திருமணம்
7.7.1929 - குடிஅரசிலிருந்து....
7.7.1929 - குடிஅரசிலிருந்து....
இப்போது நம் நாட்டில் நடைபெற்றுவரும் மணங்கள் பெரிதும் மணத்தின் உண்மைத் தத்துவமற்றதும், அர்த்தமற்ற வெறும் சடங்கையே முக்கியமாகக் கொண்டதுமாய் நடை பெறுகின்றன.
மணமக்கள் தங்களுக்குள் செய்து கொண்ட ஒப் பந்தத்தைக் காப்பாற்றுதற்குப் பலர் முன் உறுதிப் படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட மணமுறையானது தற்காலம் வெறும் சடங்குகளையும் அர்த்தமற்ற பழக்க வழக்கங்களையும் காப்பாற்றும் முறையாய்த் திகழ்கின்றது. மணத்தின் லட்சியம் முழுவதும் சடங்காய் ஏற்பட்டுவிட்டது. இயற்கை எழுச்சியாலும் உணர்ச்சி யாலும் ஏற்படவேண்டிய மணம் செயற்கையில் நிகழ வேண்டியதாய்விட்டது.
அது போலவே, இயற்கைக் காதலும் இன்பமும்கூட செயற்கைக் காதலாகவும் இன்பமாகவும் மாறிவிட்டது. மணமக்கள் ஒருவரை ஒருவர் தாங்களாகவே தெரிந்து எடுத்துக் கொள்ள வேண்டியதற்குப் பதிலாக வேறு ஒருவர் தெரிந்தெடுத்து மணமக்களை ஒப்புக் கொள்ளச் செய்ய வேண்டியதாயிருக்கின்றது..
அநேக மணங்களில் மணம் நிகழும்வரை, அதாவது தாலியைப் பெண் கழுத்தில் கட்டும் வரை ஆண் இன்னார், இப்படிப்பட்டவர் என்று பெண்ணுக்கும், பெண் இன்னார், இப்படிப்பட்டவர் என்று ஆணுக்கும் தெரியாமலேயே இருக்கின்றது. சில மணங்களில் தாலி கட்டி சில நாள் வரை கூட தெரிவதற்கில்லாமல் இருக்கின்றது. ஒருவருக்கொருவர் முன்னைக் கூட்டியே தெரிய வேண்டாமா என்று யாராவது கேட்டால், அன்று பிரமன் போட்ட முடிச்சை இனி அவிழ்த்து வேறு முடிச்சு போடவா போகிறான் என்று சமாதானம் சொல்லி விடுகின்றார்கள்.
எங்கள் பக்கங்களில் கல்யாணப் பெண்கள் இரண்டு கைகளைக் கொண்டும் கண்களை நன்றாய்ப் பொத்திக் கொண்டும் தேம்பித் தேம்பி அழுது கொண்டும் இருக்க, மற்றொரு பெண் கையைப் பிடித்து தரதரவென்று மணவறைக்கு இழுத்துக் கொண்டு வருவது வழக்கம். தாலி கட்டுவதற்குக் கூட கைகளைப் பிடித்து விலக்கித்தான் கட்ட வேண்டும். யார் தாலி கட்டினதென்று பெண்ணுக்குத் தெரியவே தெரியாது. இப்படி அழுது கொண்டும்.
கண்களை மூடிக் கொண்டும் இருக்கும் பெண்கள்தான் நல்ல உத்தமப் பெண்கள் என்று சொல்லுவார்கள். பெண்களுக்குக் கல்யாணம் என்பது தன்னை மற்றொரு வீட்டிற்கு அடிமையாய் விற்பது என்பது அர்த்தமாயிருக் கின்றதேயொழிய ஆணும் பெண்ணும் கூடி வாழ்வதற்குச் செய்யும் காரியம் என்பது இன்னமும் அநேக பெற்றோர்களுக்குத் தெரியவே தெரியாது.
கல்யாணச் சடங்கு நடந்து பெண்ணை மாப்பிள்ளை வீட்டிற்கு அனுப்பும் போது, பெண் வீட்டாரும், நெருங்கின சுற்றத்தாரும் அழுது கொண்டும், பெண்ணும் தேம்பித் தேம்பி அழுது கொண்டுந்தான் அனுப்பப்படுகின்றது. கல் என்றாலும் கணவன், புல் என்றாலும் புருஷன் என்று சொல்லி, புருஷன் சொன்னபடியும், மாமி, மாமன், நாத்தி, கொழுந்தன் சொன்ன படியும் நட என்று பெண்களுக்குப் படிப்பிக்கப்படுகின்றன.
இம்மாதிரி உபதேசத்தில் கட்டுப் பட்ட பெண்கள் தங்களை மாமியின் வேலைக்காரிகள் என்று எண்ணிக் கொள்ளுவார்களே தவிர இயற்கை இன்பத்தை எப்படி அனுபவிக்க முடியும் என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள்.
வாழ்க்கை, மணம், இன்பம், காதல் என்பவைகள் ஒவ்வொரு தனிமனிதனின் உரிமையாகும். அன்றியும் அவை அவரவரின் தனி இஷ்டத்தைப் பொறுத்தது மாகும். இவற்றில் அன்னியருக்குச் சற்றும் இடமில்லை.
ஆனால் இப்போது இவை மற்றவர்களுடைய திருப்திக்கும் இஷ்டத்திற்கும் ஏற்றபடி நடக்கின்றது. மணமக்களுக்குத் தங்கள் தங்கள் காதலின் மேல் ஏற்படும் மணம்தான் வாழ்க்கையில் இன்பத்தைக் கொடுக்க முடியும். ஆதலால் இன்று நடந்த மணமானது உண்மையான சீர்திருத்த மணமாகும்.
வைதிகர்களின் இறக்கம்
11.08.1929- குடிஅரசிலிருந்து....
பெண்களுக்குக் கல்வி கற்பிக்கக்கூடாது. ஒரு பெண் தனது கணவனையே தெய்வமாக மதித்துக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும்.
அவர்களுக்குச் சுதந்தரமே கிடையாது, என்று சனாதன தருமத்தின் பேராலும் சாஸ்திரத்தின் பேராலும் கடவுளின் பேராலும், இதுவரை கண்மூடித்தனமாக கூச்சல் போட்டுவந்த வைதிகர்களுக்கு இப்போதுதான் சிறிது சிறிதாக புத்தி உதயம் ஆகி வருவதாகத் தெரிகிறது.
நமது சுயமரியாதை இயக்கத்தை பார்ப்பனர்களும் அவர்களுடைய கூலிகளும். நாஸ்திக இயக்கம் என்று கூறி பாமர மக்களை ஏமாற்றி வந்தாலும், நமது கொள்கைகளும், தீர்மானங்களும், பிரச்சாரமும் அவர்களை நேர் வழியில் நடக்கும்படி நிர்ப்பந்தித்து வருகின்றன என்பதிற் சந்தேக மில்லை.
நாம் ஒவ்வொரு கூட்டத்திலும் மகாநாட்டிலும் பெண் மக்களின் பொருளாதார உரிமை, பாலிய விவாகம் ஒழித்தல், விதவா விவாகம் செய்தல் முதலிய நியாயமான உரிமைகட்காக பேசியும் தீர்மானங்கள் செய்தும் போராடி வருவது எல்லோ ருக்கும் தெரியும்.
சில நாட்களுக்கு முன்னர் திருவல்லிக் கேணியில் பெரிய பெரிய சாஸ்திரிகள் என்பவர்களும் பண்டிதர் என்பவர்களும் ஒன்று கூடிப் பெண்மக்கள் முன்னேற்றத்திற்கான சில தீர்மானங்கள் செய்திருக்கின்றனர் அவையாவன:
1. அவிபக்தமாகவோ, விபக்தமாகவோ உள்ள நமது இந்துக் குடும்பங்களில் சாஸ்திரியமாக விவாகம் செய்யப்பட்ட பெண்களுக்கு விவாக சமயத்திலிருந்து புருஷனது குடும்பச் சொத்திலும் அவனது சம்பாதனத்திலும் அப்படியே ஸ்திரி களின் சொத்திலும் அவர்களின் சம்பாதனத்திலும் புருஷர்களுக்குச் சமபாகமும், ஏற்படுத்துவதற்கு வேண்டிய முறையை நமது ஆரியர்கள் யாவரும் சமூகக் கட்டுப்பாட்டின் மூலம் ஏற்படுத்திக் கொள்வது அவசியம்.
2. சாஸ்திரீயமாக விவாகம் செய்து கொண்ட பெண்ணைத் தகுந்த காரணமின்றித் தள்ளிவிட்டும் மறு விவாகம் செய்பவரைச் சமூகப் பகிஷ்காரம் செய்வதற்கு வேண்டிய கட்டுப்பாட்டை அமைத்துக் கொள்ளுவது அவசியம்.
3. ஒரு குடும்பத்தில் புருஷர்களுக்குப் போலவே
ஸ்திரீகளுக்கும் குடும்பச் சொத்தில் பாகம் கிடைக்குமாறு வழி தேட வேண்டும்.
ஸ்திரீகளுக்கும் குடும்பச் சொத்தில் பாகம் கிடைக்குமாறு வழி தேட வேண்டும்.
4. ஒரு குடும்பத்தில் ஒரு பிதாவுக்கு ஒரு ஆணும் பெண்ணுமாக இரண்டு குழந்தைகள் பிறந்து பெண்ணுக்குக் கல்யாணமாகி புத்திரனுக்குக் கல்யாண மாவதற்குள் பிதா முதலியோர் இறந்த சில நாளைக்கெல்லாம் அந்த ஆண் பிள்ளை இறப்பானானால் பிதா மூலம் கிடைத்த அவனது சொத்தும் ஸ்வார்ஜித சொத்தும் அவனது தாயாதிகள் அடைவது என்ற கெட்ட முறையை மாற்றி அவனது சகோதரியும், அவளது குழந்தைகளும் அனுபவிக்கும் படிக்கான முறையை ஏற்படுத்தி அதை அனுபவத்தில் கொண்டு வர வேண்டும்.
ஆகவே இவ்வழியை ஆரியர் யாவரும் சமூகக் கட்டுப்பாடு மூலம் ஏற்படுத்திக் கொள்ளத் தவறினால் அதன் மூலம் ஸ்திரீகளுக்கு நேரும் கஷ்டங்களைப் போக்க வேண்டி நமது காருண்யக் கவர்ன்மெண்டாரை அவ்வழியில் கடுமையான சட்டமியற்றி அதை உடனே அனுஷ்டானத் துக்குக் கொண்டுவந்து ஸ்திரீகளைக் காக்கும்படி கேட்டுக் கொள்ள வேண்டும் என்ற தீர்மானங்களேயாகும்.
குறுகிய கால அளவில் இவ்வளவு தூரம் பெண் மக்கள் விஷயத்தில் வைதிகர்களின் விடாப்பிடியைத் தளரச் செய்த நமது சுயமரியாதை இயக்கம் இன்னும் கூடிய விரைவில், பாலிய விவாகம் ஒழித்தல், விதவா விவாகம் செய்தல் முதலியவற்றிற்கும் எவ்வித எதிர்ப்பும் நாட்டில் இல்லாமற் செய்து தக்க ஆதரவு தேடிவிடும் என்று உறுதி கூறுகின்றோம்.
-விடுதலை,24.9.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக