புதன், 4 செப்டம்பர், 2019

மதத்துக்கும் கடவுளுக்கும் நாங்கள் விரோதியல்ல மனிதனை அடிமைப்படுத்தும் எதற்கும் நாங்கள் எதிரிகளே!

நாமக்கல் கூட்டத்தில் ஈ.வெ.ரா. முழக்கம்


(வாசக நேயர்களே,


ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டிய முக்கியப் பகுதி இது.


இதுபற்றி தங்களது கருத்தினை சுருக்கமாக எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.


திராவிடர் இயக்கம் - 80 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு அரசியல் களத்தின் முக்கிய நிகழ்வுகள் - வரலாறு பற்றிய காலக்கண்ணாடியாக - திராவிடத்தின் தேவைக்கான நுண்ணாடியாக இது அமையும் ஒன்று. இதற்கான தேவை - பயன் - நுகர்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது. - ஆசிரியர்)


சுயமரியாதை இயக்கம்

நான் ஆரம்பத்தில் கூறியபடி முதலில் சுயமரியாதை இயக்கம் என்றால் என்ன? அது ஏன்? என்பதைப்பற்றி பேசிவிட்டு பிறகு காங்கிரஸ் என்பதைப் பற்றிப் பேசுகிறேன்.

சுயமரியாதை இயக்கம் இந்நாட்டு மக்களுக்கு முதலில் மான உணர்ச்சி ஏற்படவும் எல்லா மக்களையும் சமூகம் பொருளாதாரம் ஆகியவற்றில் சமப்படுத்தி ஒன்று சேர்க்க வும் ஏற்பட்டதாகும். மற்றும் பல கொள்கைகளை அது கொண்டிருந்தாலும் மற்றபடி அது நம் எதிரிகள் சொல்லுவது போல் மதங்களையும் கடவுள்களையும் எதிர்ப்பதற்கு என்றே ஏற்பட்டதல்ல.

நமது நாட்டு மக்களுக்கு மான உணர்ச்சி இல்லாமல் போனதற்கும் ஒற்றுமையும் சமத்துவமும் இல்லாமல் போன தற்கும் ஏற்பட்டுள்ள தடைகள் யாவும் ஒழிக்கப்பட வேண்டு மென்று சொல்லுவதிலும் அவைகளை ஒழிக்க முயற்சிப்ப திலும் உண்மையிலேயே சுயமரியாதை இயக்கம் சிறிதும் ஒளிமறைவில்லாமல் பாடுபடுகிறது.

இந்தக் காரியங்கள் செய்வதில் கடவுள்களோ, மதங் களோ வேறு எவைகளானாலும் சரி, அத்தொண்டிற்குத் தடையாயிருந்தால் அவற்றையும் ஒழிப்பதில் சுயமரியாதை இயக்கம் சிறிதும் பின் வாங்காது. இதைப்பற்றிப் பேசும்போது முதலில் மதம் என்று சொல்லப்படுவது எது? கடவுள்கள் என்று சொல்லப்படுபவை எவை என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

மதம் என்பது என்ன?

''மதம் என்பது மனிதனின் கூட்டு வாழ்க்கைக்கும், அதற் கேற்ற ஒழுக்கத்துக்கும் ஏற்றவிதிகளைக் கொண்டதேயாகும்" என்று சொல்லப் படுமானால் அம்மாதிரி மதங்களைப் பற்றி சுயமரியாதை இயக்கம் அதிக கவலைப்படுவது கிடையாது. அதற்கு சுயமரியாதை இயக்கம் அவசியமானால் உதவியும் செய்யும். மற்றும் "மனிதனின் ஆத்மா என்பது கடவுள் என்பதை அடைவதற்கு ஆக மதம் ஏற்பட்டது" என்றால் அதைப் பற்றியும் சுயமரியாதை இயக்கம் கவலைப்படுவ தில்லை. அப்படிப்பட்ட அபிப்பிராயக்காரனும் அவனுடைய மதமும் இப்போது எப்படியோ போகட்டும் என்று விட்டு விடும். ஏனெனில் அது தனிப்பட்ட மனிதனைப் பொறுத்த காரியம். அதைப்பற்றி பிறகு பார்த்துக் கொள்ளலாம். ஆனால் மனித சமூகத்தின் அறிவைப் பாழ்படுத்தவும் தன்மான உணர்ச்சி அறவே இல்லாமல் செய்யவும் மக்களைப் பிரித்து வைத்து உயர்வு தாழ்வு கற்பித்து மனித சமூக ஒற்றுமையைக் கெடுத்து பொது முன்னேற்றத்தையும் சுதந்தரத்தையும் தடுக்கும்படியான மதம் எதுவானாலும் அதை ஒழிக்க சுயமரியாதை இயக்கம் பாடுபட்டுத்தான் வந்திருக்கிறது. இன்று அனுபவத்தில் இருக்கும் நூற்றுக் கணக்கான பல மதங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றுள் அந்நிய மதம் அந்நியர்கள் மதம் என்பதைப்பற்றி நாம் இப்பொழுது பேச வேண்டாம். "நம்முடைய மதம்'' என்று இந்துக்கள் என்பவர்களால் சொல்லப்படுகிற இந்து மதம் என்பதையே எடுத்துக் கொள்வோம்.

இந்து மதம்

இந்தியர்களாகிய நாம் இவ்வளவு பிரிவினர்களாக இருப்பதற்கு இந்த இந்து மதமல்லாமல் வேறு எது காரணம்? பொதுவாக இந்துக்கள் இத்தனை ஜாதியாக அவற்றிலும் உயர்வு தாழ்வாக பார்ப்பான் பறையன் என்பதாக பிரிவுபடுத் தப்பட்டிருப்பதற்கும் இந்து மதமல்லாமல் வேறு என்ன காரணம்? இந்த 20ஆவது நூற்றாண்டில் - நேற்று சென்னை யில் மகா மேதாவிகளான பி.ஏ.பி.எல் சாஸ்திரிகள், மகா பண்டித சாஸ்திரிகள் ஒன்று கூடிக்கொண்டு "கீழ் ஜாதி யானை மேல் ஜாதியான் தொடுவது என்பது அதாவது தீண்டாமை ஒழிவது என்பது செத்தால் தான் போகுமே ஒழிய இந்த ஜன்மத்தில் ஜாதி பேதம் போக்கடிக்கப்பட முடியாது" என்று பேசியிருக்கிறார்கள். இதற்கு ஆதாரம் இந்து மத சாஸ்திரமும், வேதமும் தான் என்று பேசி இருக் கிறார்கள். ஆகவே இந்த நிலையில் இம்மாதிரி மதம், சாஸ் திரம், வேதம் என்பவைகள் ஒழிக்கப்படாமல் தீண்டாமையும் ஜாதி பேதமும் போக்கடிக்கப்பட முடியுமா? இதுவரையும் இந்து மதம் விட்டு வேறு மதம் முக்கியமாக முஸ்லீம் ஆகாத எந்த பார்ப்பனரல்லாதாருக்காவது தங்களது சமூகத்தில் தீண்டாமை போயிருக்கிறதா என்று யோசித்து பாருங்கள். மற்றும் பார்ப்பனருக்குள்ள சவுகரியமும் சுதந்தரமும் சமூக வாழ்விலும் பொருளாதாரத்திலும் மற்ற வகுப்பாருக்கு இருந்து வருகிறதா என்றும் யோசித்துப் பாருங்கள். இப்படிப் பட்ட மதம் ஒழிக்கப்பட வேண்டியது தான் என்பதற்கு இதைவிட வேறு என்ன காரணம் வேண்டும்? மதம் என்ற உடன் ஒருவித வெறி ஏற்பட்டு விடுகிறதாய் இருக்கிறதே ஒழிய மதம் மக்களுக்கு செய்துவரும் நன்மை என்ன? அதனால் மக்கள் அடையும் பயன் என்ன? என்பதை மத வெறியர்கள் சிந்திப்பதேயில்லை. கள்ளினால் உண்டாகும் வெறியைவிட இம்மாதிரி மதங்களால் ஏற்படும் வெறி அதிகமான கேட்டைத் தருகிறது. கள்ளு குடித்தவனை கெடுக்கிறது, மதம் மனதில் நினைத்தவனையே கெடுக்கிறது.

சோம்பேறி வாழ்வுக்கு மதந்தானே காரணம்?

சமுதாய வாழ்வில் மனிதர்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பிக்கிறது மாத்திரமல்லாமல் மதம் பொருளாதாரத்தில் உயர்வு தாழ்வு கற்பிப்பதற்கும் மூலகாரணமாய் இருக்கிறது. உண்மையில் நீங்கள் யோசித்துப்பாருங்கள். உடல் வலிக்கப் பாடுபட ஒரு ஜாதியும் நோகாமல் உட்கார்ந்துகொண்டு சாப்பிட ஒரு ஜாதியும் மதம் சிருஷ்டிக்க வில்லையா? உலக செல்வமும் போக போக்கியமும் சரீரப் பாடுபடும் மக்களுக்கு இல்லாமல் போகவும் சோம்பேறி வாழ்க்கை யாருக்கும் சரீரப்பாடுபடாதவர்களுக்கும் போய்ச் சேரவும் காரணம் மதக் கொள்கை அல்லாமல் வேறு என்ன? பாட்டாளிகள் தரித்திரர்களாகவும் வயிற்றுச் சோற்று அடிமையாகவும் கீழ் ஜாதியாராகவும் கீழ் மக்களாகவும் இருக்கவும் பாடுபடுவதும் சரீர உழைப்பு உழைப்பதும் தோஷம் என்று ஏற்படுத்திக் கொண்டவர்கள் கவலையற்ற வாழ்வு வாழவும் செல்வம் பெருக்கிக்கொள்ளவும் மற்றவர்களை அடக்கி ஆளவும் மதம் அல்லாமல் வேறு காரணம் என்ன?

பகுத்தறிவற்ற பக்ஷி மிருகம் பூச்சி புழுக்கள் தங்களுக்குள் ஜாதி பேதம், மேல் கீழ் நிலை, அடிமைப்படுத்தும் உணர்ச்சி ஆகியவை இல்லாமல் இருக்கும்போது பகுத்தறிவுள்ள மனிதனுக்குள் ஜாதி பேதம், உயர்வு-தாழ்வு எஜமான்-அடிமை உணர்ச்சி ஏற்படக் காரணம் என்ன? மிருகங்க ளுக்கு ஜாதி வித்தியாச முண்டா ?

கழுதையில், நாயில், குரங்கில், எருமையில் பறக் கழுதை, பற நாய், பறக் குரங்கு, பற எருமை என்றும் பார்ப்பாரக் கழுதை, பார்ப்பார நாய், பார்ப்பாரக் குரங்கு, பார்ப்பார எருமை என்றும் இருக்கிறதா? மனிதனில் மாத்திரம் இப்படி இருப்பதற்குக் காரணம் மதம் அல்லாமல் வேறு என்ன? இந்த மதம் ஏற்பட்டு எத்தனை காலம் ஆயிற்று? இதுவரை மனித சமூகத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் என்ன? கடவுள் அவதாரமான ராமனது ராஜ்யம் என்னும் காலத்தில் இருந்த கீழ் ஜாதியும் சத்தியகீர்த்தி அரிச்சந்திரன் ராஜ்யம் என்னும் காலத்தில் இருந்து வந்த சுடுகாட்டுப் பறையனும் பெண்ஜாதி விற்பனையும் பதினாயிரக் கணக்கான வருஷங்கள் ஆகி யும் இன்னமும் ஒழியவில்லை என்றால் மதத்தினால் மக்கள் முன்னேறுகிறார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்?

மதம் கற்பிக்கும் முட்டாள் தனம்

மதம் மனிதனுக்கு எவ்வளவு முட்டாள் தனத்தைக் கற்பிக்கிறது பாருங்கள். செத்துப் பொசுக்கப்பட்டு அந்த சாம்பலை தண்ணீரில் கரைத்து விடப்பட்ட மனிதனுக்கு பசி தீரவும் சுகமடையவும் அரிசி, பருப்பு, காய்கறி, செருப்பு பார்ப்பான் மூலம் மேல் லோகத்துக்கு அனுப்பிக் கொடுப்ப தென்றால் மனிதனுக்கு சிறிதாவது பகுத்தறிவு இருக்கிறது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ளுகிறீர்களா? பெற்றோர் களை - இறந்து போனவர்களை மதிக்க வேண்டாம் என்று நான் சொல்ல வரவில்லை. அதற்காக பார்ப்பானுக்கு ஏன் அழுக வேண்டும்? அவன் காலில் ஏன் விழவேண்டும்? அவன் கால் கழுவின் தண்ணீரை ஏன் குடிக்க வேண்டும்? மாட்டுச் சாணியும் மூத்திரமும் கலக்கி ஏன் குடிக்கவேண்டும்? இது மதக்கட்டளை, மத தத்துவம் என்றால் இப்படிப்பட்ட மதம் ஒழிய வேண்டாமா? என்று கேட்கின்றேன்.

கல்யாணம் கருமாதி கல்லெடுப்பு முதலிய சடங்குகள் பார்ப்பானுக்கு அழுகவே கற்பிக்கப்பட்டிருக்கின்றனவே ஒழிய அவற்றினால் வேறு பலன் என்ன இருக்கிறது?

வீழ்ச்சிக்குக் காரணம் என்ன?

மற்ற மதக்காரரும் உலகில் உள்ள மற்ற நாட்டு மக்களும் இப்படியா நடந்து கொள்ளுகிறார்கள்? நமக்குப் புத்தியும் இல்லை, வெட்கமும் இல்லை என்றால் கண்ணும் இல்லை, காதும் இல்லை என்று தானே அர்த்தம்? இதற்குப் பேர் மாமிசபிண்டம் என்று தானே சொல்ல வேண்டும்? எங்கள் மீது கோபித்து என்ன பிரயோஜனம்? எங்களை மதவிரோதி கள் என்று வைவதில் என்ன பிரயோஜனம்? மனிதனுக்கு இன்று இருக்கும் கேவல நிலைக்கு காரணம் மதமா? அரசாங்கமா? என்று சிந்திக்க வேண்டுமென்பதற்காகவே இதை சொல்லுகிறேன்.

மதத்தால் மக்களைச் சுரண்டிக்கொள்ளை அடித்து நோகாமல் வயிறு வளர்த்து போக போக்கியமனுபவிக்கும் சோம்பேறி அயோக்கியக் கூட்டம் நம்மை மதத்தை பற்றி சிந்தித்து திருத்துப்பாடு செய்து கொள்ளுவதற்குக் கூட இடம் கொடாமல் நம் ஈன நிலைமைக்கு அரசாங்கத்தை - வெள்ளையரைக் கைகாட்டி விட்டு தப்பித்துக் கொள்ளு கிறது. இது சாமர்த்தியமுள்ள திருடன் திருடிவிட்டு அதோ திருடன் ஓடுகிறான் என்று வேறு ஒருவனைக் கைகாட்டி தப்பித்துக்கொள்ளுவது போலவே இருக்கிறது. நான் சொல்லுவது உங்களில் சிலருக்கு புதிதாய் இருக்கலாம். நீங்கள் இதற்குமுன் இவ்விஷயங்களைப் பற்றி சரியாய் சிந்தித்து இருக்கமாட்டீர்கள் என்றே இவ்வளவு பேசினேன். ஆகவே நாங்கள் ஏன் மதத்தைப் பற்றி பேசுகிறோம்? எந்த மதத்தைப்பற்றி பேசுகிறோம் என்பதை சிந்தித்துப் பார்த்து உங்கள் இஷ்டப்படி நடவுங்கள்.

இனி நமது கடவுள்கள் என்பதைப் பற்றியும் சிறிது பேசிவிட்டு அரசியலைப்பற்றிப் பேசுகிறேன்.

(தொடரும்)

- 'விடுதலை', 17.12.1937
- விடுதலை நாளேடு 14.8 .19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக