திங்கள், 12 ஆகஸ்ட், 2019

பள்ளிப் படிப்பினால் பகுத்தறிவு உண்டாகாது - பட்டங்களினால் அறிவு வளராது

நாமக்கல் கூட்டத்தில் ஈ.வெ.ரா. முழக்கம்


(வாசக நேயர்களே,


ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டிய முக்கியப் பகுதி இது.


இதுபற்றி தங்களது கருத்தினை சுருக்கமாக எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.


திராவிடர் இயக்கம் - 80 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு அரசியல் களத்தின் முக்கிய நிகழ்வுகள் - வரலாறு பற்றிய காலக்கண்ணாடியாக - திராவிடத்தின் தேவைக்கான நுண்ணாடியாக இது அமையும் ஒன்று. இதற்கான தேவை - பயன் - நுகர்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது. - ஆசிரியர்)


 

தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் சேலம் ஜில்லா நாமக்கல் தாலூகா சுயமரியாதை மகாநாட்டின் போது மகாநாட்டிலும் மாலை பொதுக்கூட்டத்திலும் சுயமரி யாதை இயக்கம் என்பது பற்றியும் காங்கிரஸ் என்பது பற்றியும் பேசியவை வருமாறு:தோழர்களே!

இந்த நாமக்கல் கொஞ்ச காலமாகவே காங்கிரஸ் கோட்டை என்று சொல்லப்படுவதாகும். எனினும் நமது சுயமரியாதை இயக்கத்தோழர்கள் சிலர் இங்கு எப் படியோ ஒரு மகாநாடு கூட்டி விட்டார்கள். நாங்கள் வரும் போது உண்மையிலேயே சற்று பயத்துடனேயே வந்தோம். சுயமரியாதை மகாநாடு அவ்வளவு திருப்தி கரமாய் நடக்காது என்றும், காங்கிரசின் காலித்தனத்திற்கு முகம் கொடுக்க வேண்டி வரும் மென்றும் உள்ளூர் பொதுஜன உங்கள் ஆதரவு சரியாய் இருக்காதென்றும் கருதினோம் .ஆனால் இங்கு வந்த பிறகு எங்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுக்கும்படியான நிலை யில் இம்மகாநாடு நடந்திருக்கிறது. எங்களுக்கு நீங்கள் அளித்த ஆடம்பரமான வரவேற்பும் காட்டிய உற்சாக மும், அன்பும் உண்மையிலேயே எங்களை நாங்களே பாராட்டிக் கொள்ளும் மாதிரியாக ஏற்படுத்தி விட்டது.

கண்டறியா அருங்குணம்


தவிரவும் எனது பொது வாழ்வில் காங்கிரசுகாரரிடம் இவ்வளவு நாளும் கண்டறியாத ஒரு அருங்குணத்தைப் பார்த்ததில் நிஜமாகவே நான் மெய்மறக்கும்படி மயக்கம் ஏற்பட்டு விட்டது. என்னவெனில் எங்கள் கூட்டங்களுக்கு காங்கிரஸ்காரர்கள் போகக்கூடாது என்றும், போனாலும் எவ்வித கேள்வி கேட்பதோ, கலவரம் ஏற்படும்படி செய்வதோ ஆகிய காரியம் கண்டிப்பாய் நடத்தக் கூடாது என்றும் புத்தி புகட்டப் பட்ட ஒரு துண்டு நோட்டீஸ் காங்கிரஸ்காரர்களால் வினியோகிக்கப் பட்டிருப்பதைப் பார்த்தேன். இந்த புத்தி காங்கிரசுகாரர்களுக்கு எப்படி வந்தது, ஏன் வந்தது. என்கின்ற காரியம் எனக்கு ஒரு யுக்திகணக்கு போட்டி பரிசு மாதிரியாகவே இருக்கிறது. சென்ற வருஷம் வந்தபோது கழுதை கழுத்தில் அட்டைகட்டி அதில் எங்களைப்பற்றி கேவலமாய் எழுதி விரட்டி விட்டார்கள். போன மாதத்தில் வந்த போதும் கூட்டத் தில் காலித்தனம் செய்தார்கள். அவற்றையெல்லாம் நாங்கள் ஒரு வழியில் சமாளித்தோம் என்றலும் இப் போது இந்த புத்தி வந்தது ஆச்சரியமாகத்தான் இருக் கிறது. எப்படி இருந்தாலும் அரசியலிலோ சமுதாயத் திலோ எவ்வளவு மாறுபட்ட அபிப்பிராயம் இருந்தா லும் தனிப்பட்ட முறையில் நான் யாருக்கும் விரோதி யில்லை, யாரிடமும் துவேஷமில்லை. மனிதர்கள் எல்லோரும் ஒரே அபிப்பிராயம் கொள்ள முடியாது. சரியாகவோ, தப்பாகவோ அபிப்பிராய பேதம் ஏற்படு வது மனிதனுக்கு இயற்கையேயாகும். ஒருவருக்கொரு வர் அபிப்பிராயத்தை மதிக்காவிட்டாலும் ஏற்காவிட் டாலும் வெளியிலெடுத்துச் சொல்ல இடம் கொடுக்க வேண்டியதானது மானத்திலும் மனிதத் தன்மையிலும் கவலையுடையவனின் கடமையாகும்.

உதாரணமாக ஈரோட்டில் எங்கள் எதிரிகள் யாரா வது எப்படிக்கத்தினாலும் நாங்கள் கீச்சு மூச்சு சத்தம் ஏற்படக் கூட இடம் கொடுப்பதில்லை.

எனினும் ஒரு விஷமம்


ஆனால் காங்கிரஸ்காரர்களுக்கு அந்தப் புத்தி இருந்ததை நான் இதுவரை ஒரு ஊரில் கூடப்பார்த்த தில்லை இன்று இந்த ஊரில் பார்க்கிறேன் என்றாலும் இதிலும் ஒரு விஷமத்தை காண்கின்றேன். என்ன வெனில் இன்று இங்கு சுயமரியாதை - மகாநாடு நடப் பதும் இந்த பொதுக்கூட்டம் இன்று ஏற்பாடு செய்திருப் பதும் 15 நாட்களுக்கு முன்பிருந்தே தெரிந்திருந்தும் இந்த ஊர் காங்கிரஸ்காரர்கள் இன்றைய தினத்திலேயே வேறு ஒரு மீட்டிங்கு ஏற்பாடு செய்து அதில் அநேக காங்கிரஸ் தலைவர்கள் வருகிறார்கள் என்று நோட்டீசு ஏராளமாய் வினியோகிக்கப் பட்டிருக்கிறது. நாளைக்கு அந்க கூட்டம் போட்டால் என்ன முழுகிப்போகும்? உண்மையிலேயே நோட்டீசில் வெளியிட்ட அத்தனை தலைவர்களும் வரப்போகிறார்களா? வேண்டுமென்றே விஷமத்துக்கு அதாவது இந்த கூட்டத்துக்கு ஆட்கள் வராமல் இருக்கவேண்டும் என்கின்ற கெட்ட எண்ணம் தவிர இது வேறு எதுவாய் இருக்க முடியும்? அப்படி இருந்தும் நீங்கள் இவ்வளவு பேர் - 3000 பேர் இங்கு வந்திருப்பது எனக்கு மிகுந்த ஊக்கத்தையும் மகிழ்ச்சி யையும் தருகிறது. மேலும் காங்கிரஸ்காரர்கள் இங்கு வினியோகித்த துண்டு நோட்டீசில் காங்கிரசு ஒன்று தான் மக்களுக்கு சுதந்திரமும் விடுதலையும் அளிக்கும் என்று பெரிய எழுத்தில் பொறிக்கப்பட்டிருக்கிறது. அதை இவர்கள் நாங்கள் சொல்வதையும் கேட்டு விட்டு நாளைக்கு சொன்னால் என்ன? இன்றைக்கே சொல்லுவானேன்? இருந்த போதிலும் நாளைக்கும் அவர்கள் கூட்டம் ஒன்று உண்டு என்றும் தெரிகிறது. சுவர் விளம்பரமும் - ஒட்டப்பட்டிருக்கிறது. அகலால் இன்று நீங்கள் நான் சொல்வதையும் கேட்டுவிட்டு நாளைக்கு அவர்கள் சொல்லுவதையும் கவலையுடனும் பொறுமையுடனும் கேளுங்கள். பிறகு உங்கள் இஷ்டப் படி நடவுங்கள்.

பொதுக்கூட்டம் ஒரு சர்வகலாசாலை


அதிலும் எவ்வித குழப்பமும் மீட்டிங்குக்கு ஒழுக் கத்துக்கு விரோதமான காரியமும் செய்யாதீர்கள். இன்று உலகம் உள்ள நிலைமையில் நாட்டுக்கு இப் படிப்பட்ட கூட்டங்கள் மாறி மாறி நடக்க வேண்டியதும் நீங்கள் கேட்க வேண்டியதும் மிக்க அவசியமாகும். உங்களுக்கு இக் கூட்டங்கள் ஒரு சர்வகலாசாலை போன்றதாகும். உலக நடப்பையும் மக்கள் யோக்கிய தையையும் கண்டறிய ஒரு பரீக்ஷை கருவியாகும். பள்ளிக்கூடத்தில் இவைகளைப் படித்து விடமுடியாது. பெரிய கலாசாலை பட்டம் பெற்று விடுவதினாலும் இந்தப் படிப்பு வந்துவிடாது. உலக கல்வி வேறு, பகுத்தறிவு வேறு, பட்டம் வேறு. பெரிய டாக்டராய் இருப்பான், ஆனால் அவனும் மூத்திரமும் சாணியும் சாப்பிட்டால் ஒருவன் மோட்சத்துக்கு போகலாம் என்று நினைப்பான். பெரிய வானசாஸ்திர நிபுணனாய் இருப்பான் அவனும் பார்ப்பான் மூலம் தன் மாஜி தந்தைக்கு அரிசி பருப்பு காய்கறி செருப்பு அனுப்பு வான். ஒருவன் பெரிய உடற் கூறு சாஸ்திர நிபுணனாய் இருப்பான், அவனும் தன் மனைவியையும் மகளையும் வீட்டுக்கு தூரமென்று வீதி திண்ணை அறையில் தள்ளி மூடி வைத்து விட்டு உள்ளே தாழ்போட்டுத் தூங்குவான். ஆகையால் மனிதனுக்கு பகுத்தறிவும் உலக கல்வியும் அறிய பள்ளிக்கூடமும் பட்டமுமே போதுமானதாகி விடாது.

நீங்கள் நான் சொல்வதைக் கேளுங்கள். ஆனால் உடனே நம்பி விடாதீர்கள். நாளை நமது எதிர் அபிப் பிராயக்காரர்கள் வருவார்கள். அவர்கள் சொல்வ தையும் கேளுங்கள். பிறகு ஒரு முடிவுக்கு வாருங்கள். இது தான் எங்கள் ஆரம்பப்பிரார்த்தனை எங்கள் முதல் வேண்டுகோள்.

சுயமரியாதை இயக்கம்


இன்று சுயமரியாதை இயக்கம் பற்றியும் காங்கிரஸ் பற்றியும் பேசுகிறேன். முதலில் நாங்கள் யார்? வயிற்றுப் பிழைப்பு பிரசாரகாரல்ல. சுயநலத்துக்கு பதவி மோகத் தால் பிரசாரம் பண்ணுகிறவர்கள் அல்ல. என்னைப் பொறுத்தவரை எனக்கு பிரச்சாரத்தில் வயிறு வளர்க்க வேண்டிய அவசியமில்லை. பட்டம் பதவி எனக்கு மிகவும் தூரமானதல்ல. நான் ஒரு வியாபாரியாய் இருந் தவன். கவுரவ பதவிகளில் முனிசிபல் சேர்மெனாய் ஜி.போ., தா.போ, மெம்பராய் மற்றும் பல பதவியிலி ருந்து ஒரே கடுதாசியில் 5, 6 பதவிகளை ராஜினாமாச் செய்துவிட்டு காங்கிரசில் சேர்ந்தவன். நானும் கனம் ராஜகோபாலாச்சாரியாரும் 18 வருஷங்களுக்கு முன் ஒருவருக்கொருவர் பேசியே இருவரும் சேர்மென் பதவிகளை ஏக காலத்தில் ராஜிநாமாச் செய்தோம் - அப்பொழுது எனக்கு 27 கவுரவ பதவிகள் இருந்தன. அந்தக்காலத்தில் சேர்மென் வேலைக்கு இருந்த மதிப்பும் கவுரவமும் இந்தக் காலத்தில் மந்திரி வேலைக் குக்கு இல்லை!

இப்போது எவ்வளவு சாதாரண மனிதனும் மந்திரி யாகலாம் மந்திரி வேலைக்கு நாணயமோ, செல் வாக்கோ எதுவும் வேண்டியதில்லை என்பதை நீங்கள் பிரத்தியட்சத்திலேயே பார்க்கிறீர்கள். ஆதலால் தான் பதவி வேண்டுமானால் அதற்காக இவ்வளவு பாடுபட வேண்டியதில்லை. நிற்க, நானும் காங்கிரசில் கொஞ்ச காலம் இருந்து தேசபக்த - தேசீயவீர பரீக்ஷையில் முதல் வகுப்பில் தேறியவன் தான். நான் காங்கிரசை விட்டு வரும்போது காங்கிரசில் மாகாண காரியதரிசி, தலைவர் ஆகிய பெருமையுள்ள பதவியில் இருந்து வந்தவன். பலபேர் என்னை வருந்தி வருந்தி கூப்பிடக் கூப்பிட திமிறிக்கொண்டு காங்கிரசை விட்டு வெளி வந்தவன். இன்றைய - தோழர் கனம் ராமநாதனும் மற்றும் பலரும் என் பின் என்னைத் தொடர்ந்து வெளி யில் வந்து கொண்டிருக்கிற நிலையில் வெளியானவர்.

திருப்பூர் காதிவஸ்திரால்யத்தையும் புதுப்பாளையம் காந்தி ஆஸ்ரமத்தையும், இதே நாமக்கல் கதர்க்கடை யையும் இந்தக் கையாலேயே திறந்து வைத்தவன் நான் தான்.

நான் காங்கிரசை விட்டு வெளிவரும் போது உங்கள் காங்கிரஸ் புரட்டுகளை உணர்ந்தே நான் வெளியில் போகிறேன். வெளியில் போய் உங்கள் வண்டவாளங் களை வெளியாக்குகிறேன் என்று சொல்லிவிட்டே வெளியில் வந்தவன். நான் இந்தப்படி சொல்லி வெளி யில் வந்து விட்ட பிறகும் என்னை மாகாணக் காங்கிரஸ் கமிட்டி நிர்வாக சபையில் தெரிந்தெடுத்தார்கள். கதர் சங்கங்களுக்கும் பயன்படுத்திக் கொண்டார்கள். சட்ட சபைக்கு காங்கிரஸ் சார்பாகவும் தனிப்பட்ட முறை யிலும் நிற்கும்படி கனம் ஆச்சாரியாரே வந்து பல தடவை கூப்பிட்டு இருக்கிறார். கனம் ராமநாதன் அவர் கள்தான் என்னை தடுத்து மறுபடியும் காங்கிரசுக்கு போகக்கூடாது என்று சொன்னவர். இவை எல்லாம் மாஜி பதிவிரதகதையல்ல, அல்லது மாஜி விபசாரிகளாய் குச்சுக்காரிகளாய் இருந்து கிழடு பாய்ந்து இப்போது கிராக்கி வராது என்று கருதி பதிவிரதை ஆனகதையும் அல்ல. நான் யாரை, பதிவிரதைகள் என்று நம்பி னேனோ அவர்கள் தாம்பிர நாணயகுச்சக்காரிகள் என்று கண்டு விலகி வந்து பிறகு இங்குவந்து நின்று பேசும் கதையாகும். இவற்றை தோழாகள் ராஜ கோபாலாச்சாரியார், கல்யாண சுந்தரமுதலியார், எஸ். சீநிவாசய்யங்கார் ஆகியவர்களைக் கேட்டுப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இவற்றை ஏன் சொல்லுகிறேன் என்றால் காங்கிரஸ் எச்சிலைகளுக்கு நியாயமாகப் பேசி நான் சொல்லும் விஷமங்களை மறுக்க யோக்கியதை இல்லாமல் அயோக்கிய தனமாய் தன்னைப் பெற்ற தாயாருக்கு பண வரும்படிக்கு மாப்பிள்ளை தேட முச்சந்தியில் நிற்கும் மாஜி குச்சிக்காரிகள் பிள்ளைகள் போல் கன்னா பின்னா என்று நம்மை வசைபாடுவதன் மூலம் உங் களை ஏய்க்கப்பார்ப்பார்கள். நான் காங்கிரசால் தள்ளப் பட்டேன் என்றும், பணம் எடுத்துக் கொண்டேன் என்றும் அதனால் காங்கிரசை குறைகூறுகிறேன் என்றும் மாஜி பதிவிரதை என்றும் இப்படி பேசுவார்கள். அந்தப் படியே இதே மேடையில் சிலர் பேசினார்களாம். அதற்கு ஆகவே இதை சொல்லுகிறேன். இவையெல் லாம் ஒருபுறமிருக்கட்டும்.

இனி சுயமரியாதை இயக்கம் என்றால் என்ன? காங்கிரசு என்றால் என்ன? என்பதை பற்றி தலைவர் கட்டளைப்படி சிறிது பேசுகிறேன்.

(தொடரும்)

- 'விடுதலை', 16.12.1937

 - விடுதலை நாளேடு, 12.8.19


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக