திங்கள், 17 அக்டோபர், 2016

கர்ப்பத்தடை

6.4.1930- குடியரசிலிருந்து...

கர்ப்பத்தடையின் அவசியத்தைப் பற்றி நாம் கருதும் காரணங்களுக்கும், மற்றவர்கள் கருதும் கார ணத்திற்கும் அடிப்படையான வித்தியாசம் இருக்கின்றன.

அதாவது பெண்கள் விடுதலையடையவும் சுயேச்சை பெறவும் கர்ப்பத்தடை அவசியமென்று நாம் கூறுகின்றோம். மற்றவர்கள் பெண்கள் உடல் நலத்தை உத்தேசித்தும் பிள்ளைகளின் தாஷ் டீகத்தை உத்தேசித்தும், நாட்டின் தரித்திரதிசையை உத்தேசித்தும், குடும்பச்சொத்து குலையாமல் இருக்க வேண்டுமென்பதை உத்தேசித்தும், கர்ப்பத் தடை அவசியமென்று கருதுகிறார்கள். இதை மேல் நாட்டினர் பலர்கூட ஆதரிக்கின்றார்கள். ஆனால் நமது கருத்தோ இவை  எதையும் பிரதானமாய்க் கருதியது அல்ல.

மற்றெதைக் கருதி என்றால்  முன்சொன்னது போல் பொதுவாக பெண்களின் விடுதலைக்கும் சுயேச் சைக்குமே கர்ப்பம் விரோதியாய் இருப்பதால் சாதாரணமாய் பெண்கள் பிள்ளைபெறுவது என்ப தையே அடியோடு நிறுத்திவிட வேண்டும் என் கிறோம், அது மாத்திரமல்லாமல் பல பிள்ளைகளை பெருகின்ற காரணத்தால் ஆண்களும்கூட சுயேச் சையுடனும், விடுதலையுடனும் இருக்க முடியாத வர்களாகவே இருக்கிறார்கள்.

இதன் உண்மை சாதாரணமாய் ஒவ்வொரு மனிதனும், திரீயும் தங்கள் சுதந்திரங்களுக்குக் கஷ்டம் வருகின்ற காலத்தில் பேசிக்கொள்வதைப் பார்த்தாலே தெரியும்.

ஒரு மனிதன்தான்  கஷ்ட நிலையில் பேசும்போது நான் தனியாயிருந்தால் ஒரு கை பார்த்துவிட்டு விடுவேன். 4, 5 குழந்தையும் குட்டியும் ஏற்பட்டு விட்டதால், இவைகளைக் காப்பாற்ற வேண்டுமே என்கின்ற கவலையால், பிறர் சொல்லுவதை யெல்லாம் கேட்டுக்கொண்டு ஆளாயிருக்கவேண்டி இருக்கின்றது என்றே சொல்லுகின்றான்.

அது போலவே ஒரு திரீயும் புருஷனாலோ அல்லது வேறு எதனாலோ சங்கடம் ஏற்படும்போது நான் தனியாய் இருந்தால் எங்காகிலும் தலையின்மேல் துணியை போட்டுக்கொண்டு போய்விடுவேன் அல்லது ஒரு ஆற்றிலாவது, குளத்திலாவது இறங்கி விடுவேன். இந்த கஷ்டத்தை சகித்துக்கொண்டு அரை நிமிஷமும் இருக்கமாட்டேன். ஆனால், இந்த குழந்தைகளையும், குஞ்சுகளையும் நான் எப்படி விட்டுவிட்டுப் போகமுடியும் என்றே சொல்லு கின்றாள். ஆகவே இந்த இருவரும் அவர்களது சுயேச்சையையும், விடுதலையையும் கெடுப்பது இந்த குழந்தைகளும் குஞ்சுகளும் என்பவை களேயாகும்.

உலகத்தில் மக்கள் கஷ்டப்பட்டு தன் தன் ஜீவனத்திற்கு பொருள் தேடுவதற்கே சுதந்திரத்தை விற்று அடிமையாக வேண்டிய நிலையில் இருக்கும்போது பிள்ளைகளையும், குட்டிகளையும் காப்பாற்றவேண்டிய அவசியமும் தலைமேல் இருக்குமானால், அந்த இடத்தில் எப்படி சுயேச்சை இருக்கமுடியும்? ஆகையால் ஆண் பெண் இருவர் களின் சுயேச்சைக்குமே கற்பமாவதும், பிள்ளை களைப் பெறுவதும் இடையூறான காரியமாகிறது. அதிலும் பெண்கள் சுயேச்சைக்கு கர்ப்பம் என்பது கொடிய விரோதியாயிருக்கிறது. அதனால்தான் நாம் கண்டிப்பாய் பெண்கள் பிள்ளை பெறுவதை நிறுத்தியே ஆகவேண்டும் என்கின்றோம்.

அன்றியும், பெண்கள் வியாதிதர்கள் ஆவ தற்கும், சீக்கிரம் கிழப்பருவம் அடைவதற்கும், ஆயுள் குறைவதற்கும் இந்த கர்ப்பம் என்பதே மூலகாரணமாயிருக்கின்றது.

தவிரவும் ஆண்களில் பிரம்மச்சாரிகளும், சன் யாசிகளும், சங்கராச்சாரியார் களும், தம்பிரான்களும், பண்டார சன்னதிகளும் ஏற்பட்டிருப்பதுபோல் பெண்களில் பிரம்மச்சாரி களும், சங்கராச்சாரி முதலியவர்களும் ஏற்படுவ தற்கும் இந்த கர்ப்பமே தடையாயிருந்து வருகின்றது. இந்நிலையில்தான் பெண்கள் விடுதலைக்கும், சுயேச் சைக்கும்,  முன்னேற்றத்திற்கும் அவர்கள் பிள்ளை பெறுவது என்பதை நிறுத்த வேண்டும் என்று நாம் சொல்லுகின்றோம்.

இந்தப்படி நம்மில் ஒருவருக்கொருவர் கருதும் காரணம் எப்படி இருந்த போதிலும் நமக்கும் மற்ற கர்ப்பத் தடைக்காரருக்கும் கர்ப்பத்தடை அவசியம் என்பதில் அபிப்பிராய பேதமில்லாதிருப்பது குறித்து நாம் மகிழ்ச்சி அடைகின்றோம்.

மனித ஜீவனுக்கு எல்லாவற்றையும்விட முக்கியமான உணர்ச்சியாக, மான அவமானம் என்னும் தன்மானமாகிய சுயமரியாதையைத்தான் பிறப்புரிமையாகக் கொள்ள வேண்டியிருக்கின்றது. ஏனெனில், மனிதன், மானிடன் என்ற பதங்களே மானத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட மொழிகள். ஆதலின் மனிதன் என்பவன் மானமுடையோன். எனவே, மனிதனுக்கு மனிதத் தன்மையைக் காட்டும் உரிமையுடையது மானம்தான். அத்தன்மானமாகிய சுயமரியாதையைத்தான் மனிதன் பிறப்புரிமையாகக் கொண்டிருக்கிறான்.

- தந்தை பெரியார்

-விடுதலை,14.10.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக