புதன், 21 டிசம்பர், 2016

நல்லபெயர் வாங்க விரும்புபவன் பொது நன்மைக்கான வேலை செய்ய முடியாது


அன்புள்ள தலைவர் அவர்களே! தோழர் டி. ஷண்முகம் அவர்களே! தாய்மார்களே! தோழர்களே! 

நான் இன்று சென்னைக்கு ஆஸ்பத்திரியில் சேருவதற் காக வந்தேன். இங்கு என்னால் அதிகநேரம் நிற்கவோ பேசவோ முடியாது. தலைவர் சில வார்த்தைகள் கூறுமாறு சொன்னார். நான் சொல்லுவது உங்களுக்கு இனிப்பாயிருக்காது. ஆனால், என் இயற்கைக் குணம் உங்களுக்குத் தெரியும். தோழர்கள் டி. ஷண்முகம், கயப்பாக்கம் ஜமீன்தார் முத்துலிங்கம் ஆகியோர் என்னுடைய நண்பர்கள். அவர் களுக்கு ஏற்பட்ட இந்தப் பாராட்டுதலை எனக்கு ஏற்பட்ட தைப் போலவே கருதுகிறேன். என் விஷயத்தில் அவர் களுக்கு மிக மரியாதையும் நம்பிக்கையும் உண்டு. அவர்கள் விஷயத்தில் எனக்கு மிகுந்த மதிப்பும் நம்பிக்கையும் உண்டு. அவர்களைப் பற்றிப் பாராட்டிப் பேசுவது என்னையே பாராட்டிக் கொள்வதாகுமென்று கருதுகிறேன்.

அவர்களைப் பற்றி உங்களுக்கு நன்றாய்த் தெரியும். அவர்கள் இயற்கையில் வீரர்கள் எந்தக் காரியத்தையும் துணிந்து செய்யக் கூடியவர்கள். தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், ஏழை மக்களுக்கும் நண்பர்கள். பொது வாழ்வில் அடியோடு சுயநலத்தைச் சம்பந்தப்படுத்தாதவர்கள். அவர்களைப் பற்றிய வார்த்தைகளை இவ்வளவோடு விட்டுவிட்டு, என்னுடைய கொள்கைகளையும், அனுபவத்தையும் ஒட்டிச் சில யோசனைகளை அவர்களுக்குச் சொல்லுகிறேன்.

அதன்படி அவர்கள் சிந்தித்துச் சரியென்று பட்டதைச் செய்ய வேண்டுமாய் வேண்டிக் கொள்கிறேன்.

தோழர்களே! நானும் எனது நண்பர் ராஜகோபாலாச் சாரியார் அவர்களும் ஏதாவது ஒரு வகையில், இந்த மாகாண அரசியலைக் கைப்பற்றும் நிலைமை ஏற்பட்டிருந்தால், உண்மையில் இந்த ஜில்லா போர்டு, முனிசிபாலிட்டி முதலிய வைகளைக் கலைத்தே இருப்போம். அல்லது பொப்பிலி ஆட்சி இதுவரையில் இருந்திருக்குமானால், இந்த ஜில்லா போர்டுகளின் அதிகாரங்களை வெகுவாகக் குறைக்கப் படவே, அதிகாரங்களைக் குறைக்கவே செய்திருப்பேன்.

தாலுகா போர்டைக் கலைக்காமல் இருந்தால் நன்றாயிருக்குமென்று தலைவர் குமாரராஜா அவர்கள் சொன் னார்கள். தாலுகா போர்டை எடுப்பதற்குத் தூண்டுதல் செய்து கொண்டிருந்தவன் நான்தான். இது டாக்டர் சுப்பராயன் அவர்களுக்கும் பொப்பிலி ராஜா அவர்களுக்கும் தோழர் ராஜகோபாலாச்சாரி அவர்களுக்கும் தெரியும்.

கட்சி காரியத்திற்காக இந்த ஸ்தாபனங்கள் வேண்டு மென்பது சிலருடைய அபிப்பிராயம். ஜில்லா போர்டைக் கலைத்து விட வேண்டுமென்று சொன்ன ஆச்சாரியார் அவர்களும் அரசியலைக் கைப்பற்றின பிறகு, அவற்றைக் கலைக்காமற் போனதற்குக் காரணம், அவர் கட்சிக்கு அவை பயன்படவேண்டுமென்னும் எண்ணத்தினாலேயே யாகும். கட்சிகள் இந்த நாட்டில் பெரும்பாலும் ஜாதி - இனத்தைப் பற்றியவைகளாக இருப்பதால், பொது மக்கள் நலத்தை விட அவரவர்கள் கட்சி நலத்தையே கருதி அரசியல் நடத்த வேண்டியதாகப் போய்விட்டது. இந்த மாதிரியே 2 கட்சிகள் இருக்கிற வரையிலும் நம் நிலைமை இப்படித்தான் இருக்கும்.

எதிரியிடத்திலிருந்து தப்புவதே நம் நோக்கமாயிருப்பதால், மக்கள் நலம் சரிவரக் கவனிக்கப்பட முடிவ தில்லை. இது இயற்கையே. ஆனால், சீக்கிரத்தில் ஒரு காலம் வரும்.
இப்போது இந்த ஸ்தாபனத்தில் இருக்கவேண்டியவர்கள் முக்கியமாக மனத்தில் வைக்க வேண்டிய காரியம் ஒன்று உண்டு. அதாவது, பொது ஜனங்களிடத்தில் நல்ல பேர் எடுக்க வேண்டுமே என்கின்ற கருத்தோடு இந்த மாதிரியான ஸ்தாபனங்களில் வேலை செய்யவே கூடாது. நல்ல பேர் எடுக்க கொஞ்சம்கூட முயற்சிக்கவே கூடாது. இதுதான் என்னுடைய பொது நலத்தின் குறிக்கோள்.

நான் பல ஸ்தாபனங்களுக்கு, அதாவது முனிசிபாலிட்டி, தாலுகா போர்டு, தேவஸ்தானக் கமிட்டி, ஸ்கூல் நிர்வாகம், வியாபார சங்கம் முதலியவைகளுக்குத் தலைவனாக இருந்திருக்கிறேன். ஜில்லா போர்டுக்கும் ஒரு முக்கிய வாயாடி அங்கத்தினனாக இருந்திருக்கிறேன். வேறு சில ஸ்தாபனங்களுக்கும் சர்வாதிகாரியாகவும், தலைவனாகவும் இருக்கிறேன்.இவைகள் ஒன்றிலாவது பொது ஜனங் களிடமோ,  நம்மை  அனுசரித்துப் பின் பற்றுகிறவர்களிடமோ நல்ல பெயர் வாங்க வேண்டுமே என்று நான் ஒரு நாளும் முயற்சித்ததில்லை. எனது 35 வருடப் பொதுவாழ்வில் நான் நல்ல பெயர் எடுத்ததுமில்லை.

பொது ஜனங்களின் யோக்கியதை எனக்குத் தெரியும். 100-க்கு 85 பேர் தற்குறிகள். தங்களுக்கு வேண்டியவை என்னவென்பதைக் கூடத் தெரியாதவர்கள். தங்கள் முன்னோர்கள் யார்? தங்கள் நாடு எது? தங்கள் ஜாதி? இனம் என்ன? என்பவற்றையே உணராதவர்கள். மீதியுள்ளவர்களில் 14-3/4 பேர்கள் சுயநலக்காரர்கள். பக்கத்து வீடு தீப்பிடித்து எரிந்தால் அதை அணைக்க ஒரு செம்புத் தண்ணீர் கூடக் கொடுக்க மனம் வராதவர்கள். அதுவும் நம் வீடு எரியும்போது அணைக்கத் தண்ணீர் வேண்டாமா என்று கருதிக்கொண்டு அதை மிச்சப்படுத்தி வைத்திருக்கும் அவ்வளவு புத்தி சாலிகள். இந்தமாதிரி ஜனங்களிடத்தில் ஒரு மனிதன் நல்ல பேர் வாங்குவதென்றால் அது உண்மையான பொதுத் தொண்டு ஆகுமா? அந்த நல்லபேர் பொதுத் தொண்டினால் ஏற்பட்டதாக இருக்க முடியுமா?

இவர்களிடம் நல்ல பேர் வாங்க அனேக பித்தலாட்டங் களும் அயோக்கியத்தனங்களும் ஏமாற்றல்களும் செய்தாக வேண்டியிருக்கும். ஆதலால் தான் பொது ஜனங்களிடம் நல்ல பேர் எடுக்க முயற்சிப்பவன் பொதுத் தொண்டுக்கு லாயக்கற்றவனாவான் என்று சொல்லி வருகிறேன்.

மற்றப்படி, நான் என்ன செய்யவேண்டுமென்று சொல்லு கிறேனென்றால், பொதுநல உணர்ச்சி சிறிதாவது உள்ள வர்கள், பொது மக்களுக்கு உண்மையாக நலம் தரக்கூடிய காரியம் எதுவென்று நடு நிலையிலிருந்து ஆலோசித்து முடிவு கட்டி, அது வேறுயாருக்குக் கேடு தருவதாயிருந்தாலும் சிறிதும் பயப்படாமல், துணிவோடு செய்ய வேண்டும்.
பொதுஜனங்கள் தயவால் மறுபடியும் நாம் இந்த ஸ்தானத்துக்கு வரவேண்டுமே என்று கருதவே கூடாது.

தோழர். டி. ஷண்முகம் அவர்கள் ஜில்லா போர்டில் எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் கொள்ளையடித்துக் கொண்டு, இரண்டொரு கோயில்களைக் கட்டிப் பார்ப்பனர் களுக்குச் சமாராதனை முதலியவைகளை அடிக்கடி கொடுத்து பல சோம்பேறிகளுக்கும் பரதேசி களுக்கும் பப்ளிக்ரோட்டில் பொங்கிப்போட்டு சில பத்திரிகைக் காரர்களுக்கு 5,10 என்று பிச்சைக்காசு எறிந்து விடுவார் களானால், தோழர் ஷண்முகம் பிள்ளை அவர்கள் பெரிய பிரபு ஆகவும், மகா கெட்டிக்கார நிர்வாகி ஆகவும், மாக நாணயஸ்தராகவும், சாகும்வரையில் அவரே அந்த ஸ்தானத்தில் இருக்கவேண்டுமென்று பொது மக்களால் பிரார்த்திக்கப்படுபவராகவும் ஆகிவிடுவார். இது வரையிலும் சற்றேறக்குறைய இந்த முறைதான் - இப்படிப்பட்ட ஸ்தாபனங்களுக்கு இருந்து வந்திருக்கிறது. 

பாமர மக்களையும் சுய நலக்காரரையும் திருப்திப் படுத்துவது தான் பொதுநலத் தொண்டு என்று எண்ணினால், உண்மையான நல்ல காரியம் ஒன்றும் செய்ய முடியாது. இவர்களை லட்சியம் செய்யாமல் நமக்குச் சரியென்று பட்டதைத் தைரியமாகச் செய்துகொண்டு போனால் அவை இன்றுள்ள மக்களால் போற்றப்படாவிட்டாலும் இவர்களது பின் சந்ததியார் நன்மையடைந்து அவர்களால் போற்றப் படத்தக்கவையாக இருக்கும்.

முன்னோர்கள் செய்துவைத்ததை மாற்றக்கூடாதே யென்று கவலைப் படுகிறவர்கள் கோழைகளேயாவார்கள். முன்னோர்களைவிடக் கண்டிப்பாக நாம் அதிக அனுபவ சாலிகளே யாவோம். நம்மை விட நமக்குப் பின்னால் வருகிறவர்கள் இன்னும் அனுபவசாலிகளே யாவார்கள். 5 வயதுப்பையனைவிட, 10 வயதுப் பையன் எப்படிக் கொஞ்சம் புத்திசாலியோ, அவனுக்கு விஷயம் தெரிந்து கொள்ள எப்படிப் பல சௌகரியங்களும் சாதனங் களும் இருக் கின்றனவோ, அது போலவே, முன்காலத்தைவிட இந்தக் காலத்தவர்களுக்கு அதிக விஷயம் தெரிந்து கொள்ளச் சில சௌகரியங்களும் சாதனங்களும் இருக் கின்றன. அது போலவே, நமக்கு முன் இருந்தவர்கள் செய்த காரியத்திற்கும், நாம் செய்யவேண்டிய காரியத்திற்கும் தன்மை தெரிய வேண்டுமானால், அவர்கள் யார்? நாம் யார்? அவர்கள் லட்சியம் நம் லட்சியம் என்ன? என்பவற்றைச் சிந்தித்துப் பார்த்து நாம் செய்ய வேண்டிய காரியத்தைச் செய்ய வேண்டும்.
உதாரணமாக, காந்தி ஆசிரமத்துக்கு காந்தியாருக்குப் பிறகு நான் தலைவனாகப் போனால், அந்தக் குளிர் நாட்டில் காலையில் 5 மணிக்கு எழுந்து அங்குள்ள குழந்தைகளை, வாலிபர்களைத் தண்ணீரில் முழுகவைத்து இராமபஜனை செய்யச் சொல்ல முடியமா? செய்வேனா? அது போலவே, இன்னும் அனேக மகான்கள் என்பவர்களுடைய காரியங் களெல்லாம் இந்தக் காலத்து மகான்கள் - பெரியார்கள் என்பவர்களுக்குப் பொருத்தமாயிருக்க முடியுமா?

ஆகவே, காலத்தையும் எதிர்காலத்தையும்,மக்கள் நிலைமையையும் கவனிக்க வேண்டும். இந்த நிலைமைக்குக் காரணம் என்ன என்பதைச் சிந்திக்க வேண்டும். அதுதான் பொதுநலத்தொண்டு செய்பவர்களுக்கு இருக்க வேண்டிய குணமாகும். அப்படிப்பட்டவர்கள் நம் இடையில் தோழர்கள் டி. ஷண்முகம், சவுந்திரபாண்டியன் முதலிய வெகு சிலர் தாம் நம் கூட்டத்தில் இருக்கிறார்கள். இவர்கள் பொதுஜன அபிப்பிராயத்தைக் கருதாதவர்கள். அதனாலேயே இப்படிப் பட்டவர்களிடத்தில் எனக்கு அதிக மதிப்புண்டு.

இப்பொழுது நாட்டில் நம் எதிரிகள் கிளர்ச்சி துவக்கியிருக் கின்றார்கள். அதாவது சர்க்காரார் மதுபானத்தைப் புகுத்து கிறார்கள் என்றும் அதை நான் ஆதரிக்கின்றேன் என்றும் பிரச்சாரம் செய்கிறார்கள். அதைப் பற்றி நான் பயப்பட வில்லை. சர்க்கார் உத்தரவை நான் வரவேற்கிறேன். இந்த உத்தரவு போடவேண்டுமென்று 3,4 வருட காலமாகவே, வைஸ்ராயிடத்திலும் நம் கவர்னரிடத்திலும் நேரில் பல தடவை சொல்லியிருக்கிறேன். ஆதலால், நான் அந்தக் குற்றச்சாட்டு என்பதிலிருந்து மறைந்து கொள்ள ஆசைப்பட வில்லை. பேசுகிறவர்களுக்கு மதுவைப் பற்றிய விஷயம் தெரிந்திருக்குமென்றோ, அல்லது தெரிந்தவர்கள் நாணய மாய் பேசுகின்றார்களென்றோ நான் கருதவில்லை. இந்த உத்தரவை நம் எதிரிகள் சர்க்காரை வையவும் என்னைக் குறைகூறவும் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார்கள். தங்களைக் காப்பாற்றிக் கொள்ள சர்க்காருக்குத் தெரியும். என் குறைபாடுகளைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை.

உண்மையான மதுவிலக்கு எப்படி என்பது எனக்குத் தெரியும். நான் மதுவினால் ஏற்படும் கெடுதியை நீக்க வேண்டுமென்று சொல்பவனே தவிர, அடியோடு மதுவே கூடாது என்கிற “வர்ணாசிரம”க்காரனல்ல. சுத்தக்காரனோ அசுத்தக்காரனோ என்பது பாராமல் ஒருவனைப் பிறவி காரணமாகத் தொடக்கூடாது என்பதே வருணாசிரமம். பிறவியைக் கவனிக்காமல் சுத்தமாயிருப்பவனைத் தொடலா மென்பதும், அசுத்தமாயிருப்பவனைச் சுத்தப்படுத்தித் தொடத்தக்கவனாக ஆக்கிக் கொள்ளலாமென்பதும் எனது கொள்கை.

இந்த மேடையை அரசியல் மேடையாக ஆக்கிக் கொள்ள எனக்கு இஷ்டமில்லை. இதற்காக வேறு கூட்டம் ஏற்பாடு செய்து. காயலாவோடே ஆஸ்பத்திரியிலிருந்து விடைபெற்றுக்கொண்டு வந்து ஒரு நாளைக்குப் பேசலா மென்றிருக்கிறேன். பின் ஏன் இங்கு இதைச் சொன்னேன் என்றால், நான் பாமரப் பொதுஜன அபிப்பிராயத்துக்கோ, சுயநலக் கூலிப் பத்திரிகைகளின் கூப்பாடுகளுக்கோ செவிசாய்ப்பதில்லை எனத் தெரியப்படுத்திக் கொள்ள வேயாகும்.

குடிஅரசு - சொற்பொழிவு - 18.12.1943

-விடுதலை,19.6.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக