ஞாயிறு, 16 அக்டோபர், 2016

ஒவ்வொரு மதத்திலும் அர்த்தம் வேறு


30.6.1929- குடிஅரசிலிருந்து...

சுத்தம் முதலான தத்துவங்களுக்கு அவ்வந்த மதத்தி னருக்கும் அர்த்தம் வேறாகத் தானிருக்கின்றது. பாலைவனத்தில் தோன்றிய இஸ்லாம் மதத்தில் சுத்தமென்றால் மூன்று வேளையும் குளிப்பதுதான் சுத்தமென்று எழுதி வைக்க முடியாது. அங்கு மணல் உடம்பில் தேய்த்துக் கொண்டாலும் குளித்து சுத்தமாவதற்கு ஒப்பாகத்தான் கருதப்படகூடும் அதனால் அந்த சுத்தம் தப்பு என்று சொல்லிவிடமுடியாது.
நமக்குள் வெளிக்குப் போனால் நான்கு செம்பு தண்ணீர் விட்டு கழுவுபவர்களும் போதாக் குறைக்கு தலைமுழுகு பவர்களுமிருக்கிறார்கள். அவ்வாறு செய்தால் தான் அதனைச் சுத்த மெனக் கருதப்படுகிறது. ஆனால் இவர்களைவிட பன்மடங்கு கடுமையான சுகாதாரமுடைய வெள்ளைக்காரன் காகிதத்தில் பாதியும் கால்சராயில் பாதியுமாக துடைத்துவிட்டு போகிறான். அவன் நாட்டில் அவ்வளவுதான் வசதி. இங்கு குளிக்கா விட்டால் பாவி என்கிறார்கள்.
அங்கு குளித்தாச்சா? என்று கேட்பதே மரியாதைக் குறைவாகக் கருதப்படுகின்றது இங்குச் சிற்சிலர் வியர்வையினால் குளிக்க வேண்டிய அவசிய முண்டு. அங்கு குளிரினால் அத்தகைய அவசிய மில்லை. அவ்வாறே நமக்குப் பாவம் என்பது எறும்பை மிதித்துவிட்டாலும் பாவம். அவன் சங்கதி அதைப்பற்றி அவனுக்குக் கவலையில்லை. இங்கு நாம் பசுவை அடித்தாலும் மகா பாவமென்கிறோம். அங்கு அவன் அதைக் கொன்று தின்னாவிட்டால் மார்க்கமில்லை. ஒருவன் சிற்றப்பன் மகளைக் கட்டலாமென்கிறான். மற்றவன் அதைப் பாவம் என்கிறான்.
இப்படிச் சவுகரியத்திற்கும் பழக்கத்திற்கும் ஏற்றவாறுதான் கொள்கைகளும் கோட்பாடுகளுமிருக்கக்கூடும். ஆதலால் அனைத்தும் காலதேச வர்த்தமானத்திற்கேற்ற வாறிருக்க வேண்டுமென்பது நன்கு விளங்கும், அன்றியும் அவ்வந்தக் காலத்தில் திறமைக்கேற்றவாறு ஏமாற்ற, ஏதேதோ எழுதி வைத்திருக்கலாம்.
அவற்றைக் குறித்து இப்போது கவலையில்லை. ஆனால் நாம் முக்கியமாய் கவனிக்க வேண்டியது இன்றைய நிலை மையில் எப்படியிருக்க வேண்டுமென்பதேயாகும். அதிலிருந்து தப்ப வழியுண்டா? வென்றும் பார்க்கவேண்டும். நாம் நமது செல்வம். அறிவு, ஒழுக்கம் முதலியவை பிரயோசனமான வழியில் செலவிடப்படவேண்டுமென்பதனால், அது தர்மத்திற்கு விரோதமானதென்று சொல்ல முடியாது.
இப்போது நாமிருக்கும் நிலையில் தர்மத்தின் பெயரால் சத்திரமும் சாவடிகளும் கட்டிக் கொண்டு போவோமானால் நம் சமூகத்தின் கதி என்னாகும்? நமது நாட்டின் நிலைக்கும் மக்களின் தேவைக்கும் ஏற்றவாறு தான் எந்த தர்மமும் ஏற்பாடும் செய்யப்பட வேண்டும்.
-விடுதலை,20.8.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக