சனி, 28 செப்டம்பர், 2019

பெண்கள் விடுதலை

-சித்திரபுத்திரன்

27.09.1947  -குடிஅரசிலிருந்து...

இராஜன்: ஏண்டா, டேய்! இராமா! பெண்கள் விடுதலை, பெண்கள் விடுதலை என்று பேசுகிறார்களே, அதென்ன விடு தலை? எனக்கு ஒன்றும் புரியவில்லையே?

இராமன்: உனக்கெப்படியப்பா புரியும்? உனக்கு கால் டஜன் பெண்டாட்டிகள் இருக்கிறார்கள்; அரை டஜன் வைப் பாட்டிகள் இருக்கிறார்கள். அதோடு நிறையப் பணமும் இருக்கிறது?

இராஜன்: நான் சொல்லுவது உனக்குக் கேலியாக இருக்கிறது. இந்தப் பெண் களிடமிருந்து எனக்கு (ஆண்களுக்கு) விடுதலை கிடைப்பதுதான் பெரிய கஷ்டமாயிருக்கிறது? ஒருத்தி விட்டால் மற்றொருத்தி இழுக்கிறாள். இவர் களைவிட்டு நான் எப்படி விடுதலை அடைகிறது?

இராமன்: சரிதான் இப்போது புரிந்தது. நீ அந்தப் பெண்களிடம் கஷ்டப் படுவதினால் உனக்குத் தான் விடுதலை வேண்டும் என்கிறாய். உனக்கு 9 பெண்கள் எதற்கு? ஒரு பெண் இருந்தால் போதா தோ? ஒரு பெண் 9 கணவனை மணம் செய்து கொண்டும் காதலனாக வைத்துக் கொண்டும் இருந்தால் நீ அந்த ஒன்பதில் ஒருவனாக இருக்க சம்மதிப்பாயா?

இராஜன்: ஒரு பெண்ணுக்கு 9 புருஷன் என்றால் அது என்ன மிருகமா? நாமென்ன மிருக சாதியா? நன்றாய்ச் சொல்லுகின்றாய் நாக்குக் கூசாமல்!

இராமன்: பெண்கள் விடுதலை என் றால் இப்போது உனக்கு அருத்தமாச்சுதா? நீ ஒன்பது பெண்களை வைத்துக் கொண்டு அவர்களுடைய இயற்கை உணர்ச்சிக்கு உன்னை வலிய இழுக்க வேண்டிய மாதிரிக்கு அவர்களை அடைத்து வைக்க லாம். அது மனுஷத்தன்மை என்கிறாய். ஒரு பெண் 9 கணவர்களை வைத்துக் கொண்டிருந்தால் அது மிருகத்தனம் என்கிறாய், இந்தக் கொள்கை போகவேண்டுமென்பதைத்தான் பெண்கள் விடுதலை என்று சொல்லுவது. புரிந்ததா?

இராஜன்: புரிந்தது. நன்றாய்ப் புரிந்தது. நான் அவசரப்பட்டு மிருகத்தன்மை என்று சொல்லிவிட்டேன். ஒரு பெண் ணுக்கு 9 பேர் என்பது இன்றும் தாராள மாய் நடக்கின்றதே. நம்ம தேவதாசிகளைப் பாரேன். நம்ம விலைமாதர்களைப் பாரேன். 9 தானா 90ம், 900மும் கூட இருக்கும் போலிருக்கின்றதே. மக்கள் அங்கு போவதில்லையா? அவர்களை மரியாதை செய்வதில் லையா? அந்தப் பெண்களுக்குச் சுதந்திர மில்லையா? தங்கள் இஷ்டம் போல் பணம் கேட்பதும் தங்கள் இஷ்டம்போல் ஒருவனை  நீ வேண்டாம் வெளியில் போ என்பதும் நாம் தினமும் பார்க்கவில்லையா? ஆகவே அவர் களுக்குச் சுதந்திரமில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்?

இராமன்: பொறு, பொறு, அவசரப் படாதே. சுதந்திரம் இருப்பதாக நீ சொல்லும் பெண்கள் யார் என்பதைத் தெரிந்து கொண்டாயா? தேவதாசிகளுக் கும் விலை மாதர்களுக்கும் சுதந்திரம் இருப்பதாகச் சொன்னாய். நீ சொல் லுகிறபடி பார்த்தால் ஒரு பெண் சுதந்திரமாக இருக்கவேண்டுமானால் ஒன்று தேவதாசியாகப் போய்விட வேண்டும், அல்லது விலைமாதாகப் போய்விட வேண்டும். வெள்ளைத் தமிழில் சொல்ல வேண்டுமானால் தேவடியாளாக அல்லது குச்சுக்காரியாகப் போய்விட வேண்டும் என்கிறாய். ஒருவ னையே கணவனாகக் கொண்டு திருமணம் செய்து வாழ்க்கை நடத்துகிற பெண் களுக்கு விடுதலை என்பது ஒரு ஆளுக்குப் பல பெண்களில் ஒருத்தியாய் இருந்து அடைபட்டுக்கிடக்க வேண்டியதுதான் கடமைபோல் இருக்கிறது?

இராஜன்: ஒரு பெண் தனிமையில் இருந்து வாழ்க்கை நடத்திக் கொள் ளட்டுமே, யார் வேண்டாம் என்கின் றார்கள்? பெண்கள் தாமாகத்தானே யாருக்காவது ஒருவனுக்கு வாழ்க்கைப் படவேண்டும் என்று துடிக்கிறார்கள். அவர்கள் பெற்றோர்களும் வயது வந்துவிட்டதே என்ன செய்வது? யார் தலையிலாவது கட்டிவிடவேண்டுமே, இல்லாவிட்டால் கெட்டபெயர் வந்து விடுமே என்று கவலைப்படுகிறார்கள். அதற்கேற்றபடியே கல்வி இல்லாமலும் தொழில் பழக்காமலும் வளர்க்கிறார்கள். அப்படிப்பட்ட பெண்ணைக் கட்டிக் கொள்ள வருபவனும் தனக்கு அடிமை தொழில்செய்ய ஒரு ஜீவன் வேண்டும் என்று கருதியே பெண்ணைத் தேடுகிறான். அதோடு இவள் பெறுகின்ற குழந்தை களுக்கும் இவளுக்கும் வாழ்விற்கு வேண்டியதை எல்லாம் தன் பொறுப்பில் ஏற்றுக் கொண்டு செய்கிறான். இதற்கு மேல் அடிமை புகுந்தவளுக்கு எஜமானன் வேறு என்ன செய்ய முடியும்? தான் தேடிய சொத்துக்களையும் அடிமைபெற்ற குழந்தைகளுக்கே வைத்துவிட்டுப் போ கிறான். இன்னும் என்னதான் செய்ய வேண்டும் என்று சொல்லுகிறாய்?

இராமன்: நீ சொல்லுவதைப் பார்த்தால் பெண்களைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டாம் என்கிறாய்போல் இருக்கிறது. கல்யாணம் செய்துகொண்டால் அடிமை யாய்த்தான் இருக்க வேண்டும் என்கின் றாயாக்கும்?

இராஜன்: நான் அப்படிச் சொல்ல வில்லை; இயற்கை அது. கொடுப்பவன் கை மேலாகவும், வாங்குபவன் கை கீழாகவும்தான் இருக்கும். கல்யாணம் இல்லாமல் இருந்தால் என்ன முழுகிப் போய் விடும். மலையாளத்தில் சில இராணிகளும் ஜமீன்தாரணிகளும் சம் பளம் கொடுத்து புருஷன்மார்களை வைத்துக்கொண்டு இருக்கிறார்களே, அவர்கள் கவுரவம் குறைந்துபோய் விட்டதா? அல்லது சமுதாயத்தில் குறை கூறுகிறார்களா? அவ்வளவுதூரம் போக உன்னால் முடியாவிட்டால் பெண்களை நன்றாய்ப் படிக்கவைத்து அல்லது ஏதாவது ஒரு தொழிலில் அமர்த்தி, 25 வருடம்வரை கல்யாணப் பேச்சு பேசாமல் 25 முதல் 30 வயதிற்குள் அந்தப் பெண்ணையே தனக்குப் பிடித்த வனை ரிஜிஸ்டர் கல்யாணம் செய்து கொள் ளும்படி செய். வாழ்க்கைக்கு (அன்ன வஸ்திரத்துக்கு) புருஷன் கையை எதிர் பார்க்காமல் செய். அப்போது பெண் விடுதலை வேண்டி இருக்குமா அல்லது ஆண் விடுதலை வேண்டி இருக்குமா? அல்லது இருவரும் தங்களை ஒருவருக் கொருவர் கட்டுப்படுத்திக் கொள்வார் களா என்று பார்!

 - விடுதலை நாளேடு, 28 .9 .19

புதன், 25 செப்டம்பர், 2019

பிற இதழ்களின் கருத்து



இவ்வாறு பெரியார் முன்வைத்த கல்விச் சிந்த னைகளின் தொகுப்பு, ‘கல்விச் சிந்தனைகள் பெரியார்’ புத்தகம். எழுத்தாளர் அ.மார்க்ஸ் தொகுத்து, பாரதி புத்தகாலயம் வெளியிட்ட புத்தகம் இது.

கற்க ஆசை இல்லையா?

2019-ஆம் ஆண்டிலிருந்து 1931 காலகட்ட இந்தி யாவுக்கு ‘இன்றைய கல்வி நிலை’ என்ற அத்தியாயம் நம்மை அழைத்துச் செல்கிறது. 87 ஆண்டுகளுக்கு முன்னால் ஈரோடு மகாஜனப் பள்ளியில் இதே நாளில் பெரியார் ஆற்றிய உரை அது. அன்று இந்தியாவின் மக்கள்தொகை 35 கோடி. அவர்களில் பாதிப் பேர் பெண்கள் என்ற நிலையில் 100-க்கு

99.5 பெண்கள் எழுத்தறிவற்றவர்கள். 7 கோடி தாழ்த்தப்பட்ட மக்கள் ஜாதிய அடிப்படையில் கல்வி மறுக்கப் பட்டவர்கள். சில சமூகப் பிரிவினர் மட்டுமே கல்வி பெற முடிந்தது. அப்படிப் படித் தவர்கள் மத்தியிலும் மூடநம்பிக்கை நீங்கவில்லை.

இத்தகைய காலகட்டத்தில் கல்வி குறித்த விழிப்புணர்வைப் பெண் களுக்கும் ஜாதிரீதியாகப் பின்னுக்குத் தள்ளப்பட்ட மக்களுக்கும் ஏற்படுத்த நுட்பமான பல கேள்விகளை அன்றைய உரையில் எழுப்பினார் பெரியார். “இந்தியாவில் 100-க்கு 90 பேர் தற்குறியாக இருப்பது ஏன்?, அரசாங்கம் நமக்குக் கல்வி கற்றுக்கொடுக்கவில்லையா?, அரசாங்கத்திடம் பணமில்லையா?, மக்களுக்குக் கல்வி கற்க வேண்டும் என்கிற ஆசை இல்லையா? என்பவைகளைக் கவனித்தோமானால் ஏன் மக்கள் கல்வி கற்கவில்லை என்பது விளங்கும்” என்றார்.

கேள்வியைப் புரிந்துகொள்வது என்பதே பாதி விடையைக் கண்டு பிடித்ததற்குச் சமம் என்று தத்துவ அறிஞர் சாக்ரடீஸ் குறிப்பிட்டார். அவ்வாறே பெரியார் அன்று எழுப்பிய கேள்விகள் பெண்களையும் தாழ்த்தப்பட்ட மக்களையும் விடை தேட உந்தித்தள்ளின.

நோக்கம் என்ன?

இந்தக் கேள்விகளோடு நின்று விடாமல் கல்வியின் நோக்கம் என்ன என்ற தொலைநோக்குப் பார்வை கொண்ட கேள்வியையும் தன்னுடைய உரையில் எழுப்பினார் பெரியார்.

சுயசார்போடும் சுய அறிவோடும் சுதந்திரமாக வாழ்வதற்கு ஒருவரைத் தகுதிப்படுத்துவதே கல்வி. நல்வாழ்க்கை வாழ்வதற்குத் தயார்படுத்துவதே கல்வி. இப்படித் தான் கல்வி கற்பவர்களும் கற்பிப் பவர்களும் காலங்காலமாகச் சொல்லிக் கொண்டி ருக் கிறார்கள். ஆனால், “கல்வியின் பயன் இந்த லட்சியத் தோடு பொருந்திப் போகிறதா?” என்று கேட்டார். இதிகாசங்கள், புராணங்களைக் கற்பித்து மதத்தைக் கல்வியில் கலப்பதால் பகுத்தறிவுக்குப் பாதகம் ஏற்படும். அங்கு அச்சமும், மூடநம்பிக் கையுமே கையோங்கும். சுயசிந்தனை தழைக்கவே தழைக்காது என்று தெளிவுபடுத்தினார்.



பெண்ணுக்கு இருபாலர் கல்விக்கூடம்

1972-ல் மன்னார்குடி வடச்சேரியில் பெண் கல்வி குறித்துப் பெரியார் ஆற்றிய உரை இப்புத்தகத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. பெண் கல்வி, வாழ்க் கைத் தரம், திருமண உரிமை உள்ளிட்டவற்றில் 30 ஆண்டுகளாகப் பெரியார் மேற்கொண்ட முயற்சி களுக்குச் சட்ட வடிவம் கிடைக்கப்பெற்ற காலகட் டத்தில் ஆற்றிய உரை இது. உதாரணத்துக்கு, பலதார மணம் செய்வது சட்டப்படி குற்றம் போன்ற சட் டங்கள் உருவெடுக்கக் காரணம் பெரியாரின் இடைவிடாத போராட்டமே.

இப்படிப் பெண்ணின் அடிப்படை உரிமை களைப் போராடிப் பெற்றுத் தந்த பிறகு, அடுத்த கட்டமாக இரு பாலர் கல்வியின் முக்கியத் துவத்தை அழுத்தந்திருத்தமாக, ‘பெண்களுக்குத் தனிக் கல்லூரி வேண்டாம்’ என்ற பரப்புரை மேற் கொண் டார் பெரியார். “ஆண்களும் பெண்களும் ஒரே பள்ளியில், கல்லூரிகளில்தான் படிக்க வேண்டும். அப்பத்தான் சமத்துவம் வளரும் எல்லாவிதமான வேலைகளுக்கும் தொழில்களுக்கும் பெண்கள் பக்குவம் உடையவராக இருபாலர் கல்வி கை கொடுக்கும்” என்றார். 21-ஆம் நூற்றாண்டில் முன்னிறுத் தப்படும் வளர்ச்சி என்ற கருதுகோளை அன்றே விளம்பினார் பெரியார். “சமூகத்தின் சரிபாதியான பெண்களும் முன்னேறினால்தான் நாடும், சமு தாயமும் முன்னேற்றம் காணும்” என்றார்.

உதவித்

தொகைக்குக் குரல்

ஜாதிய ஏற்றத்தாழ்வு முறை, பெண் அடிமைத் தனம், மூட நம்பிக்கைகள் ஆகியவற் றுக்காக இந்தியர்களை கடுமை யாக விமர்சித்தவர் பெரியார். அதேநேரத்தில் கல்வியில் முன்னேற்றம் கண்ட பகுதி களைத் தேடி அடையாளம் கண்டு அவற்றைக் குறித்துப் பாராட்டி எழுதினார், பேசினார்.

அன்றைய காஷ்மீர் மகா ராஜா தனது சமஸ்தானத்துக்கு உட்பட்ட ஒடுக்கப்பட்ட மக்க ளுக்குக் கல்வி, கல்வி உதவித் தொகை, வேலை வழங்கி அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியதைப் பாராட்டி 1930-ல் ‘குடி அரசு’-வில் ‘தீண்டப் படாதாரும் கல்வியும்’ என்ற கட்டுரை யில் எழுதினார் பெரியார். நாட்டின் பிற பகுதிகளில் இதைப் பின்பற்ற வேண் டும், அதுவே ‘மனித உரிமை’ என்று 1930-களிலேயே குரல் கொடுத்தார்.

கல்வி உதவித்தொகைத் திட்டத் தைத் தமிழ் அரசாங்கம் உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தினார். அப்படிச் செய்தால் மட்டுமே ஏழ்மை யில் வாடும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் சந்ததியினர் பாடசாலைகளை நோக்கி முன்னேற முடியும் என்று விளக்கினார். விளிம்பு நிலை குழந்தைகளுக்கு ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களே ஆசிரியர் களாகக் கல்வி கற்பிக்கும் நடவ டிக்கையை அரசு எடுக்க வலியுறுத் தினார். அதற்காக ‘தீண்டாமை ஒழிப்பு கமிட்டி’யைப் பெரும்பான்மையாக அவ்வகுப்பினர் களைக்கொண்டே ஏற்படுத்த அறிவுறுத்தினார்.

இதேபோன்று, 1965-இல் ‘விடுதலை’ இதழில் ‘கல்வியில் ஒதுக்கீடு’ என்ற தலையங்கத்தில் ஜாதிவாரியாகக் கல் வியில் இட ஒதுக்கீடு செய்ய வேண் டியதன் அவசியத்தை டாக்டர் அம் பேத்கரை மேற்கோள்காட்டி விவரித் தார். நெடுங்காலமாகக் கல்வி மறுக்கப் பட்டவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலான கல்வி வழங்கும் சமத்துவப் பாதையை அகலப்படுத்த வலியுறுத்தினார்.

மும்மொழி பார்வை

இந்தி, தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளை எப்படி அணுக வேண்டும் என்று பல கட்டுரைகளில் விவாதித் திருக்கிறார். இவற்றை வாசிக்கையில் இந்தி மொழியை அவர் எதிர்க்கவில்லை, அதை வைத்து நடத்தப்படும் கலாச்சாரத் திணிப்பைத்தான் எதிர்க்கிறார் என்பது தெளிவாகிறது. அதேபோல தமிழ் மொழியை வளர்ப்பதன் முக்கியத் துவத்தைப் பற்றி பேசும்போது “வளர்ப்பது என்றால் என்ன?” என்ற கேள்வியை 1948-இல் ‘விடுதலை’ இதழில் வெளி யான ‘ஏன் நமக்கு ஆங்கிலம் வேண்டும்’ என்ற கட்டுரையில் எழுப்பினார்.

அதற்கு, “தமிழை வளர்ப்பதென் றால் புராணக்கதைகளை, பிரச்சாரம் செய்வதல்ல. தமிழ் மொழியை விஞ்ஞானத்துறையில் புகுத்தித் தமிழ் மொழி வழியாகவே புதிய உலகைக் காணும் வழி வகுத்தல் வேண்டும். இன்று உலகில் அவ்விதத் தன்மையுடைய மொழி நமக்கு ஆங்கிலம் ஒன்றைத் தவிர வேறில்லை என்றே கூறுவேன்” என்று எழுதினார். கூடுமானவரை மதம் நீக்கப்பட்ட மொழி ஆங்கிலம் என்றார் பெரியார். ஆகையால் ஆங்கில ஏகாதி பத்திய முறையை எதிர்த்த அதே வேளையில் ஆங்கில மொழியை வரவேற்றார்.

அறிவியல்பூர்வமான நோக்கில் கல்வித் திட்டம் வடிவமைக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலி யுறுத்தினார். சிலருக்கு மட்டுமே என்று இருந்த பாடசாலைகளை எல்லாருக்கு மானதாக்க இடைவிடாது போராடினார். மொழி, சட்டம், பண்பாடு ஆகிய தளங்களில் மட்டுமின்றிக் கல்வியிலும் சாதி ஒழிப்பையும் மதச்சார்பின் மையையும் வலியுறுத்தினார். எல்லா வற்றுக்கும் மேலாக அன்று அவர் எழுப்பிய அநேகக் கேள்விகள் ஒரு நூற்றாண்டு கடந்தும் உயிர்ப்புடன் நின்று நம்மைச் சிந்திக்கத் தூண்டு கின்றன.

கல்விச் சிந்தனைகள்

‘பெரியார்’

தொகுப்பு: அ. மார்க்ஸ்

பாரதி புத்தகாலயம்,

தொலைபேசி: 044-24332424

156 பக்கங்கள்

விலை ரூ.130/-

நன்றி: 'இந்து தமிழ்திசை' 17.9.2019

தந்தை பெரியார் ஓர் உலகக் குடிமகன்




ச.வீரமணி


1879 செப்டம்பர் 17 அன்று  ஈரோட்டில் பிறந்த, தந்தை பெரியார், 1973 டிசம்பர் 24 அன்று சென்னையில் உயிர்நீத்தார். அவர் வாழ்ந்த காலம் 94 ஆண்டுகள் 3 மாதங்கள் 7 நாட்கள். அதாவது 34 ஆயிரத்து 433 நாட்கள். இப்போதிருப்பது போல வசதியான போக்குவரத்து வசதிகள் இல்லாத அந்தக் காலத்திலேயே சுமார் 8600 நாட்கள் சுற்றுப்பயணத்திலேயே செலவு செய்தார். சுமார் 13 லட்சத்து 12 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்தார். அந்தப் பயணத்தில் அவர் பங்கு கொண்ட நிகழ்ச்சிகள் பத்தாயிரத்து எழுநூறு ஆகும். அவற்றில் அவர் கருத்துரைகள் ஆற்றிய நேரம் சுமார் 21 ஆயிரத்து 400 மணி நேரமாகும்.  இந்தச் சொற்பொழிவை ஒலிநாடாவில் பதிவு செய்து,  அது ஒலிபரப்பப்பட்டால் இரண்டு ஆண்டுகள் 5 மாதங்கள் 11 நாட்கள் இரவு பகலாகத் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும். இவருக்கு முன்னர் வேறெந்தத் தத்துவ ஞானியும் இவ்வளவு நீண்ட நாட்கள் மக்களிடையே சொற்பொழிவு ஆற்றியதில்லை எனலாம். அதனால்தான் யுனெஸ்கோ என்னும் அய்க்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் கீழ் உள்ள கல்வி அறிவியல் மற்றும் பண்பாட்டு மன்றம், ‘‘பெரியார் புதிய உலகத்தின் தீர்க்கதரிசி, தென்கிழக்கு ஆசியக் கண்டத்தின் சாக்ரடீஸ், சமுதாய சீர்திருத்த இயக்கத்தின் தந்தை! அறியாமை, மூட நம்பிக்கை, அர்த்தமற்ற வழக்கங்கள், ஆதாரமற்ற நடப்புகள் ஆகியவற்றின் கடும் எதிரி” என்று 1970 ஜூன் 27 அன்று பட்டயம் வழங்கியது.

‘‘மனிதன் எவனும் தானாகவே பிறக்கவில்லை, ஆகவே அவன் தனக்காகவும் பிறக்கவில்லை. மனித வாழ்க்கை என்பது மக்கள் சமுதாயத்துக்குத் தொண்டு செய்வதேயாகும். தொண்டு செய்யாத மனித வாழ்வு என்பது மிருக வாழ்க்கைக்குச் சமமானதேயாகும்’’ என்று அறுதியிட்டு உறுதிபடக் கூறினார். தமிழ் மக்களிடையே சுயமரியாதை உணர்வுகளை விதைக்க வேண்டும், சுயமரியாதை உணர்வுகளை வளர்க்க வேண்டும் என்ற கருத்தில் ஈ.வெ.ரா. ‘குடிஅரசு’ என்னும் வாரப் பத்திரிகையைத் தொடங்கினார். இவரது அச்சகத்துக்கு, ‘உண்மை விளக்க அச்சகம்’ எனப் பெயரிட்டார். ‘‘மக்களுக்குள் சுயமரியாதையும், சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி வளர வேண்டும். உயர்வு - தாழ்வு என்னும் உணர்ச்சியே, நமது நாட்டில் வளர்ந்து வரும் ஜாதிச்சண்டை என்னும் நெருப்புக்கு நெய்யாக இருப்பதால் இவ்வுணர்ச்சி ஒழிந்து அனைத்துயிர்களும் ஒன்றென்று எண்ணும் உண்மை அறிவு மக்களிடம் வளர வேண்டும்’’ என்ற நோக்கங்களை குடிஅரசு அடிப்படையாகக் கொண்டிருந்தது.

பெரியார் துவக்கி வைத்த சுயமரியாதை இயக்கம் சொல்வது என்ன? சமூக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு - தாழ்வும் இருக்கக் கூடாது. மனித சமூகம் பொருளாதாரத் தன்மையில் ஏழை - பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வுகள் இல்லாமல் எல்லாப் பொருளும் பூமியும் எல்லாருக்கும் சரிசமமாக இருத்தல் வேண்டும். மக்கள் சமூகத்தில் ஆணுக்கும் - பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல் சகல துறைகளிலும் சமத்துவம் இருக்க வேண்டும். மனித சமூகத்தில் ஜாதி,  மதம்,  தேசம், வருணம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமூக ஒற்றுமையே நிலவ வேண்டும். உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் உயர்வு தாழ்வு இல்லாமல் சமூகத்தின் தேவைகளுக்கு, சகல மனிதர்களும் பாடுபட்டு அவற்றின் பயனைச் சரிசமமாக அனுபவிக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் எவற் றுக்கும் எவ்விதத்துக்கும் அடிமையாகாமல் அவரவர் அறிவு, ஆராய்ச்சி, காட்சி, உணர்ச்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்க சர்வ சுதந்திரம் இருக்க வேண்டும். பெரியாரின் இந்தக் கொள்கைகளே அவர் நடத்திய ஒவ்வொரு போராட்டத்துக்கும் ஒவ்வொரு நடவடிக் கைக்கும் அடிப்படையாகும்.

சுயமரியாதை இயக்கத்திற்காக தந்தை பெரியார், ‘ரிவோல்ட்’ என்னும் ஆங்கில இதழையும் நடத்தி வந்தார். ரிவோல்ட் என்ற ஆங்கில வார்த்தைக்குக் கட்டுப்பாட்டைத் தகர்த்தல் என்று பொருள். மனித இயற்கைக்கும் அறிவுக்கும் முரணான கட்டுப்பாட்டைத் தகர்ப்பதும் உலகமும் அதன் இன்பமும் எல்லாருக்கும் பொது என்பதும் அதன் நோக்கங்களாக இருந்தன. மக்கள் யாவரும் சமம் என்ற கொள்கையை மனச்சாட்சிப்படி சாத்தியமான வழிகளில் பிரச்சாரம் செய்வதே இப்பத்திரி கையின் நோக்கம் என்று பெரியார் பிரகடனம் செய்தார். குடியரசு இதழை ஆங்கிலேயர் ஆட்சி 1933ஆம் ஆண்டில் தடை செய்தது. அப்போது அதற்கு மாற்றாக நவம்பர் 20ஆம் நாளன்று ‘புரட்சி’ என்னும் வார ஏட்டினைத் தொடங்கினார்.

அதன் முதல் இதழில் பெரியார், ‘‘குடிஅரசை ஒழிக்கச் செய்த முயற்சியில் புரட்சி தோன்ற வேண்டியதாயிற்று. உண்மையிலேயே பாமர மக்களின் அதாவது பெரும்பான்மையான மக்களின் ஆட்சியாகிய குடிஅரசுக்கு உலகில் இடமில்லையானால் கண்டிப்பாய் புரட்சி தோன்றியேதான் ஆகவேண்டும். அந்த அய்தீகப்படியே புரட்சி தோன்றியிருப்பதால், புரட்சியில் பற்றுள்ள மக்கள் யாவரும் புரட்சியை வரவேற்பார்கள். பாடுபட்டு ஊரானுக்குப் போட்டு விட்டுப் பட்டினியாகவும், சமூக வாழ்வில் தாழ்மையாகவும் வாழும் மக்களின் ஆதரவையே ‘புரட்சி’ எதிர்பார்த்து நிற்கிறது. வெள்ளை முதலாளிகளை ஒழித்துக் கருப்பு முதலாளிகளைக் காக்கும் வேலைக்காக இன்று ‘புரட்சி’ வெளிவரவில்லை. அல்லது வெள்ளை ஆட்சியை ஒழித்துக் கருப்பு ஆட்சியை ஏற்படுத்த ‘புரட்சி’ தோன்றவில்லை. அதுபோலவே இந்து மதத்தை ஒழித்து, இஸ்லாம், கிறிஸ்து மதத்தைப் பரப்ப ‘புரட்சி’ தோன்றவில்லை. ‘சகல முதலாளி வர்க்கமும், சகல சமயங்களும் அடியோடு அழிந்து மக்கள் யாவரும் சுயமரியாதையுடன் ஆண் - பெண் அடங்கலும் சர்வ சமத்துவமாய் வாழச் செய்ய வேண்டும் என்பதற்காகப் ‘புரட்சி’ தோன்றியிருக்கிறது எனக் குறிப்பிட்டிருந்தார்.

பின்னர் ‘புரட்சி’ ஏடும் நிறுத்தப்பட்டு, ‘பகுத்தறிவு’ வார ஏட்டைத் துவக்கினார். இதன் முதல் இதழில், ‘‘மனித சமூகத்தால் மவுடீகத்தால் ஏற்பட்ட துரபிமானங்களை கடவுள், ஜாதி, மதம், தேசம், நான், எனது என்பன போன்ற அபிமானங்களை அறவே ஒழித்து, மனித சமூக ஜீவா பிமானத்தையும், ஒற்றுமையையும், பிரதானமாய்க் கருதி உழைத்து வரும் என்றும், ‘பகுத்தறிவு’ மனித ஜீவா பிமானத்திற்கு மக்களை நடத்திச் செல்லுமேயொழிய எக்காரணம் கொண்டும், மக்கள் பின் நடந்து செல்லும் படியான அடிமை வாழ்வில் உயிர் வாழாது’’ என்றும் பெரியார் குறிப்பிட்டிருந்தார்.

பின்னர், 1935ஆம் ஆண்டு ஜூன் முதல்நாள் ‘விடுதலை’ தொடங்கப்பட்டு இன்றளவும் நடந்து வருகிறது. இவ்விதழின் முதல் இதழில் பெரியார், ‘இப்பத்திரிகை நீடுழி வாழ்ந்து பாமர மக்களுக்கும், பண்டிதர்களுக்கும் பயன்பட்டு உலகமக்களுக்கு உண்மை விடுதலையைக் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்’ என்று குறிப்பிட்டிருந்தார். தன் வாழ்நாள் முழுதும் மக்கள் மேம் பாட்டிற்காகப் பல்வேறு இதழ்களையும், இயக்கங்களையும் கண்டவர் தந்தை பெரியார்.

ஓர் உன்னத மனிதாபிமானியாக, ஓர் உன்னத உலகக் குடிமகனாக மாபெரும் புரட்சியாளராக வாழ்ந்திட்ட தந்தை பெரியார் அவர்களை தமிழ்கூறும் நல்லுலகம் மட்டும் அல்ல, உலகமே என்றென்றும் நினைவு கூரும்.

நன்றி: 'தீக்கதிர்', 17.9.2019

 - விடுதலை நாளேடு, 22 .9 .19

 


நம் திருமண முறை எது?

16.12.1944  -குடி அரசிலிருந்து....

மணமக்களே! தாய்மார்களே!! தோழர்களே!!!

இத்திருமணத்திற்கு நான் வரவேண்டும் என்று 2 மாதமாக தோழர் ஆதிநாராயணன் விரும்பினார். நான் சென்றவாரம் முழுவதும் தஞ்சை ஜில்லாவில் சுற்றுப் பிரயாணம் செய்த அலுப்பாலும், சிறிது காய்ச்சல் இருந்த தாலும் வாராமல் நின்று விடலாம் என்று கருதினேன். ஆனால் சேலம் மாநாட்டின் தீர்மானத்தின்படி இராமநாதபுரம் ஜில்லா வின் விகிதமான குறைந்த அளவு 1000 மெம்பர்கூட திராவிடர் கழகத்திற்கு அதாவது ஜஸ்டிஸ் கட்சிக்கு சேர்க்கப்படாமல் இருப்பதால் இதைப்பற்றி கவனித்துப்போக இதை சந்தர்ப்பமாகக் கொண்டு இவ்வளவு அசவுகரியத்தில் இங்கு வந்தேன்.

நீங்கள் அது தெரிந்து நான் இங்க வந்ததுமே 216 அங்கத்தினர்கள் இரசீதும், இதற்கு சந்தா ரூ. 27-4-0 கொடுத்து இந்த ஜில்லாவிற்கு கோட்டா சேர்க்கப்பட வேண் டிய (விகிதம்) 1000க்கும் மேலாகவே ஆக் கப்பட்டு வெளியிடும்படியாக செய்துவிட்ட தால், என்னுடைய சுற்றுப் பிரயாண அலுப்பும், காய்ச்சலும், பலவீனமும் எங்கே யோ போய்விட்டது. அதற்காக உங்களுக்கு நன்றி செலுத்துகிறேன். ஆனால் இவ்வள வோடு நின்றுவிடாமல் இதை ஜில்லாவுக்கு 5000 மெம்பர்களாவது சேர்க்கப்பட வேண்டும். செட்டி நாட்டிலும் விருதுநகரிலும் தீவிரமாக அங்கத்தினர் சேர்க்கப்படுவது கேட்டு நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள்.

மற்றும், நாம் எந்த தேர்தலில் வெற்றி பெற நினைத்தாலும், ஏன்? அபேட்சகராய் நிற்க நினைப்பதானாலும் அத்தொகுதி ஓட்டர்கள் எல்லோருக்கும் அங்கத்தினர்களாகச் சேர்க்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதுதான் நமது கட்சியின் உண்மையான பலத்திற்கு ஆதாரமாகும். மற்றபடி பொது உடைமையும், போலி சுயராஜ்ஜியத்தையும், மதமூட நம்பிக்கையையும் பாமர மக்களிடம் சொல்லி ஏமாற்றி ஓட்டு வாங்குவதோ அல்லது சர்க்காரைக் கெஞ்சி பதவி பெறுவதோ இனி ஆபத்தாகவும், தற்கொலை யாகவும், பயனற்றதாகவும், பரிகசிக்கத்தக்க தாகவும்தான் முடியும். அன்றியும் அதனால் சில தனிப்பட்டவர்கள் சுயநலம் அடைய லாமே ஒழிய, ஓட்டுக் கொடுத்த ஓட்டர்களுக்கு ஒன்றும் செய்ய முடியாது, ஆதலால் கூடுமானவரை வயது வந்தவர்களையெல்லாம் அங்கத்தினர்கள் ஆக்க முயற்சி செய்யுங்கள்.

திருமணம்

இத்திருமணத்தில் நான் என்ன புதிதாகப் பேசப் போகிறேன். இந்த முறை திருமணம் இப்போது நாட்டில் சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது. அதிலும் இந்த நாடார் சமு தாயத்தில் இதுவே முறையும் உரிமையுமாக ஆகிவிட்டது. ஆதலால் இந்தத் திருமண முறையைப் பற்றி என்ன பேசுவது என்பது தோன்றவில்லை. பொதுவாகவே திருமணம் என்பதற்கு எந்த முறை தகுதியானது என்று சொல்லுவதற்கு ஒரு முறையுமே கிடையாது. ஏதோ பழக்க வழக்கம் பெரியோர் நடந்தது என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்ல முடியாது! அதிலும் திராவிடர்களாகிய நமக்கு எந்தமுறை இருந்தது, எது சரி என்று எடுத்துக்காட்ட ஒன்றுமேயில்லை. புல வர்கள் ஏதாவது பிதற்றலாம், ஆனால் அது அவர்களுக்கே புரியாததாகத்தான் இருக்கும்.

திருமணத்தின் அவசியம்

இந்த உலகத்தில் சொத்தைப் பற்றியும், மேல் உலகம் என்பதில் மோட்சம் என்பதைப் பற்றியும் லட்சியம் இல்லாவிட்டால் திருமணம் என்பதாக, வாழ்க்கை ஒப்பந்தம் என்பதாகக்கூட எதுவும் தேவையில்லை. நாம் தேடிய சொத்துக்கு நாம் பெற்ற பிள்ளை இருக்க வேண்டும் என்பதே திருமணத்தின் முக்கிய நோக்கமாகும். அதற்கும் அந்தந்த சமுதாயப்படி சொத்தை அனுபவிக்க சிலருக்கு ஆண் பிள்ளை வேண்டும், சிலருக்கு பெண்பிள்ளை வேண்டும். தேவதாசிகளும், மறுமக்கட்தாயம் உள்ளவர்களும், தங்கள் சொத்துக்குப் பின் சந்ததியாக உரிமைக்கு பெண் குழந்தைகள் பெறவும், இல்லாவிட்டால் பெண்குழந்தையை தத்துக்கு எடுக்கவும் ஆசைப்படுகிறார்கள்; மற்றவர்கள் நம் போன் றவர்கள் ஆண் குழந்தை பெறவும், பிறக்கா விட்டால் ஆண்குழந்தைகளைத் தத்து எடுத்துக் கொள்ளவும் செய்கிறோம். இதற் காகவேதான், திருமணம் பெரிதும் சடங்காக, ஒப்பந்தமாக, பதிவாக சட்டத்திற்குள் அடங்கியதாகச் செய்ய வேண்டியிருக்கிறது. இந்த நிலை மாறிவிட்டால் திருமணம் என்கின்ற வார்த்தையே மறைந்துபோகும்.

அதனால்தான் நான் இந்த முறைகூட முடிந்த முடிவல்ல என்று அடிக்கடி சொல்லி வருகிறேன். இனி 40, 50 வருஷங்கழிந்த பின்பு  அதாவது இந்த சொத்து முறைகள் மாறி பொது உடைமைமுறை வந்து தாண்டவ மாடும்போது இந்த முறைகூட இருக்காது என்பதோடு இதை ஒரு மூட நம்பிக்கை; காட்டுமிராண்டிக் காலமுறை என்று சொல்ல வேண்டி வரும் என்பதோடல்லாமல் இன்று உங்களில் பலரால் புரட்சிக்காரன் என்று கூறப்படுகிற என்னை ஒரு மூட நம்பிக் கைக்காரனான வைதிகப்பிடுங்கல் இராம சாமி என்று ஒருவன் இருந்தான் என்று என்னை உங்கள்  பிள்ளைகள் பேரன்மார்கள் சொல்லும்படியான  நிலைகூட வந்துவிடும் என்று நான் சொல்லுவதுண்டு.

நம் திருமண முறை ஏது?

ஆகையால் திருமணத்திற்கு ஒரு கட்டுப் பாடுதான் வேண்டியிருக்கிறதே ஒழிய, முறை ஒன்றும் இன்று தேவையில்லை இங்கு கட்டுப்பாடே வேண்டாத காலம் வருமென் றால் முறை வேண்டிய காலம் எதற்காக வேண்டியிருக்கும்? ஒரு சமயம் கட்டுப்பாடு வேண்டியதில்லை என்கின்ற தன்மை நடைபெற, கட்டுப்பாடும் முறையும் வேண் டியதாக இருக்கலாம். இன்று நாமாகிய திராவிடர்களுக்கு நம்மைப் பற்றிய சரித் திரமும், நம் நாட்டைப் பற்றிய தன்மை களும்கூடத் தெரியவில்லையானால், நம் திருமணத்திற்கு என்ன முறை சிறந்தது என்று எப்படிக் கண்டுபிடிக்க முடியும்? அப்படித்தான் ஒன்று இருந்திருந்தாலும் அதைப் பற்றி இன்று பேசுவது எப்படி அறிவுடைமையும், பொருத்தமுடையது மாகும்? இன்று நாம் எலக்ட்டிரிக் (மின்சார) விளக்கு வெளிச்சத்தில் இருந்துகொண்டு, திராவிடர்களுக்கு முன்காலத்தில் விளக்கு எப்படி இருந்தது என்று ஆராய்ச்சி செய்தால், அது பழங்காலத்து மக்களுக்கு இருந்த அறிவைப்பற்றி, குறிக்க உதவுமே தவிர அதைப் பயன்படுத்த முடியுமா? நாம் ஆகாயக் கப்பலில் பறந்து கொண்டு பழங்கால திராவிடர் எப்படிப் பிரயாணம் செய்தார்கள் என்று கண்டுபிடிக்க ஆராய்ச்சி நடத்தினால் அது பழங்கால மக்கள் தன்மையை அறிந்து கொள்ள முடியுமே தவிர, அந்தக் காலத்து வாகனத்துக்குப் போக முடியுமா?

 

- விடுதலை நாளேடு 21. 9. 19

பாப்பாத்தி மொட்டையடிக்கிறாளா? பார்ப்பான் காவடி தூக்குகிறானா?

05.06.1948  - குடிஅரசிலிருந்து




கடவுள் என்றால் கல், களிமண், புல், பூண்டு, செடி, கொடி, கழுதை, குதிரை, சாணி, மூத்திரம் இத்த னையும் கடவுளா? கடவுள் என் றால் அறிவுக்குக் கட்டுப் பட்டதாக இருக்க வேண்டாமா? திருப்பதிக் குப் போய் மொட்டை யடித்துக் கொண்டு வருகிறீர்களே!

சாமி மயிரா கேட்கிறது? எந்தப் பார்ப் பனத்தியாவது திருப்பதிக்குப் போய் மொட்டையடித்துக் கொண்டு வருகிறாளா? இப்போது தாலியறுத்தால் கூட அவர்கள் மொட்டையடித்துக் கொள்வதில்லையே? மொட்டையடிக்கப்படும் என்று தெரிந்தால் அதற்கு முன்பே வீட்டை விட்டு யாருடனாவது ஓடி விடுகிறார்களே! அப்படி இருக்க உங்கள் மயிரைத்தானா சாமி கேட்கும்? உங்கள் கணவன்மாரைக் காவடி தூக்கிச் செல்ல அனுமதிக்கிறீர்களே அது தகுமா?

எந்தப் பார்ப் பானாவது பழனி ஆண்ட வனுக்குக் காவடி தூக்கிச் செல்வதைப் பார்த்திருக் கிறீர்களா? அய்ந்து புருஷர்கள் போதா தென்று 6 ஆவது புருஷனையும் விரும்பிய துரவு பதியம் மாளை போய்க் கும்பிடுகிறீர்களே!

அவளுக்கு மாவிளக்கு வைக்கிறீர்களே, உங்களுக்கு இன்னும் அதிகப்படியான புருஷர்கள் வேண்டுமென்று வரங்கேட்கவா, அந்தப்படி செய்கிறீர்கள்? திராவிடத் தாய் மார்களாகிய உங்களுக்கு அடுக்குமா இது?

(08.05.1948 அன்று  தூத்துக்குடியில்  நடந்த திராவிடர் கழக மாகாண மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு)


- விடுதலை நாளேடு, 28. 6 .19

கோயிலுக்குப் போகாதீர்!

குண்டர்களுக்கு பொருளை கொடுக்காதீர்


05.06.1948  - குடிஅரசிலிருந்து

இது அறிவு பற்றிப் பேசும் இடம். ஆகவே, நீங்களும் ஏதாவது அறிவு பெற்றுச் செல்ல வேண்டாமா? கொஞ்சம் காது கொடுத்துக் கவனத்தோடு கேளுங்கள். தாய்மார்களே! நீங்கள் தற்போது தழுவி நிற்கும் இந்துமத வருணாசிரம தர்மப்படி, நீங்கள் சூத்திரச்சிகள், பார்ப்பனனின் தாசிகள் என்பதை முதலில் உணர்ந்து கொள் ளுங்கள். கடவுள்களுக்கும் நீங்கள்தான் தாசிகள்.

எந்தக் கடவுளும் சூத்திரச்சிகளுடன்தான் லீலை செய்ததாகப் புராணக் கதைகள் கூறுகின்றனவே ஒழிய, எந்தக் கதையும் கடவுள் பார்ப்பனத்தி களோடு லீலை செய்ததாகக் கூறக்காணோம். கடவுள் அவதாரமெல்லாம் நம் பெண்களின் கற்பைத்தான் சோதித்ததாகக் கதைகளில் கூறப் படுகிறதே ஒழிய, நம்மவரின் பெண்களைத்தான் கைப்பிடித்திழுத்துக் கற்பழித்ததாகக் கூறப்படு கிறதே ஒழிய, எந்தக் கதையிலும் பார்ப்பனப் பெண், கடவுளால் கற்பழிக்கப்பட்டதாகக் கூறப்படக் காணோம். அவ்வளவு இழிவு படுத்திவிட்டார்கள் இந்த அன்னக்காவடி பார்ப்பனர்கள் நம்மை. இதை யறியாமல் நீங்கள் இன்னும் அவன் காலடியில் வீழ்ந்து காசு பணம் அழுது வருகிறீர்கள்.

இனி நீங்கள் ஒரு காசு கூட எந்தப் பார்ப்பானுக்கும் அழக்கூடாது. உங்கள் வீட்டு நல்ல காரியங்களுக்கோ, கெட்ட காரியங்களுக்கோ அவனை ஒரு நாளும் அழைக்கக் கூடாது. நீங்கள் கோயிலுக்குப் போகக் கூடாது. போவதாயிருந்தாலும் பார்ப்பான்தான் பூசை செய்ய வேண்டுமென்கிற கட்டுத்திட்டம் உள்ள கோயிலுக்கோ இரண்டு பெண்டாட்டி களைக் கட்டிக் கொண்டு, அதோடு ஒரு வைப்பாட்டியையும் வைத்திருக்கும் சாமி களுள்ள கோயிலுக்கோ, நீங்கள் கட்டாயம் போகக் கூடாது.

- " விடுதலை நாளேடு 28.6.19

செவ்வாய், 24 செப்டம்பர், 2019

திராவிடக் கட்சிகளை தூண்டிச் சுடர்விட வைக்கும் பெரியார்



Periyar is a ignition to Dravidian parities: மத்திய பாஜக அரசு ஏதேனும் இந்துத்துவ கொள்கை திட்டங்களை அறிமுகப்படுத்தும் போதெல்லாம் முதல் எதிர்ப்பு குரல் இந்தியாவின் தென் கோடியில் உள்ள தமிழகத்தில் இருந்துதான் எழும். அப்போதெல்லாம் இணையத்தில் பலராலும் பயன்படுத்தப்படும் வார்த்தை "இது பெரியார் மண்" என்ற வார்த்தைதான். தமிழகத்தில் தற்போது ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் பாஜகவுடன் கூட்டணி கண்ட கட்சிகள் என்றாலும் அவர்கள் முழுமையாக பாஜகவின் எல்லா நிலைப்பாடுகளையும் ஆதரிக்கும் நிலைக்கு செல்ல முடியவில்லை. அதற்கு காரணம் இந்த கட்சிகளின் உள்ளீடாக பெரியாரின் சிந்தனைகள் உள்ளன என்றால் அது மிகையல்ல. அதற்காக அவர்கள் பெரியார் கொள்கைகளை 100 சதவீதம் அப்படியே பின்பற்றி நடக்கிறார்கள் என்பது பொருளல்ல. பெரியார் வளர்த்தெடுத்த சில கருத்தியல்களும் நவீன தமிழக வரலாறும் திராவிட கட்சிகளின் நனவிலியாக இருந்து இயக்குகிறது என்பதை உணர முடியும்.

உதாரணத்திற்கு இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும், ஒரே மொழியாக இந்தி இருந்தால் உலக அளவில் இந்தியாவை அடையாளப் படுத்த முடியும் என அமித்ஷா தெரிவித்த கருத்துக்கு திமுக சார்பில் எதிர்ப்பு தெரிவித்ததோடு ஆர்ப் பாட்டமும் அறிவித்திருக்கிறது. திமுக இந்தியை எதிர்க்கும்போதெல்லாம் தமிழக பாஜகவினர் முன்வைக்கும் விமர்சனம் "திமுககாரர்கள் நடத்தும் பள்ளிகளில் எல்லாம் இந்தியை கற்பிக்கிறார்கள். ஆனால், அதை மத்திய அரசு கூறும்போது மட்டும் எதிர்க்கிறார்கள். போலியான இந்தி எதிர்ப்பு தமிழ்ப் பற்று வேஷம் போடுகிறார்கள்" என்பதுதான் அது. இப்படி அவர்கள் முரணாக இருந்தாலும், உண்மையில் அவர்கள் வேஷம் போடவில்லை. அவர்களை அப்படி பேச வைப்பது அந்த கட்சியின் நனவிலியாக பதிந்தி ருக்கும் தமிழக வரலாறும், பெரியார், அண்ணா ஆகி யோரின் கருத்தியல்களே அப்படி பேசவைக்கின்றன.

ஏதோ திமுகதான் இப்படி பாஜகவுக்கு எதிராக பேசுகிறதா என்றால் அதனுடன் கூட்டணியில் இருக்கிற அதிமுகவும் இந்த சூழலில் அதனால் முடிந்த அளவு அதன் எதிர்ப்பை மவுனமாகவேனும் முணுமுணுக்கத் தான் செய்கிறது. அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமனி தனது டுவிட்டர் பக்கத்தில், நாம் நேசிக்கும் நமது தாய் மொழி நமக்கு தாரக மந்திரமாக இருக்க வேண்டும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை. அதே நேரத்தில் பிற மொழிகளை கற்றுக் கொள்வது என்பதும் அவரவர் விருப்பமாகவே இருக்க வேண்டும். என்று தெரிவித்துள்ளார். இதைத்தான் திராவிட கட்சிகளின் நனவிலியாக உள்ள பெரியாரின் கருத்தியல்கள் என்கிறேன்.

பொதுவாக பெரியார் என்றாலே அவர் கடவுள் மறுப்பாளர் என்ற மிகவும் குறுகலான ஒரு வட்டத்தி லேயே பொதுச்சமூகம் அவரைக் காண்கிறது. ஆனால், பெரியாரின் பணிகள் பல பரிமாணங்களைக் கொண்டது. அடிப்படையில் பெரியாரும் அவர்கால திராவிட இயக்கத் தலைவர்களும் அய்ரோப்பிய வரலாற்றுத் தாக்கம் மிக்கவர்கள். அய்ரோப்பிய வரலாற்றில் நடந்த பிரெஞ்சுப் புரட்சி உலகுக்கு அளித்த கொடையான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கருத்தியல் செல்வாக்கு செலுத்திய யாதொன்றும் வலுப் பெற் றுள்ளன. அது போல, காங்கிரசுக்கு மாற்றாக உருவான திராவிட இயக்க தலைவர்கள் மத்தியில் அய்ரோப்பிய வரலாற்றுத்தாக்கமும் பிரெஞ்சுப் புரட்சி யின் கருத்தியல் தாக்கமும் இருந்ததை கவனிக்கலாம்.

தொடக்கத்தில் காங்கிரஸ்காரராக இருந்த பெரியார் காங்கிரஸ் எதிர்ப்பாளராகவும் இந்தி எதிர்ப்பாளராகவும் பிராமண எதிர்ப்பாளராகவும் மாறி அப்படியே அறியவும்படுகிறார். தமிழகத்தில் இந்தி மொழி எதிர்ப்பும், பிராமண எதிர்ப்பும் பெரியார் தொடங்க வில்லை என்றாலும் அவற்றை பரவலாக்கி உறுதிப்படுத்தியவர் பெரியார்தான். தமிழகத்தில் 19 ஆம் நூற்றாண்டில் பிராமண எதிர்ப்பு என்பது பறையர்களிடம் கலாச்சார அரசியல் அடிப்படையில் இருந்த நிலையில், 20 நூற்றாண்டின் தொடக்கத்தில் பிராமண எதிர்ப்பு என்பது பிராமணர் அல்லாத ஜாதிகளின் அதிகாரத்தை மய்யப்படுத்தி நீதிக்கட்சி உருவானது. காங்கிரசின் கொள்கைகள், பிராமண மேலாதிக்கத்தால் காங்கிரசை விட்டு வெளியேறும் பெரியார் இயல்பிலேயே பிராமண எதிர்ப்பாளராக மாறுகிறார். பின்னர், வாழ்நாள் முழு வதும் அவர் தீவிர பிராமண எதிர்ப்பாளராக இருந்தார்.

பெரியாரின் பிராமண எதிர்ப்பு என்பது பிராமண எதிர்ப்பு மட்டுமானது அல்ல. அது சூத்திரர்களின்அல்லது இடைநிலை ஜாதிகளின் அதிகாரத்தை வலியுறுத்துவது. அது இடைநிலை ஜாதிகள் மீது சுமத்தப்பட்டுள்ள சூத்திர பட்டத்தை ஒழிப்பதும் ஜாதியை ஒழிப்பதும் ஆகும். அதன் தொடர்ச்சியாகத்தான் பெரியார் ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு, இந்து மத எதிர்ப்பை முன்வைக்கிறார். மாநிலத்தில் பிராமணர் அல்லாதார் களின் அரசியல் எழுச்சியாக உருவான நீதிக்கட்சி வெற்றி பெற்று பின் தோல்வியடைந்த பிறகு அதற்கு ஆதரவாக இருந்த பிராமண எதிர்ப்பாளர்கள் பெரியாரிடம் (நபர்களாக குறிப்பிடவில்லை)  ஒரு அரூப அரசியல் அபிலாஷைகள் கொண்ட் சக்தியாக தஞ்சமடைந்தது. பிறகு, அது பெரியாரின் தலைமையில் பராமரிப்பில் தன்னை வலுப்படுத்திக்கொண்டு அண்ணா தலை மையில் மீண்டும் அதிகாரத்தை நோக்கி வெளியே சென்றது என்று கருத முடிகிறது.

இவ்வாறு பெரியார் "சூத்திரர்கள்" அதிகாரம் அடைந்ததற்கு காரணமாக இருந்தார். பெரியாரின் வழியில் அதிகாரம் அடைந்த திராவிடக் கட்சிகள்தான் தமிழகத்தை அரை நூற்றாண்டு காலமாக ஆட்சி செய்து வருகின்றன. அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா "பிராமணராக" இருந்தபோதும் அவருடைய அரசு பெரியாரின் ஊக்கம் பெற்ற  'சூத்திரர்'களான பிற்படுத்தப்பட்டவர்ளின் நலன்களை புறக்கணிக்க முடியாத அளவுக்கு ஒரு அரசாக இருந்தது.

பாஜகவினருக்கு வேண்டுமானால் பெரியாரின் கடவுள் மறுப்பு, இந்து மத மூடநம்பிக்கைகள் எதிர்ப்பு பிரச்சினையாக இருக்கலாம். ஆனால், ஆன்மீகத்தை விரும்பும் கடவுள் நம்பிக்கையுள்ள அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் பெரியாருடன் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஏனென்றால், பெரியார் இடைநிலை ஜாதிகளின் சூத்திரர்களின் இழிநிலை ஒழிய வேண்டும் என்றும் அதிகாரம் பெற வேண்டும் என்று வலியுறுத்தியவர் என்பதை அவர்கள் அறிவர். ஆனால், அவர்கள் தங்களிடம் குவிந்த அதிகாரத்தை அடுத்த நிலையில் உள்ள பட்டியல் ஜாதிகளுக்கு செல்லாமல் பார்த்துக்கொண்டனர். அவருடைய சுயமரியாதை இயக்கத்தின் சுயமரியாதை திருமணம், ஜாதி மறுப்பு திருமணத்தை தொடர்ந்து ஒரு இயக்கமாக கடைப்பிடித்து சமூக பழக்கமாக்காமல் அதற்கு ஒரு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளித்துவிட்டு அதை சமூக பழக்கமாகாமல் கைவிட்டார்கள்.

அதே போல, இந்திய அளவில் காந்தி தீண்டாமைக்கு எதிராக இந்து மதத்திற்குள் இருந்து தீண்டாதார் அல்லாதார் மக்களுடன் உரையாடல் நிகழ்த்தி தீண்டா மையை ஒழிக்கப் போராடினார் என்றால், தமிழகத்தில் பெரியார் இடைநிலை ஜாதிகளிடம் தீண்டாமை ஒழிப்பையும் ஜாதி ஒழிப்பையும் வலி யுறுத்தி இந்து மதத்தை விமர்சித்துப் பேசினார். பெரியாரின் ஜாதி ஒழிப்பு பிரச்சாரம் ஜாதியை ஒழிக்கா விட்டாலும் அது இடைநிலை ஜாதிகள் கடைப்பிடித்து வந்த கடினமான தீண்டாமை நடைமுறைகளை கைவிட வைத்தது. காந்திகூட தான் எல்லோருக்குமான பிரதிநிதியாக தன்னை கூறிக்கொண்டார். அதற்கு மறுப்புகளும் விமர்சனங்களும் எழுந்தன. பெரியார் அப்படி தன்னை எப்போதும் எல்லோருக்குமான தலைவராகவோ பிரதிநிதியாகவோ அறிவித்துக்கொண்டதில்லை.

அம்பேத்கரை தனது தலைவர் என்று கூறிய பெரியார், தன்னை ஒரு போதும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் தலைவராகவோ அல்லது தாழ்த்தப்பட் டோர்களின் தலைவராகவோ அறிவித்துக்கொண்ட தில்லை. தீண்டாமை, பெண்ணடிமை, மத மூடநம்பிக்கை ஆகியவற்றை களைவது மற்றும் "பிராமண" அல்லாத வர்களின் அதிகாரம், சூத்திர பட்டம் ஒழிப்பது இவை களே அவருடைய முதல் பணியாகக் கொண்டிருந்தார். அதற்காக வாழ்நாள் முழுவதும் ஓயாத பிரச்சாரம் செய்வதில் அவர் தெளிவாக இருந்தார். அவர் பட்டியல் இனத்தவர்களின் பிரச்சினையை இடைநிலை ஜாதிகளிடம் இருந்துகொண்டு பேசியவர். அவர் நன்கு அறிந்திருந்தார் ஒடுக்கப்படுபவர்களுக்கு அதற்கு வெளியே இருந்து ஒருவர் தலைவராக முடியாது என்று. பெரியார் எப்போதும் தான் பட்டியல் இனத்தவர்களுக்கு அதை செய்தேன், இதை செய்தேன் என்று பட்டியலிட்ட தில்லை. ஆனால், அவர் வழிவந்த தலைவர்கள் பெரியாரை உணராமல் பட்டியல் இன மக்களின் தனித் துவத்தை விலக்கி அவர்களை உள்ளடக்கிக்கொள்ள முனைகிறார்கள். அதனாலேயே, தாங்கள் பட்டியல் ஜாதிகளுக்கு என்னவெல்லாம் செய்தோம் என்று பட்டியலிட்டு நன்றியை எதிர்பார்க்கிறார்கள்.

பெரியார் மீதான தலித் அறிவுஜீவிகளின் விமர்சனம் உண்மையில் அது பெரியார் மீதான விமர்சனமாக தட்டையாக புரிந்துகொள்ளப்படுகிறது. உண்மையில் அது அதிகாரத்தைக் கைப்பற்றிய இடைநிலை

ஜாதிகள் பட்டியல் ஜாதிகளை அதிகாரத்திலிருந்து விலக்கியதோடு மட்டுமில்லாமல் ஒடுக்குதலிலும் ஈடுபடுவதால், பிற்படுத்தப்பட்டோர்களின் சமூகநீதி பிம்பமாக உள்ள பெரியார் என்ற குறியீடு மீது அவர்களின் விமர்சனம் பாய்கிறது. ஆனாலும், இந்துத்துவ சக்திகள் பெரியாரை விமர்சிக்கும்போது தலித்துகள் பெரியாரை விட்டுக் கொடுப்பதில்லை. பெரியார் இன்னும் தலித்துகளின் போராட்டப் பதாகையாகத்தான் இருக்கிறார்.

பெரியார் தமிழக அரசியலுக்கும் திராவிடக் கட்சிகளுக்கும் அவற்றின் அரசியல் நனவிலியில் சில விஷயங்களை ஆழமாக உள்ளீடு செய்து சென்றுள்ளார். அது தமிழர் உணர்வு. சுய மரியாதை, சூத்திர அதிகாரம், இந்தி எதிர்ப்பு, மாநில உரிமை ஆகியவை ஆகும். அதன் பண்புகளில் அளவுகளில் மாற்றம் இருக்கலாம். அவற்றிலிருந்து திராவிடக் கட்சிகள் நடைமுறையில் அவர்களின் அரசியல் நனவிலியில் பொதிந்துள்ள பெரியாரின் கருத்தியல்கள் அவர்களை அரசியல் வரலாற்றின் நதியில் இழுத்துச் செல்கிறது. தமிழகத்தின் அரசியல் கலாச்சாரமாக திராவிட அரசியல் உருவா வதற்கு பெரியார் காரணமாக ஆதாரமாக இருந்திருக் கிறார் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.

ஆனால், சில பெரியாரியர்களைப் போல, பெரியாரை கடவுள் மறுப்பு என்ற குறுகிய வட்டத்துக்குள் மட்டுமே அடைக்க பாஜக முயற்சிக்கிறது. பாஜக பெரியாரை கடுமையாக எதிர்க்கிறது. ஆனால், அவர் திராவிட அரசியலில் ஸ்தூலமாகவும் அதன் அரசியல் நனவிலியில் ஆழமாகவும் பதிந்துள்ளார். பெரியார் ஸ்தூலமாக இருந்தால் கபளீகரம் செய்துவிடலாம். ஆனால், தமிழக அரசியல் கலாச்சாரத்தின் நனவிலியாக இருந்து திராவிட கட்சிகளை இந்துத்துவத்திற்கு எதிராக அவர்களே விரும்பாவிட்டாலும் தூண்டி சுடர்விட வைக்கிறாரே என்ன செய்யமுடியும்?

பெரியார் மற்றொரு விஷயத்தில் அவர் காந்தியுடன் ஒப்பிடக் கூடியவர். தனது அரவணைப்பில் வளர்ந்த திமுக ஆட்சியைப் பிடித்தபோதும் அவர் செல்வாக் குள்ள தலைவராக இருந்தபோதும் பெரியார் ஒரு போதும் பதவிக்கும் அதிகாரத்துக்கும் ஆசைப்பட்ட தில்லை. அந்த வகையில், பெரியாரும் காந்தியைப் போல அரசியலில் பதவிகளை விரும்பாத ஒரு அரசியல் துறவிதான்.

(பாலாஜி எல்லப்பன், கட்டுரையாளர்)

-இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் (அய்ஈதமிழ்) இணையம், 17.9.2019

குறிப்பு: இக்கட்டுரையில் நமக்குச் சில கருத்து மாறுபாடுகளும் உண்டு

- விடுதலை நாளேடு, 19 .9.19