதைக் கொஞ்சுவதற்காகவே சில பேர் கட்டுரை வாசிக்கிறார்கள் தெரியுமா?'' என்று கவிதை கட்டளைபோடும். அந்தக் கவிதையின் சொல்லையும் சில நேரம் கேட்பேன்.

இதை மாற்றியவன் நீ - ஆற்றிய வாக்கியம் என்று எழுதியிருக்கிறேன்.

அடப்பாவி, நான் உறங்கிக் கொண்டு இருந்தால் அல்லவா, கவிதை இப்படி உற்சவம் செய்யவேண்டும். நான் தவிர்க்கப் பார்த்தாலும் வந்து விழுகிறதே, இது எப்படி? விட்டுவிடு, இது இயல்பு!

அதாவது, இரட்டைக் குழந்தை பிறந்தால், ஒன்றைக் கொன்றா விடுகிறோம். அதையும் சேர்த்துத்தானே நம்முடைய குழந்தை.

கட்டுரையோடு கவிதை ஒட்டிக்கொண்டு வந்தால், ஒட்டட்டும் என்று விட்டுவிடுகிறேன்.

இப்படியெல்லாம் 24 ஆளுமையாக, எங்கள் ஞானப் புலவரை உங்கள் மத்தியில் கொண்டு வந்திருக்கிறேன்.

இந்தக் கவிதையை வெளியிடுவதற்கு என் முத்தமிழ் அறிஞர் கலைஞர் இல்லையே என்ற ஒரு குறையைத் தவிர எனக்கு எந்தக் குறையும் இல்லை என்று கருதுகிறேன்.

பொதுநலனுக்காக பாடுபடுபவன் தன்மானம் பார்க்க மாட்டான்


என்மீது விழுந்த பழிமொழிகளை நீ எப்படி எடுத்துக் கொள்கிறாய் என்று இந்த சமுகம் என்னைக் கேட்கலாம். இது உன் இயல்புக்கு விரோதமாயிற்றே, நீ அப்படிப்பட்டவன் இல்லையே! சுடுகின்ற சுயமரியாதைக்காரனாயிற்றே, நீ எப்படி சகித்துக் கொண்டாய் என்று கேட்கலாம்,

இதற்கும் பெரியார்தான் துணை நின்றார்.

பொது நலனுக்காகப் பாடுபடுகிறவன், தன்மானம் பார்க்க மாட்டான்.

இதற்கும் பெரியார்தான்.

அதற்குமேல் ஒரு கவிதை வந்து விழுந்தது, அந்தக் கேள்விக்கு.

எப்படித்தான் சகிச்சிக்கிட்டே, இது உன்னுடைய இயல்பு இல்லையே! ரண களம் பண்ணுவியே நீ! ஏன் இதை சகித்துக் கொண்டாய், கண்டுக்காமல் எப்படி விட்டுவிட்டாய்.

என் உள்மனதில் உறங்கிக் கொண்டிருந்த கவிதை வந்தது - வண்டு துளைத்த மூங்கில் மரம்,

புல்லாங்குழல் ஆகிவிடுவதில்லையா!

நெருப்பில் போட்டவுடன்,

மாசுகள் எல்லாம் கழன்றோடி

24 காரட் மட்டும் எஞ்சவில்லையா!

இந்தப் பழி என்கிற நெருப்பு, பழி என்கிற வண்டு,

உன்னை புதைத்த பிறகும்,

சுட்ட பிறகும்,

நீ ராகமாகி விடு!

நீ ராகமாகி விடு!!

இதோ மனோ, திருவங்கிமலை சரவணன், புலேந்திரன் இதுபோன்றவர்கள் இருக்கின்றபொழுது, எனக்கு என்ன பிழை வந்துவிடும்?

வைரமுத்துவின் தாயைப் பழித்தால்...?


தமிழர்கள் நினைக்கமாட்டார்களா, வைரமுத்துவின் தாயைப் பழித்தால், அது தமிழ்த் தாயையே பழித்தமாதிரி என்று.

இதுவரைக்கும் நான் பேசவில்லை! தமிழாற்றுப் படை நிறையட்டும் என்று காத்திருந்தேன்.

நிறைவடைந்துவிட்டது. இந்தக் கூட்டத்தைப் பார்த்தால், தமிழர் தலைவர் அய்யா அவர்களே, திரும்பவும் இப்படிக் கிடைப்பார்கள் என்று நினைக்கிறீர்களா? கிடைக்கமாட்டீங்க நீங்க.

உங்களைப் பார்த்தால், என் உயிர் வழியே, துயரம் எல்லாம் தமிழாக வந்து கொட்டியதோ என்று சொல்லத் தோன்றுகிறது.

மற்ற கட்டுரைகளில் தோழர்களே, சில வாக்கியங்களை நீங்கள் இழந்தாலும், இழப்பில்லை. சில கட்டுரைகளில் சில வார்த்தைகளை இழந்தாலும் இழப்பில்லை. பெரியார் குறித்து நான் எழுதியிருக்கின்ற இந்தக் கட்டுரையில், ஓர் எழுத்தை இழந்தாலும், நீங்கள் வாழ்நாளை இழப்பீர்கள்.

என் வாழ்நாள் பெருமை!


தமிழே, உன் காலடியில் ஞானத்தலைவன், அறிவுக்கிழவன், பகுத்தறிவுத் தந்தை, மறைந்த பிறகும் சூரியனாய் உலவிக் கொண்டிருக்கின்றவன், அந்தப் பெரியார் கட்டுரையில், தீரர்கள் கோட்டமான திருச்சியில், காவிரிக் கரையில், அரங்கேற்றுவதை என் வாழ்நாள் பெருமையாகக் கருதுகிறேன் தமிழர்களே, உங்கள் வாழ்த்துகளையே வரமாகக் கேட்கிறேன்.

பெரியார்!

ஒளிச்சேர்க்கை முடிந்து உதிர்ந்துபோன இலையை மரம் நினைவு கூர்வதில்லை. இறந்த பறவை எதற்கும் காட்டுக்குள் இரங்கல் தீர்மானம் ஏதுமில்லை. யானையோ புலியோ சிங்கமோ இறந்தாலும் ஆண்டு நினைவுகள் அனுசரிக்கப்படுவ தில்லை. மனிதன் மட்டும்தான் இறந்த பிறகும்  நினைக்கப்படு கிறான். அதிலும் எல்லா மனிதர்களும் எல்லாக் காலங்களிலும் நினைக்கப்படுவதில்லை. ஈமத்தின் ஈரம் காய்வதற்கு முன்பே பலமனிதர்கள் உலர்ந்துபோகிறார்கள். சில மனிதர்கள் மரித்த நாளில் மட்டும்தான் நினைக்கப்படுகிறார்கள்; நிகழ்கால நிம்மதிக்காகவே மரித்த சில மனிதர்கள் மறக்கப்படுகிறார்கள்.

எவனொருவனின் வாழ்வும் வாக்கும், செயலும் பொரு ளும் மனிதக் கூட்டத்தின் தற்காலத் தருணத்திற்கும் தேவைப் படுகின்றனவோ அதுவரைக்கும் ஒரு மனிதன் நினைக்கப்படு கிறான். கல்லறையில் அவன் உயிரோடிருக் கிறான். பெரியார் இன்னும் உயிரோடிருக்கிறார்; இருப்பார் மற்றும் இருக்க வேண்டும்.

பெரியார் என்ற பெரும்பொருளை எப்படிப் புரிந்து கொள்வது?

அடிமண்ணை மேல்மண்ணாகவும், மேல்மண்ணை அடிமண்ணாகவும் வரலாற்றில் உழுதுபோன வைரக்கலப்பை என்பதா?

கருஞ்சூரியனாய் வந்த கலகக்காரர்!


வெள்ளைச் சூரியனே விரட்ட முடியாத இருட்டைக் கருஞ்சூரியனாய் வந்து விரட்டிய கலகக்காரர் என்பதா?

உடம்பில் ஒட்டிய ஒட்டடைகளை ஆடைகள் என்று கருதிக் கிடந்த திராவிட இனத்தை, தொட்டுத் தூக்கித் துடைத்து அதன் நீண்ட நிர்வாணத்தைச் சுட்டிக்காட்டி, சுயமரியாதை ஆடைசூடிய சூத்திரம் கண்ட சூத்திரர் என்பதா?

400 கோடி மக்களுக்குச் சென்று சேர வேண்டிய சிந்தனைகளை வெறும் 4 கோடி மக்களின் மொழியில் பேசிப் பரப்பளவு குறைந்துபோன பாமர மேதை என்பதா?

(தமிழாற்றுப்  படையில் பெரியாரா? என்று கேட்பாருக்கு இந்த 12 சொற்கள் கொண்ட ஒரு வாக்கியம்தான் பதில்)

எழுத்து - சொல் - பொருள் - யாப்பு - அணி என விரியும் படைப்பிலக்கியம்தான் தமிழ் என்று மண்டிக்கிடந்த பண்டித மண்டலத்தை உடைத்தெறிந்து பகுத்தறிவு என்ற நான்காம் தமிழை உண்டாக்கிய சுயம்பு என்று சொல்வதா?

(சரியா? இல்லையா? கவிஞர் வைரமுத்து அவர்கள் கேட்க, ஆமாம் என்று மக்கள் குரல் ஓங்கி ஒலித்தது)

192 நாடுகளால் ஆன இந்த பூமியில் ஒரு நாட்டின் ஒரு பகுதியில் மட்டும் ஓங்கி ஒலித்த உலகக்குரல் என்பதா?

கேள்விக்கு அப்பாற்பட்ட புனிதங்கள் என்று கருதப்பட்ட கடவுள் - மதம் - சாதி - விதி - மரபு என்ற கருத்தாக்கங்கள் மீது ஆயிரம் கேள்விகளை முன்வைத்த அறிவின் ஆழியாகிய அறிவாளி என்பதா?

இவற்றுள் எதுவும் பொய்யில்லை; பெரியார் குறித்து இதுபோல் எது சொன்னாலும் மிகையில்லை.

(எவ்வளவு பெரிய வீரனை, இரண்டு போர்வைக்குள் மூடி மாற்றிவிட்டார்கள்)

மனிதநேயம்தான் பெரியாரின் இலக்கு!


பெரியார் எனில் பிராமண எதிர்ப்பு மற்றும் கடவுள் மறுப்பு என்று கருதுகிறவர்கள் அவரைக் கண்ணைமூடிக் கண்டவர்கள் என்றே கருத வேண்டியிருக்கிறது. யானை அசைவம் என்று அதன் தோற்றம்கண்டு முடிவு கட்டுகிறவர்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது. மனிதநேசம்தான் பெரியாரின் இலக்கு; பகுத்தறிவுதான் அவர் பாதை; சுயமரியாதைதான் வாகனம்; சமத்துவம்தான் அவர் சக்கரத்தின் அச்சு.

(பேச்சாளர்களுக்கும், அறிவாளிகளுக்கும் மிக முக்கிய மான ஸ்டேட்மெண்ட்)

05.01.1953 அன்று பெரியார் பேசிய பேச்சின் ஒரு பகுதியை எழுத்து மாறாமல் பதிவு செய்கிறேன்:

பிராமணர்கள் இந்த நாட்டில் வாழக்கூடாது என்றோ, இருக்கக்கூடாது என்றோ திராவிடர் கழகம் வேலை செய்யவில்லை. திராவிடர் கழகமும், நானும் சொல்லுவ தெல்லாம் விரும்புவதெல்லாம் நாங்களும் கொஞ்சம் - வாழவேண்டும் என்பதுதான். இந்த நாட்டிலே நாங்களும் கொஞ்சம் மனிதத் தன்மையோடு சமத்துவமாக இருக்க வேண்டும் என்பதுதான்.''

பெரியாரின் இந்த வாக்குமூலத்தில் நாங்களும் கொஞ்சம்'' என்ற சொல்லாட்சி வலி மிக்கது; வாஞ்சை மிக்கது மற்றும் அவரது மனித நேசத்துக்கு மாறாத சாட்சி சொல்வது.

அரசியல் தலைவரல்லர் பெரியார்!


பெரியார் ஒருநாளும் அரசியல் தலைவராக இருந்த வர் அல்லர்; வன்முறையை வரவேற்றவர் அல்லர்; பட்டத் துக்கும் பதவிக்கும் அதிகாரத்தின் ஒளிவட்டத்துக்கும் ஆசைப் பட்டவர் அல்லர். ஆனால் தான் உண்டாக்கிவிட்ட அரசியல் தலைவர்களையெல்லாம் தன் கொள்கைக்குச் சேவகர்களாகச் செய்துகொண்டவர். மனிதர்களின் மரபணுக்களோடு இணைந் தோடிக் கொண்டிருக்கும் இழிவுகளைத் துடைப்பது, வாக்கு வங்கி அரசியல்வாதிக்கு வசப்படாது என்று ஆதியிலேயே அறிந்துகொண்டவர்.

தமிழர்களின்  ஈராயிரமாண்டுச்  சமுதாய வரலாற்றில்  அங்கொன்றும் இங்கொன்றுமாய் அறச்சீற்றங்கள் பதிவான துண்டு. இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான்' என்ற வள்ளுவர் குறள் வெறும் இலக்கியச் சினமாகவே வடிந்துவிட்டது.

பறைச்சியாவ தேதடா?  பணத்தியாவ தேதடா?  இறைச்சி, தோல், எலும்பினுள் இலக்கமிட்டிருக்குதோ!'

என்ற சிவவாக்கியம் வெறும் ஆன்மிகக் கோபமாகவே அடங்கிவிட்டது.

இவைபோன்ற கவிதைச்சினங்களெல்லாம் இலைகளின் மீது பூச்சிமருந்து தெளித்தனவே தவிர, வேர்ப்புழுக்களைச் சென்று விசாரிக்கவேயில்லை. அந்த வகையில் தமிழ்ப் பெரும்பரப்பில் அநீதியின் ஆணிவேர்களை அசைத்ததும், சமுகக்கேடுகளின் அடிவேர்களைக் கெல்லியதும், வருணா சிரமத்தின் கிளைகளை வகிர்ந்ததும் பெரியாரின் பெருங் கோபம் மட்டும்தான்.

ஒருவன் பிராமணன் - இன்னொருவன் சூத்திரன்!


ஒரு மனிதன் கைநீட்டிப் பேசுகிறான்; ஒரு மனிதன் கைகட்டிப் பேசுகிறான். உற்றுப்பார்த்தால் ஒருவன் பிராமணன் - இன்னொருவன் சூத்திரன்.

மாடத்தில் ஒருவனுக்குக் காலுக்கும் தலையணை.  மண் குடிசையில் ஒருவனுக்குக் கையே தலையணை. உற்றுப்பார்த் தால் ஒருவன் செல்வந்தன்; இன்னொருவன் வறியவன்.

ஒருவன் அழுக்குப்படாமல் பொருளீட்டுகிறான்; இன்னொ ருவன் புழுதியிலும் சகதியிலும் பொருள் தேடுகிறான். உற்றுப்பார்த்தால் ஒருவன் கற்றவன்; இன்னொருவன் கல்லாதவன். ஓர் உடல் கட்டற்ற சுதந்திரத்தை அனுபவிக்கிறது. இன் னோர் உடல் கட்டுண்டு கிடக்கிறது. உற்றுப்பார்த்தால் ஓர் உடல் ஆண்; இன்னோர் உடல் பெண்.

சுதந்திரத்தால் அல்ல - சுயமரியாதையால்!


பிராமணன் - சூத்திரன்,  ஏழை - பணக்காரன், கற்றவன் - கல்லாதவன், ஆண் - பெண் ஆகிய பேதங்களே மனித குலத்தின் முற்போக்குக்கும் முன்னேற்றத்திற்கும் தடையாயின, இவற்றைக் கட்டமைத்த - கட்டிக்காக்கிற எல்லா நிறுவனங்களையும் உடைப்பதுதான் என் ஒரே வேலை (இதற்குப் பிறகு நான் போட்டிருக்கிற சொல்லாட்சிதான் மிக முக்கியம். என்னுடைய சொல்லாட்சியை மிக முக்கிய மாக நீங்கள் கவனிக்கவேண்டும். படிக்கும்பொழுது, அடிக் கோடிட்டுப் படியுங்கள். இந்தக் கட்டுரையை தோழர்களே, ஒருமுறை அல்ல, பலமுறை படியுங்கள். யாரும் மனதிற்குள் வாசிக்கக் கூடாது; வாய் விட்டு வாசிக்கின்றபொழுது, சுற்றி நின்று குடும்பம் கேட்கவேண்டும்) என்று பேராக்கம் கருதிப் பேரழிவு செய்யப் போந்தவர்தாம் பெரியார். இது சுதந்திரத்தால் ஆகாது, சுயமரியாதையால்தான் ஆகும் என்றதொரு முற்றிய முடிவெடுத்து அரசியலைத் துறந்த (பெரியார் யார் என்று சொல்கிறேன், அவர் துறவி, இவர் துறவி என்று சொல்கிறார் களே இங்கே பாருங்கள் என்றார் கவிஞர் வைரமுத்து)  ஒரு சமுகத் துறவிதான் பெரியார்.

(தொடரும்)


(குறிப்பு: கவிஞர் வைரமுத்து அவர்கள் ஆற்றிய கட்டுரையின் இடையிடையே கூறியவைகள் அச்சு எழுத்தில் அடைப்புக் குறிக்குள் தரப்பட்டுள்ளன)

-  விடுதலை நாளேடு, 18.5.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக