சனி, 7 செப்டம்பர், 2019

பெரியார் பேசுகிறார் : சமுதாயத் தொண்டுக்கு எந்தப் பற்றுமே இருக்கக் கூடாது



தந்தை பெரியார்


உலகில் வேறு எங்குமே இதுபோன்ற சமுதாயத்தில் மேல், கீழ், உயர்வு, தாழ்வு கிடையாது. காரணம் அவர்களிடையே புகுத்தப்பட்ட கடவுள், மத தருமத்தில் இதுபோன்ற இழிவு புகுத்தப்படவில்லை. அவர்கள் பின்பற்றுகிற மதம், கடவுள் கொள்கைகள் மனிதனைச் சமமானவனாக்கக் கருதும்படியானதால் அதில் ஏற்றத்தாழ்விற்கு இடமில்லாமலிருக்கிறது என்பதோடு இங்கு போன்று பார்ப்பனர்கள் அங்கு இல்லாததும் பெரும் காரணமாகும்.

உலகிலேயே எடுத்துக் கொண்டால் சமுதாயத்துறையில், ரொம்ப தீவிரமாக இருப்பவர்கள் கொல்லப்படுவதும் வழக்கம். சில வெளியே தெரியலாம். பல தெரியாமல் இருக்கும். நம் நாட்டில் புராண காலம் தொட்டு சமுதாயத்துறையில் தொண்டாற்ற வந்தவர்கள், அனைவரும் கொல்லப்பட்டே வந்திருக்கின்றனர். இரணியன், சூரபத்மன், இராவணன் முதலிய கற்பனை சீர்திருத்தவாதிகள் யாவரும் கடவுளாலேயே கொல்லப்பட்டதாகப் புராணங்களிருக்கின்றன என்பதோடு, இதுவே கடவுள் கதையாகவும் இருக்கிறது; நம் நாட்டில் நமக்குத் தெரிய அவருக்கு சமுதாய உணர்ச்சி ஏற்பட்டதும், காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். மற்ற நாடுகளிலும் சமுதாயத்துறையில் வேறு  துறைகளிலும் ஈடுபட்டவர்களில் பலர் கொல்லப்பட்டிருக்கின்றனர். கென்னடி, லூதர்கிங் போன்றவர்கள் சமுதாயத் துறையில் மாற்றம் செய்யவேண்டுமென்று  பாடுபட்டதால் கொல்லப்பட்டவர்களேயாவார்கள்.

மற்ற சமுதாயத்தைப் போல் நாம் ஒரே  சமுதாயமல்ல.  பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒன்றுகூட முடியாத நிலைமையில் நம் சமுதாயமிருக்கின்றது. எதிரிகள் பல பிரிவினர்களாக இருந்தாலும், இனநலத்திற்காக எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து விடுகின்றனர். நமக்கு அப்படியல்ல சுயநலம்தான் முக்கியமாக இருக்கிறது மற்றும் நம் நாட்டிலிருக்கிற கடவுள் நம்பிக்கைக்காரனுக்குத் தான் இந்த குறை இருக்கிறதே தவிர, மற்ற நாட்டிலிருக்கிற கடவுள் நம்பிக்கைக்காரர்கள் எவருக்கும் இந்த குறை இல்லை.

சமுதாயத் தொண்டு செய்கின்ற இந்த ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது என்பதைக் கொள்கையாகக் கொண்டிருக்கின்றோம். எனவே எங்கள் ஸ்தாபனத்தைச் சார்ந்தவர்களில் எவரும் அரசியலில் ஈடுபடுவது கிடையாது. மற்ற எந்தத் தொண்டுக்கும், எந்த பற்று இருந்தாலும் அந்தத் தொண்டைப் பாதிக்காது. ஆனால், சமுதாயத் தொண்டு  செய்கின்றவனுக்கு எந்தப் பற்றுமே இருக்கக்கூடாது. அதாவது கடவுள், மத, சாஸ்திர, அரசியல், நாடு, மொழி எந்தப் பற்றும் இருக்கக்கூடாது. இதில் எந்தப் பற்று இருந்தாலும் அந்தத் தொண்டு பலன் பெறாமலே போய்விடும்.

- `விடுதலை’, 26.10.1968.

- உண்மை இதழ், 26-30.6.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக