சனி, 17 ஆகஸ்ட், 2019

பெரியாரின் சங்கநாதமும் தொண்டர்களின் பேரெழுச்சியும்

10.07.1948 - குடிஅரசிலிருந்து... -

சென்ற மாதம் 24ஆம் நாள் திருச்சியில் கூடிய நிர்வாகக் கமிட்டியின் முடிவை வரவேற்று, திராவிடத்தின் பல திசைகளி லிருந்தும் உற்சாகத்தோடு திரண்டெழும் பெரிய முழக்கத்தைக் கேட்டு நாம் உண்மையாகவே பெருமகிழ்ச்சியடை கிறோம்.

பார்ப்பனிய ஆதிக்கத்தில் பட்டுத் தடுமாறும் இன்றையச் சென்னை சர்க்கார், திராவிடர்க்கு இழைத்துவரும் பாதகத்தைக் கண்டு சிந்தை நொந்து, நமக்குள்ளே மறைவாக நாசமடைவதைக் காட்டிலும் நானிலமறிய வெளிப்படை யாக நாசமாக்கப்படுவது நல்லதல்லவா? என்று திராவிட இளைஞர்கள் சீற்றத் துடன் கேட்டனர், அன்று நிர்வாகக் கமிட்டியில்.

போராட்டம்! போராட்டம்! என்ற உங்களின் பேரொலியைக் கேட்டுப் பொறுங்கள்! பொறுங்கள்!! எனக் கையமர்த்தினேன். இனியும் நான் அவ் வாறு செய்ய நமது சர்க்கார் இடங்கொடுக்க வில்லை! இனிப் போராட்டந்தான் என்று சர்க்கார் சொல்லும்போது நான்தான் என்ன செய்வேன்! எதிர் நடவடிக்கை வேண்டும் என்கிறீர்கள்! எனக்கு ஒன்றும் ஆட்சேபணையில்லை! இனித்தடை செய்ய வேண்டும் என்பதும் என் விருப்பமில்லை! இதை நீங்கள் தெளிவாய் அறிந்து கொள்ளுங்கள்! ஆனால் மற்றொன்றை நீங்கள் மறத்தலாகாது! சிறிதாவது நியாயத்திற்குச் செவி சாய்க்கும் வெள்ளையன் ஆட்சி இப்போதில்லை! இப்போது நம்மை ஆளுபவர்கள் அகிம் சாவதிகளான நம்மவர்கள்! ஜீவகா ருண்யம் என்று பெரும் பேச்சாய் பேசிக் கொண்டு விதையை கரைத்தே ஆட்டி னையும், மாட்டினையும், அதைப் போன்ற மற்றும் பல ஜீவன்களையும் அழித்து யாக வேள்வி நடத்தும் அகிம்சாவாதிகள் நடத்தும் ஆட்சியில் நாம் இருக்கிறோம்! இதை நீங்கள் மறக்கக் கூடாது. இந்த ஆட்சியில் நேரடி நடவடிக்கையென்றால் எந்த இழப்புக்கும், எப்போதும் நீங்கள் தயாராயிருக்க வேண்டும்! தொழிலைக் கருதாமல், தொந்தரவை எண்ணாமல், வாழ்வை மதியாமல், மனைவி மக்களை விலங்கு என்று கொள்ளாமல், ஒழிப்போம் இழிவை! ஒடுக்குவோம் அடக்கு முறையை! வாழ்வோம் மனிதர்களாக! இன்றேல் மடிந்தொழிவோம் வீரர்களாக! என்ற முடிவுக்கு வந்திருப்பவர்கள் எத்தனை பேர்? இதை நான் தெரிந்து கொள்ள எனக்கு ஒரு வாய்ப்பு என்ன? இவ்வாறு கேட்டார் படைத்தலைவர், தந்தை பெரியார்.

இதற்குப் பிறகுதான், சர்க்காரின் தடுப்பு முறைகளைச் சமாளிப்பதற்கு அதற்கான திட்டங்களையும், வழி முறைகளையும் வகுத்துக் கொடுக்கவும், உடனடியாக நடவடிக்கைகளை எடுக் கவும் தலைவர் பெரியார் அவர்களுக்குச் சகல அதிகாரங்களையும் இக்கமிட்டி அளிக்கின்றது என்கிற மூன்றாவது தீர்மானம் நிறைவேறியதும், அதை யொட்டித் தலைவர் பெரியார் அவர்களே ஒவ்வொரு ஜில்லாவுக்கும் நேரடியாகச் சென்று, ஒவ்வொரு தொண்டர்களையும் நேரில் சந்தித்து, அங்கங்கேயுள்ள சூழ் நிலையைக் குறித்து மனம் விட்டுப் பேசித் தமிழ் நாடெங்கும் சுற்றி வரவேண்டுமென்ற எழுதப்படாத தீர்மானம் நிறைவேறியது மாகும்.

இந்த முடிவுக்கிணங்கத்தான் இந்த மாதம் முதல் நாளன்று சென்னையிலே தமது சங்கநாதத்தை ஆரம்பித்தார்கள் பெரியார் அவர்கள்.

எனக்கு வயது 70 ஆகிவிட்டது. அடுத்த அடி எடுத்து வைக்க வேண்டியது சுடுகாட்டில்தான். அதற்குள் ஒரு கை பார்த்துவிடத் தான் போகிறேன்.

இந்தக் கர்ஜனையைக் கேட்டு எந்த மந்த மதியினர்க்குத்தான் உணர்ச்சி உண்டாகாதொழியும்! இந்த ஆணவ மந்திரிசபை ஒழிக! கட்டாய இந்தி ஒழிக! என்ற பேரொலியோடு, கூட்டத்திற்கு வந்திருந்த அத்தனை பேரும் அடக்கு முறை ஆயுதங்களை எதிர்த்தொழிப்போம் என்று கைதூக்கித் தங்கள் தங்கள் உடன்பாட்டை அறிவித்த கண்கொள் ளாக் காட்சிகள் எப்படி உண்டாகா மலிருக்கும்?முதல் முதல் சென்னையில் தொடங்கிய சுற்றுப்பிரயாணம் வடார்க்காடு, கோவை, இராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி ஆகிய ஜில்லாக்களில் எல்லாம் இன்றோடு முடிவடைந்து இருக்கிறது. எஞ்சிய ஜில்லாக்களிலும் அடுத்தவாரத்தோடு முடிவடையலாம். இதுவரை சுற்றுப் பிரயாணஞ் செய்த ஒவ்வொரு ஜில்லாவிலும் 500 பேர், 1000 பேர், 1000க்கு அதிகமான பேர் என்று சொல்லத்தக்க வகையில் எப்பொழுதும் நாங்கள் போராட்டத்திற்குத் தயார் என்று பெரியார் அவர்களிடம் நேரில் வந்து உறுதி கூறிய காட்சியையும், இன்னும் சில நாள் பொறுங்கள் என்று படைத்தலைவர் பகர்ந்து வரும் காட்சியையும் கேட்டுக் கேட்டு நாம் பூரிப்படைகிறோம்.

நமக்கு வரும் கடிதங்களைக் குறித்து இங்கு குறிப்பிடாமல் இருக்க முடிய வில்லை.

எதற்காக இந்தக்கால தாமதம்? நம்முடைய வலிமையை நம் தலைவர் அறியமாட்டாரா? இப்பொழுது எதற் காக ஒவ்வொரு ஜில்லாவுக்குமாக செல்ல வேண்டும்? இந்தத் தள்ளாத வயதில், நெருக்கடியான நேரத்தில் இந்த மாதிரியான ஒரு முயற்சி செய்யத்தான் வேண்டுமா? களத்தைக் குறிப்பிடச் சொல்லுங்கள்! காரிய மாற்ற நாங்கள் தயார்! எப்பொழுது? எப்படி? இதுதானே இப்பொழுது வேண்டும் என்று துடிதுடிப்போடு எழுதியிருக்கிறார் ஒரு தோழர்.

நான் ஒரு தொழிலாளி. எனக்கு நான்கு குழந்தைகள் உண்டு. என் மனைவிக்கு இது ஆறாவது மாதம். இருந்தாலும் தாங்கள் நடத்தவிருக்கும் போராட்டத்தில் நான் பங்கு எடுத்துக் கொள்ளுகிறேன்; நான் மட்டுமல்ல; என் வாழ்க்கைத் துணை வியும்தான். குழந்தைகளை அதன தன் இயற்கைக்கு விட்டுவிடவேண்டிய தாயிருக்குமே என்பதைப் பற்றி நாங்கள் கவலைப் படவில்லை. எப்பொழுது உங்கள் உத்தரவு? இதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று எழுதியிருக் கிறார் இன்னொரு தோழர்.

அய்யா! முந்திய போராட்டத்திலேயே கலந்து கொண்டவன் நான். இப்பொழுது ஆரம்பிக்கவிருக்கும் போராட்டத்தில் எனக்கும் முதலிடம் தரவேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன். எக்காரணம் கொண் டும் இதை மறுக்கக் கூடாது இவ்வாறு உரிமையை நிலை நாட்டிப் பாத்தியதை கேட்கிறார் இன்னொரு தோழர்.

 - விடுதலை நாளேடு, 17. 8. 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக