வெள்ளி, 26 ஜூலை, 2019

கண்ணை மூடிப் பின்பற்றுங்கள்! கருப்புச் சட்டையை எங்கும் பரப்புங்கள்! -II

05.06.1948 - குடிஅரசிலிருந்து.... -

சென்ற வாரத் தொடர்ச்சி

நாங்கள் எவ்வளவுதான் பாடுபட்டாலும், எவ்வளவுதான் உங்களுக்கு வாரிக் கொடுத்தாலும், எவ்வளவுதான் சுத்தமாய் இருந்தாலும், எவ்வளவு தான் ஒழுக்கமாய் நடந்து கொண்டாலும் நாங்கள் சூத்திரர்கள், பஞ்சமர்கள்? நீங்கள் எவ்வளவுதான் பாடுபடாத சோம்பேறி வாழ்வு நடத்தினாலும், எவ்வளவோ எங்களை மோசம் செய்து எங்களிடம் பிச்சை எடுத்துப் பிழைத்தாலும், நீங்கள் எவ்வளவு தான் அழுக்குப் பிடித்து, சொறி பிடித்துக் குஷ்ட ரோகியாகக் கிடந்தாலும், எவ்வளவுதான் ஒழுக்க ஈனர்களாக திருடர்களாக, கொலைக்காரர்களாக, கொள்ளைக்காரர்களாக, தூது செல்பவர்களாக இருந்தாலும் நீங்கள் உயர் ஜாதிப் பார்ப்பனர்களா? இது நியாயமா? என்ற கேள்விகளின் அறிகுறிதான் இந்தக் கருப்புச் சட்டை?

தோழர்களே! நீங்கள் விரும்பி அணியுங்கள் இதை! அடுத்த மாநாட்டிற்குள்ளாவது நம் சூத்திரப் பட்டம் ஒழிந்து போகும். அடுத்த மாநாட்டிற்குள் இந்த இழி ஜாதிப் பட்டம் கட்டாயம் ஒழிக்கப் பட்டேயாக வேண்டும். அதற்காக ஒரு 2000, 3000 பேர்களாவது பார்ப்பனர்களின் பலி பீடத்தில் தம் உயிரை இழக்கத் தயாராக இருக்க வேண்டும். நானா சூத்திரன்? என் தாய்மார்களா சூத்திரச்சிகள்? இனி இந்நிலை ஒரு நிமிட நேரமேனும் இருக்க இடங் கொடேன்? இதோ என் உயிரை இதற்காக அர்ப் பணிக்கவும் துணிந்து விட்டேன் என்கிற உணர்ச்சி ஒவ்வொரு திராவிடனுக்கும் ஏற்படவேண்டும். இழிஜாதிபட்டத்தை ஒழிப்பதென்பது சுலபமான காரியமல்ல என்றாலும் உலக அறிவு முன்னேற்றம், ஜாதி உயர்வு தாழ்வுகளை இனி இருக்க விடாது. ஆகவே உறுதி பெற்றெழுங்கள், செத்தாலும் சரி இழிவு நீக்கம்தான் முக்கியம் என்று. சாகாமலே கூட வெற்றி பெற்று விடலாம்.

இந்த உரைகல்லில் மதிப்பிடுங்கள்

நமது இளைஞர்களுக்குள் மேலும் கட்டுப்பாடு வேண்டுவது அவசியம். கழகத்தின் பொறுப்பை உணர்ந்து கொள்ள வேண்டும். சுயநலக்காரர்களின் விஷமத்தனத்திற்குப் பலியாகக் கூடாது.

நமது கழகத்தில் சுயநலக்காரர்களுக்கு இடம் இல்லை. கழகத்தில் தன் சொந்த லாபத்தைக் கருதியிருப்பவனுக்கு இடமில்லை, கழகத்திற்காகத் தம் சொந்தப் பணத்தை, சொந்த உழைப்பைச் செலவு செய்பவர்களுக்குத்தான் கழகத்தில் மதிப் புண்டு. கழகத்தினிடம் ஊதியம் பெற்று வேலை செய்பவன் கழகத்தின் வேலைக்காரனாகத்தான் மதிக்கப்படுவான். எவனொருவன் தன் சொந்தப் பணத்திலிருந்து ஒரு அரைக் காசாயினும் கழகத்திற்குச் செலவு செய் கிறானோ அவனைத்தான் நான் என் நண்பனாக, என் துணைவனாக, என் தலைவனாகக் கூடக் கருதுவேன். கழகம் பாடுபடு கிறவனுக்குத்தான் சொந்தமானதே ஒழிய, கழகத்தின் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டு மென்று நினைப்பவனுக்கல்ல. கழகத்தின் பேரால் வாழ்க்கை நடத்துகிறவன் கழகத்தின் வேலைக்காரன். கழகத் திற்காகத் தன் காசைக் கொடுப்பவன் கழகத்தின் நண்பன். எவனையும் இந்த உரைகல்லைக் கொண்டு தான் நமது இளைஞர்கள் மதிப்பிடவேண்டும்.

இவ்விதம் ஆராய்ந்து தெரியாமல் நம் இளை ஞர்கள் பொறாமைக்காரர்களின் விஷமப் பிர சாரத்திற்கு இடம் கொடுத்து வருவார் களேயானால், நான் கழகத்தைக் கலைத்துவிடவும் தயங்க மாட்டேன். நமது இளைஞர்களுக்கு உண்மையை உணர்ந்து கொள்வதில் கவலை இருக்க வேண்டும். யாரை வேண்டுமானாலும் தூக்கிக்கொண்டு கூத்தாடும் பழக்கத்தை விட்டுவிட வேண்டும். நமது கழகம் தியாகிகளுக்கே சொந்தமான கழகம், சுயநலக்காரர் களுக்கு சொந்தமானதல்ல என்பதை உணர்ந்து செயலாற்ற வேண்டும்.

ஏமாறாதிருக்கவே இவ்வளவும்

தலைவன் என்கிற முறையில் ஏதோ எனக்குத் தோன்றியதைச் சொன்னேன். இதற்காக யாரும் வருத்தம் கொண்டு விடாதீர்கள். சுய பெருமைக் காகவும், சுய விளம்பரத்திற்காகவும், சுய நலத்திற்காக மட்டுமே கழகத்தில் இருந்துவரும் தோழர்களின் சொற்கேட்டு ஏமாந்து போக வேண்டாம் என்று எச்சரிக்கை செய்யவே இவ்வளவும் கூறினேன். மக் களின் ஆதரவு நமக்கு ஏற்பட்டு வரும் அளவுக்கு இயக் கத்தைப் பரிசுத்தப்படுத்த வேண்டும் என்ற ஆசை யால்தான் இவ்வளவு வலியுறுத்திக் கூற நேர்ந்தது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மாநாட்டுழைப்பாளர்களுக்கு மனமார்ந்த நன்றி

மாநாடு ஒரு குறையுமின்றி மிகமிகச் சிறப்பாக நடைபெற்று விட்டது. இதுவரை யாரும் நடத்தியறியாத முறையில், எங்கும் நடந்திராத முறையில், இவ்வூர்க்காரர்கள் மாநாட்டை நடத்திக் காட்டியிருக்கிறார்கள். இந்த அளவில் மற்ற ஜில்லா பிரமுகர்களுக்கு இவர்கள் ஒரு கஷ்டத்தையே கொடுத்துவிட்டார்கள் என்று கூற வேண்டியிருக்கிறது. இனி நடக்கப் போகும் மாநாடுகளில் எவ்வளவுதான் தங்களால் கூடுமான அளவுக்கு மக்களுக்கு வசதி செய்து கொடுத்த போதிலும் மக்கள் குறைவாகவே, போதாததாகவே கருதக்கூடிய அளவுக்கு இந்த ஊர்க்காரர்கள் வசதி செய்து கொடுத்து மக்களைப் பழக்கி விட்டார்கள். நாளைக்கு ரயில்வே ஸ்ட்ரைக்கால் சிலர் தங்க நேரிடும் என்று கூறினால் பரவாயில்லை அதற்கும் சேர்த்துத் தான் அரிசி, பருப்பு வாங்கியிருக்கிறோம் என்று கூறுகிறார்கள்.

இவ்வளவு ஏற்பாடுகளுக்கும் முக்கியப் பொறுப் பாளிகளாயிருந்த தோழர். வி.வி. தனுஷ்கோடி நாடார், தோழர் நீதிமாணிக்கம், தோழர் சண்முகம் ஆகியவர்களுக்கு எனது சார்பாகவும், கழகத்தின் சார்பாகவும், உங்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றியறிதலையும், பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

விளையாட்டுப் பிள்ளையல்ல!

வினையாற்றும் கர்ம வீரர்!

நான் தோழர் கே.வி. கே. சாமி அவர்களை இதுவரை ஒரு விளையாட்டுப் பிள்ளை என்று நினைத்திருந்தேன். அவர் இம்மாநாட்டுச் செயலா ளராயிருந்து பணியாற்றியதைப் பார்த்ததிலிருந்து அவர் இத்திராவிட நாட்டின் கவர்னர் பதவியைக் கொடுத்தால் கூட அதையும் பார்த்துக் கொள்ளக் கூடிய திறமை பெற்றிருக்கிறார் என்று கூறவேண்டியிருக்கிறது. அவருடன் ஒத்துழைத்த தொண்டர் களின் சிறப்பைப்பற்றி நான் கூறவேண்டியதே இல்லை. நீங்கள் அவர்களைப் பற்றி நன்கு அறிந்து கொண்டிருப்பீர்கள். இவ்வூர் போலிஸ்காரர்களும், போலி அதிகாரிகளும் தம் கடமையைத் திறம்பட ஆற்றியிருக்கிறார்கள். நமக்கு எவ்வித தொல் லையோ, இடைஞ்சலோ செய்யாமல் இருந்ததற்கு நாம் நமது மகிழ்வு கலந்த நன்றியறிதலை அவர் களுக்குத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறோம். இவ்வூர் மகாஜனங்களும் நம்மை பரிவுடன் நடத்தியிருக்கிறார்கள். வீதியிலோ, உணவுச் சாலைகளிலோ எங்குமே நம் தோழர்களுக்கு யாரும் தொல்லை கொடுக்கக் காணோம். எங்கும் அன்பையே கண்டோம். எல்லாம் வெகு திருப்திகர மாகவே நடந்தேறிவிட்டது.

தாய்மார்களுக்கு சிலவார்த்தைகள்

கடைசியாக, இங்கு திரளாகக் கூடியிருக்கும் தாய் மார்களுக்குச் சில வார்த்தைகள் கூற ஆசைப்படுகிறேன். என் அருமைத் தாய்மார்களே! நீங்கள் பல தொந் தரவுகளுக்கும் உள்ளாகி பல கஷ்ட நஷ்டங்கள் பட்டு இங்கு வந்து இரண்டு நாள் தங்கிச் செல்வதற்காக ஏதாவது உருப்படியான பலன் பெற்றுச் செல்ல வேண்டாமா? எதற்காக நீங்கள் இங்கு வந்தீர்கள்? இது ராமேசுவரம் அல்லவே பிள்ளை வரம் வாங்கிக் கொண்டு போக!

தொடரும்

- விடுதலை நாளேடு, 20.7.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக