வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

மக்களினம் மாண்புற வள்ளுவர் தந்த குறள்! (4)

13.11.1948-குடி அரசிலிருந்து...


சென்றவாரத் தொடர்ச்சி

வால்மீகி ராமாயணத்தைத் தன் இஷ்டம்போல் மாற்றி விட்டான் கம்பன். எனவேதான், அவனைச் சாட வேண்டியிருக்கிறது.

வால்மீகியின் ராமாயணம்!

வால்மீகி ஒரு அரேபியன் நைட் கதையைப் போல்தான் ராமனுடைய கதையையும் பாடி இருக்கிறார். தசரதனுடைய குடும்பத்தை ஒரு சாதாரணமான குடும்பமாகத்தான் குறிப்பிட்டுள்ளார். அவன் வீட்டுப் பெண்டிர்களை மீன் கண்டம் விற்கும் பெண்டிர்களை போன்று தான் வர்ணித்துள்ளார்.

மேலும் சீதையின் கற்பில் சந்தேகம் கொள்வதற்கான பல கருத்துக்களை, அவள் ஒரு கீழ்த்தர பெண், சாஸ்திரப்படியான கற்பு அற்றவள், என்று கொள்வதற்கான பல கருத்துக்களை அவர் ராமாயணத்தில் இடை இடையே கொடுத்துள்ளார். தன் மனைவி மீது சந்தேகம் கொண்டு கர்ப்ப காலத்தில் அவளைக் காட்டிற்குக் கொண்டு போய் விட்டு வருவது போன்ற, அதாவது சாதாரண மனிதன் கூட வெட்கங்கொள்ளக் கூடியதான பல சேதிகளை அவர் கொடுத்துள்ளார்.

திருக்குறள் சுயமரியாதையின் ஊற்று!

திருவள்ளுவர் கூறிய கருத்துக்களுள் ஒன்றேனும் ஒழுக்கக் குறைபாடுள்ளதாகக் காணப்படாது. அறிவுள்ளவர் யாரும் மறுக்க முடியாத, வெறுக்க முடியாத கருத் துக்களை அமைத்துத்தான் அவர் குறளை இயற்றியுள்ளார். குறளை ஊன்றிப் படிப்பவர்கள் எல்லோரும் நிச்சயம் சுயமரியாதை உணர்ச்சி பெறுவார்கள். அரசியல் ஞானம், சமுக ஞானம், பொருளாதார ஞானம் ஆகிய சகலமும் அதில் அடங்கியிருக்கிறது.

திராவிடன் அன்றே எதிர்த்தான்!

அன்பர் கலியாண சுந்தரனார் திரா விட நாடு வேறு, ஆரிய நாடு வேறு, திராவிடப் பண்பு வேறு, ஆரியப் பண்பு வேறு என்று இன்று காலை தெரிவித்தது போல், திராவிட நூல் வேறு, ஆரிய நூல் வேறுதான், திராவிடர்கள் எப்போதுமே ஆரியர்களை ஆரிய கலாசாரத்தை வெறுத்தே வந்திருக்கிறார்கள். திராவிட நாட்டை ஆரியர்களின் படையெடுப் பிலிருந்து காப்பாற்றப் பெரிதும் முயற்சி எடுத்திருக்கிறார்கள். இதனுண்மையைக் கந்த புராண ஆரம்பத்தில் காணலாம்.

சிவபெருமானுடைய கல்யாணத்தின் போது தேவர்களும், ரிஷிகளும் வந்து தென்னாடு உயர்ந்துவிட்டதென்றும், வடநாடு தாழ்ந்துவிட்டதென்றும் அதற் குப் பரிகாரம் உடனடியாகச் செய் யப்படவேண்டுமென்றும் விண்ணப்பம் செய்து கொள்கிறார்கள். இதிலிருந்து தென்னாட்டினர் உயர்வு ஆரியர்களால் எவ்வளவு வெறுக்கப்பட்டது என்பது இனிது புலனாகிறது. சிவன் யார் கெட் டிக்காரன் என்று ஆலோசித்துப் பார்த்து அகத்தியனை அனுப்பியிருக்கிறார். பரிகாரம் செய்ய மிகமட்டமான அதாவது சூழ்ச்சியில், தந்திரத்தில், வஞ்சகத்தில் கைதேர்ந்த ஒருவனை அனுப்பி வைக்கிறார். அவன் விந்திய மலையருகில் வரவும் அங்கு காவல் செய்துவந்த வாதாபியும், வில்லவனும் அவனைத் தடுத்து விடுகிறார்கள். இவர்கள் கந்தபுராணத்தில் சித்திரிக்கப்படுகிற சூரனுடைய தங்கச்சியின் மக்கள் ஆவார்கள். இவர்கள் வட நாட்டிலிருந்து யார் வந்தாலும் அவர் களைக் கொன்று தின்று விடுகிறதாகக் கூறப்படுகிறது. அதே மாதிரியே அகத்தியனையும் தின்று விட்டதாகவும் ஆனால், அவனை ஜீரணம் செய்ய முடிய வில்லை என்றும், அவனுடைய வயிற்றைக் கிழித்துக் கொண்டு அகத்தியன் வெளிப் பட்டுச் சென்றான் என்றும், சென்று தமிழ் வளர்த்தான் என்றும் காணப்படுகிறது.

மடப்புலவர்களின் மதித்திறமை!

இந்தத் தமிழ்ப் புலவர்களும் ஆராய்ந் தறியாமல் இதையொட்டி அகத்தியன் வளர்த்த தமிழ் என்று புகழ்பாடி விட்டனர். அகத்தியன் இங்கு வந்து பாதிரிகள் போல் தமிழ் கற்று நமது தர்மங்களை. ஒழுக்கங்களை மாற்றியமைத்து இருக்கக்கூடும். இதற்காக அவனுக்கு நன்றி காட்டும் அவ்வளவு நன்றியுடையவர்கள் நமது மடப்புலவர்கள். நாய் நன்றி காட்டு வதெல்லாம் அன்னியனிடத்துத்தான் என்பதுபோல், பழங்கால இப்பண்டிதர்களும் அன்னிய அகத்தியனுக்கே மரியாதை செய்து விட்டனர். அந்த அகத்தியன் முடிவில் தமிழ் நாட்டிலிருந்து ராவணனைத் துரத்தி விட்டதாக வேறு காணப்படுகிறது. இதற்கும், ராவணனுடைய தம்பிக்கும், ராமன் பட் டம் வாங்கிக் கொடுப்பதற்கும் ஏதேனும் பொருத்தம் இருக்கிறதா என்பதும் தெரியவில்லை. இக்கதைகள் எல்லாம் அபிதான சிந்தாமணியில் கொடுத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது அவற்றைப் படித்துப் பாருங்கள் தெரியும். ஆரியர் திராவிடம் போராட்டம் எப்போது ஏன் துவங்கியது என்று.

காட்டிக் கொடுக்கும் கயவர்களின் முன்னோன் விபீஷணன். இப்போது எப்படி சில திராவிடர்கள் அறிவிழந்து ஆரிய வடவர்களையே தமது அரசியல் தலைவர்கள் என்றுகொண்டு, தாம் பணி யாற்றும் வகையில், ஏனைய திராவி டர்களையும் எப்படி அவர்களுக்கு நிரந்தர அடிமைகளாக வைத்திருக்க முயற்சிக்கின்றனரோ அதுபோல், வால்மீகி காலத்திலும் சில திராவிடர்கள் இருந்திருப்பதை நாம் அவரது ராமாயணத்தைப் படிப்பதன் மூலம் நன்கு அறியலாம். வாலி கொல்லப்பட்ட பிறகு விபீஷ ணனைக் கொண்டுவந்து அனுமார் சேர்க்கிறார். அப்போது சுக்ரீவன் கேட்கிறான், அண்ணனுக்கே துரோகம் செய்யும் இவன் நாளை உனக்கு மட்டும் துரோகம் செய்யமாட்டான் என்று எப்படி நம்புவது என்று அதற்கு ராமன் என்ன சொல்லுகிறான் பாருங்கள்.

என் லட்சியத்திற்கு அதைப்பற்றி யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. ராவணன் தோல்வி தானே, அவனது முடிவுதானே எனக்கு வேண்டியது அதற்கு உதவி செய்யத் தகுந்தவன் யாரா இருந்தால், எப்படிப்பட்டவனாயிருந் தால் என்ன? அவனை, நண்பனாக கொள்ள வேண்டியது தானே! மேலும் அவன் எப்படி எனக்குத் துரோகம் செய்ய முடியும்? அவனுக்கு வேண்டுவது அண்ணனுடைய ராஜ்யமன்றோ, அண்ணன் செத்தால்தானே அவனுக்கு ராஜ்யம் வரும். ஆதலால், தனது அண்ணனை ஒழிக்க வழி நமக்குக் கூறி உதவி செய்துதானே தீருவான். இந்த விஷயத்தில் அவன் நமக்குத் துரோகம் செய்ய முடியாதே.  அதன் பிறகு என்ன துரோகம் அவனால் நமக்கு செய்ய முடியும்.

இவனை விட்டால் ராவணனை எனக்குக் காட்டிக் கொடுக்கக் கூடிய வேறு ஆள் ஏது என்று சொல்லி விபீஷணனை ஏற்றுக் கொள்கிறான்.

ஆச்சாரியார் ராமநாதர்களை அறிமுகப்படுத்திய முறை இதே மாதிரிதான், தம்முடைய லட்சியத்தையே குறிக்கோளாகக் கொண்டு இன்றையப் பார்ப்பனர் களும் மானாபிமானம் அற்று தம் கட்சிக்கு ஆள் தேடித் திரிகிறார்கள். நமக்கு எவன் துரோகம் செய் கிறானோ அவன்தான் பார்ப்பனர்க்கு ரொம்பவும் வேண்டியவன். மகாதேசபக்தன். அவர்களுடைய போற்றுதலுக்கு உரியவர்கள். புகழ்பெறுபவர்கள். நம்முடைய துரோகிகளின் மூலம்தான், அன்று தொட்டு இன்றுவரையும் அவர்கள் சுகமாக வாழ்ந்து வருகிறார்கள்.

இதை, இந்த நாசமாய் போன துரோகம் செய்பவர்கள் உணர்ந்தால் தானே. தோழர்கள் ராமநாதனும் கே. வெங்கடசாமி நாயுடுவும் நமது கட்சியினின்று நீங்கி சென்றபோது, இவர்களைக் காந்தியாருக்கு அறிமுகம் செய்தபோது ராஜகோ பாலாச்சாரியார், அன்று அனுமார் ராமனிடம் விபீஷணனை அறிமுகம் செய்து வைத்தது போன்றே செய்தாரே.

ராமநாதன் வந்துவிட்டார். பழையபடி அந்த சரணாகதிக்கு நீங்கள் மனமிரங்கி இடம் அளிக்க வேண்டும். ராமர் எப்படி விபீஷணனுக்கு அபயம் அளித்தாரோ அதேபோன்று இவருக்கும் தாங்கள் அபயம் அளித்தருள வேண்டும் என்று.

- தொடரும்

  - விடுதலை நாளேடு, 30.8.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக