சனி, 4 மே, 2019

ஜாதியை ஒழிப்பதால் மதம் அழிந்துவிடுமா? - ஓர் சமதர்மி

21.04.1935 - குடிஅரசிலிருந்து....


இந்துக்களுக்குள் இன்றைய பழக்கங்களில் உள்ள ஜாதிப் பிரிவுகளுக்கு இந்து மதத்தில் ஏதாவது ஆதாரமிருக்கின்றதா என்று பார்ப் போமானால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்து வேதத்தில் பிராமணன் பிராமணரல் லாதார் என்கின்ற ஜாதிகள் தான் காணப் படுகின்றது. ரிக் வேதத்தில் ஓரிடத்தில் நான்கு ஜாதிகள் கூறப்பட்டிருப்பதாகவும், அதுவும் இடையே பிற்காலத்தாரால் நுழைக்கப்பட்ட தென்றும் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.

அந்த இரண்டு ஜாதியும் எப்படித் தெரிகின்றது என்று பார்ப்போமேயானால் பிராமணர்கள் இந்திரன் முதலிய தேவர் களிடம் செய்யும் பிரார்த்தனைகளில் தஸ்யூக் கள் என்ற ஒரு சமுகம் அந்த பிராமணர்களுக்கு விரோதமாய் இருந்து அவர்களைத் துன்பப் படுத்துவதாகவும், அவர்கள் பிராமணர் களுடைய சுகபோகங்களுக்கு விரோதமாய் இருப்பதாகவும், ஆதலால் அந்த தஸ்யூக்களை அழிக்க வேண்டுமென்றும் பிரார்த்திப்பதே பெரிதும் அந்தப் பிரார்த்தனையில் இருந்து வருவதால் அப்பிரார்த்தனைகளே வேதத்தின் பெரும் பகுதியை ஆக்கிரமித்திருப்பதால் வேத காலத்திலும், வேத ஆதாரத்திலும் இந்தியாவில் ஆரியர், ஆரியர் அல்லாதார் என்கின்ற இரண்டு ஜாதிகள் மாத்திரமே இருந்ததாக விளங்குகின்றது.

ஆகவே, ஜாதிப் பிரிவுகளுக்கு ஏதாவது ஆதாரங்கள் வேண்டுமானால் அவை மனுதர்ம சாஸ்திரம், பராசர் ஸ்மிருதி ஆகிய பார்ப்பனர்களால் செய்யப்பட்ட ஆதாரங் களே முற்பட்டவை எண்ணலாம்.

அவற்றிலும்கூட பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் அதாவது குரு, அரசன், முதலாளி, தொழிலாளி எனப்பட்ட நான்கு ஜாதிகள்தான் காணப்படுகின்றனவே தவிர, இன்றுள்ள ஆயிரக்கணக்கான ஜாதிகளுக்கு மனு தர்ம சாஸ்திரத்திலும் ஸ்மிருதியிலும் ஆதாரங்கள் காணக்கிடைப்பதில்லை.

அவைகளில் வேறு சில ஜாதிப் பிரிவுகளும் காணப்படுகின்றனவே என்று சொல்லப் படுமானால் அவை முற்கூறிய பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர என்கின்றதான 4 பிரிவுகளும் கலந்து போகாமல் இருப்பதற்கும், கட்டுப்பாடாக இருப்பதற்கும், கலப்படம் ஏற்படுத்து வதையும், ஏற்படுவதையும் மக்கள் வெறுக்கவுமான பந்தோபஸ்துக்காக கலப் படத்தினால் பிறந்த மக்களுக்கு பலவகை இழிவான பெயர்கள் கற்பிக்க ஏற்படுத்தின முறையில் வேறு சில ஜாதிப் பெயர்கள் காணப்படலாம்.

ஆனால், அவற்றிற்கும் இன்றுள்ள ஜாதிப் பிரிவுகளுக்கும் சம்பந்த மில்லை. இது தவிர வேறு ஜாதிகள் இருப்பதாகக் காணப்படு மானால் அவை தேசம், நிலம், பாஷை ஆகிய வைகளைக் குறிக்கும் முறையில் இருக்கலாமே ஒழிய பிறவியைக் குறிக்கும் முறையில் காணப்படுவது அதிசயமாகவே இருக்கும்.

மற்றபடி இன்று பிரத்தியட்சத்தில் பழக்கத்தில் உள்ள ஜாதி பாகுபாடுகளுக்கு எங்காவது ஆதாரங்கள் இருக்கின்றனவா என்று பார்ப்போமானால் அவை புராணங்களில் தான் காணப் படுகின்றன.

புராணங்கள் என்று சொல்லப்பட்டவைகள் பெரிதும் கற்பனைகள் என்பதும், அவை ஏற்படுத்தப்பட்டதின் கருத்தெல் லாம் பார்ப்பனர் களுக்கு உயர்வைக் கற்பிக்கவும், அவர்களுக்கு மற்ற மக்கள் மீது எப்பொழுதும் ஆதிக்கம் இருந்து வரவும், பொருளாதாரத் துறையில் பார்ப்பனர்களுக்கு பாடுபடாமல் செல்வம் வந்து சேரவுமான மார்க்கம் ஏற்படவும் கருத்துக் கொண்டேயாகும்.

இந்தக் கருத்துக்கள் புராணக் கற்பனையில் மாத்திரமல்லாமல் ஸ்மிருதிகள் ஏற்படுத்து வதிலும் இருந்திருக்கின்றன என்பதற்கு மனு நூலில் ஏராளமான அத்தாட்சிகள் இருக் கின்றன.

உதாரணமாக பிராமணன் கொலைக் குற்றம் செய்தால் அவன் தலை மயிரை மாத்திரம் சிரைத்து விட வேண்டுமே ஒழிய, வேறு தண்டனை எதுவும் விதிக்கக் கூடாது. ஒரு பிராமணன் ஒரு சூத்திரனைக் கொன்று விட்டால் அதற்கு ஒரு தவளையையோ, ஒரு காகத்தையோ கொன்று விட்டதற்குச் செய்ய வேண்டிய பிராயச்சித்தம் செய்தால் போதும்.

பிராமணன் ஞானியாய் இருந்தாலும், மூடனாய் இருந்தாலும் அவன் மேலான தெய்வத்திற்கு கொப்பாவான். பிராமணன் அயோக்கியனாய் இருந்தாலும் அவன் பூஜிக்கப்பட வேண்டியவன்.

எவ்வளவு துராசாரமுள்ள பிராமணனாய் இருந்தாலும் அவன் அரசனுக்குச் சமமானவ னுடன் அரசன் செய்ய வேண்டிய தீர்ப்புகளை யெல்லாம் செய்யலாம்.

சூத்திரன் விலை கொடுத்து வாங்கப்பட்ட வகையானாலும், அவன் எப்பொழுதும் பிராமணனுக்கு அடிமையாகையால் அவர் களிடம் பிராமணர் கூலி கொடாமலே வேலை வாங்கலாம். ஏனெனில் கடவுள் பிராமணனுக்கு வேலை செய்வதற்காகவே சூத்திரனை படைத்திருக்கிறார்.

சூத்திரனுடைய பொருள்களை பிராம ணன் தைரியமாகப் பற்றிக் கொள்ளலாம். சூத்திரன் அடிமையாதலால் அடிமைக்கு சொத்து வைத்திருக்க பாத்தியமில்லை.

சூத்திரன் பிராமணனைத் திட்டினால் அவன் நாக்கை துண்டித்துவிட வேண்டும்.

சூத்திரன் பிராமணனுடைய பெயரை யாவது, ஜாதியையாவது குற்றம் சொன்னால் அவன் வாயில் 10 விரல் நீளமுள்ள பழுக்கக் காய்ச்சிய இரும்பை செலுத்த வேண்டும். சூத்திரன் பிராமணனை அடிக்க கை தூக்கினால் கையை வெட்டிவிட வேண்டும்.

“கால் தூக்கினால் காலை வெட்டிவிட வேண்டும்”

சூத்திரன் பிராமணர்களுக்கு அவர்களு டைய கடமையை போதிக்க வந்தால் அவன் வாயிலும், காதிலும் எண்ணெய்யைக் காய்ச்சி ஊற்றி விட வேண்டும்.

-தொடரும்...

-  விடுதலை நாளேடு, 26.4.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக