புதன், 26 பிப்ரவரி, 2020

மேல்நாட்டின் ஜோதியும் கீழ்நாட்டின் பீதியும் - 2

01.02.1931 - குடிஅரசிலிருந்து..

சென்ற வாரத் தொடர்ச்சி

நாங்கள் ஏன் எங்கள் சொந்தக்  காசையும்,   நேரத்தையும் செலவு செய்து கொண்டு இந்த மாதிரி  ஊர் ஊராய் சுற்றிக்கொண்டு, காசுக்குதவாத வெறும் ஆட்கள் எல்லாம் வையும் படியாகவும் சாபம் கொடுக்கும்படியாகவும் வெட்டுகிறேன், குத்துகிறேன் என்று மிரட்டவும், அவ்வளவையும் இலட்சியம் செய்யாமலும், வந்தது வரட்டும் நாம் செத்துப் போனால் நமக்குத் தானாகட்டும்  மற்றும் யாருக்குத்தானாகட்டும் என்ன முழுகிப்போகும் என்கின்ற துணிவின் பேரில் வீட்டில் உள்ளவர்களிடம் கடைசிப்பயணம் சொல்லிக்கொண்டு வந்து இந்த மாதிரி அலைவதற்குக் காரணம் என்ன? என்பதை யோசித்துப்பாருங்கள்.  இக்கூட்டத்திற்குத் தலைமை வகித்திருக்கும் தலைவர் ஜனாப் தாவுத் ஷா பி.ஏ. அவர்கள் இஸ்லாம் மதத்திற்கு எவ்வளவோ பாடுபடு கின்றவர். அவர் சப்மாஜிஸ்திரேட் உத்தியோகத் தையும் ராஜிநாமா கொடுத்தவர். ராஜிநாமாக் கொடுக்காமல் இப்போதும் அவர் உத்தியோகத் திலேயே உட்கார்ந்திருப்பாரேயானல் இன்றைய தினம் ஏதாவதொரு பெரிய பதவியில் இருப்பார்.   மாதம் 4000, 5000 சம்பளமுள்ள உத்தியோகத்தில் இல்லாவிட்டாலும் மாதம் 900, 1000 ரூபாய் உத்தியோகத்திலாவது இருப்பார்.  அப்படிப்பட்டவர் ஏன் இந்த மாதிரி பாடுபடுகின்றார் என்று யோசித்துப் பாருங்கள். இன்று உலகம் போகின்ற போக்கில் உலக மக்கள் அடைந்திருக்கின்ற முற்போக்கில்  நாகரி கத்தில் நாம் எந்த நிலையில் இருக்கின்றோம் என்பதை யோசித்துப் பாருங்கள்.

நம் அறிவாளிகள் இன்று சாமி போச்சு, சமயம் போச்சு, சைவம் போச்சு, சாமியும், சமயமும் நெருக்கடியான நிலையில் இருக்கின்றன என்பதாக சிறிதும் வெட்கமில்லாமல் பேசிக் கொண்டிருக் கிறார்கள்.  நம்மைக் காப்பாற்ற ஏற்பட்டுள்ள சர்வ சக்தியுள்ள கடவுளை, நம்மை வாழ்விக்க ஏற்பட்ட பரிசுத்த சமயத்தை, நாம் காப்பாற்ற வேண்டிய அளவு நெருக்கடியான சமயம் ஏற்பட்டுவிட்டது என்று சொல்ல ஆரம்பித்தால் அது கடவுளுடையவும், சமயத்தினுடையவும் பலக்குறைவா? அல்லது அந்த மாதிரி சொல்கின்ற மக்களின் அறிவுக்குறைவா என்பதை நீங்களே யோசித்து பாருங்கள்.  மனிதனுக்கு எப்படி சுயமரியாதை பிரதானமோ, அப்படியே கடவுளுக்கும், மார்க்கத் திற்கும் கூட சுயமரியாதை அவசியம் என்பதை நீங்கள் உணருங்கள்.  அப்படி யானால் தங்களைக் காப்பாற்ற இந்த மாதிரி இத் தனை வக்காலத்து கொடுத்திருக்கும் அவைகளுக்குச் சுயமரியாதை இருக்கின்றதா என்று யோசித்துப் பாருங்கள்.

சகோதரர்களே! அய்ரோப்பாவின் நோயாளி யான துருக்கியானது ஆண்டவ னுக்கும் மார்க்கத் திற்கும் வந்த நெருக்கடியை காப்பாற்றுகின்ற வேலையில் ஈடுபட்டிருக்குமானால் இன்று இது இன்றைய மாதிரியில் இருந்திருக்க முடியுமா என்பதை யோசித்துப் பாருங்கள். கொடுங்கோல் மன்னன் ஆட்சியில் இருந்த ருஷ்யா இன்று ஆண்ட வனையும், மார்க்கத்தையும், ஆதாரத்தையும் காப்பாற்றுகின்ற வேலையில் ஈடுபட்டி ருந்தால் அது இன்றைய நிலையை எந்தக் காலத்திலாவது அடைய முடிவுமாவென்பதை யோசித்துப் பாருங்கள்.

அதுபோலவே சீனாவையும், ஜப்பானையும், பிரஞ்சையும், இங்கிலாந்தையும், அமெரிக்காவையும், நினைத்துப்பாருங்கள். எந்த நாட்டுக்காரானாவது அவனுடைய வாழ்நாளையும், சொத்தையும், நேரத் தையும், இந்த மாதிரிக் கடவுளையும், மதத்தையும் காப்பாற்றுகின்ற முட்டாள் தனமானதும், பயனற்றதும், நாச வேலையானதுமான வேலையின் ஈடுபடுத்தியிருக்கின்றார்களா என்பதை நடுநிலையில் இருந்துயோசித்துப் பாருங்கள்.

கடவுள் போய் விடும் என்று பயந்த மக்களால் வேறு என்ன வேலையாகும் என்று நினைக்கிறீர்கள்.  அவர்களை விட பயங்காளிகள், அறிவிலிகள் வேறு யார் இருக்கக்கூடும்? என்று எண்ணுகிறீர்கள்.  கடவுளுக்கும், சமயத்திற்கும், அடிமையான நாடு ஒரு நாளும் சுதந்திரத்திற்கு அருகதையுடையதாகவே ஆகாது. ஆகவே, நீங்கள் முதலில் அந்தப் பயத்தை ஒழியுங்கள். சமயத்தை வணங்க வேண்டாம் அதற்குப் பூசை செய்ய வேண்டாம் என்றால், உங்கள் மார்க்கம் போய்விடுமா? அப்படியானால் இந்து மதத்திற்கும், இஸ்லாம் மதத்திற்கும் வித்தியாசமென்ன? இந்து மதச் சம்பந்தமான கோவில்களெல்லாம் பெரிதும் சமாதிதான்.  அந்தக் கடவுளெல்லாம் அநேகமாய் அந்தச் செத்துப்போன ஆண்களைதான் என்பதே எங்கள் ஆராய்ச்சிக்காரர்கள் துணிவு.   அதனால்தான் பல புண்ணியஸ்தலங்களும், பல கடவுள்களும் ஏற்பட வேண்டியதாயிற்று.  அதையொழிப்பதற்குத் தோன்றியதுதான் இஸ்லாம் மார்க்கம் ஆகும். இஸ்லாம் மார்க்கத்தில்தான் ஒரே ஒரு கடவுள் என்பதும், அதற்கும் உருவமில்லை என்பதும்.  அதைத் தவிர வேறொன்றையும் வணங்கக் கூடா தென்பதுமான கொள்கைகள் சொல்லப்படுகிறது. அதற்கு நேர்விரோதமான நீங்கள் சமாதிகளை யெல்லாம்  வணங்கவும், பூசிக்கவும், ஆரம்பித்து விட்டீர்களானால் நீங்கள் எப்படி மற்றவர்களைக் குற்றம்சொல்ல யோக்கியதையுடையவர்களாவீர்கள்? அது மாத்திரமல்லாமல், அல்லா சாமி பண்டி கையிலும், கூண்டு முதலிய திருவிழாக்களிலும் இஸ் லாமானவர்கள் சிலர் நடந்துகொள்வதும் மிகவும் வெறுக்கத்தக்கதாகும் .  இப்படிப்பட்டவர்களைக் கொண்ட மார்க்கம் எப்படி பகுத்தறிவு மார்க்க மென்றும், இயற்கை மார்க்க மென்றும் சொல்லிக் கொள்ளக்கூடும்?  என்பதை யோசித்துப் பாருங்கள்.  இவைகளையெல்லாம் ஒரு மார்க்கக் கட்டளை என்று சொல்லுவதானால் இந்த மார்க்கம் ஒரு நாளும் அறிவு மார்க்கமாகவோ உண்மையில் நன்மை பயக்கும் மார்க்கமாகவோ இருக்க முடியவே முடியாது.  அதோடு மாத்திரமல்லாமல் மார்க்கத் தலைவருக்கும், மார்க்க வழிகாட்டி யார்க்கும் கூட இது அவமானமும் வசைச் சொல்லுமாகும் என்றே சொல்லுவேன். இன்று இந்துவும், கிறிஸ்தவரும், பகுத்தறிவைக் கண்டால் பயப்படுகின்றார்கள்.  இஸ்லாம் மார்க்கத்தில்தான் தங்கள் மார்க்கம் பகுத்தறிவுக்கு ஏற்றது என்று நிரூபிக்க பந்தயம் கட்டி வருகிறார்கள்.  ஆனால், இப்படிப்பட்ட  சமாதான வணக்கமும், பஞ்சா வணக்கமும், கொடி வணக்கமும் கூண்டு உற்சவம், அல்லா சாமி பண்டிகையை யும்  கொண்ட மக்களை ஏராளமாய் வைத்துக்கொண்டு அவற்றையும் மார்க்கக் கொள்கையோடு சேர்த்துக் கொண்டிருக்கின்றவர்களையும் வைத்துக்கொண்டு இஸ்லாம்மார்க்கம், பகுத்தறிவு மார்க்கமென்று எப்படி சொல்லிக்கொள்வது என்பது எனக்குத் தெரியவில்லை.  நீங்களே சொல்லுங்கள் இவைகளைக் கொண்ட இஸ்லாம் மார்க்கம் பகுத்தறிவு மார்க்க மாகுமா? கோபிப்பதில் பயனில்லை? இந்து மதம் என்பதை விட, கிறிஸ்தவ மதம் என்பதை விட, இஸ்லாம் மதம் என்பது மேலானது என்பது எனதபிப்பிராயம் என்று எங்கும் சொல்வேன்.  ஆனால், இனி சிறிது கூட சீர்திருத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்பவர்களுடன் நான்சிறிது பலமாக முரண்பட்டவனேயாவேன். ஏனெனில், என் கண்களில் பார்ப்பதைக் கொண்டு தான் சொல்லுகிறேன்.  அதுவும் இன்று இஸ்லாம் மார்க்கத்தார் என்பவர்களில் பெரும் பான்மையான மக்கள் அனுஷ்டித்து வரும்,  நடந்து வரும் கொள் கைகள் இஸ்லாம் மார்க்கம் கொள்கை என்றால் ஆண் பெண் இருதுறையிலும் சீர்திருத்தம் செய்ய வேண்டிய சங்கதி பல இருக்கின்றதென்றும் தைரியமாய்ச் சொல்லுவேன்.  நீங்களும் அவற்றைச் சீர்திருத்த வழி தேடுங்கள், அவற்றை நிலைக்க வைக்க ஆதாரத்தைத் தேடாதேயுங்கள்.

தொடரும்...

 -  விடுதலை நாளேடு 21.2. 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக