திங்கள், 12 ஆகஸ்ட், 2019

இது மூடநம்பிக்கை அல்ல!

14.08.1948  - குடிஅரசிலிருந்து.... -

எனக்குத் தெய்வீகம் என்பதில் நம்பிக்கை கிடையாது. ஞானத்தில், அறிவில், சத்தியத்தில் நம்பிக்கை உண்டு. இதுமூடநம்பிக்கை அல்ல. அல்லது நம்பித்தான் தீரவேண்டுமென்பதின் பாற்பட்டதல்ல. பிரத்யட்ச அனுபவத்தில் அனுபவித்து வருபவன், பிறத்தியாருக்கும் மெய்ப்பித்துக் காட்டுகிறான். ஆதலால், நான் மூடநம்பிக்கையில், மகாத்மா தன்மையில் இதைப் பேசவில்லை. சத்திய நீதியில் பேசுகிறேன், எப்படி என்றால்,

இது நம் நாடு. வடநாட்டான் ஆதிக்கம் செலுத்துகிறான். சுரண்டுகிறான்.

நாம் இந்நாட்டு மக்கள், இந்நாட்டு மன்னர் சந்ததிகள். ஆரியன் ஆதிக்கம் கொண்டான். பிச்சைக்குப் புகுந்த ஆரியனுக்குப் பிறவி அடிமையாயிருக்கிறோம்.

தமிழ் நம் நாட்டு மொழி, இனமொழி. இந்நாட்டுக் கலாச்சாரத்துக்கு ஏற்றமொழி. வடமொழி - அந்நிய மொழியின் ஆதிக்கத்தில் நம் மனிதத்தன்மை, மானம், உரிமை பாழாக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு நம் உடன் பிறந்தவர்கள் விபீஷணர்களானது உண்மையில் மகாமகா இழிவு என்பது சத்தியம்.

இவைகளைத்தான் சத்தியமும், நீதியும் ஆகும் என்றேன். இவை தோல்வியுறாது! தோல்வி உறாது! தோல்வி உற்றால்தான் நட்டம் என்ன? அந்தத் தோல்வியைக் கண்டிப்பாய் நாம் அனுபவிக்கமாட்டோம். நம்மைத் தோற்கடித்தவர்களும், தோல்வியைக் கண்டு சும்மா இருப்பவர்களும், தோல்வியைச் சகித்துக் கொண்டு உயிர் வாழுபவர்களு மேயாவார்கள், அதைப்பற்றி நமக்குக் கவலை இல்லை.

- ஈ.வெ.ராமசாமி

 - விடுதலை நாளேடு, 9. 8 .19


 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக