வெள்ளி, 11 டிசம்பர், 2015

திருப்பதி வெங்கடாசலபதியின் நன்றி கெட்ட தன்மை!


திருப்பதி வெங்கடாசலபதி என்னும் கடவுளால் நமது நாட்டிற்கு உள்ள நஷ்டத்தைப் பற்றி சென்ற வாரம் தெரியப்படுத்தி இருந்தோம். அதாவது, மக்களுக்கு வருஷத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் போல் செலவு ஆவதைப் பற்றியும் சுமார் 7,8 கோடி ரூபாய் சொத்து வீணாகிறது என்பது பற்றியும் எழுதி இருந்தோம்.
தேசத்துக்கு இவ்வளவு நாசத்தை உண்டாக்கி இவ்வளவு பூஜையும், உற்சவத்தையும், நகையையும், வாகனங் களையும், பூமியையும், கட்டிடங்களையும், ஜமீன்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கும் கடவுள் சற்றாவது யோக்கியப் பொறுப்பின்றியும், நன்றி அறிதலின்றியும் நடந்து கொள்வதைக் கண்டால் அந்த மாதிரிக் கடவுளை நமது நாட்டில் வைத்திருப்பது முட்டாள்தனமும் பேடித்தனமும் ஆகும் என்பதே நமது அபிப்பிராயம்.
ஏனெனில், இவ்வளவு போக, போக்கியத்தையும் அனுபவித்துக் கொண்டு அந்தக் கடவுளின் வேலையை பார்த்து வருபவரும், கடவுளுக்கே தந்தை என்றும் மகன் என்றும் சொல்லத் தகுந்தவருமான மகந்து என்பவருக்குப் பைத்தியம் பிடிக்கச் செய்து, அவருடைய சிஷ்யர்களையும் ஜெயிலில் அடைக்கச் செய்து போலீசாரால் மகந்துவைப் பிடித்து சென்னை பைத்திய சிகிச்சைக்குப் பலாத்காரமாய் கொண்டு போகும்படி செய்திருக்கின்றதென்றால் வெங்கி டாசலபதி கடவுளின் நன்றிகெட்ட தன்மைக்கு வேறு சான்று என்ன வேண்டும்?
- குடிஅரசு - கட்டுரை - 24.11.1929   (தந்தை பெரியார் அவர்களது நகைச்சுவை உணர் வையும் நையாண்டி ஆற்றலையும் இக்கட்டுரை விளக்குகிறது - ஆசிரியர் கி. வீரமணி)


கோவில் பிரவேசம்

வங்காளத்தைச் சேர்ந்த குல்னாகாளி கோவிலுக்குள் தீண்டாதார் எனப்படுவோர் செல்ல வேண்டுமென்று சத்தியாக்கிரகம் செய்து வந்ததும், அதனால் சிலர் கைதி யானதும் சென்ற வாரப் பத்திரிகையில் தெரிந்திருக்கலாம்.

இப்போது இந்துக்கள் என்பவர்கள் எல்லோரும் தீண்டாதார் எனப்படுவோர் உள்பட தாராளமாய் கோயிலுக்குள் சென்று சாமிதரிசனம் செய்யலாம் என்பதாக மேல் ஜாதியார் என்பவர்கள் ஒப்புக் கொண்டு ராஜி ஏற்பட்டு கைதியாக்க பட்டவர்களையும் விடுதலை செய்து விட்டார்கள்.
- குடிஅரசு - செய்தி விளக்கக்குறிப்பு -  21.07.1929
-விடுதலை,7.6.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக