தந்தை பெரியார்
திராவிடர் கழகமானது இனத்தின் பேரால், பிறவியின் காரணமாய், நாட்டின் உரிமையின் காரணமாய், ஆரியர்களால் இழிவு செய்யப்பட்டு அடக்கி ஒடுக்கி தாழ்த்தி வைத்திருக்கும் மக்களின் விடுதலைக்கும் முன்னேற்றத் திற்கும் பாடுபடும் ஓர் அமைப்பு (ஸ்தாபனம்) ஆகும். விளக்கமாக சொல்ல வேண்டுமானால் இந்து மத (ஆரிய) தர்மப்படி 4ஆம் வர்ணஸ்தர்களாகவும் அல்லது 5ஆம் அவர்ணஸ்தர்களாகவும் ஆக்கப் பட்டிருக்கும் சூத்திரர்கள் எனப்படுபவர்கள் எல்லாருடைய விடுதலைக்கும் முன்னேற் றத் திற்கும் உழைக்கும் கழகமாகும்.
திராவிடர்களைத்தான் சூத்திரர்கள் என்பதாக இந்து மதத்தின் பேரால் ஆரியர்கள் அழைத்து வருகிறார்கள் என்பதற்குப் பல ஆதாரங்கள் இருந்து வருகின்றன. உதாரணமாக மனுதர்ம சாஸ்திரத்தில் 10ஆம் அத்தியாயத்தில் சங்கர ஜாதி என்ற தலைப்பின்கீழ் ஜாதி தர்மத்தை அனு சரிக்காதவர்கள், அனுசரிக்காதவர்களுக்குப் பிறந்தவர்கள் திராவிடர் என்ற பெயர் கொண்டவர் என்றும், சூத்திரன் பிராமண ஸ்தீரியைப் புணர்ந்தால் பெறப்படும் குழந்தைகள் பாக்கிய ஜாதியர் என்றும், அதாவது சமீபத்தில் வரக்கூடாத சண்டாள ஜாதி என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மற்றும் பிராமணர்களுக்கு சூத்திர ஸ்தீரிகளிடத்தில் பிறந்த குழந்தைகள் ஆர்யா வர்த்த தேசத்தில் செம்படவன் என்ற ஈன ஜாதியாகச் சொல்லப்படுவார்கள் என்று குறிப் பிடப்பட்டிருக்கிறது. மற்றும் ஜாதி தர்மம் தவறிய கலப்பினால் பிறப்பவர்களால்தான் தோல் வேலை செய்யும் (சக்கிலி) ஜாதியும், பிணத்தின் துணியைப் பிடித்துக் கொள்கிறவர்களும், எச்சில் சாப்பிடுகிறவர்களுமான (பறையர்) ஜாதியும் ஏற்படுகின்றன என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. "திராவிட தேசத்தை ஆண்டவர்கள் சூத்திரர்களாய் விட்டார்கள்" என்று தெளிவாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது மனு 10ஆம் அத்தியாயம் 44ஆம் ஸ்லோகம் ஆகும். மற்றும் "மிலேச்ச பாஷை பேசுகிறவர்கள் அனைவரும் தஸ்யூக்கள் என்று சொல்லப்படுவார்கள்" என்று தெளிவாக விளக்கப் பட்டிருக்கிறது. இது 10ஆம் அத்தியாயம் 45ஆம் ஸ்லோகம். தஸ்யூக்கள் என்றால் திருடர்கள் என்ற கருத்தும் அதிலேயே கீழே காட்டப்பட்டிருக்கிறது.
இதில் மற்றொரு விசேஷம் என்ன வென்றால் திராவிடன் என்கிற பெயரைப் போலவே ஆந்திரன் என்ற பெயரும் மனு தர்மத்தில் காணப்படுகிறது. அதாவது காட்டிற்குச் சென்று மிருகங்களைக் கொன்று நாட்டில் கொண்டு வந்து விற்பவன் ஆந்திரன் என்று கூறப்பட்டிருக்கிறது. (அத்தி யாயம் 10 - ஸ்லோகம் 48) எனவே திராவிடர்கள், ஆந்திரர்கள் என்பது மாத்திரமல்லாமல், கீழான, இழிவான, தீண்டப்படாத திருடர்களான ஜாதியார்கள் என்பதை மனுதர்ம சாஸ்திரம் நன்றாக வலியுறுத்துகிறது என்பது 10ஆம் அத்தியாயத்தில் சங்கர ஜாதி என்ற தலைப்பில் நன்றாக விளக்கப்பட்டிருக்கிறது.
மற்றும், "இவர்கள் அனைவரும் பட்டணத்துக்கும் ஊருக்கும் வெளியில் மரத்தடி, தோப்பு, மயானத்திற்குச் சமீபமான இடம் ஆகிய இடங்களில் இழி தொழிலைச் செய்யும் மக்கள் என்று யாவருக்கும் தெரியும்படியாக வாசம் செய்ய வேண்டியது" என்று 50ஆம் ஸ்லோகத் தில் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட திராவிடர்களான மக்கள் "நாயும் கழுதைகளும்தான் வளர்க்க வேண்டியது "மாடு முதலியன வைத்துக் கொண்டு ஜீவிக்கக் கூடாது" என்று 51ஆம் ஸ்லோகம் கூறுகிறது.
52- முதல் 57ஆம் ஸ்லோகம் வரையில் என்ன கூறப்படுகிறது தெரியுமா? திராவிடத் தோழர்களே! கவனியுங்கள். "இவர்கள் பிணத்தின் துணியையே உடுக்க வேண்டும். உடைந்த சட்டியில் அன்னம் புசிக்க வேண்டும். உலோகப் பாத்திரங்களை உபயோகிக்கக் கூடாது. இரும்பு, பித்தளை ஆகியவகைகளால் செய்யப்பட்ட நகைகளையே அணிய வேண்டும். இவர்கள் ஜீவனத்துக்காக எப்போதும் வேலை தேடிக்கொண்டே திரிய வேண்டும். நல்ல காரியம் நடக்கும் போது இவர்களைப் பார்க்கக் கூடாது. இவர்களோடு பேசக்கூடாது. இவர்களைத் தங்கள் ஜாதிக்குள்ளாகவே மணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்த வேண்டும். இவர்களுக்கு நேரே எதுவும் கொடுக்கக் கூடாது. உடைந்த பாத்திரத்தில் அன்னம் போட்டு வைக்க வேண்டியது. ஊருக்குள் இரவில் சஞ்சரிக்க விடக்கூடாது" என்றும் இப்படிப்பட்ட ஈன ஜாதியார்கள் நல்ல வேடம் தரித்திருந்த போதிலும் அவர்களை ஈனர்கள் என்றே கருதவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒரே ஒரு விமோசனம், அதென்ன தெரியுமா? அதுதான் ஏழெட்டு வருஷங்களுக்கு முன்பு காந்தியார் இங்கு வந்தபோது சொன்ன மார்க்கம். அதாவது ஒரு சூத்ர ஸ்த்ரீ வயிற்றில் பிராமணனுக்கு விவாக முறைப்படி பிறந்த பெண் மறுபடியும் பிராமணனையே மணந்ததின் மூலம் அவள் வயிற்றில் பிறந்து இப்படியாக 7 பிறவி பிறந்தால் 7ஆம் தலைமுறையில் பிராமண ஜாதி ஆகலாம் என்பதுதான். இதுதான் காந்தியார் தமிழ்நாட்டிற்கு வந்தபோது திருப்பூரில் சொன்னது. மற்றும் கடைசியாகச் "சூத்திரன் பிராமண னுடைய தொழிலைச் செய்வதாலேயே பிராமணன் ஆக மாட்டான். எப்படி ஒரு பிராமணன் எந்த விதமான இழிவான தொழிலைச் செய்தாலும் அவன் பிராமணனே ஒழிய சூத்திர ஜாதி ஆகமாட்டானோ அதுபோல ஒரு சூத்திரன் எவ்வளவு மேலான பிராமணன் தொழிலைச் செய்தாலும் பிராமணன் ஆகமாட்டான். இது பிரம்மாவினால் நிச்சயிக்கப்பட்ட உண்மை யாகும், தத்துவமாகும்." (அத்தியாயம் 10. ஸ்லோகம் 713)
பிராமண தர்மம்
பிராமணன் கீழான தொழிலைச் செய்த போதிலும் பயிரிடும் தொழிலை (உழுவதை) கண்டிப்பாய்ச் செய்யக் கூடாது. அதைச் செய்யாவிட்டால் ஜீவனத்திற்கு மார்க்க மில்லை என்கின்ற காலத்தில் அந்நியனைக் கொண்டு செய்விக்கலாம். (அத்தியாயம் 10. ஸ்லோகம் 83)
ஏனெனில் அந்தப் பிழைப்பு இரும்புக் கலப்பையையும் மண் வெட்டியையும் கொண்டு பூமியை வெட்ட வேண்டிய தாகும். ஆகையால் பிராமணர் உழுது பயிரிடுதல் கூடாது என்பதாகும். (அத்.10.சு.84)
தாழ்ந்த ஜாதியான் மேலான ஜாதியானின் தொழிலைச் செய்தால் அவனுடைய பொருள் முழுமையும் பிடுங்கிக் கொண்டு அவனையும் நாட்டை விட்டு அரசன் உடனே விரட்டிவிடவேண்டும். (அத்.10.சு.96)
சூத்திரனுக்கு சமஸ்காரங்கள், ஓமம் வளர்த்தல் முதலிய வைகளுக்கு உரிமை கிடையாது. (அத். 10. சு.126)
சூத்திரன் எவ்வளவு தகுதியுடையவனாயினும் தன் ஜீவியத்துக்கு அதிகமாக பொருள் சம்பாதிக்கக்கூடாது. அப்படிச் சம்பாதித்தால் அது பிராமணனுக்கு இம்சையாக நேரும் (அத்.10.சு.129)
சூத்திரனுக்கு யாகாதி கர்மங்கள் சம்பந்தமில்லை. ஆதலால் அவன் வீட்டிலுள்ள செல்வத்தை பிராமணன் தாராளமாக வலுவினாலும் கொள்ளலாம். (அத்.11. சு.13)
அசுரர்கள் என்பது சூத்திரர்களைத்தான் என்பதற்கு ஆதாரம். மனு தர்ம சாஸ்திரத்தில் 11ஆம் அத்தியாயம் 20ஆம் சுலோகத்தில் காணப்படுகிறது. அதாவது யாகம் செய்யாதவர்கள் அசுரர்கள் - அவர்கள் பொருளைக் கவ்வுவது தர்மமாகும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. திராவிடர்கள் சூத்திரர்கள், சூத்திரர்களுக்கு யாகாதி காரியங்களுக்குள் உரிமையில்லை. யாகம் செய்யாதவர்கள் அசுரர்கள். இந்த மாதிரி குறிப்புகள் மனுதர்ம சாஸ்திரத்தில் இருக்குமானால் மனுதர்ம சாஸ்திரமே இந்து மதத்திற் கேற்பட்ட தர்மமானால் திராவிடர்கள் இந்துக்களானால் திராவிடர்களின் நிலை என்ன என்பதைப் பொது மக்கள் உணர்ந்து பார்க்க வேண்டுமாய் விரும்புகிறேன்.
இப்படிப்பட்ட இழிவுகளேற்பட்ட தன்மை திராவிட சமுதாயத்திற்கே இருக்கக் கூடாதென்றும், அவை எப்படி யாவது ஒழிக்கப்பட்டே ஆக வேண்டுமென்றும், அதற்கு முக்கிய எல்லையான திராவிட நாட்டை (சென்னை மாகாணத்தை) பரப்பாக வைத்து அதிலுள்ளவர்களை திரா விடர்களாகக் கருதி நடத்தப்படும் திராவிடர் கழக திராவிட நாடு எழுச்சிக்கு தமிழ்நாடு. ஆந்திரநாடு, கேரள நாடு, கருநாடக நாடு என்பதான கிளர்ச்சிகளை இந்த முக்கியக் குறிப்பில்லாமல் குறுக்கே போட்டு மொழியைப் பிரதானமாக வைத்துக் கொண்டு போராடுவதென்றால் மனுதர்ம சாஸ் திரத்தை மெய்ப்படுத்துகிறோம் என்பதல்லாமல் அதில் வேறு தன்மை என்ன இருக்கிறதாகக் காணமுடியும்?
'குடிஅரசு' - கட்டுரை - 20.09.1947
- விடுதலை, நாளேடு, 11.8.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக