ஞாயிறு, 16 அக்டோபர், 2016

ஆஸ்திகர்களே இதற்கு யார் பொறுப்பாளி?



23.6.1929 - குடிஅரசிலிருந்து...
பல இடங்களில் முதலாளிமார்கள் கொடுமையால் தொழி லாளர்கள் வயிற்றுக்குப் போதாமல் கஷ்டப்படுவதாகவும் வேலை நிறுத்தம் செய்து பட்டினி கிடப்பதாகவும் செய்திகள் மற்றொரு புறம் வந்த வண்ணமாயிருக்கின்றன. மற்றும் மேல் ஜாதி கீழ்ஜாதி என்றும் சுதேசி, பரதேசி என்றும், வெள்ளையர், கறுப்பர் என்றும் ஜாதிமத தேச பிரிவுகளால் ஒருவரை யொருவர் துன்புறுத்துவதும் ஒருவொருக் கொருவர் கலகம்,
அடிதடி, கொலை கொள்ளை முதலியவைகள் செய்து கொண்டு இறப்பதும் கஷ்டப்படுவதாயிருப்ப தாகவும் சமாச்சாரங்கள் பறந்த வண்ணமாயிருக்கின்றன. மற்றும் பெண்ணை ஆண் துன்பப்படுத்தினான்: ஆணைப் பெண் துன்பப் படுத்தினாள், இதனாலும் மற்ற காரணங்களாலும் உலக வாழ்க்கை பிடிக்காமல் தற்கொலை செய்து கொண்டார்கள் என்கின்ற செய்தி களும், ஒருவனுடைய மனைவி மற்றொருவனை இச்சிக்கிறதனாலும்,
ஒருவன் மனைவியை மற்றொருவர் அடித்துக் கொண்டு போய்விட்டதாலும் நடைபெறும் கொலைகளின் விவரமும் இடையறாமல் வந்த வண்ணமாயிருக் கின்றன. மற்றும் புருஷன் பிடிக்காமலும், விதவை, புருஷனை வேண்டியும் வீட்டை விட்டு ஓடி விட்டதாக உலகறிந்த ரகசியங்கள் எங்கும் பேசிய வண்ண மாக இருக்கின்றது. மற்றும் மழையில்லா கொடுமையால் உஷ்ணத்தாக்கு ஏற்பட்டு டில்லியில் 125 பேர்கள் இறந்ததாகவும், மழையில்லாததாலும் வெய்யில் கொடுமையாலும் சில இடங் களில் கிணறுகளில் குடிக்கக்கூட தண்ணீரில்லாமல் வறண்டு போனதாகவும்,
வேளாண்மை விளையாமல் கருகிப் போன தாகவும், கஷ்டப்படுவதாகவும், மற்றொரு இடத்தில் அதிக மழை பெய்து வேளாண்மை நாசமாய்ப் போய் விட்டதாகவும், குளிரினால் நடுங்குவதாகவும், செய்திகள் வந்து கொண்டி ருக்கின்றன. இதைப்போல் ஒரு இடத்தில் கால்நடைகளுக்குத் தீவனமில்லாமல் கஷ்டப்பட்டு பட்டினியால் இறப்பதாகவும்,
மற்றொரு இடத்தில் கால்நடைகளுக்கு தீவனம் தாராளமாய் இருந்தும் கால்நடைகள் தொத்து வியாதியால் தினம் நூற்றுக்கணக்காய் மடிவதாகவும் மற்றும் கடவுள் கோவில்களில் நெருப்புப் பற்றிக் கொண்டதாகவும், அம்மன் நகைகள் திருட்டுப்போய் விட்டதாகவும் சமாச்சாரங்கள் வருகின்றன.
இவை ஒருபுறமிருக்க ஒரு நாட்டில் நூற்றுக்கு 90 பேர் படித்திருக்கின்றார் களென்றும் ஒரு நாட்டில் நூற்றுக்கு 5 பேர் படித்திருக்கின்றார்களென்றும் நமக்குச் சந்தேகமறத் தெரிய வருகின்றது.
ஒருநாட்டில் பெரும்பான்மையான மக்கள் தினம் நான்கு வேளை சமைத்துச் சாப்பிடுகின்றார்களென்பதையும், ஒரு நாட்டில் தினம் ஒரு வேளைக்குச் கூட மார்க்கமில்லாமல் கஷ்டப்படுகின்றார்களென்பதையும் பார்க்கின்றோம்.
ஒரு நாட்டில் ஜீவஇம்சை என்பது ஜீவன்களுக்குச் சிறிது கூட சரீரப் பிரயாசையோ, மனநோயோ இருக்கக் கூடாதென்பதும் மற்றொரு நாட்டில் ஜீவகாருண்யம் என்பது உயிருடன் ஜீவனைக் கட்டிப்போட்டு வாயையும், கால்களையும் அழுத்திப் பிடித்துக் கொண்டு, பலமணி நேரம் விரைகளைப் பிடித்து நசுக்கி கொல்வதாக இருப்பதாகப் பார்க்கின்றோம். அதையே வேதக் கட்டளை கடவுள் பிரீதி என்று சொல்லுவதை யும் காதால் கேட்கின்றோம்.
ஒரு நாட்டில் மத ஆச்சாரியார்கள் (பாதிரிகள்) என்பவர்கள் பிரபுக்களிடமும் படித்தவர்களிடமும் பணம் வாங்கி ஏழை களுக்குச் சாப்பாடு, தொழில், படிப்பு முதலிய உதவிகளுக்குச் செலவு செய்வதும், மற்றொரு நாட்டில் மத ஆச்சாரியார்கள் (சங்கராச்சாரி) ஏழைகளின் பணத்தை மதத்தின் பேரால் கொள்கை யடித்து, தம் இனத்தார், உயர்ந்த ஜாதியார், படித் தவர்கள் என்பவர்களுக்கே உபயோகப்படுத்துவதும் நேரி லேயே பார்க்கின்றோம்.
ஒரு பக்கம் மக்கள் கஞ்சிக்கில்லாமல் வாடி வதங்குவதும், மற்றொரு பக்கம் சீரங்கம் ரங்கநாத சாமிக்கு ஒரு நெய்க்கிணறு வெட்டுவதும் மட்டும் ஒரு வேளை அதிகப் பூஜைக்கு நெல்விளையும் கிராமங்கள் லட்சக்கணக்கான ரூபாய்க்கு வாங்கிவிடுவதும் பார்க்கின்றோம். எனவே, இவைகளுக்கு யார் பொறுப்பாளி? இந்த விஷயங்கள் கடவுளால் நடக்கின்றனவா? அல்லது தானாக நடக்கின்றதா? இவை கடவுளுக்குத் தெரியுமா? அல்லது தெரியாதா? ஒரு சமயம் தெரிந்தும் சாட்சியமாய் சும்மா இருக் கின்றாரா? அல்லது இவைகளைக் கவனித்து தக்கது செய்ய தமக்குச் சக்தியில்லையா? அல்லது இவைகள் கட வுளுக்குத் திருவிளையாடலா? அல்லது இச்செயல்களுக்கும் கடவுளுக்கும் சம்பந்தமில்லையா?
ஒரு சமயம் அந்தந்த தேசத்தினுடையவும், அந்தந்த தேச மக்களுடையவும் அல்லது நெருப்பு, நீர், காற்று, மண்ணினுடையவும் (இயற்கை) கர்ம பலனா? கடவுள் கவலைக்காரர்களே! இவற்றிற்கு என்ன பதில் சொல்லுகின்றீர்கள். இதில்தான் எல்லாம் கடவுள் செயல் என்றும் அவனன்றி ஓரணுவு மசையாது என்றும் திண்ணை ஞானம் பேசி ஏழைகளை வஞ்சித்துப் பாடுபடாமல் வயிறு வளர்க்கும் சோம்பேறிகளுடையவும், ஏமாற்றுக்காரர்களு டையவும் யோக்கியதை வெளியாகும்.
-விடுதலை,5.8.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக