இவ்வாறு பெரியார் முன்வைத்த கல்விச் சிந்த னைகளின் தொகுப்பு, ‘கல்விச் சிந்தனைகள் பெரியார்’ புத்தகம். எழுத்தாளர் அ.மார்க்ஸ் தொகுத்து, பாரதி புத்தகாலயம் வெளியிட்ட புத்தகம் இது.
கற்க ஆசை இல்லையா?
2019-ஆம் ஆண்டிலிருந்து 1931 காலகட்ட இந்தி யாவுக்கு ‘இன்றைய கல்வி நிலை’ என்ற அத்தியாயம் நம்மை அழைத்துச் செல்கிறது. 87 ஆண்டுகளுக்கு முன்னால் ஈரோடு மகாஜனப் பள்ளியில் இதே நாளில் பெரியார் ஆற்றிய உரை அது. அன்று இந்தியாவின் மக்கள்தொகை 35 கோடி. அவர்களில் பாதிப் பேர் பெண்கள் என்ற நிலையில் 100-க்கு
99.5 பெண்கள் எழுத்தறிவற்றவர்கள். 7 கோடி தாழ்த்தப்பட்ட மக்கள் ஜாதிய அடிப்படையில் கல்வி மறுக்கப் பட்டவர்கள். சில சமூகப் பிரிவினர் மட்டுமே கல்வி பெற முடிந்தது. அப்படிப் படித் தவர்கள் மத்தியிலும் மூடநம்பிக்கை நீங்கவில்லை.
இத்தகைய காலகட்டத்தில் கல்வி குறித்த விழிப்புணர்வைப் பெண் களுக்கும் ஜாதிரீதியாகப் பின்னுக்குத் தள்ளப்பட்ட மக்களுக்கும் ஏற்படுத்த நுட்பமான பல கேள்விகளை அன்றைய உரையில் எழுப்பினார் பெரியார். “இந்தியாவில் 100-க்கு 90 பேர் தற்குறியாக இருப்பது ஏன்?, அரசாங்கம் நமக்குக் கல்வி கற்றுக்கொடுக்கவில்லையா?, அரசாங்கத்திடம் பணமில்லையா?, மக்களுக்குக் கல்வி கற்க வேண்டும் என்கிற ஆசை இல்லையா? என்பவைகளைக் கவனித்தோமானால் ஏன் மக்கள் கல்வி கற்கவில்லை என்பது விளங்கும்” என்றார்.
கேள்வியைப் புரிந்துகொள்வது என்பதே பாதி விடையைக் கண்டு பிடித்ததற்குச் சமம் என்று தத்துவ அறிஞர் சாக்ரடீஸ் குறிப்பிட்டார். அவ்வாறே பெரியார் அன்று எழுப்பிய கேள்விகள் பெண்களையும் தாழ்த்தப்பட்ட மக்களையும் விடை தேட உந்தித்தள்ளின.
நோக்கம் என்ன?
இந்தக் கேள்விகளோடு நின்று விடாமல் கல்வியின் நோக்கம் என்ன என்ற தொலைநோக்குப் பார்வை கொண்ட கேள்வியையும் தன்னுடைய உரையில் எழுப்பினார் பெரியார்.
சுயசார்போடும் சுய அறிவோடும் சுதந்திரமாக வாழ்வதற்கு ஒருவரைத் தகுதிப்படுத்துவதே கல்வி. நல்வாழ்க்கை வாழ்வதற்குத் தயார்படுத்துவதே கல்வி. இப்படித் தான் கல்வி கற்பவர்களும் கற்பிப் பவர்களும் காலங்காலமாகச் சொல்லிக் கொண்டி ருக் கிறார்கள். ஆனால், “கல்வியின் பயன் இந்த லட்சியத் தோடு பொருந்திப் போகிறதா?” என்று கேட்டார். இதிகாசங்கள், புராணங்களைக் கற்பித்து மதத்தைக் கல்வியில் கலப்பதால் பகுத்தறிவுக்குப் பாதகம் ஏற்படும். அங்கு அச்சமும், மூடநம்பிக் கையுமே கையோங்கும். சுயசிந்தனை தழைக்கவே தழைக்காது என்று தெளிவுபடுத்தினார்.
பெண்ணுக்கு இருபாலர் கல்விக்கூடம்
1972-ல் மன்னார்குடி வடச்சேரியில் பெண் கல்வி குறித்துப் பெரியார் ஆற்றிய உரை இப்புத்தகத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. பெண் கல்வி, வாழ்க் கைத் தரம், திருமண உரிமை உள்ளிட்டவற்றில் 30 ஆண்டுகளாகப் பெரியார் மேற்கொண்ட முயற்சி களுக்குச் சட்ட வடிவம் கிடைக்கப்பெற்ற காலகட் டத்தில் ஆற்றிய உரை இது. உதாரணத்துக்கு, பலதார மணம் செய்வது சட்டப்படி குற்றம் போன்ற சட் டங்கள் உருவெடுக்கக் காரணம் பெரியாரின் இடைவிடாத போராட்டமே.
இப்படிப் பெண்ணின் அடிப்படை உரிமை களைப் போராடிப் பெற்றுத் தந்த பிறகு, அடுத்த கட்டமாக இரு பாலர் கல்வியின் முக்கியத் துவத்தை அழுத்தந்திருத்தமாக, ‘பெண்களுக்குத் தனிக் கல்லூரி வேண்டாம்’ என்ற பரப்புரை மேற் கொண் டார் பெரியார். “ஆண்களும் பெண்களும் ஒரே பள்ளியில், கல்லூரிகளில்தான் படிக்க வேண்டும். அப்பத்தான் சமத்துவம் வளரும் எல்லாவிதமான வேலைகளுக்கும் தொழில்களுக்கும் பெண்கள் பக்குவம் உடையவராக இருபாலர் கல்வி கை கொடுக்கும்” என்றார். 21-ஆம் நூற்றாண்டில் முன்னிறுத் தப்படும் வளர்ச்சி என்ற கருதுகோளை அன்றே விளம்பினார் பெரியார். “சமூகத்தின் சரிபாதியான பெண்களும் முன்னேறினால்தான் நாடும், சமு தாயமும் முன்னேற்றம் காணும்” என்றார்.
உதவித்
தொகைக்குக் குரல்
ஜாதிய ஏற்றத்தாழ்வு முறை, பெண் அடிமைத் தனம், மூட நம்பிக்கைகள் ஆகியவற் றுக்காக இந்தியர்களை கடுமை யாக விமர்சித்தவர் பெரியார். அதேநேரத்தில் கல்வியில் முன்னேற்றம் கண்ட பகுதி களைத் தேடி அடையாளம் கண்டு அவற்றைக் குறித்துப் பாராட்டி எழுதினார், பேசினார்.
அன்றைய காஷ்மீர் மகா ராஜா தனது சமஸ்தானத்துக்கு உட்பட்ட ஒடுக்கப்பட்ட மக்க ளுக்குக் கல்வி, கல்வி உதவித் தொகை, வேலை வழங்கி அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியதைப் பாராட்டி 1930-ல் ‘குடி அரசு’-வில் ‘தீண்டப் படாதாரும் கல்வியும்’ என்ற கட்டுரை யில் எழுதினார் பெரியார். நாட்டின் பிற பகுதிகளில் இதைப் பின்பற்ற வேண் டும், அதுவே ‘மனித உரிமை’ என்று 1930-களிலேயே குரல் கொடுத்தார்.
கல்வி உதவித்தொகைத் திட்டத் தைத் தமிழ் அரசாங்கம் உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தினார். அப்படிச் செய்தால் மட்டுமே ஏழ்மை யில் வாடும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் சந்ததியினர் பாடசாலைகளை நோக்கி முன்னேற முடியும் என்று விளக்கினார். விளிம்பு நிலை குழந்தைகளுக்கு ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களே ஆசிரியர் களாகக் கல்வி கற்பிக்கும் நடவ டிக்கையை அரசு எடுக்க வலியுறுத் தினார். அதற்காக ‘தீண்டாமை ஒழிப்பு கமிட்டி’யைப் பெரும்பான்மையாக அவ்வகுப்பினர் களைக்கொண்டே ஏற்படுத்த அறிவுறுத்தினார்.
இதேபோன்று, 1965-இல் ‘விடுதலை’ இதழில் ‘கல்வியில் ஒதுக்கீடு’ என்ற தலையங்கத்தில் ஜாதிவாரியாகக் கல் வியில் இட ஒதுக்கீடு செய்ய வேண் டியதன் அவசியத்தை டாக்டர் அம் பேத்கரை மேற்கோள்காட்டி விவரித் தார். நெடுங்காலமாகக் கல்வி மறுக்கப் பட்டவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலான கல்வி வழங்கும் சமத்துவப் பாதையை அகலப்படுத்த வலியுறுத்தினார்.
மும்மொழி பார்வை
இந்தி, தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளை எப்படி அணுக வேண்டும் என்று பல கட்டுரைகளில் விவாதித் திருக்கிறார். இவற்றை வாசிக்கையில் இந்தி மொழியை அவர் எதிர்க்கவில்லை, அதை வைத்து நடத்தப்படும் கலாச்சாரத் திணிப்பைத்தான் எதிர்க்கிறார் என்பது தெளிவாகிறது. அதேபோல தமிழ் மொழியை வளர்ப்பதன் முக்கியத் துவத்தைப் பற்றி பேசும்போது “வளர்ப்பது என்றால் என்ன?” என்ற கேள்வியை 1948-இல் ‘விடுதலை’ இதழில் வெளி யான ‘ஏன் நமக்கு ஆங்கிலம் வேண்டும்’ என்ற கட்டுரையில் எழுப்பினார்.
அதற்கு, “தமிழை வளர்ப்பதென் றால் புராணக்கதைகளை, பிரச்சாரம் செய்வதல்ல. தமிழ் மொழியை விஞ்ஞானத்துறையில் புகுத்தித் தமிழ் மொழி வழியாகவே புதிய உலகைக் காணும் வழி வகுத்தல் வேண்டும். இன்று உலகில் அவ்விதத் தன்மையுடைய மொழி நமக்கு ஆங்கிலம் ஒன்றைத் தவிர வேறில்லை என்றே கூறுவேன்” என்று எழுதினார். கூடுமானவரை மதம் நீக்கப்பட்ட மொழி ஆங்கிலம் என்றார் பெரியார். ஆகையால் ஆங்கில ஏகாதி பத்திய முறையை எதிர்த்த அதே வேளையில் ஆங்கில மொழியை வரவேற்றார்.
அறிவியல்பூர்வமான நோக்கில் கல்வித் திட்டம் வடிவமைக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலி யுறுத்தினார். சிலருக்கு மட்டுமே என்று இருந்த பாடசாலைகளை எல்லாருக்கு மானதாக்க இடைவிடாது போராடினார். மொழி, சட்டம், பண்பாடு ஆகிய தளங்களில் மட்டுமின்றிக் கல்வியிலும் சாதி ஒழிப்பையும் மதச்சார்பின் மையையும் வலியுறுத்தினார். எல்லா வற்றுக்கும் மேலாக அன்று அவர் எழுப்பிய அநேகக் கேள்விகள் ஒரு நூற்றாண்டு கடந்தும் உயிர்ப்புடன் நின்று நம்மைச் சிந்திக்கத் தூண்டு கின்றன.
கல்விச் சிந்தனைகள்
‘பெரியார்’
தொகுப்பு: அ. மார்க்ஸ்
பாரதி புத்தகாலயம்,
தொலைபேசி: 044-24332424
156 பக்கங்கள்
விலை ரூ.130/-
நன்றி: 'இந்து தமிழ்திசை' 17.9.2019
தந்தை பெரியார் ஓர் உலகக் குடிமகன்
ச.வீரமணி
1879 செப்டம்பர் 17 அன்று ஈரோட்டில் பிறந்த, தந்தை பெரியார், 1973 டிசம்பர் 24 அன்று சென்னையில் உயிர்நீத்தார். அவர் வாழ்ந்த காலம் 94 ஆண்டுகள் 3 மாதங்கள் 7 நாட்கள். அதாவது 34 ஆயிரத்து 433 நாட்கள். இப்போதிருப்பது போல வசதியான போக்குவரத்து வசதிகள் இல்லாத அந்தக் காலத்திலேயே சுமார் 8600 நாட்கள் சுற்றுப்பயணத்திலேயே செலவு செய்தார். சுமார் 13 லட்சத்து 12 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்தார். அந்தப் பயணத்தில் அவர் பங்கு கொண்ட நிகழ்ச்சிகள் பத்தாயிரத்து எழுநூறு ஆகும். அவற்றில் அவர் கருத்துரைகள் ஆற்றிய நேரம் சுமார் 21 ஆயிரத்து 400 மணி நேரமாகும். இந்தச் சொற்பொழிவை ஒலிநாடாவில் பதிவு செய்து, அது ஒலிபரப்பப்பட்டால் இரண்டு ஆண்டுகள் 5 மாதங்கள் 11 நாட்கள் இரவு பகலாகத் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும். இவருக்கு முன்னர் வேறெந்தத் தத்துவ ஞானியும் இவ்வளவு நீண்ட நாட்கள் மக்களிடையே சொற்பொழிவு ஆற்றியதில்லை எனலாம். அதனால்தான் யுனெஸ்கோ என்னும் அய்க்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் கீழ் உள்ள கல்வி அறிவியல் மற்றும் பண்பாட்டு மன்றம், ‘‘பெரியார் புதிய உலகத்தின் தீர்க்கதரிசி, தென்கிழக்கு ஆசியக் கண்டத்தின் சாக்ரடீஸ், சமுதாய சீர்திருத்த இயக்கத்தின் தந்தை! அறியாமை, மூட நம்பிக்கை, அர்த்தமற்ற வழக்கங்கள், ஆதாரமற்ற நடப்புகள் ஆகியவற்றின் கடும் எதிரி” என்று 1970 ஜூன் 27 அன்று பட்டயம் வழங்கியது.
‘‘மனிதன் எவனும் தானாகவே பிறக்கவில்லை, ஆகவே அவன் தனக்காகவும் பிறக்கவில்லை. மனித வாழ்க்கை என்பது மக்கள் சமுதாயத்துக்குத் தொண்டு செய்வதேயாகும். தொண்டு செய்யாத மனித வாழ்வு என்பது மிருக வாழ்க்கைக்குச் சமமானதேயாகும்’’ என்று அறுதியிட்டு உறுதிபடக் கூறினார். தமிழ் மக்களிடையே சுயமரியாதை உணர்வுகளை விதைக்க வேண்டும், சுயமரியாதை உணர்வுகளை வளர்க்க வேண்டும் என்ற கருத்தில் ஈ.வெ.ரா. ‘குடிஅரசு’ என்னும் வாரப் பத்திரிகையைத் தொடங்கினார். இவரது அச்சகத்துக்கு, ‘உண்மை விளக்க அச்சகம்’ எனப் பெயரிட்டார். ‘‘மக்களுக்குள் சுயமரியாதையும், சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி வளர வேண்டும். உயர்வு - தாழ்வு என்னும் உணர்ச்சியே, நமது நாட்டில் வளர்ந்து வரும் ஜாதிச்சண்டை என்னும் நெருப்புக்கு நெய்யாக இருப்பதால் இவ்வுணர்ச்சி ஒழிந்து அனைத்துயிர்களும் ஒன்றென்று எண்ணும் உண்மை அறிவு மக்களிடம் வளர வேண்டும்’’ என்ற நோக்கங்களை குடிஅரசு அடிப்படையாகக் கொண்டிருந்தது.
பெரியார் துவக்கி வைத்த சுயமரியாதை இயக்கம் சொல்வது என்ன? சமூக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு - தாழ்வும் இருக்கக் கூடாது. மனித சமூகம் பொருளாதாரத் தன்மையில் ஏழை - பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வுகள் இல்லாமல் எல்லாப் பொருளும் பூமியும் எல்லாருக்கும் சரிசமமாக இருத்தல் வேண்டும். மக்கள் சமூகத்தில் ஆணுக்கும் - பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல் சகல துறைகளிலும் சமத்துவம் இருக்க வேண்டும். மனித சமூகத்தில் ஜாதி, மதம், தேசம், வருணம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமூக ஒற்றுமையே நிலவ வேண்டும். உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் உயர்வு தாழ்வு இல்லாமல் சமூகத்தின் தேவைகளுக்கு, சகல மனிதர்களும் பாடுபட்டு அவற்றின் பயனைச் சரிசமமாக அனுபவிக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் எவற் றுக்கும் எவ்விதத்துக்கும் அடிமையாகாமல் அவரவர் அறிவு, ஆராய்ச்சி, காட்சி, உணர்ச்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்க சர்வ சுதந்திரம் இருக்க வேண்டும். பெரியாரின் இந்தக் கொள்கைகளே அவர் நடத்திய ஒவ்வொரு போராட்டத்துக்கும் ஒவ்வொரு நடவடிக் கைக்கும் அடிப்படையாகும்.
சுயமரியாதை இயக்கத்திற்காக தந்தை பெரியார், ‘ரிவோல்ட்’ என்னும் ஆங்கில இதழையும் நடத்தி வந்தார். ரிவோல்ட் என்ற ஆங்கில வார்த்தைக்குக் கட்டுப்பாட்டைத் தகர்த்தல் என்று பொருள். மனித இயற்கைக்கும் அறிவுக்கும் முரணான கட்டுப்பாட்டைத் தகர்ப்பதும் உலகமும் அதன் இன்பமும் எல்லாருக்கும் பொது என்பதும் அதன் நோக்கங்களாக இருந்தன. மக்கள் யாவரும் சமம் என்ற கொள்கையை மனச்சாட்சிப்படி சாத்தியமான வழிகளில் பிரச்சாரம் செய்வதே இப்பத்திரி கையின் நோக்கம் என்று பெரியார் பிரகடனம் செய்தார். குடியரசு இதழை ஆங்கிலேயர் ஆட்சி 1933ஆம் ஆண்டில் தடை செய்தது. அப்போது அதற்கு மாற்றாக நவம்பர் 20ஆம் நாளன்று ‘புரட்சி’ என்னும் வார ஏட்டினைத் தொடங்கினார்.
அதன் முதல் இதழில் பெரியார், ‘‘குடிஅரசை ஒழிக்கச் செய்த முயற்சியில் புரட்சி தோன்ற வேண்டியதாயிற்று. உண்மையிலேயே பாமர மக்களின் அதாவது பெரும்பான்மையான மக்களின் ஆட்சியாகிய குடிஅரசுக்கு உலகில் இடமில்லையானால் கண்டிப்பாய் புரட்சி தோன்றியேதான் ஆகவேண்டும். அந்த அய்தீகப்படியே புரட்சி தோன்றியிருப்பதால், புரட்சியில் பற்றுள்ள மக்கள் யாவரும் புரட்சியை வரவேற்பார்கள். பாடுபட்டு ஊரானுக்குப் போட்டு விட்டுப் பட்டினியாகவும், சமூக வாழ்வில் தாழ்மையாகவும் வாழும் மக்களின் ஆதரவையே ‘புரட்சி’ எதிர்பார்த்து நிற்கிறது. வெள்ளை முதலாளிகளை ஒழித்துக் கருப்பு முதலாளிகளைக் காக்கும் வேலைக்காக இன்று ‘புரட்சி’ வெளிவரவில்லை. அல்லது வெள்ளை ஆட்சியை ஒழித்துக் கருப்பு ஆட்சியை ஏற்படுத்த ‘புரட்சி’ தோன்றவில்லை. அதுபோலவே இந்து மதத்தை ஒழித்து, இஸ்லாம், கிறிஸ்து மதத்தைப் பரப்ப ‘புரட்சி’ தோன்றவில்லை. ‘சகல முதலாளி வர்க்கமும், சகல சமயங்களும் அடியோடு அழிந்து மக்கள் யாவரும் சுயமரியாதையுடன் ஆண் - பெண் அடங்கலும் சர்வ சமத்துவமாய் வாழச் செய்ய வேண்டும் என்பதற்காகப் ‘புரட்சி’ தோன்றியிருக்கிறது எனக் குறிப்பிட்டிருந்தார்.
பின்னர் ‘புரட்சி’ ஏடும் நிறுத்தப்பட்டு, ‘பகுத்தறிவு’ வார ஏட்டைத் துவக்கினார். இதன் முதல் இதழில், ‘‘மனித சமூகத்தால் மவுடீகத்தால் ஏற்பட்ட துரபிமானங்களை கடவுள், ஜாதி, மதம், தேசம், நான், எனது என்பன போன்ற அபிமானங்களை அறவே ஒழித்து, மனித சமூக ஜீவா பிமானத்தையும், ஒற்றுமையையும், பிரதானமாய்க் கருதி உழைத்து வரும் என்றும், ‘பகுத்தறிவு’ மனித ஜீவா பிமானத்திற்கு மக்களை நடத்திச் செல்லுமேயொழிய எக்காரணம் கொண்டும், மக்கள் பின் நடந்து செல்லும் படியான அடிமை வாழ்வில் உயிர் வாழாது’’ என்றும் பெரியார் குறிப்பிட்டிருந்தார்.
பின்னர், 1935ஆம் ஆண்டு ஜூன் முதல்நாள் ‘விடுதலை’ தொடங்கப்பட்டு இன்றளவும் நடந்து வருகிறது. இவ்விதழின் முதல் இதழில் பெரியார், ‘இப்பத்திரிகை நீடுழி வாழ்ந்து பாமர மக்களுக்கும், பண்டிதர்களுக்கும் பயன்பட்டு உலகமக்களுக்கு உண்மை விடுதலையைக் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்’ என்று குறிப்பிட்டிருந்தார். தன் வாழ்நாள் முழுதும் மக்கள் மேம் பாட்டிற்காகப் பல்வேறு இதழ்களையும், இயக்கங்களையும் கண்டவர் தந்தை பெரியார்.
ஓர் உன்னத மனிதாபிமானியாக, ஓர் உன்னத உலகக் குடிமகனாக மாபெரும் புரட்சியாளராக வாழ்ந்திட்ட தந்தை பெரியார் அவர்களை தமிழ்கூறும் நல்லுலகம் மட்டும் அல்ல, உலகமே என்றென்றும் நினைவு கூரும்.
நன்றி: 'தீக்கதிர்', 17.9.2019
- விடுதலை நாளேடு, 22 .9 .19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக