செவ்வாய், 20 டிசம்பர், 2016

மோட்ச உணர்ச்சி ஒழிக்கப்பட வேண்டும்


14.9.1930 - குடிஅரசிலிருந்து...

எனக்கு இந்த மதம் வேண்டாம் இந்த ஜாதி வேண்டாம், இந்த சாஸ்திரம் வேண்டாம், இந்தக் கடவுள் வேண்டாம் இவைகள் இல்லாமல் ஜீவிக்க என்னால் முடியும் எனக்கு வேண்டியதெல்லாம் சமத்துவமும் மனிதத் தன்மையுமே யாகும் என்று தைரியமாய்ச் சொல்ல வேண்டும். அதுவும் இந்த நாட்டில் இந்த உலகத்திலேயே வேண்டுமே ஒழிய மேல் உலக சங்கதியை இதில் கலக்க வேண்டாம் என்று தைரியமான பிரச்சாரம் செய்ய வேண்டும்.

இன்றைய வாலிபர்களுக்கு இது தான் முக்கிய வேலை என்பது எனது உறுதியான அபிப்பிராயமாகும். இதற்கெல்லாம் முதலில் மனிதனை மோட்சத்தை, சுவர்க்கத்தை மறக்கச் சொல்ல வேண்டும்.

மோட்சமும், சுவர்க்கமும் இன்றைய கள்ளு சாராயக் கடைகளை விட தாசி, வேசிகள் வீடுகளைவிட மோசமானது என்பதை மக்கள் உணரும்படி செய்ய வேண்டும். மோட்ச நரகம் என்பது எப்படி திருடர்கள் பிரயாணிகளை வழிப்பறி செய்வதற்கு தனி வழியில் ஆள் அடையாளம் தெரியாமல் வேஷம் போட்டுக் கொண்டு வந்து வழி மறித்து மண்டையை உடைக்க தடிக் கம்பையும் ஈட்டியையும் ஆயுதமாகக் கொண்டு பொருள் பறித்துச் செல்லுகின்றார்களோ அது போலவே பகல் வழிப்பறிக்காரர்கள் மக்களின் வாழ்க்கைப் பிரயாணத்தில் வழி மறித்துப் பொருள் பறித்துப் போகச் செய்து கொண்ட ஆயுதங் களேயாகும்.

ஆகையால் அதே மனிதன் முதலில் மறந்தாக வேண்டும். இந்த உலக வாழ்க்கையையும் ஒழுக் கத்தையும் மக்களுக்கு உதவி செய்வதையும் தனது அளவுக்கும் தேவைக்கும் மேல்பட்டதை அடைய ஆசைப்படாமலுமிருக்க வேண்டியதையே மோட்சம் என்று லட்சியம் கருத வேண்டும். இந்தப்படி அள வுக்கும் தேவைக்கும்மேல் மக்களை அடையச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுவதையே மக்களை மோட்சத்திற்கு அனுப்பும் வேலையென்று நாம் கருத வேண்டும்.

மனிதன் இந்த நாட்டில் எப்படி தனது தேவைக்கும் அளவுக்கும், தகுதிக்கும் மேல் அடைய ஆசைப் படுகின்றானோ அதற்கு ஆதரவாய் இருப்பதற் காகவே மூடர்களுக்கு மேல் உலகத்தில் அவரது தகுதிக்கும், அளவுக்கும், தேவைக்கு மேலாக அனுபவிக்க ஆசை காட்டி இங்கு தட்டிப் பிடுங்கிக் கொள்ளுகிறார்கள். மூடர்களும், பேராசைக்காரர்களும் தான் மோட்சத்தை விரும்புவதை நாம் பல உதாரணங்களால் காணலாம்.

மோட்சத்திற்கும், சுவர்க்கத்திற்கும் பாமர மக் களுக்கும் சொல்லப்படும் கருத்துக்களை சற்றுக் கவனித்துப்பாருங்கள். மனிதனுக்கு எதெதில் சாதாரணமாய் ஆசை வரக்கூடுமோ அதையே தான் மோட்சத்தில் சிருஷ்டித்து இருக்கிறார்கள்.

அதாவது இங்குள்ள மனிதனுக்குப் பொருள் வேண்டும், பெண் வேண்டும், தேவையானதெல்லாம் நினைத்த மாத்திரத்தில் வேண்டும், நல்ல வாலிபப் பருவம் வேண்டும், சதா இடைவிடாமல் போக போக்கியம் வேண்டும், சாகாமல் இருக்க வேண்டும் ஆகிய இந்த விஷயங்கள் மனிதனுக்குச் சாகும் வரையிலும் செத்த பிறகும் அனுபவிக்கக் கூடியதாய் ஆசைப்படக்கூடியது என்பது யாரும் அறிந்ததாகும்.

ஆகவே இந்தக் காரியங்களையே மேல் உலகத்தில் இருப்பதாகவும் அதை அடையக் கூடும் என்றும் ஆசையுண்டாகும்படி அதாவது மேல் உலகத்தில் எங்கு பார்த்தாலும் பொன்னும் ரத்தனங்களும் இறைந்து கிடக்குமென்றும் உலகமே பொன்னுலகமென்றும் அங்கு அரம்பை, ஊர்வசி முதலாகிய தேவகன்னிகைகள் என்பவர் என்றைக்கும் வாலிபமாய் நம் பக்கத்தில் இருந்து கொண்டு நமக்குச் சதா போகம் கொடுத்துக் கொண்டிருப் பார்களென்றும்,

காமதேனு கற்பகவிருட்சங்கள் நமக்கு எது தேவையோ அது உடனே கொண்டு வந்து கொடுக்குமென்றும், நரை, திரை மூப்பில்லை யென்றும், நாம் சாகாமல் சிரஞ்சீவியாய் இருப்போமென்றும் சொல்லி ஏற்பாடு செய்து விட்டதால் அவைகளை மனிதன் நித்தியமாய் நம்பி இந்த உலகத்தையும்,

இங்குள்ள போகபோக்கியங்களையும் அநித்தியமாய் எண்ணி கஷ்டப்பட்டு சம்பாதித்த பொருள்களையெல்லாம் இந்த மோட்சத்திற்கு என்றே செலவு செய்வதுடன் நில்லாது இதற்காக என்று பலவிதமான அக்கிரமமான வழிகளிலும் மற்ற மக்களை வஞ்சித்தும், பட்டினி போட்டும் பொருள் பறித்தும் கூட இதற்காகச் செலவு செய்ய வேண்டியிருக் கின்றது. உதாரணமாக ஏழை மக்கள் கஞ்சிக்கு அலையும் போது குடம் குடமாய் பால் குடங்களைத் தினமும் கல்லின் தலையில் கொட்டி அவற்றை நாற வைப்பதின் கருத்து என்ன என்று பாருங்கள்.

குடியிருக்க நிழல் இல்லாமல் மக்கள் திரியும்போது மலைகளையும் பாறைகளையும் உடைத்து கோட் டைகள் போல் சந்திரகாந்த மண்டபங்கள் போல் மக்கள் கோவில்கள் கட்டுவதின் கருத்து என்னவென்று பாருங்கள். எவ்வித தொழிலும் செய்வதற்கு மூலதனம் இல்லாமலும் தொழிலில்லாமலும் மக்கள் வயிறு வளர்க்கக் கப்பலேறி வேறு நாட்டிற்குக் கூலிகளாய் போய் பொத்துப் பொத்தென்று மாண்டு மடிந்து கொண்டிருக்கும்போது பொம்மைகளை வைத்து உற்சவம் செய்வதும் அவற்றிற்கு பத்து லட்சம்,

ஒருகோடி, பத்துக் கோடிக் கணக்காக நகைகளும், பாத்திரங்களும், வாகனங்களும் துணிகளும் சேர்த்து வைப்பதின் கருத்தென்னவென்று பாருங்கள். நாளுக்கு நாள் வாழ்வு கஷ்டத்திற்கு வந்து ஏழைகள் மலிந்து வரும்போது லட்சம், அய்ம்பதாயிரம், மூன்று லட்சம் ரூபாய்கள் செலவு செய்து கும்பாபிஷேகங்கள் செய்வதின் கருத்து என்னவென்று யோசித்துப் பாருங்கள்.

பூமிகளை உழுது கஷ்டப்பட்டு பயிர் செய்யும் குடியானவர்கள் அரை வயிற்றுக்குக்கூட போதும் படியான ஆகாரமில்லாமல் கஷ்டப்படும்போது குழவிக்கல்லுகளுக்கும், செம்பு, பித்தளை பொம்மை களுக்கும் தினம் பத்து மூட்டை, இருபது மூட்டை, முப்பது மூட்டை போன்ற அரிசிகள் போட்டுப் பொங்கி நைவேத்தியம் செய்து பாடுபடாத சோம்பேறிகளுக்குக் குடும்பத்துடன் போட்டுக் கொண்டிருக்கும் கருத்து என்ன என்று எண்ணிப்பாருங்கள். மக்களில் நூற்றுக்கு 10 பேர்களுக்குக்கூட அதாவது சராசரி படிப்பு எழுத்து வாசனைகூட இல்லாமல் இருக்கும்போது வேத பாடசாலை, தேவார பாடசாலை முதலியவைகளும் கல்லுகள்,

பொம்மைகள் பின்னால் நின்று கொண்டு ஆயிரத்திற்கு ஒருவருக்குக்கூட புரியாத வேத பாராயணம் முதலியவைகள் செய்யப்படுவதற்கும் லட்சக்கணக்காய் செலவு செய்யப் படுவதின் நோக்கம் என்ன என்பதை யோசித்துப் பாருங்கள். இப்படியாக நமது நாட்டில் இது போலவே எவ்வளவு காரியங்கள் நடைபெறுகின்றது என்பதை நோக்கினால் மற்ற மக்களை எவ்வளவு பாடுபடுத்தியாவது, அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாலாவது சிறிதும் லட்சியமில்லாமல் நாம் மோட்சத்திற்குப் போக வேண்டும்.

நாம் பிரபுவாய் இருக்க வேண்டும். லட்சுமி புத்திரராய் ராஜாவாய் நிரந்தர செல்வவானாய் சிரஞ்சீவியாய் இருக்க வேண்டும் என்கின்ற பேராசையல்லாமல் வேறு தத்துவம் அதில்  என்ன இருக்கிறது என்பதை யோசித்துப் பாருங்கள். இந்த மாதிரி மோட்சம் கற்பிக்கப்பட்டு அதை அடைவதே மனிதனின் முக்கிய லட்சியம் என்று போதிக்கப்பட்டிருக்கின்ற பேராசை ஜனங்கள் மலிந்திருக் கும் இந்த நாட்டில் இந்த உணர்ச்சியை அழிக்காமல் என்ன காரியம் நம்மால் செய்ய முடியும் என்பதை யோசித்துப் பாருங்கள். ஆதலால் தான் முதலில் மோட்ச உணர்ச்சி ஒழிக்கப்பட வேண்டியது அவசியம் என்று கருதுகின்றேன்.

தந்தை பெரியார் பொன்மொழிகள்

ஒவ்வொரு சமூகத்தாரும் தங்களுக்கு மேலான வர்கள் இல்லையென்று சொல்லிவருவது போல் தங்களுக்குக் கீழானவர்களுமில்லை என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்; அப்பொழுதுதான் ஒற்றுமையை நிலைநிறுத்த முடியும்.

மேல்ஜாதி - கீழ்ஜாதி என்கிற அமைப்பை ஒழிக்க வேண்டும் என்று நான் சொல்லும்போது மேல் ஜாதி - கீழ்ஜாதி என்கிற தன்மையினால் ஒரு கூட்டம் அடைந்திருக்கும் அதிகப் பங்கையும் உரிமையையும் - போக போக்கியத்தையும் - கீழ்நிலையில் இருந்து கேடு அடையும் மக்கள் நிலைமையையும் ஒழிக்க வேண்டும் என்ற தத்துவத்தில் தான் நான் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்லுகிறேன்.
-விடுதலை,16.12.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக