06.11.1943 - குடிஅரசிலிருந்து...
ஆஸ்திகர்களே நாங்கள் ஏதாவது ஒரு மதத்தையும் ஒரு கடவுளையும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பீர்களானால் அவை நாங்கள் விரும்புகிறபடி இருந்தால் அவசியம் ஏற்றுக் கொள்ளுகிறோம்.
1. மதம்
மதம் என்றால், தலைவிதி, கர்மம், முன்ஜென்மம், பின்ஜென்மம், மேலுலகம், கீழுலகம், மோட்சம், நரகம் பிதுர்லோகம், தேவலோகம், கைலாயம், வைகுந்தம், பரமண்டலம் முதலிய சங்கதிகளும்; ஜீவன் அங்கு போகிறது, வருகிறது, இருக்கிறது, பிடிக்கிறது என்கின்றதான சேதிகளும்; பேய், பிசாசு,சாத்தான்களும் மதத்தில் இருக்கக்கூடாது. இந்த உலகத்தைத் தவிர வேறு உலகப்பிரஸ்தாபமே இருக்கக் கூடாது.
பின்னை எப்படி இருக்க வேண்டுமென்றால்,
1. ஒரே உலகம்.
2. உலக மக்கள் யாவரும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த வர்கள்
3. உலக சொத்துக்கள், இன்பதுன்பங்கள் யாவும் அக் குடும்பத்தைச் சேர்ந்த எல்லா மக்களுக்கும் பொது.
4. ஒவ்வொருவரும் உள்ளதை தேவைக்குத் தகுந்த படிள்ள அனுபவிக்கலாம்.
5. ஒவ்வொருவரும் சக்திக்கு ஏற்றபடி உழைத்தாக வேண்டும்.
6. இந்த உலகமும், மக்கள் நலமும் இன்பமும்தான் மக்கள் கவலையாக இருக்கவேண்டும்
2. கடவுள்
கடவுள் இருக்கவேண்டுமானால்,
1. ஒரு கடவுள்தான் இருக்கவேண்டும்.
2. அதற்கு தாய், தகப்பன், பெண்டு, பிள்ளை, பூசை, படைப்பு பிரார்த்தனை ஒன்றும் கூடாது.
3. அதற்குப் பாம்பு, தேள் முதலிய துஷ்ட ஜந்துக் களையும் காலரா, பிளேக், அம்மை, சொரி, சிரங்கு, காய்ச்சல், அஜீரணம் முதலிய நோய்களையும்; அயோக்கியன், திருடன், மடையன், நன்றி கெட்டவன், வஞ்சகன், பாடுபடாமல் ஊராரைச் சுரண்டித் தின்கிறவன் ஆகியவர்களையும், மற்றவர்களுக்குத் தொந்திரவு கொடுப்பவனையும்; தகுதிக்கும் நிலைமைக்கும் மேல் ஆசைப்படுகிறவன் பேராசை முதலிய ஒழுக்கக் கேடுள்ளவர்களையும் சிருஷ்டிக்கவே கூடாது.
4. முதலில் சொல்லப்பட்ட மதக் கொள்கையையும் சிறிது கூட தவறாமல் ஒழுங்காய் நடத்திக் கொடுக்கவும் வேண்டும்.
5. எந்தக் காரியத்தையும் அந்தக் கடவுள் அதன் இஷ்டம் என்று சொல்ல இடம் கொடுக்கக் கூடாது.
6. அதற்கு இந்த உலகத்தை விட்டு வேறு உலகத்தில் சம்பந்தமோ வேலையோ இருக்கக் கூடாது .
7. அது தன்னை வணங்க வேண்டுமென்றோ, பூசை, படைப்பு, பிரார்த்தனை செய்ய வேண்டுமென்றோ விரும்பக் கூடாது. ஒருவரையும் பூசை, வணக்கம், படைப்பு ஆகியவைகளைச் செய்ய விடவும்கூடாது.
இந்தமாதிரியான மதமும், கடவுளும் இருந்தால் அல்லது கற்பிக்கப்பட்டால் அவற்றை ஏற்றுக் கொள்ளத் தயாராய் இருக்கிறோம்.
-விடுதலை,25.6.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக