வெள்ளி, 23 டிசம்பர், 2016

திருமணம் என்பது கூட்டு வாழ்க்கை ஒப்பந்தம்

28.9.1930, குடிஅரசிலிருந்து...

சுயமரியாதைக் கலியாணம் என்பதில் புதிய முறையோ, புதிய சடங்கோ ஒன்று மில்லை என்பதைத் தெரிவித்துக் கொள் ளுகிறேன். அர்த்தமற்றதும், பொருத்தமற் றதுமான சடங்குகள் வேண்டாம் என்பதும் அனாவசியமான அதிகச் செலவும், அதிகக் காலக் கேடும் இருக்கக்கூடாது என்பதும்தான் சுயமரியாதைக் கலியா ணத்தின் முக்கியத் தத்துவமாகும். ஆத லால் உள்ள சடங்குகளையும், பணச் செலவையும், காலச் செலவையும் குறைத்து நடத்துவதே இத்திருமணத்தின் முக்கிய கொள்கை என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

மற்றும் திருமணம் என்பது ஒரு பெண்ணுக்கும் ஒரு ஆணுக்கும் ஏற்பட்டக் கூட்டு வாழ்க்கையின் ஒப்பந்தம் என்பதும் இத்திருமணம் இந்த மணமக்களின் இந்த உலக மானுஷிக வாழ்க்கைக்கேதான் என்பதும் உணர்ந்து மணமக்கள் மணம் செய்துகொள்ளவேண்டும் என்பது சுயமரி யாதைத் திருமணத்தில் மிகவும் முக்கிய மானதாகும். அதாவது கலியாணம் மனிதத்தன்மைக்கு மேற்பட்ட தென்றும் ஆத்மார்த்தத்திற்கு என்றும், அதில் ஏதோ தெய்வீகம் இருக்கிற தென்றும் கருதி வாழ்க்கையில் உள்ள சுதந்திரங்களையும், இயற்கை இன்பங் களையும் அடைய முடியாமல் செய்யும் ஜீவனற்ற உணர்ச் சியை ஒழிக்க வேண்டுமென்பதே முக்கிய மானதாகும்.

தெய்வீகம் என்கின்ற பதமே சாதாரண மாக நமக்குத் தெரியாது என்பதற்குத்தான் பெரிதும் பயன் படுத்தப்பட்டு வருகின்றது. அதோடு ஆத்மார்த்தம் என்பதும் புலன றிவற்ற சூனியத்திற்குச் சமமானதற்கே பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது.

ஆகவே மனித வாழ்க்கையின் முக்கிய மான தத்துவமான இன்ப உணர்ச்சியின் இயற்கை அனுபவத்தை அடைய முடியாமல் தடைசெய்வதற்கு மாத்திரம் பயன்படும்படியாகத் தெரியாத, அர்த்த மற்ற தெய்வீகத்தையும் ஆத்மார்த்தத் தையும் இப்படிபட்ட விஷயத்தில் கொண்டு வந்து புகுத்தியதானது மனிதனை வெறும் பிணம் ஆக்குவதற்கும் அடிமை யாக்குவதற்குமே பயன்படுத்தச் செய்த புரட்டே யொழிய வேறில்லை.

தெய்வீகக் கலியாணத்தில், ஆத்மார்த்த கலியாணத் தில் புருஷனுக்கும் பெண்ணுக்கும் வித்தியாச நிபந்தனைகளும் எஜமான் அடிமைத் தன்மைகளும் எதற்காக ஏற் படுத்த வேண்டும். தெய்வீகத்தில் ஆணுக் கும், பெண்ணுக்கும் வித்தியாசமுண்டா? ஆத்மார்த்தத்தில் ஆண் ஆத்மா; பெண் ஆத்மாவென்கின்ற பிரிவுண்டா?

எவ்வளவு பெரிய புரட்டுகளை இந்த முக்கியமான காரியத்தில் கொண்டு வந்து போட்டு, இன்பமும், சுதந்திரமும் பாழாக்கப் பட்டுவிட்டது என்பதை யோசித்துப் பாருங்கள். ஆகையால் புருஷனுக்காகப் பெண்ணும், பெண்ணுக் காக புருஷனும் இரண்டு பேரும் சேர்ந்து இன்பமடை வதற்கு என்பதைத் தவிரத் திருமணத்தில் வேறு தத்துவமொன்றும் இல்லவே இல்லை என்பது தான் திருமணத்தைப் பற்றிய நமது அபிப்பிராயம். மணமக்கள் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால் தங்களில் எவருக்கும் எந்த விதத்திலும் வாழ்க்கை நடத்துவதில் பொறுப்போ உரிமையோ ஜஸ்£த்தி கம்மி யாய் இருக்கின்றது என்று யாரும் கருதிக் கொள்ளக் கூடாது என்பது தான்.

அதாவது பெண் தான் புருஷனுக்கு அடிமையாயிருக்க கடவுளால் பிறப்பிக்கப் பட்ட ஒரு சுயஉணர்ச்சியற்ற ஜீவனென்றோ கல்லென்றாலும் கணவன் புல்லென்றாலும் புருஷன், அவன் அடித்தாலும், உதைத் தாலும் அன்னி யருக்கு கூட்டிவிட்டு ஜீவித்தாலும் புருஷனே தெய்வம் என்று கருதுகின்ற அடிமை உணர்ச்சிக் கண்டிப் பாய் பெண்ணுக்கிருக்கவே கூடாது.

நமது கணவனும் நம்மை போன்ற மனித ஜீவனேயாகும். பெண்ணிடம் அவன் எப்படி நடந்து கொள்ளுகிறானோ அப்படி தான் அவள் தன்னிடமும் நம்மை நடந்து கொள்ள எதிர்பார்க்க முடியும். ஒழுக்கத் திலோ, சுதந்திரத்திலோ உணர்ச்சியிலோ நமக்கும் அவனுக்கும் வித்தியாசம் கிடையாதென்று எண்ணவேண்டியது மாத்திரமல்லாமல் ஒவ்வொரு துறையிலும் அனுபவத்தில் கொண்டு வர வேண்டும். அப்படிப்பட்ட பெண்கள்தான்; பெண்கள் நாயகம் என்று அழைக்கப்படத் தக்கவர்கள் ஆவதோடு பெண்கள் உலகத்திற்கும் பெரிய உபகாரம் செய்த வர்களாவார்கள்.

முக்கியமாய் இதற்காக வேண்டியேதான் ஆத்மார்த்தம் தெய்வீகம் என்பவை களிலுள்ள புரட்டு களை வெளியாக்கக் கட்டாயப் படுத்தப்படு கின்றோம். இது போலவே மணமகனும் தனக்குள்ள உணர்ச்சி, அவா, சுதந்திரம் ஆகிய காரியங்கள் எல்லாம் பெண் ணுக்கும் உண் டென்றும் தான் எவ்வளவு காரியம் பெண்ணிடம் எதிர்பார்க்கின் றோமோ அவ்வளவு காரியம் பெண் ணுக்கும் தன்னிடம் எதிர்பார்க்க முடியும் என்றும் கருதி அனுபவத்திலும் அது போலவே நடக்கவிட வேண்டும். தனக்கு அடிமைக் காக ஒரு பெண்ணை மணம் செய்து கொண்டோமென்கின்ற உணர்ச்சி யை அடியோடு மறந்து விட வேண்டும்.

பெண்களுக்கும் 16 வயது வரை நல்ல கல்வியைக் கொடுக்க வேண்டும். மனித இயற்கைக்கு விரோதமாக ஆணுக்கு ஒருவிதமும், பெண்ணுக்கு ஒரு விதமுமாக அடக்கத்தையும் அடிமை உணர்ச்சி யையும் கற்றுக் கொடுக்கக்கூடாது. பெண்ணின் தாய்மார்கள் பெண்களை அவர்களின் மாமியார்கள் வீட்டுக்கு அடிமைக்காக அனுப்புவதாய்க் கருதி, அதற்குத் தயார் செய்யும் வழக்கத்தை விட்டுவிட வேண்டும். எந்தப் பெண் களையும் தான் ஆண்களுக்குக் கீழ்பட்ட ஒரு பெண் என்றும், தனக்கு ஆண் களைவிட சில அடிமை குணங்களோ, அடக்கக்  குணங்களோ வேண்டுமென்று கருதும்படி கற்றுக் கொடுக்கக் கூடாது.

அநேகமாய்த் தானே தனக்கு வேண்டிய காதலனைத் தெரிந்தெடுத்துக் கொள்ள பெண்களைப் பழக்கப்படுத்த வேண்டும். இம்மாதிரியாகப் பழக்கினோ மானால் பெண்கள் உலகம் தலைசிறந்து சுதந்திரம் பெற்று உலகத்திற்குப் பெருத்த உதவியாக இருக்கும்.

தந்தை பெரியார் பொன்மொழிகள்

 

மக்கள் இயற்கையிலேயே மூட நம்பிக்கை, காட்டு மிராண்டித்தனம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களை ஓரளவுக்காவது மாற்றிப் பகுத்தறிவு, சமதர்மம் இவைகளுக்குப் பக்குவப்படுத்த வேண்டும்.
-விடுதலை,23.12.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக