வெள்ளி, 30 டிசம்பர், 2016

சைவ - வைணவ சம்பாஷணை


வைணவதாசன்: என்ன தேசிகர்வாள், உடம்பெல்லாம் இவ்வளவு சாம்பல் விபூதியை எடுத்து அப்பிக் கொண்டிருக்கிறீர்களே! இது என்ன, பார்வைக்கே அசிங்கமாக இல்லையா?

சைவப்பண்டாரம்: அசிங்கமென்னையா வந்தது? ஒரு சிம்ட்டா சாம்பல் மேலே பட்டால் பட்ட வஸ்து பிணமானாலும், கட்டையானாலும் அது எவ்வளவு பாவம் செய்திருந்தாலும் மோட்சத்திற்குப் போய்ச் சேர்ந்துவிடும் என்பதாக விபூதி மான்மியத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது.

நாம் நல்ல காரியம் செய்து மோட்சத்திற்கு ஒரு காலமும் போகமுடியாதபடி சைவநெறிகள் ஏற்பட்டு விட்டது. ஆதலால், விபூதி பூசியாவது மோட்சத்திற்குப் போகலாமென்றால் இதில் உமக்கேன் இத்தனை பொறாமை.

வைணவ: எனக்கு ஒன்றும் பொறாமையில்லை. சந்தோஷமாய் தாங்கள் மோட்சத்திற்குப் போங்கள். ஆனால், எனக்கு ஒரு சந்தேகம்.  ஒரு சிமிட்டா சாம்பல் பட்ட வஸ்துக்கள் எல்லாம் மோட்சத்திற்கு போய்விடும் என்கிறீர்களே.

மக்கள் இங்கு அதிகமாக சாம்பலை மலத்தின் மீது கொட்டி மலமே தெரியாமல் மூடுகிறார்களே, சனியன் பிடித்த அந்த மலங்கள் எல்லாம் மோட்சத்திற்குப் போயிருக்குமே! அப்போது தாங்களும் அங்கிருந்தால் மோட்சத்திற்குப் போய் அந்த எழவு நாற்றத்தை எப்படி சகிப்பது என்கின்ற சந்தேகம்தான்.

சைவ: சரி, சரி! நீர் சுயமரியாதைக்காரர் போல் தெரிகின்றது; உம்முடைய யோக்கியதையைப் பார்ப்போம். பட்டையாய் வலிப்பு மாட்டுக்கு சூடு போட்டதுபோல் போட்டுக் கொண்டிருக்கிறீர்?

வைணவ: உம்மை கேட்ட சங்கதிக்குப் பதில் சொல்லும்; பிறகு நான் பதில் சொல்லுகிறேன்.

சைவ: நாளைக்காவது சொல்லுவீரா?

வைணவ: நான் நீர் சொன்ன பிறகுதான் சொல்லு வேன்.

(9.11.1930 குடி அரசு இதழில் தந்தை பெரியார் அவர்கள் சித்திரபுத்திரன் என்ற புனை பெயரில் எழுதியது)
-விடுதலை,25.7.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக