சனி, 7 செப்டம்பர், 2019

அதனால்தான் அவர் பெரியார்! பெரியார் காமராசர் அரிய உரையாடல்!



பெரியார் அவர்களின் பிறந்த நாளில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற முதலமைச்சர் காமராசர் விரும்பினார். பல்வேறு பணிகள் காத்திருக்கும் நிலையில் முதலமைச்சர் அவற்றைத் தவிர்த்துவிட்டுத் தன்னை வந்து பார்ப்பதை பெரியார் விரும்பவில்லை. மறுத்துப் பார்த்தார். ஆனால், பெரியாரின் நெருங்கிய நண்பரான பி.வரதராசுலு நாயுடு அதை ஏற்காமல் முதலமைச்சர் காமராசரை அழைத்துக்கொண்டு வந்துவிட்டார்.

மாலையில் காமராசரும், நாயுடுவும் ஒரே காரில் வந்து இறங்கினர். முதலமைச்சர் வருகிறார் எனினும் எந்த ஆரவாரமும் இல்லாமல் வந்தார் காமராசர். மிகுந்த மகிழ்ச்சியோடு பெரியார் அவரை எழுந்து வரவேற்றார். முக்கியமான ஒரு சிலர் மட்டுமே அங்கே நின்று கொண்டிருந்தனர். இரண்டு பெரியவர்களும் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

வரதராசுல நாயுடு பெரியாரிடம் சொன்னார். “அய்யா என்னென்ன காரியம் ஆகணும்னு சொல்றீங்களோ அதச் செய்து கொடுக்க காமராஜ் சித்தமாயிருக்கார். என்ன செய்யணும்னு சொல்லுங்கய்யா?’’ என்றார். இதைக் கேட்ட பெரியார், “நான் என்னய்யா கேக்கப் போறேன். தனிப்பட்ட முறையில் எனக்கு என்ன தேவையிருக்கு? இந்தத் தமிழ் ஜனங்களுக்கு ஒதவுற மாதிரி, அந்த நாலாஞ்சாதிய கைதூக்கி விடற மாதிரி, அய்யா ஏதாவது செஞ்சாங்கன்னா அதுவே போதும்’’ என்றார். பெரியார் தன் வார்த்தையை முடிப்பதற்குள், காமராசர் தன் இருக்கையை விட்டு எழுந்து நின்று, “அய்யா, நானும் தமிழன்தான், நாலாஞ்சாதிதான்’’ என்றார்.

மெத்தப் பூரிப்போடு பெரியார் காமராசரின் இரண்டு கைகளையும் பிடித்துக்கொண்டு, “அதுதாங்கய்யா வேணும். அந்த ஞாபகம் தாங்கய்யா வேணும்’’ என்றார். உடனே தன் கையுடன் கொண்டு வந்திருந்த ஒரு உறையைப் பிரித்து, அதிலிருந்த ஒரு பழைய புகைப்படத்தைப் பெரியாரிடம் கொடுத்தார் காமராசர். அதை அய்யா பெரியார் வாங்கிப் பார்த்தார். நெகிழ்ந்து போனார். அந்தப் படம் பெரியார் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராயிருந்தபோது எடுத்தது. அதில், பெரியார் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருக்க அந்த நாள் காங்கிரஸ்காரர்கள் பலரும் அதில் இருக்கின்றனர். காலடியில் காமராசர் ஓர் இளைஞராக, மிகச் சாதாரணத் தொண்டராக அமர்ந்திருந்தார்.

சற்று நேரம் அங்கே கனத்த மௌனம். இரண்டு பெரியவர்களும் தங்கள் கடந்த கால நினைவுகளில் கரைந்து போயிருக்கலாம். தமிழகத்தின் தன்னிகரற்ற தலைவராக உயர்ந்துவிட்ட முதலமைச்சர் காமராசர் இவ்வளவு ஞாபகமாக, அந்தப் பழைய படத்தை இப்போது அய்யாவிடம் கொண்டுவந்து ஏன் கொடுக்க வேண்டும்- “அய்யா அன்று உங்கள் காலடியில் உட்கார்ந்திருந்த அதே பழைய தொண்டன்தான் நான். கட்டளையிடுங்கள், காத்திருக்கிறேன்’’ சொல்லாமல் சொல்லத்தான்.

இவர்கள் அல்லவா மக்கள் தலைவர்கள். இந்த நிகழ்வில் அவர்களின் மாண்பு, நன்றியுணர்வு வெளிப்படுவதோடு மக்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்பதில் அவர்கள் எந்த அளவிற்கு ஆர்வம் காட்டினர் என்பதும் விளங்குகிறது! இந்த மாண்பை இன்றைய தலைமுறையும் பின்பற்ற வேண்டும்.

ஆதாரம்: பழ.நெடுமாறன் அவர்கள் எழுதிய ‘பெருந்தலை வரின் நிழலில்’ என்ற நூலில், பக்கம் (462, 463, 464)

      தகவல்: வ.க.கருப்பையா, பஞ்சம்பட்டி

- உண்மை இதழ், பெப்ரவரி 16- 28 .19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக