ஞாயிறு, 6 டிசம்பர், 2015

மனுமுறையைப் புகுத்தவே குலக்கல்வித் திட்டம்


- தந்தை பெரியார்
திராவிடர் கழகம் முக்கியப் பிரச்சினையாகக் கொண்டிருப்பது குலக்கல்வித் திட்ட ஒழிப்பு வேலையாகும். நான் அப்போதே சொன்னேன் அது ஜாதியைக் காப்பாற்றுகிற மனுதர்மத் திட்டம் என்று.
அதாவது ஒரு ஜாதியார்தான் படிக்க வேண்டும். பார்ப்பனர்தான் படிக்க உரிமையுண்டு என்ற தத்துவம் கொண்டதாகும். இதுதான் மனுதர்ம சாஸ்திரம் கூறுவது. எவன் சூத்திரனுக்குப் படிப்பு சொல்லிக் கொடுக்கிறானோ அவனே பாவி. சூத்திரன் படித்தால் ஒழிந்தே போய்விடுவான். இதுதான் மனுதர்மத்தில் காணப்படுவது.
வெள்ளைக்காரன் எல்லோருக்கும் கல்வி கொடுக்க ஏற்பாடு செய்தான். அதனால்தான் 4வது ஜாதி, கீழ்ஜாதி, சூத்திர ஜாதி எனப்பட்ட நாம் 100க்கு ஓரளவு 10 பேராவது படிக்கிற நிலைமைக்கு வந்தோம்.
இப்போது ஆச்சாரியார் (இராஜாஜி) கிராமங்களில் மட்டுமல்ல; நகரத்தில்கூட இந்தப் பகுதிநேர குலக்கல்வி என்று சொல்லிவிட்டார். என்ன அவசியம் இந்தத் திட்டத்திற்கு? மற்றும் ஆசிரியர்களுக்கு உத்தரவு; பாதி நேரம் பள்ளிப் பிள்ளைகள் அப்பன் வேலையைச் செய்கின்றனவா? மாடு மேய்த்துக் கொண்டிருக்கிறானா? அல்லது அந்த நேரத்தில் பிரைவேட் படிக்கிறானா? (வீட்டில் கற்றவர்களிடம் படிப்பது) அப்படிப் பிரைவேட் படித்தால் அதை நிறுத்து என்று உத்தரவு போட்டுள்ளார்.
குலக்கல்வித் திட்டத்தில் மாணவர் எண்ணிக்கை குறைந்து 100க்கு 30 பேர்தான் வருகிறார்கள் என்று ஆசிரியர்கள் சொன்னால், குறைவாய் பையன் வருவதால் அதிக வாத்தியார் தேவையில்லை. அவர்களை வீட்டுக்குப் போகச் சொல் என்கிறார். வாத்தியார்கள் வேலை போய்விடும் என்பதால் வராத பையன்கள் பெயரையெல்லாம் (வந்ததாக எழுதி) அதிகம் எழுதி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பார்ப்பானை சாமி என்று வணங்குவது மாறி வருவதால்தான், இதை இப்படியே விட்டுக்கொண்டு போனால் தப்பு; நாம் பிழைக்க முடியாது. இனி வரப்போகிற சமுதாயத்தை அடக்கி பழையபடி பார்ப்பானை சாமியென்று வணங்கும்படிச் செய்யவே, ஆச்சாரியார் இக்குலக்கல்வியைக் கொண்டு வந்துள்ளார்.
பிள்ளைகள் அப்பன் தொழிலை மறந்துவிட்டு, ஜாதி முறையை விட்டுவிட்டு படித்துவிட்டு உத்தியோகம் கேட்கிறான். கொடுக்காவிட்டால் ரகளை பண்ணுவான். ஆனதினால், சூத்திரன், கிராமத்துக்காரன் பகுதி நேரம்தான் படிக்க வேண்டும், மிகுந்த பகுதிநேரம் அவனவன் வேலையைச் செய்யணும். உத்தியோக வேலை செய்யக் கூடாது. இதுதான் ஆச்சாரியார் திட்டம்.
அவனவன் ஜாதித் தொழிலைச் செய்யாததினால் தொழிலின் பேரில் வெறுப்பேற்பட்டுவிட்டது என்கிறார். இரண்டாவதாக இத்திட்டத்தைக் கொண்டு வந்ததற்குக் காரணம், சூத்திரன் படிப்பதை ஒழித்தால் பழையபடி வருணாசிரமம் தானே வந்துவிடும் என்ற எண்ணந்தான்.
சூத்திரன் வேலைக்குப் போகக் கூடாது என்பதற்காக, வேலைக்குப் போகும் படிப்புத் தகுதியை உயர்த்திக் கொண்டே போகிறார்கள். அப்படியும் சமாளித்து நம் மக்கள் வேலைக்கு வருகிறார்கள். நம் ஆட்களுக்கு வேலை கொடுக்காமல், அவர்களே ஏகபோகமாக உத்தியோகத்தை அனுபவிக்க இக்குலக்கல்வியைக் கொண்டு வந்துள்ளார்.
நாம் 100க்கு 97 பங்கு வரி கொடுக்கிறோம். ஆனால், நாம் மாடு மேய்க்க வேண்டும்; பார்ப்பனர்கள்தான் உத்தியோகம் பார்க்க வேண்டும்; ஆள வேண்டும் என்றால் இது என்ன நியாயம்? ஒண்டவந்தவன் நம்மை ஆள்வது. நாம் மாடு மேய்ப்பது என்றால் எதற்காக?
கிளர்ச்சியின்றி பயன்கிட்டாது
நாம் இன்றைய தினம் எடுத்துக் கொள்ளும் முயற்சியெல்லாம் நம் மக்கள் மனிதத் தன்மை பெறுவதற்காகத்தான். எப்படியாவது இக்குலக்கல்விக் திட்டத்தை ஒழித்துக் கட்டி, நம் மக்கள் முன்னேற வேண்டும் என்பதற்காகத்தான். அந்தப்படிப் பார்க்கப் போனால், சட்டப்படி நடந்தால் ஒரு பயனுமில்லை என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது.
என்ன ஜனநாயகம்? மக்களுக்கு என்ன சங்கதி புரிகிறது? 4 அணா கொடுத்தால் ஓட்டுப் போட்டுவிடுகிறார்கள். பல இடத்தில் நடந்திருக்கிறது.
ஆகவே, குலக்கல்வித் திட்டத்தை பொருத்த போராட்டத்தில், சட்டத்தை எதிர்பார்த்தால் ஒரு காரியமும் நடக்காது. சட்டசபை மூலம் இதை மாற்றலாம் என்றால் முடியாது. கிளர்ச்சி மூலந்தான் முடியும். அதுவும் சட்டத்தை மீறினால்தான் முடியும்.
புரட்சி என்றால் என்ன அர்த்தம்? சட்டத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் என்ன காரியம் நடக்கும்? ஆகவே, குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து நடத்தப்படவிருக்கிற புரட்சி சட்டத்தை மீறியதாக இருக்கும். ஈரோட்டில் ஆச்சாரியாருக்கு இத்திட்டத்தை வாபஸ் வாங்கும்படி 3 மாத நோட்டீஸ் கொடுத்தோம். ஆனால், ஆச்சாரியார் இத்திட்டம் கிராமத்தில் மட்டுமல்ல நகரத்திலும் வைக்கப்படும் என்கிறார்.
இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்? தயாராய் இருக்க வேண்டியதுதான். மானமுள்ள மனிதனென்றால், ஒருமுறையாவது ஜெயிலுக்குப் போய் வரவேண்டியதுதான். அதுதான் மனிதனுக்குத் தற்போது யோக்கியதாம்சம். இக்காரியத்தை இளைஞர்கள் கட்டாயம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நாளைக்கு நமக்குப் பின்வரும் சந்ததியார் மாடு மேய்க்க வேண்டியதுதான்!
28.2.1954இல் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாவட்ட திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் ஆற்றிய உரை. (விடுதலை 07, 8.3.1954)
நாசவேலைக்கும் நாம் தயாராக வேண்டும்
எதைச் செய்தால் குலக்கல்வித் திட்டத்தைக் கைவிடுவார்களோ அதைச் செய்தாக வேண்டும். நாச வேலை போன்றவைகள் செய்தால்தான் ஆச்சாரியார் பின்வாங்கக் கூடும் என்றால் அதைச் செய்து பார்த்துவிட வேண்டியதுதான்!
என்னைப் பொருத்தவரையில் நான் நாசவேலையைப் பற்றிச் சற்று கவலைப்படுவதுண்டு. இந்த நாட்டுப் பொருள், இந்த நாட்டுச் செல்வம் நஷ்டமானால் நமக்குத்தானே நஷ்டம் என்று நான் கருதுவது உண்டு. எனவே, தமிழனுக்கும், திராவிடனுக்கும் நஷ்டமில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அகிம்சைக்கு அர்த்தமில்லை
நெருப்பு வைத்தால்தான் முடியுமென்றால், திராவிடர் பொருள் பற்றாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எடுத்ததற்கெல்லாம் அன்பு, அகிம்சை என்று காந்திக்கு அடுத்தாற்போல பல சொல்லி வந்தவன் நான். அப்படியே கடைபிடித்தவன் நான். இன்று பலாத்காரம்பற்றி நான் ஏன் சொல்கிறேன்? அகிம்சையைப் பின்பற்றிவரும் நம்மைக் கோழையென்று கருதுகிறார்கள்.
கொஞ்ச நாளைக்கு முன் ஆளுக்கொரு கத்தி வைத்துக்கொள்ள வேண்டும்; தடி வைத்துக்கொள்ள வேண்டும்; சிலம்பம் கத்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னோம். ஏன்?
நம்மைத் தற்காத்துக் கொள்ளவேண்டிய சந்தர்ப்பம் வந்துவிட்டது. நாம் ஆயுதத்துடன் தயாராக இருந்தால்தான் கூலிகள் பயந்து ஓடுவார்கள் என்பதால்தான் கத்தி வைத்துக் கொள்ளச் சொன்னேன். இப்படிச் சொன்ன பிறகுதான் காலிகள் வருவது குறைந்தது.
எனவேதான் கத்தியும், எண்ணைப் பந்தமும் ஏந்துங்கள் என்று சொல்லவேண்டி வந்தது!
(11.03.1954இல் சேலத்தில் தந்தை பெரியார் ஆற்றிய உரை - விடுதலை 26.03.1954)
உண்மை இதழ்,1-15.6.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக