ஞாயிறு, 16 அக்டோபர், 2016

கடவுள் கவலை கொண்ட பெரியோர்களுக்கு கேள்வி


23.6.1929 - குடிஅரசிலிருந்து...
ஒரு மனிதன், தனக்கு மற்றவர்களைவிட அதிகமான பகுத்தறிவு இருப்பதாய் ஒப்புக் கொண்டு எல்லாவற்றிற்கும் தானே பொறுப்பாளி என்கின்ற உணர்ச்சியுடன் தன் அறிவின் படியே காரியங்களைச் செய்ய ஒவ்வொரு வினாடியும் முயன்று கொண்டிருக்கும்போதே அதற்கு நேர்மாறாய் வாயால் எல்லாம் கடவுள் செயல்,
அவனன்றி ஓரணுவும் அசையாது, என்று சொல்லிக் கொண்டு திரிவானானால் மற்றபடி அறிவற்ற நிலையிலிருக்கும் பாமரமக்களுக்கு எப்படி பொறுப்பும் தன் முயற்சியும் உண்டாகும்? எனவே இனிமேலாவது நமது நாட்டில் கடவுள் கவலை கொண்ட பெரியோர்கள் உலகத்தை இனியும் அதிகமான கடவுள்களை உற்பத்தி செய்து அவை களைக் கொண்டு நிரப்பாமலும் இன்னும் கடவுளுக்கு புதுப்புதுக் குணங்களைக் கற்பிக்காமலும்,
இன்னும் புதுப்புது மதங்களை உற்பத்தி செய்யாமலும் இப்போது உள்ளதாகக் கருதும் மதங் களுக்கும் புதுப்புதுக் கொள்கைகளையும் தத்துவார்த்தங்களை யும் வியாக்கியானங் களையும் செய்யாமல் இருக்கும்படி தெரிவித்துக் கொள்ளுகின் றோம். ஏனெனில் இன்றைய தினமே இந்தியாவில் இந்துக்கள் ஜனத் தொகை 22 கோடி என்றால் இவர்களுக்குள்ள கடவுள் தொகை 33 கோடி தேவர்களாகும். இந்தக் கணக்குப்படி பார்த்தால்,
குழந்தை குஞ்சு முதல், கிழடு கிண்டு வரை உள்ள மக்கள் ஒவ்வொருவருக்கும் சராசரி (உருப்படி ஒன்றுக்கு) ஒன்றரை கடவுள் வீதமாகின்றது. மேலும் நாட்டின் அழகான பாகங்களையெல்லாம் கடவுள்கள் தங்கள் குடியிருப்புக்கென்று கைப்பற்றி அவைகளை அசிங்கமும் அக்கிரமமும் நடப்பதுமான இடங்களாக்கிவிட்டன. மற்றும் அக்கடவுள்கள் வெளிப்போக்குவரத்தானது தெருக்களில் வண்டிகளும், மக்களும், தாராளமாய் நடமாடுவதற்குக்கூட இடமில்லாமல் நெருக்கடி உண்டாக்கித் தடைப்படுத்தப்பட்டு வருகின்றது. அக்கடவுள்களின் உற்சவங்கள் சுகாதாரங்கள் எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டு தொத்து நோய்கள் பிறப்பிக்கும் பருவமாகின்றது.
அக்கடவுள்களின் தீர்த்த தல யாத்திரைகளெல்லாம் வழிப் பறிக் கொள்ளைகள் நடக்கும் பாதை பிரயாணமாயிருக்கிறது. இவ்வளவும் போதாமல் இனியும் மக்களுக்கும் நாட்டிற்கும் என்ன பலன் உண்டாக வேண்டும் என்று இந்த கடவுள் கவலைக்காரர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றார் களென்பது நமக்கு விளங்கவில்லை. மற்றும் கடவுளைப் பரப்புகின்றவர்கள் எங்கும் கடவுள் இருக்கின்றாரென்று சொல்லுவதும்,
ஆனால் அதை வணங்க வேண்டுமானால் குறிப்பிட்ட இடங்களில் மட்டும்தான் போய் வணங்க வேண்டுமென்பதும், எல்லா வஸ்துக்களிலும் கடவுள் இருக்கின்றார் என்று பிரசங் கிப்பதும், பிறகு சிலை, கல் அல்லது உலோகம் ஆகிய வைகளில்தான் இருக் கின்றார் என்பதும், பிரசங்கிக்கும் போது கடவுள் எல்லா ரூபமாயும் இருக்கின்றாரென்பதும், காரியத்தில் வரும்போது அவர் மனித ரூபமாய்தான் இருக்கிறார் என்றும்,
பிரசங்கிக்கும் போது எல்லா மக்களும் கடவுள் பிறப்பு என்றும், எல்லா மக்களும் சகோதரர்கள் என்றும், சொல்லுவதும் காரியத்தில் வரும்போது எட்டி நில்! தொடாதே! நீ தாழ்ந்தவன், நான் உயர்ந்தவன் என்பதும், இப்படி ஆயிரக்கணக்கான விஷயங்களில் முன்னுக்குப் பின் முரணாகவும் ஒன்றுக்கொன்று பொருந்தாமலிருக்கும் படியான மதத்தையும் கடவுள்களையும் பரப்புவது யோக்கியதையா என்பதாகக் கடவுள் கவலைக்காரர் களைக் கேட்கின்றோம்.
அன்றியும், பொது ஜனங்களையும் இம்மாதிரி பொய்யும் பித்தலாட்டமுமான கடவுள்களையும் மதங்களையும் இனியும் நம்பாமலிருக்க வேண்டுகிறோம். 
-விடுதலை,5.8.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக