வெள்ளி, 11 டிசம்பர், 2015

அய்யா உடைத்த அட்வான்ஸ் பிள்ளையார்


1953ஆம் ஆண்டு, மே மாதம் 10ஆம் தேதி, தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக மாநாடு நடந்து கொண்டிருக்கிறது. அந்த மாதம் 27ஆம் தேதி நடைபெற இருக்கும் பிள்ளையார் உடைப்பு போராட்டம் பற்றியும் அதன் போர்முறைத் திட்டம் பற்றியும், பொதுவாக கழகத் தோழர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறை பற்றியும் விளக்கிக் கொண்டு வருகிறார்.
பிள்ளையாரின் பிறப்பு ஆபாசங்களை புராணத்தின் பகுதிகளில் இருந்து எடுத்துக் கூறி பிள்ளையார் உடைப்பு போராட்டம் ஏன் என்பதற்கான காரணங்களை தெளிவாக விளக்கிப்  பேசிக் கொண்டிருக்கும் போது, தாம் கொண்டு வந்திருந்த பெரியதும் சிறியதுமான இரண்டு பிள்ளையார் பொம்மைகளை எடுத்து கூட்டத்தாரிடம் காண்பிக்கிறார்.
இரண்டு பொம்மைகளும் வண்ணப் பொம்மைகள். இதுபோன்ற வண்ணப் பிள்ளையார் படங்களையோ அல்லது மண் பிள்ளையார் பொம்மைகளையோ வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இவைகளை 27ஆம் தேதியன்று உடையுங்கள் என்று அய்யா கூறுகிறார்.
கூட்டம் ஆரவாரமெழுப்பி தங்கள் மகிழ்ச்சியை தெரிவிக்கிறது. அதைத் தொடர்ந்து 27ஆம் தேதி பிள்ளையார் உடைப்பதற்கு அட்வான்சாக சாம்பிளாக என் கையில் உள்ள இந்த சின்ன பிள்ளையாரை இன்றைக்கு தூளாக்குவோமா? என்று கூட்டத்தை நோக்கிக் கேட்கிறார்.
கூட்டத்தினர் மகிழ்ச்சிப் பெருக்கில் உடைப்போம், உடைப்போம் என்று உணர்ச்சிப் பெருக்குடன் முழங்குகின்றனர். அதைத் தொடர்ந்து-
சின்ன விநாயகன், சித்தி விநாயகன், ஆனை முகத்தவன் என்று பக்தர்களால் கூறப்படும் பிள்ளையார் கடவுள் உடைக்கப்பட்டது மேடையிலே, மேஜையின் மேலே - புரட்சி வேந்தர், புத்துலகச் சிற்பி தந்தை பெரியார் தம் கையால்.
எங்கெங்கும் ஆனந்த ஒலிகள்! எக்காள முழக்கம், பந்தலெங்கும் எதிரொலித்தது. கணபதி ஒழிக! விநாயகன் ஒழிக! பிள்ளையார் ஒழிக! என்று கிளம்பிய முழக்கம் அடங்க வெகுநேரம் ஆகியது.
-விடுதலை,2.5.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக