19.5.1929, குடிஅரசிலிருந்து..
மதத்தைப் பற்றியும் நான் சொல்வதை மதத் துரோகம் என்கின்றார்கள்.
பிறவியின் காரணமாக மனிதனுக்கு மனிதன் ஒரு நீதியும் ஆணுக்கு ஒரு நீதியும் பெண்ணுக்கு ஒரு நீதியும் உள்ள எந்த மதமானாலும் சரி அது கடவுளை நேரே கொண்டுவந்து காட்டி மோட்சத்திற்கு அழைத்துச் செல்ல செய்யும் மதமாயி ருந்தாலும் சரி அல்லது அது நம்மையே கடவுளாக்கும் மத மாயிருந்தாலும் சரி அதை அழிக்க வேண்டியதும் அழிக்க முடியாவிட்டாலும் அந்த அழிக்கும் வேலையில் உயிரைவிட வேண்டியதும் உண்மையான மனி தனது கடமை என்றுதான் நான் தீர்மானித்துக் கொண்டிருக்கின்றேன்.
இதில் சிறிதும் ராஜிக்கு இடமில்லை என்பதைக் கண்டிப்பாய் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அது போலவே காங்கிரஸ் என்பதும் தேசியம் என்பதும் சுயராஜ்யம் என்பதும் அக் கூட்டத்தாரின் சுயநலத்திற்கும் ஒரு கூட்டத்தாரின் வயிற்றுப் பிழைப்பிற்கும் ஏற்பட்டு நாட்டையும் ஏழை மக்களையும் பாழ்படுத்தி வரும் தொல்லைகள் என்றே சொல்லுவேன்.
தேசத்தின் பேரைச் சொல்லி சத்தம் போடும் ஒவ்வொருவரும் சுயநலத்திற்கும், சுயஜாதி நலத்திற்கும் குறி வைத்துக் கொண்டு வேறு வழியில் பிழைக்க முடியாதவர்களை பிடித்து கூலி கொடுத்து கூப்பாடுபோடச் சொல்லும் சூழ்ச்சியே தவிர வேறில்லை.
சுயராஜ்யம் என்றால் என்ன என்று இதுவரை இவர்களில் யாராவது எடுத்துச் சொல்லி இருக்கிறார்களா? இவர்கள் கேட்கும் சுயராஜ்யத்தால் ஏழைகளுக்கும் தொழிலாளி களுக்கும் குடியானவர்களுக்கும் ஏதாவது பலன் காட்டியிருக்கின்றார்களா? அல்லது இதுவரை போட்ட சுயராஜ்யக் கூப்பாட்டினால் ஏதாவது அவர்களுக்கு பலன் உண்டாக்கி இருக்கின்றார்களா? என்பதை நடுநிலையிலிருந்து யோசித்துப் பாருங்கள்.
எல்லாக் கூப்பாடுகளும் யாரை ஏமாற்றி யார் மந்திரியாவது? யார் உத்தியோகம் பெறுவது? யார் பணம் சம்பாதிப்பது? யார் யாரை அழிப்பது? என்பதைத் தவிர சர்க்காரைப் பற்றியோ ஏழை மக்களைப் பற்றியோ நாட்டின் கதியைப் பற்றியோ யாருக்காவது கடுகளவு கவலையுண்டு என்று யாராவது சொல்ல முடியுமா என்று கேட்கின்றேன்.
ஆதலால்தான் இப்போது சிலர் வெகு பிரயாசையுடன் தங்கள் தங்கள் சுயநலத்திற்கும் கூலி பிழைப்பிற்குமாக காப்பாற்ற முற்பட்டிருக்கும் போலிக் கடவுள்களையும் கோவில்களையும் மதங்களையும் சுயராஜ்யங்களையும் ஒழிக்க வேண்டும் என்று சொல்லுகின்றேனே ஒழிய மற்றபடி என் சொந்தத்தில் மேற் கண்டவைகளிடம் எனக்கு யாதொரு வெறுப்பும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-விடுதலை,20.8.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக