செவ்வாய், 24 செப்டம்பர், 2019

இந்திய வரலாற்றில் எந்த ஆட்சியாளரும் சாதிக்காததை சாதித்தவர் அறிஞர் அண்ணா!



தந்தை பெரியார் பெருமிதம்!


பேரன்புமிக்க தலைவர் அவர்களே! தாய்மார்களே! தோழர்களே! இந்த பம்பாய் பெருநகரத்தில் அண்ணா அவர்களது பிறந்த நாள், எனது பிறந்த நாள் என்னும் பெயரால் இவ்வளவு ஆடம்பரமாக ஏற்பாடுகள் செய்து எங்களை வரவேற்றுள்ளீர்கள். அண்ணா அவர்கள் வரும்படியான வாய்ப்பு நமக்கு இல்லை. என்னை அழைத்து எனக்குப் பெரிய மரியாதை ஆடம்பரம், பாராட்டுரைகள் இவைகளைச் செய்துள்ளீர்கள். உங்கள் அன்புக்கும் ஆர்வத்திற்கும் நான் நன்றி செலுத்துவதுடன், இந்தப் பெருமைகளுக்காக என்னையே நான் பாராட்டிக் கொள்கிறேன்.

வேறு எவரையும்விட அண்ணா அவர்களுக்குப் பிறந்த நாள் விழாக் கொண்டாடுவதில், அவரைப் பாராட்டுவதில் ரொம்ப பொருள் உண்டு.

இந்தியாவிலேயே வேறு யாராலும் சாதிக்க முடியாத காரியத்தை அண்ணா அவர்கள் சாதித்துக்காட்டினார். நமக்குத் தெரிந்த வரையில் வேறு யாரும் அந்த அளவுக்கு சாதிக்கவே இல்லை. என்னைப் பொறுத்தவரை நான் காரியம் அதிகம் சாதித்திருப்பதாக நீங்கள் கூறுகிறீர்கள். அதன் பலன் அந்த அளவுக்கு ஏற்படவில்லையே இனி மேல் தான் ஏற்படவேண்டும் ஏற்படும் என்று ஆசைப் படுகிறேன். என் முயற்சி எதுவும் வீண் போகவில்லை. தரவேண்டிய அளவுக்கு பலன் தரவில்லையே தவிர வேறு ஒன்றுமில்லை. எனது அருமைத் தோழர்கள் என்னைப் பின்பற்றி முயற்சிக்கிறார்கள். அவர்கள் அதில் வெற்றியும் அடையக்கூடும் என்று நாம் நம்புகிறோம்.

பகுத்தறிவு ஆட்சி - பிரமாண்டமான சாதனை

அண்ணா அவர்கள் செயற்கரிய காரியம் செய்த வராவார். இந்நாட்டில் நமக்கு சரித்திரம் தெரிய எவன் எவனோ ஆண்டிருக்கிறான். சேர, சோழ, பாண்டியன், நாயக்கர், துலுக்கன், வெள்ளைக்காரன், காங்கிரஸ்காரன் வேறு எவன் எவனோ ஆண்டிருக்கிறான் என்றாலும் அண்ணா அவர்கள் சாதித்த காரியம்போல வேறு எவ ருமே சாதித்ததில்லை, இந்தியாவை ஆண்ட எவரும் இதுமாதிரி செய்ததில்லை.

ஒரு பகுத்தறிவு அரசாங்கத்தை கடவுள் வேண்டாம், மதம் வேண்டாம், ஜாதி  வேண்டாம், சாஸ்திரம் வேண்டாம் என்ற ஒரு கொள்கையுடைய ஒரு பகுத்தறிவு அரசாங் கத்தை அண்ணா அவர்கள் தோற்றுவித்தார் என்றால் அது சாமானிய காரியமல்ல பிரம்மாண்டமான சாதனை யாகும்.

நம் மக்களுக்கு இது சரியாகப் புரிகிறதோ இல்லையோ, எதிரிகளுக்கு இது தெளிவாகப் புரியும்.

அண்ணா செய்த காரியம் இதற்கு முன்னால் ஆண்ட வர்கள் பலரும் செய்ததற்கு மாறான காரியத்தை அல்லவா அண்ணா செய்தார்கள்!

மூவேந்தர்களும் பார்ப்பனர்களும்

சேர, சோழன், பாண்டியன் வெங்காயம் எல்லாம் என்ன செய்தார்கள்?  அதற்குப் பிறகு வெள்ளைக்காரர்கள் தான் ஆண்டார்களே அவர்களால் பெரும் மாற்றத்தைச் செய்ய முடிந்ததா என்றால் இல்லையே!

அண்ணா நேற்று செய்ததற்கு மாறாகத்தானே அவர்கள் செய்தார்கள்!

மக்களிடையே மூடநம்பிக்கைகளைப் புகுத்தி அந்தக் காரியங்களைப் பாதுகாப்பதுதான் அரசியல் ஆட்சியின் லட்சியம் என்று அல்லவா அவர்கள் காலத்தில் கருதப் பட்டது!

மூவேந்தர்கள் செய்தது என்ன? கோவில்களைக் கட்டினார்கள். கடவுள்களை உற்பத்தி செய்தார்கள் பார்ப்பானுக்கு அரசர்கள் தன் மனைவிகளை விட்டுக் கொடுத்தாகிலும் புண்ணியம் சம்பாதிக்க வேண்டும் என்று நடந்து கொண்டார்கள். பார்ப்பன நலத்தைத்தான் கொள்கையாக கொண்டு இருந்தனர்.

துணிந்து  கைவைத்தது  அண்ணா  ஆட்சி

பறையன் பறையனாகவும், சக்கிலி சக்கிலியாகவும், சூத்திரன் சூத்திரனாகவும் இருக்கத்தான் ஆட்சி பயன் பட்டது. தவிர மனுஷன் மனுஷனாக வாழ்கிறான் என்று பார்க்கப் பயன்படவே இல்லையே! முடியவில்லையே! தப்பித் தவறி ஒரு ஆட்சி அப்படித் திரும்ப முயற்சித்தாலும் ஒழித்திருப்பார்களே!

முஸ்லீம்கள், வெள்ளைக்காரர்கள் ஆண்டார்கள் என்றாலும், அவர்களும், பழைய இராஜாக்கள் காலத்து ஆட்சியைப் போல் கடவுள், மதம், ஜாதி, சாஸ்திரம், சம்பிர தாயம் - இவற்றில் கை வைக்காமல் ஆட்சி புரியும்படி பார்ப்பான் ஆக்கி வைத்துக் கொண்டானே! வெள்ளைக் காரன் சில மாற்றங்களை செய்ய ஆரம்பத்தில் முன் வந்தான் என்றாலும் மாற்றவிடாமல் மிரட்டி சரிப்படுத்திக் கொண்டார்கள். அவனும் நமக்கெதற்கு வம்பு, நமக்கு சிக்கியது வரை சரிதான் என்றல்லவா ஆண்டான்? அண்ணா அவர்கள் அமைத்த அரசாங்கம் தானே இவற் றில் துணிந்து கைவைக்கக்கூடிய அளவுக்கு பகுத்தறி வாளர் ஆட்சியாக உள்ளது.

என்னால்கூட பேசவே முடிந்தது

அண்ணா ஆட்சி வருகிற வரைக்கும் முன்புள்ள ஆட்சிகள் மதத்தை சாஸ்திரத்தைப் பாதுகாக்கவும் மக்களது மூடநம்பிக்கைகளைப் பத்திரமாகப் பாதுகாப் பதையும்தான் தமது தொழிலாகக் கொண்டிருந்தன. மனித சமூகத்தைச் சின்னாபின்னப் படுத்தி அமைப்பு ஜாதி, மூடநம்பிக்கை இவற்றை, அழிக்கவோ, போக்கவோ அவைகள் முன் வரவில்லையே!

இந்த நிலையில் இருந்த ஆட்சியை திருப்பி துணிந்து பகுத்தறிவுக் கொள்கையை புகுத்திய ஆட்சியை அண்ணா அவர்கள் உண்டாக்கினார். என்னைப் போன்ற வர்கள் கூட வாயினால்தான் பேச முடிந்தது. புத்தரின் காலத்தில்கூட இப்படி ஒரு ஆட்சியை அவரால் உண்டாக்க முடியவில்லையே.

அண்ணா ஒருவர்தான் இதைச் சாதித்தார். கடவுள், மதம், ஜாதி, இவைகளை ஒழித்து அந்தக் கொள்கையின் பேரால் ஒரு ஆட்சியை - பகுத்தறிவாளர் ஆட்சியை உண்டாக்கினார்.

பச்சையாகவே அண்ணா சொன்னாரே

தி.மு.க. என்றால் என்ன? திராவிடர் கழகத்துக் கொள்கைகளை உடைய கட்சி; ஆனால் அதைவிட சற்று வேகமாக தீவிரமாகச் செல்லும் கட்சி என்பதுதானே பொருள்?

தி.க. என்றால் சுயமரியாதை இயக்கம், சுயமரியாதை இயக்கத்தினை நாங்கள் தோற்றுவித்துப் பிரச்சாரங்களும் செய்தோம். கடவுள் ஒழிய வேண்டும்; மதம் ஒழிய வேண்டும்; காங்கிரஸ் ஒழியவேண்டும்; பார்ப்பான் ஒழிய வேண்டும், காந்தி ஒழிய வேண்டும் என்பது தானே அதன் கொள்கைகள். அதே கொள்கை அடிப்படையில் காங்கிரசை ஒழித்து, கடவுள் இல்லாமல் மதம் இல்லாமல், பார்ப்பான் இல் லாமல், ஒரு ஆட்சியை அண்ணா உண் டாக்கி காட்டி விட்டாரே!

அண்ணா அவர்கள் மத்தி யில் காலமானார் என்றாலும் இன்னமும் அந்தக் கொள் கையைக் கொண்ட ஆட்சி தானே நிலையாக இருந்து அதற்கான காரியத்தை செய் கிறது? பச்சையாகவே அண்ணா சொன்னாரே, எனக்கு இந்த அமைச்சரவையையே காணிக்கை ஆக்குகிறேன் என்று அதற்குப் பொருள் என்ன?

ஆணும் பெண்ணும் சேர்ந்தால் தீர்ந்தது

கடவுள் பெயரால் பிரமாணம் எடுக்கவில்லை - அதற்கு கடவுள் நம்பிக்கை அற்ற ஆட்சி என்பது தானே! ஆட்சியில் கடவுள் மதத்திற்கு வேலையில்லை என் பதைத்தானே அது காட்டுகிறது. சுயமரியாதைத் திரும ணங்களை செல்லும்படியாக்கும் சட்டம் கொண்டு வந்தார்.

இது எதைக்காட்டுகிறது கடவுளுக்கோ, மதத்துக்கோ, மதத்தினர் சம்பிரதாயத்துக்கோ சாஸ்திரங்களுக்கோ வேலையில்லை ஒரு ஆணும் பெண்ணும் பார்த்து நாங்கள் இருவரும் சிநேகிதர்கள் என்றால் தீர்ந்தது. அவ்வளவுதானே இதன் தத்துவம் என்ன? கடவுள், மதம், ஜாதி, சாஸ்திரம், பார்ப்பான் எதுவும் வேண்டாம் என்று ஆக்கப்பட்டு விட்டது என்பதுதானே!

வங்காள எம்.பி.யின் வியப்பு

கல்கத்தாவைச் சார்ந்த ஒரு வங்காளக் கம்யூனிஸ்டு எம்.பி. கேட்கிறார் எங்களால் முடியவில்லை. இவ்வளவு புரட்சி பேசும் என் வீட்டில் அதைச் செய்ய முடியவில்லை. உங்களால் இவ்வளவு சல்லீசாக எப்படிச் செய்ய முடிகிறது என்று?

இம்மாதிரி இந்தியாவில் உள்ள பலரும் ஆச்சரியப் படும்படி அல்லவா அண்ணா அவர்கள் காரியங்களைச் சாதித்துக் காட்டியிருக்கிறார்! அண்ணா ஜெயித்தவுடன் நான் இது பார்ப்பான் ஆட்சியாகத்தான் இருக்கும் முன்னேற்றக் கழக ஆட்சியாக இருக்காது. பார்ப்பான் காலடியில் உள்ள ஆட்சியாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன், எழுதினேன்.

பெருங்காயம் இருந்த காலிடப்பா

இவர்கள் ஆட்சிக்கு வருவதற்காக பார்ப்பனரும் வெகு பாடுபட்டார்கள். பார்ப்பனத் தலைவர் ராஜாஜி அவர்களும் அதற்கு ரொம்ப பாடுபட்டார். தி.மு.க. ராமசாமியிடம் இருந்த கட்சி என்றாலும், பெருங்காயம் இருந்த டப்பா, ஆனால் இப்போது காலி டப்பா, நான் வழித்து எறிந்து விட்டேன் என்று கூறினார். அண்ணா இவற்றை ஏதும் மறுக்கவே இல்லை.

இந்த இரண்டையும் பார்த்த நான் இதற்காகவே எதிர்த்தேன். அண்ணா வெற்றி பெற்றவுடன் என்னை வந்து பார்த்தார். எனக்கு யோசனை சொல்ல வேண்டும் என்றார். நானும் ஆகட்டும் என்றேன். பார்ப்பனரும் ராஜாஜியும் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை சபாநாயகர் தேர்தல் முதற்கொண்டே காட்ட ஆரம் பித்தனர்.

கடவுள் மறுபிறப்பு போன ஜென்மம் பாவம் புண்ணியம் இதை நம்புகிறவரை நமக்குள்ள இழிவு மாறுமோ?


மாற வழி உண்டா?


இழிவு இருக்கிறது என்று சும்மா நினைத்தால் போதுமா; அதற்குள் பின் பரிகாரத்தை தேடினால்தானே அந்த இழிவைப் போக்க முடியும்?


கடவுள், கடவுள் செயல் என்று நினைத்துக் கொண்டே மூளையெல்லாம் அது நிறைந்துபோய் இருந்தால் நம் சாதி இழிவு பிறவி பேதம் ஒழிய முடியுமோ?


அதை ரத்தத்திலே கலந்து அல்லவா அவன் நம்மை கீழ்சாதி ஆக்கியிருக்கிறான்?


செருப்பாலடிக்கும் பிற ஆட்சிகள்

ஆனாலும் அண்ணா அவர்கள் அவரது கொள் கைகளை அமல்படுத்தும் ஆட்சியாகவே தி.மு.க. ஆட்சியை நடத்த ஆரம்பித்தார். அதன் காரணமாக மக்கள் ஆதரவும் அதற்குப் பெருக ஆரம்பித்ததுடன், இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு சிறப்பான ஆட்சி என்று பலரும் அதிசயப்பட்டு பாராட்டத்தக்க ஆட்சியாக அது இன்று வளர்ந்திருக்கிறது.

மற்ற ஆட்சிகளைப் பார்க்கிறோமே மரியாதை கெட்டு, மானம் கெட்டு, ஒருவரை ஒருவர் செருப்பால் அடித்துக் கொள்வது கட்சிவிட்டு கட்சிமாறுவது, கொலை, கொள்ளை சர்வசாதாரணம் என்றும் தானே ஆட்சிகள் எல்லாம் நடைபெறுகிறது?

மற்ற ஆட்சிகளை ஒப்பிட்டுப் பார்த்தால் தி.மு.க. ஆட்சி எவ்வளவு சிறப்பானது என்பது எவருக்கும் சுலபமாக விளங்கும்.

என் கஷ்டம் எனக்கல்லவா தெரியும்

மற்றபடி என்னை நீண்ட நாள் வாழவேண்டும் என்று பலர் கூறினீர்கள். சொல்லுகிறபடி நடக்கும் சக்தி அதற்கு இருக்குமானால் இன்னும் அதிக நாள் சொல்லலாமே! வாழும் எனக்குத்தானே அதிலுள்ள கஷ்டம் என்ன வென்று தெரியும். நான் படுகிறபாடு எனக்குத் தானே தெரியும்?

மற்றொரு செருப்பு எங்கே?

என்னுடைய கடமை தொண்டு கொள்கைகளை இறுதிவரை பரப்பி மக்களுக்குப் பயன்படும் வகையில் பாடுபடவேண்டும் என்பதுதான் எனது ஆசையாகும்.

மற்றவனெல்லாம் சொல்ல பயப்படுகிறானே என்பது தான் எனது கவலை. நாம் சொல்லும் அருமையான கருத் துக்களைக் கேட்டு ஜீரணிக்கும் அளவுக்காவது மக்கள் பக்குவப்பட்டிருக்கிறார்கள் என்பது தான் எனக்குள்ள திருப்தி.

அதற்குமுன் எவ்வளவு கடுமையான எதிர்ப்பு நண்பர் வீரமணி அவர்களது ஊரான கடலூரில் சுமார் 25 ஆண்டு களுக்கு முன் என்மீது செருப்பை வீசினார்கள். ஏன் ஒரு செருப்பை மட்டும் வீசுகிறாய் மற்றொன்றும் எங்கே? என்றவுடன் அதையும் வீசினார். எடுத்து என் பெட்டிக்குள் பத்திரமாக வைத்துக் கொண்டேன்.

பல ஊர்களில் அழுகிய முட்டை, முட்டை கூட்டுக்குள் மலத்தை நிரப்பி வீசியிருக்கிறார்கள். இப்படி பல மாதிரி எதிர்ப்பு, சங்கடங்கள். இவைகளையெல்லாம் தாண்டித் தானே இந்த அளவுக்கு எங்கள் நாடு பக்குவப்பட்டிருக்கிறது.

குட்டிச்சுவர்கூட கோயிலாகி இருக்கும்

கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை, கடவுளை உண்டாக்கியவன் முட்டாள், கடவுளை பரப்பினவன் அயோக்கியன், கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று இப்போது இம்மாதிரி அட்டை களை அச்சிட்டு சிலைகள் அடியில் வைப்பதும் கல் வெட்டுகளை பதிப்பிப்பதுமான அளவுக்கு மக்கள் அங்கு தெளிவுபெற்று சிந்திக்கும் பக்குவத்தைப் பெற்றுள் ளார்கள்.

மக்கள் இந்த அளவுக்கு பக்குவம் பெற்றிருக்கிறார்களே என்ற திருப்திதான் எனக்கு.

இப்படி நாங்கள் பிரச்சாரம் செய்திராவிட்டால் தி.மு.க. ஆட்சி வந்திருக்காவிட்டால் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குட்டிச்சுவரையும் ரிப்பேர் செய்து கோயில் ஆக்கியிருப்பார்கள். வயதானவர்கள் கிழடுகள் எப் படியோ தொலையட்டும் இளைஞர்கள் இது குறித்து துணிச்சலாகச் சிந்தித்து மாறவேண்டும். இன்று இளை ஞர்கள் நன்றாக இக்கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் நிலையைப் பார்க்கிறோமே!

நான் கடவுளானால்...

கடவுள் இல்லை. கடவுளை கற்பித்தவன் முட்டாள், பரப்பினவன் அயோக்கியன், வணங்குகிறவன் காட்டு மிராண்டி என்றெல்லாம் நாங்கள் பிரச்சாரம் செய்தோம் என்றால் அதற்கு காரணம் என்ன என்பதை நீங்கள் நன்கு சிந்திக்க வேண்டும். எங்களுக்கு அதன் மீது இருக்கிற கோபமா? அல்லது கடவுளுக்குப் பதிலாக கடவுளுடைய இடத்தைப் பிடித்து நாங்கள் கடவுள் ஆக வேண்டும் என்கின்ற ஆசையா?

நான் கடவுள் ஆனேன் ஆனால் என்ன நடக்கும்? என்னால் இப்படி இருக்க முடியுமா? பார்ப்பான் நினைத்த போது பூட்டுவான் நினைத்தபோது திறப்பான், அவன் என்னை வணங்கினாலும் நான் பார்த்துக்கொண்டே தானே இருக்கவேண்டும். அவன் எதைச் செய்தாலும் நான் பார்த்துக் கொண்டுதானே இருக்கவேண்டும். அது என்ன பெருமைக்குரிய பதவியா? பொம்பளை சாமியை ஆம்பிளை அர்ச்சகர் கழுவி குளிப்பாட்டுகிறதை பார்த்து கிட்டு இருக்கிற மாதிரி நானும் பார்த்துக் கொண்டுதானே இருக்க வேண்டும்?

கடவுளைக் கண்டுபிடித்து அப்படி ஒன்றை பரப்பின தற்கே காரணம் மக்களை மடையவர்களாக்குவதற்குத் தானே?

சந்திரமண்டல சாதனை எதனால்?

மனிதன்தான் எல்லா ஜீவராசிகளைவிட மேலான பகுத்தறிவு படைத்தவன் மற்ற ஜீவராசிகளுக்கு மாறுதல் கிடையாது. பழக்க வழக்கங்களில் வளர்ச்சி கிடையாது. மற்ற ஜீவன்களுக்குப் பிறக்கும் என்ன அறிவோ அதே அறிவுதான் அவை இறக்கும்போதும் கூட. மனிதன் ஒருவன் தான் சிந்தித்து வளரக்கூடியவன். மனிதனின் தனித்தன்மையே இதில்தான் இருக்கிறது. அதிசயம் அற்புதம் ஆகியவைகளை கண்டுபிடிக்கும் வாய்ப் புள்ளவன் மனிதன் தான்.

சந்திர மண்டலத்துக்குப் போய் திரும்பி வந்து விட்டானே! இங்கிருந்து ஏறத்தாழ 4 லட்சத்து அறுபதாயிரம் மைல் போக வர உள்ள தூரத்தை மணிக்குப் பல்லாயிரம் மைல் வேகத்தில் பறந்து சென்று இறங்கி, அப்பாலோவில் திரும்பிவிட்டது மட்டுமல்ல, அங்குள்ள கல்லையும் மண்ணையும் எடுத்துக் கொண்டு வந்து நமக்குக் காட்டுகிறானே? மனுஷன் பிறந்து எத்தனையோ நாளாகியும் இன்று எப்படி அவனால் அதைச் சாதிக்க முடிந்தது? பகுத்தறிவும் சுயசிந்தனையும்தானே!

எல்லாம் கடவுள் செயல் என்றும், பகவான் செயல் என்றும் சொல்பவன் எந்த வேலையைக் கடவுளிடம் ஒப்படைத்துவிட்டு இவன் சும்மா இருக்கிறான்? கடவுள் இல்லாமல் ஒரு மயிர் கூட அசையாது என்று கூறுபவன் இவன் தானே சீப்பை எடுத்து தலையை வாரிக் கொள் கிறான்?

இப்படியே நாம் நம்பி நம்பி அசல் காட்டுமிராண் டிகளானோமே தவிர கண்ட பலன்தான் என்ன?

நாம் அனுபவிக்கிற அத்தனை விஞ்ஞான வசதிகளும் கண்டுபிடித்தது யார்?

நம்ம கடவுளுக்கும் ரிஷிகளுக்கும் முனிவர்களுக்கும் வெங்காயங்களுக்கும் என்ன சம்பந்தம்? சாஸ்திரம் வேதம் புராணம் இவற்றால் ஏதாவது முடிந்ததா?

கெட்டகாரியம் எல்லாம் அவன் செயல்தானே!

கடவுளை நம்புவது என்பது இன்று அவரவர்களுக்கு ஒரு பழக்கம் போல இருக்கிறதே தவிர நம்பிக்கை என்பது ஒரு சடங்கு என்று ஆகிவிட்டதே தவிர வேறு என்ன? உண்மையாகவே கடவுளை நம்புபவர்கள் யாராவது இருந்தால் இங்கு என் முன்னால் வரட்டுமே!

சும்மா முட்டாள் தனமாக கடவுள் இல்லாமல் நீ எப்படி என்று சிலர் கேட்பார்களே தவிர அறிவுக்கு வாதத்திற்கு அது நிற்குமா? நிற்காதே!

எல்லாம் அவன் செயல் என்றால் நாட்டில் நடக்கும் அவ்வளவு கெட்ட காரியம் விபத்து திருட்டு புரட்டு நாசம் கொலை கொள்ளைக்கு கடவுள்தானே காரணம். இதை எவராவது மறுக்க முடியுமா?

எல்லாம் அவன் செயல் என்பவனைப் பார்த்து கன்னத்தில் ஓங்கி ஒரு அறை அறைந்தால் அவன் என்ன செய்வான்? நம்மை அல்லவா திருப்பி அடிக்க வருவான்? நாம் உடனே அவன் செயல் அப்பா என்று சொன்னால் உடனே சரி பகவான் செயல் என்று எவனாவது தன்னைச் சமாதானப்படுத்திக் கொள்ளுவானா?

நாய் கடிக்க வந்தால் யார்மீது கோபம்?

எல்லாம் அவன் செயல் என்றால் அப்புறம் அதற்காக யாரைக் கோபிக்க வேண்டும். என் நாய் உங்கள்மீது கடிக்க வந்தால் உடனே அதை வளர்க்கும் எஜமான் மீதுதானே கோபித்துக் கொள்வீர்கள். என்னய்யா உன் நாயை ஏவிவிடுகிறாயே என்றல்லவா கோபிப்பீர்கள்? ஆனால் அதுமாதிரி ஒருவன் அடித்தால் அது அவன் செயல் அல்ல, அவனைப் பார்த்து கடவுள் செயல் என்று கருதி எந்த பக்தன் சும்மா இருக்கிறான்?

நமது முட்டாள்தனத்தால் தான் நாம் வளர்ச்சியடைய முடியாமல் நாம் காட்டுமிராண்டிகளாக இருக்கிறோம். நாமெல்லாம் இந்துக்கள் என்று அழைக்கப்படுகிறோம். இதனை ஏற்றுக் கொள்பவர்களில் 100க்கு 97 பேர் நாம் கீழ் ஜாதிக்காரர்கள் 3 பேர்களான பார்ப்பனர்கள் மேல் ஜாதிக்காரர்கள்.

உழைக்கும் நாம் ஏன் கீழ் ஜாதி, உழைக்காமல் வாழும் 100க்கு 3 பேர்களாக இருக்கும் பார்ப்பனர் ஏன் மேல் ஜாதி என்றால் அது கடவுள் செயல் அவன் தான் உன்னை சூத்திரனாக பறையனாக என்னை பிராமணாளாக பார்ப்பானாக படைத்திருக்கிறான். அதற்கு நீயும் நானும் என்ன சொல்லமுடியும் என்கிறான். அவன் மட்டுமா அப்படிச் சொல்கிறான்?

யார் மிகப் பெரும்பாலானோர் இருந்தும் கீழ் ஜாதி ஆகியுள்ளோமோ அந்த பள்ளன் பறையன் சக்கிலி சூத்திரன் இவர்களையே கேட்டால், ஆம் நாங்களெல்லாம் இழி ஜாதிதான் அது ஆண்டவன் படைத்தது என்கிறான்!

சும்மா நினைத்தால் மட்டும் போதாது

இன்னமும் சூத்திரன் என்றால் பார்ப்பனனின் வைப்பாட்டி மகன் தாசிபுத்திரன் என்று சாஸ்திரத்தில் இந்து மத சட்டத்தில் எழுதி வைக்கப்பட்டுள்ளது! எத்தனை நாளாக இந்தக் கொடுமை இருக்கிறது. இது பற்றி மான உணர்வோடு எவனும் கவலைப்படுவது இல்லையே! இதை சகித்துக் கொண்டுதானே நாம் இருக்கிறோம்.

நமக்கெல்லாம் மானம் முக்கியமல்லவா? இப்படி ஓர் உணர்ச்சி வந்து நாம் ஏன் கீழ் ஜாதி, பிறவி இழிவு எதற்கு நமக்கு என்றெல்லாம் கேட்டால் உடனே அடுத்த ஜென்மத்தில் ஆண்டவன் மாற்றுவார், போன ஜென் மத்தில் புண்ணியம் செய்தான் அவன் பிராமணனாய்ப் பிறந்தான். நீ போன ஜென்மத்தில் பாவம் செய்தாய். பறையனாய் சூத்திரனாய் பிறந்தாய் என்கிறான், இது என் செயல் அல்ல கடவுள் செயல் பகவான் செய்தது என் கிறான் - ஆதாரத்திற்கு மதத்தை சாஸ்திரத்தைக் காட்டு கிறான்.

கடவுள் மறுபிறப்பு போன ஜென்மம் பாவம் புண்ணியம் இதை நம்புகிறவரை நமக்குள்ள இழிவு மாறுமோ? மாற வழி உண்டா?

இழிவு இருக்கிறது என்று சும்மா நினைத்தால் போதுமா; அதற்குள் பின் பரிகாரத்தை தேடினால்தானே அந்த இழிவைப் போக்க முடியும்?

கடவுள், கடவுள் செயல் என்று நினைத்துக் கொண்டே மூளையெல்லாம் அது நிறைந்துபோய் இருந்தால் நம் ஜாதி இழிவு பிறவி பேதம் ஒழிய முடியுமோ? அதை ரத்தத்திலே கலந்து அல்லவா அவன் நம்மை கீழ் ஜாதி ஆக்கியிருக்கிறான்?

நான் தோன்றித்தானே கடவுளைப் பழிக்க மதத்தை ஒழிக்க சாஸ்திரம் புராணக் குப்பைகளை யெல்லாம் புரட்டு என்று காட்டியபிறகு அல்லவா இன்று பல பேர் இதனை ஒப்புக்கொள்ளும் நிலைக்கு வந்துள்ளனர். இவ்வளவு பெரிய கூட்டத்தில் நெற்றியில் சாம்பலும் நாமமும் அடித்த முட்டாள்கள் 10 பேர்கள் கூட உங்களில் இல்லையே. இது எதைக் காட்டுகிறது? எங்கள் பிரச்சாரம் வீண் போகவில்லை. தகுந்த பலனை அளித்துக் கொண்டி ருக்கிறது என்பதைத்தானே!

நமது பிரசாரத்தின் வலிமையைக் கண்டு எங்கள் நாட்டில் பார்ப்பானும் அவனுக்கு வால் பிடிக்கும் சிலரும் வைதீகரும் எதிர்ப்பிரச்சாரம் செய்தார்கள், செய்கிறார்கள். அவ்வளவு நெருக்கடி தங்களுக்கு வந்து விட்டதாகக் கருதுகிறார்கள். ஓட்டு வாங்கி வயிறு வளர்க்கும் நிலையில் இல்லாததால் நாங்கள் துணிந்து சொல்ல முடிகிறது!

(1.11.1970 முதல் 5.11.1970 வரை பம்பாயில் பல்வேறு இடங் களில் நடைபெற்ற தந்தை பெரியார் - அண்ணா பிறந்த நாள் விழாக்களில் கலந்து கொண்டு, பேரறிஞர் அண்ணா படத்தைத் திறந்து வைத்து தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய பேருரைகளின் தொகுப்பு)

- விடுதலை, 12.11.1970, 13.11.1970

 - விடுதலை நாளேடு, 15. 9 .19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக