வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

பெரியாரின் சங்கநாதமும் தொண்டர்களின் பேரெழுச்சியும் (2)



10.07.1948 - குடிஅரசிலிருந்து... -

சென்ற வாரத் தொடர்ச்சி

வந்த கடிதங்களில் இங்கு நாம் இரண் டொன்றைத்தான் குறிப்பிட்டிருக்கின் றோம். சில தோழர்கள் வஞ்சினங்கூறி எழுதி, ரத்தத்திலேயே கையெழுத்திட்டு அனுப்பியிருக்கிறார்கள்.

சுருக்கமாகக்கூறவேண்டுமென்றால், இக்கடிதங்கள் இந்நாட்டு மக்களின் வீரத் திற்கு ஒரு எடுத்துக்காட்டாய், என்றும் அழிவுறாத இலக்கியமாக விளங்கத் தகுந்த பெரும் பொக்கிஷமென்று கூற வேண்டும்.

ஈவு இரக்கமற்ற, வன்கண்மையும் குரூரமே உருவான இப்போதைய அகிம்சா மூர்த்திகளின் சுயரூபத்தையும், அவர்களின் அட்டூழியமான அக்கிரமப் போக்கையும் கண்டபிறகே, பெரியார் அவர்களால் இக்கொடிய சூழ்நிலையை நன்றாக விளக்கிக் கூறப்பட்ட பிறகே இத்தனை ஆயிரம் தோழர்கள் கச்சையை வரிந்து கட்டி எங்கு? எப்பொழுது? எப்படி? என்ற கேள்விகளைப் போட்டு முழக்கஞ் செய்கின்றார்கள் என்பதைக் கேட்கும் போது எந்தத் திராவிடன் தான் மகிழ்ச்சியடையாதிருப்பான்?

வடநாட்டு ஆதிக்கத்தை முறியடிக்க, பார்ப்பனியச் சுரண்டலை படுகுழியில் புதைக்க, முன்னேற்றப் பாதையில் எடுத்து அடிவைத்து நடக்க முடியாத இன இழி வைத் துடைக்க, இந்தத் திராவிட இன உணர்ச்சியுடைய இளைஞர்கள் மட் டுமோ, எத்தனையோ காங்கிரசு திரா விடத் தோழர்களும் கலந்து அய்க்கிய மடையக் காத்திருக்கிறார்கள் என்பதை யும் நாமறிகிறோம்.

திராவிடக் காளைகளின் பேரெழுச் சியைக் கண்ட ஓமாந்தூரார் மந்திரிசபை, திராவிடர்களின் மானத்தைப் பறித்து, மொட்டையடித்து நாமம் போட்டு கோவிந்தா! கோவிந்தா என்று கூக்குரல் போடச் செய்யும் இக்காரியத்தைக் கைவிடுமா? அல்லது கைவிடாதிருக்குமா? நிதானப்புத்தி இல்லாமல், நேற்றுச் சொல்லியதை இன்று மாற்றிச் சொல்லி, ஒரு மந்திரி சொல்வதை மற்றொரு மந்திரி அது அவர் சொந்த அபிப்பிராயமே தவிர மந்திரிசபையின் கருத்தல்ல என்று மறுத்துப் பேசி வரும், மந்திரிகளடங்கிய மந்திரி சபையிலே நிதானப்போக்கை நாம் எதிர்பார்க்கவில்லை. எதிர்பார்க்கத் தேவையுமில்லை.

ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே என்று ஆண்டவனுக்கும் உலக மக்கள் நிகழ்ச்சிக்கும் தத்துவம் காட்டும் மெய்யன்பர்களின் போக்கை மறுத்து, ஆட்டுவிப்பவன் யார், அவன் எங்கிருந்து கொண்டு எப்படி எதனால் ஆட்டுகின் றான் என்று கேட்கும் எந்த பகுத்தறிவு வாதிதான், ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே என்று இப்போதைய மந்திரி சபையைக் குறித்துக் கூறும் போது எப்படி மறுத்துவிட முடியும்? பார்ப்பனர்களும் - பனியாக்களும் ஏவியபடியெல்லாம் ஏவல் கேட்கும் இந்த மந்திரி சபை, இந்த மந்திரி சபை அமைவதற்கு என்ன அடிப்படையோ அந்த அடிப்படை அழிந்தொழிய, இந்த நாட்டு ஆட்சியின் அமைப்பு வேறு எவரின் தலையீடுமற்ற நிலையில் அமைக்கப்பட வேண்டுமென்ற உரிமைப் போராட்டம், மந்திரி சபையின் வெற்றிகரமான பின் வாங்கும் நடத்தை யால் சிலநாள், கால தாமதமானால் ஆகுமே தவிர, எப்படியும் போராட்டம் நடந்துதானே தீரும்! நடந்துதானே ஆக வேண்டும்! இந்த உறுதியும் உரமும் பெற்ற உணர்ச்சி வெள்ளத்தைத்தான், திராவிடர் களின் வீர முழக்க பேரொலியைக் கேட்டுக் கண்களுள்ள எவரும் காணவேண்டும்.

நிற்க, தொண்டர்களுக்கு இந்த நேரத் தில் நாம் இவைகளைக் கூற வேண்டு மென்று ஆசைப்படுகிறோம். இன இழி வைத் துடைப்போம்! எவர் தடுப்பினும் எதிர்ப்போம்! எப்பொழுது போராட்டம்? இப்போதே நாங்கள் தயார்! என்று தினவெடுக்கும் தோள்களையுடைய செந்தமிழ் வீரர்களே! இப்போராட் டத்தில் எங்கள் பங்கு என்ன குறைச்சலா என்று மனம் புழுங்கும் தாய்மார்களே! இளைஞர்களே! போராட்ட முறையில் நீங்கள் கைக்கொள்ள வேண்டிய முதல் பாடம் கட்டுப்பாடு. கட்டுப்பாட்டுக் கடங்கிப் போர்த்தலைவன் குறித்த வேளையில், குறித்த இடத்தில், குறிப்பிட்ட காரியத் தைச் செய்ய நீங்கள் ஆயத்தமாயிருக்க வேண் டும்!  உங்களுடைய சக்தியைச் சிதற டிக்க பார்ப்பனியம் பல வலைகளை வீசும்! ஏமாந்து விடாதீர்கள்! எழுச்சி யையே ஆயுதமாகக் கொண்டு, வேறு எந்தக் கொலைக் கருவியையும் கைக் கொள்ளாமல் போராட்டத்தில் ஈடுபட வேண்டியிருக்கும் உங்களை, தவறான பாதையைக் காட்டி சரிந்து விழுவதற்கு வேண்டிய முயற்சிகளைச் செய்யும் பார்ப்பனிய அதிகாரவர்க்கம்! அதற்கு ஒத்துழைத்து பின்பாட்டுப் பாடி ஒத்து ஊதி தாளம் போடும் பணக்கார வர்க்கம்! உணர்ச்சிக்கு அடிமைப்பட்டு உலுத்தர் களின் ஏமாற்றத்திற்கு உள்ளாகாதீர்கள்!

உங்களுடைய சக்தியனைத்தும் கட்டுப்பாடாய் ஒருமுகமாக ஒரு முனையிலே செலுத்தப்பட வேண்டும் என்பதைக் கவனத்தில் வையுங்கள்!

கட்டுப்பாட் டோடு கூடிய எழுச்சியே, நம் காரியத்தை வெற்றிபெறச் செய்யும் என்பதை நினைவில் வையுங்கள்.

 - விடுதலை நாளேடு, 24.8.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக