25.12.1943 - குடிஅரசிலிருந்து...
இந்த ஆரிய வர்க்கத்தார் தமிழரிடையே தங்கள் சதிச் செயல்களை நிறைவேற்றி, தமிழர்களையும் தமிழ் நாட்டையும் அடிமைப் படுகுழியில் ஆழ்த்திக் கொண்டு வருவதற்கு இவ்வளவு துணிகரமாக முனைந்திருப்பதற்குத் தமிழர்களின் தைரியமின்மையே காரணமாகும். அப்பண்டைக் காலமுதல் இன்று வரையில் ஆரிய வர்க்கத்தாரின் சூழ்ச்சிக்கும், தந்திர மந்திரங்களுக்கும் தமிழ்நாட்டில் பலத்த எதிர்ப்பும் கண்டனமும் இருந்து கொண்டுதான் வந்திருக்கின்றன. ஆனால் தமிழர்களின் எதிர்ப்பும் கண்டனமும் போதிய அளவு பலமுடையவைகளாக இல்லை.
தமிழர்களுள் படித்திருக்கும் ஒரு சாரார் எந்த வகை ஆசை கொண்டோ ஆரிய வர்க்கத்தின் அடிவருடிகளாகவே இருந்து வருகின்றனர். இவர்கள் நம் நாட்டின் 5-ஆம் படையினரைப் போன்று தமிழ் நாட்டுக்கும், தமிழர்களுக்கும் துரோகிகளாகவே இருக்கின்றனர். படித்த தமிழர்களுள் மற்றொறு வகையினர் பட்டங்களையும்,
பதவிகளையும் நாடி, சுகபோக வாழ்க்கையின் எல்லா மூலாதாரங்களும் பார்ப்பனர் கையிலேயே இருப்பதால் , அவர்களைப் பகைத்துக் கொண்டால் தங்கள் சுக வாழ்வும் பட்டம் பதவிகளும் பறிபோகுமே என்று எண்ணி அவர்களின் அடிவருடிகளாகத் திரிந்து கொண்டிருக்கின்றனர். கல்வி வாசனையே இல்லாத தமிழர் கூட்டமோ ஆரியர் விரித்துள்ள மத மாய வலையில் சிக்கி, அதினின்று மீளமுடியாமல் அச்சூழ்ச்சியில் அமிழ்ந்து அறியாமைச் சேற்றில் கிடந்துழலச் செய்யப்பட்டிருக்கின்றனர்.
இவர்கள் அனைவரும் தவிர்த்த ஒரளவுத் தைரியம் வாய்க்கப் பெற்ற தமிழர்கள் கூட்டமோ பாம்புக்கு வாலும் மீனுக்குத் தலையும் காட்டிக் கொண்டிருக்கும் வகையில்தான் இருக்கின்றனர். பார்ப்பனர்களுக்கும் நல்ல பிள்ளைகளாக தமிழர்களுக்கும் நல்ல பிள்ளைகளாக நடந்துகொள்ள வேண்டும் என்னும் ஆசை கொண்டு நடந்து வந்த ஒரு கூட்டத்தார் மேற்கண்ட தமிழர் கூட்டத்தாரை விடத் தமிழ் நாட்டிற்கு அதிகப்படியான நன்மைகள் ஒன்றும் செய்து விட்டதாகத் தெரியவில்லை.
ஆனால் அதே போன்று இன்றும் இருசாராருக்கும் நல்ல பிள்ளைகளாக நடந்துக்கொள்ள முயன்று வரும் தமிழர் கூட்டம் இந்நாட்டில் இருந்து வருகிறது. இவர்கள் இவ்வண்ணம் எல்லாருக்கும் நல்ல பிள்ளைகளாக நடக்க முயன்று யாருக்கும் நல்ல பிள்ளைகளாக முடியாமல் எவருடைய நம்பிகிகை யையும் பெற முடியாமல் பாழாகிப் போவதை விடத் தாங்கள் பிறந்த இத்தமிழ் நன்னாட்டிற்கும், தங்கள் தாய்மொழிக்கும் நேர்மையான முறையில் தொண் டாற்ற முன் வருதல் வேண்டும்; தங்கள் தாய்நாட்டிற்கும், தாய்மொழிக்கும் எதிராக உள்ளவர்கள் எவரேயாயினும் அவர்களை வீழ்த்த, விரட்டியடிக்க, முன் வருதல் வேண்டும்.
இந்த உறுதியுடன், எவர் புகழ்மொழிக்கும், பாராட்டுதலுக் கும் இச்சை வைக்காமல் உழைக்க முன் வந்தால்தான் தமிழ் நாடும், தமிழ் மக்களும் உள்ள அளவு போற்றுதற்குரியவர் களாவார்களே தவிர, பாம்புக்கு வாலும், மீனுக்குத் தலையும் காட்டிக் கொண்டிருப்பதால் எத்தகைய நன்மையுமில்லை.
இவ்வண்ணம் நம்நாட்டில் இருசாராருக்கும் நல்ல பிள்ளைகளாக நடந்து கொள்ள முயன்றவர்கள் எப்போதும் வெற்றி பெற்றதும் கிடையாது. அவர்களால் நாட்டுக்கோ மக்களுக்கோ நன்மை ஏற்பட்டதும் கிடையாது.
-விடுதலை,25.6.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக