புதன், 21 டிசம்பர், 2016

என் தொண்டிற்கு நான் கண்ட அரும்பெரும் அதிசயம்

27.11.1943, குடிஅரசிலிருந்து...

இன்று நடந்த சந்திரோதய நாடகத்துக்காக ஆக சுமார் 3500 ரூபாய் நன்கொடையும் 1500 ரூபாய்  டிக்கட் வசூலுமாக ஆக ரூபாய் 5000 வசூலாயிற்று. இவை தவிர சுமார் 1000 ரூபாய் பெறுமான உயர்ந்த ரக உடைகளும் நன்கொடையாக அளிக்கப்பட்டன. இவை எதிர்பாராதது என்றாலும் நம் இயக்கத்திற்கு தமிழ் நாட்டில் ஒவ்வொரு ஜில்லாவிலும் குறிப்பாக கோயமுத்தூர் ஜில்லாவிலும் எவ்வளவு உணர்ச்சி இருக்கிறது என்பதை மக்கள் உணருவதற்கு இது ஒரு சான்று ஆகும்.

தொழில் முறையில் தேர்ச்சி பெற்றவர்களால் இந்நாடகம் நடத்தப்படவில்லை. உணர்ச்சியும், ஊக்கமும் உள்ள வாலிபர்களால் நடத்தப்பட்டதாகும். தோழர் அண்ணாதுரை அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டது போல், அதாவது, ஒரு காலத்தில் கல்லடியோடும் சாணம் எறியப்படுதலோடும் கிராமங்களிலும்,

சந்து பொந்துகளிலும் விரட்டி அடிக்க விரட்டி அடிக்க ஓடிக்கொண்டு நாங்கள் சொல்லிவந்த எங்கள் கொள்கைகளை இன்று பிரபுக்கள், வைதிகர்கள், பண்டிதர்கள், மதப்பித்தர்கள் இடையில் கைதட்டலும், சிரிப்பும், எக்காளமும் வானத்தைப் பிளக்கும் சத்தத்தோடு சொல்லும் படியான நிலைமைக்கு நாங்கள் வந்திருப்பதே எங்கள் கொள்கைகளை இன்னும் வலியுறுத்தி நம்பிக்கையோடு வேலைசெய்ய ஊக்கமளிக்கிறது.

என்று சொன்னது போல் இன்று அப்படியே நடந்ததைக் கண்ணாரக்கண்டோம். அது மாத்திரமல்லாமல் இந்தப் பணிக்காக சென்ற இடங்களிளெல்லாம் 500,1000 என்பதாகவும் பண  உதவியும் பெற்று இந்த ஊரின் பெயரால், ரூபாய்  5000 என்பதாக பணமுடிப்பு கொடுக்கும்படியான நிலைமை ஏற்பட்டதானது என் ஆயுள் காலத்திலேயே என் தொண்டிற்கு நான் கண்ட ஒரு அரும் பெரும் அதிசயமேயாகும்.

இதை எந்தக் காரணத்துக்கு ஆக நடத்துகிறோம்? என்றால் தமிழ் மக்களின் நலங்கருதி, மானங் கருதி, அவர்களது மடமையையும், அடிமையையும் போக்க நடத்துகிறோமே ஒழிய எங்களுக்கு சுயநலமோ, யார் மீதாவது துவேஷமோ வெறுப்போ கிடையாது.

பார்ப்பனர்கள் தங்கள் இனம் மேன்மை ஆகியவைகளுக்கு எப்படி இவ்வளவு துணிவாய், வெளிப்படையாய் உழைக் கின்றார்களோ அதுபோல் உழைக்க நம்மில் ஒருவர் இருவர் கூடவா இல்லை என்கின்ற ஆத்திரத்தினால் இறங்கினவர்களே யாவோம்.

யாரையும் எதிர்பார்த்து இதில் இறங்கவில்லை இராவணன் சொன்னதாக இராமாயணக் கதையில் சித்தரித்து இருப்பதுபோல் என்னையே எண்ணி இப்பெரும் பழி ஏற்றேன் என்பதுபோல் எங்கள் சொந்த பலத்தையும் பொறுப்பையும் ஏற்றே இப்பணியில் இறங்கினோம். அப்பணிக்கு பொது மக்கள் இன்று கைதட்டி, வாய்புரைபோக சிரித்து, மகிழ்ந்து ரூபாய் 5000 காணிக்கை செலுத்தி இருக்கிறார்கள்.

இது இப்படியே நிலைக்குமா என்பது சந்தேகம் தான். தமிழர்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் இருக்கும் சுயமரியாதை உணர்ச்சியும், அறிவு உணர்ச்சியும் இந்தக்கொட்டகையைவிட்டு வெளியில் போகும் போதும் அவர்களைத் தொடருமா என்று சந்தேகிக்கிறேன். உங்கள் ஆதரவும் இடையறா மான உணர்ச்சியும் இருந்தால்தான் இது முன்னுக்கு வரும்.

நாம் யாரையும் வையவில்லை. இழிவுபடுத்தவில்லை நம்ம முட்டாள்தனங்களையும் ஏமாந்ததனங்களையும் நினைப் பூட்டுகிறோம். எப்படி எப்படி நாம் முட்டாள்கள் என்றும் எப்படி எப்படி நாம் ஏமாறுகிறோம் என்றும், ஏதெதில் நமக்கு மானத்தைப் பகுத்தறிவை பயன்படுத்துவது இல்லை என்றும் எடுத்துக்காட்டுகிறோம். இதனால் ஏமாற்றுகிறவர் களுக்குச் சங்கடமேற்படலாம். அது பரிதாபப்படத் தக்கதல்ல.

ஒரு இராமாயண நாடகத்தைப் பாருங்கள். அதில் தமிழர்களுக்கு எவ்வளவு இழிவு? மற்ற ஆரியப் புராண நாடகத்தைப் பாருங்கள். அதில் திராவிடர்களுக்கு எவ்வளவு இழிவு? இப்படி எல்லாம் அவர்கள் நடத்தும்போது நம் இழிவை நீக்கிக்கொள்ள நம் மக்களுக்கு இப்படிப் புத்தி புகட்டுவது ஒரு நாளும் நியாயமான குற்றமாகாது.

இந்தப் பணமுடிப்பு தோழர் அண்ணாதுரை அவர் களுக்காகவே அவர் தமது இஷ்டப்படி பயன்படுத்திக் கொள்ள பூரண உரிமையுடனேயே அளிக்கப்படுவதாகும் என்பதை வலியுறுத்திக் கூறி உங்கள் சார்பாக என் மனம் நிறைந்த ஆசையுடனும், மகிழ்ச்சியுடனும் இந்த ரூபாய் 4000 கொண்ட பணமுடிப்பை தோழர் அண்ணாதுரைக்குக் கொடுக்கிறேன்.
-விடுதலை,24.6.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக