புதன், 25 செப்டம்பர், 2019

நம் திருமண முறை எது?

16.12.1944  -குடி அரசிலிருந்து....

மணமக்களே! தாய்மார்களே!! தோழர்களே!!!

இத்திருமணத்திற்கு நான் வரவேண்டும் என்று 2 மாதமாக தோழர் ஆதிநாராயணன் விரும்பினார். நான் சென்றவாரம் முழுவதும் தஞ்சை ஜில்லாவில் சுற்றுப் பிரயாணம் செய்த அலுப்பாலும், சிறிது காய்ச்சல் இருந்த தாலும் வாராமல் நின்று விடலாம் என்று கருதினேன். ஆனால் சேலம் மாநாட்டின் தீர்மானத்தின்படி இராமநாதபுரம் ஜில்லா வின் விகிதமான குறைந்த அளவு 1000 மெம்பர்கூட திராவிடர் கழகத்திற்கு அதாவது ஜஸ்டிஸ் கட்சிக்கு சேர்க்கப்படாமல் இருப்பதால் இதைப்பற்றி கவனித்துப்போக இதை சந்தர்ப்பமாகக் கொண்டு இவ்வளவு அசவுகரியத்தில் இங்கு வந்தேன்.

நீங்கள் அது தெரிந்து நான் இங்க வந்ததுமே 216 அங்கத்தினர்கள் இரசீதும், இதற்கு சந்தா ரூ. 27-4-0 கொடுத்து இந்த ஜில்லாவிற்கு கோட்டா சேர்க்கப்பட வேண் டிய (விகிதம்) 1000க்கும் மேலாகவே ஆக் கப்பட்டு வெளியிடும்படியாக செய்துவிட்ட தால், என்னுடைய சுற்றுப் பிரயாண அலுப்பும், காய்ச்சலும், பலவீனமும் எங்கே யோ போய்விட்டது. அதற்காக உங்களுக்கு நன்றி செலுத்துகிறேன். ஆனால் இவ்வள வோடு நின்றுவிடாமல் இதை ஜில்லாவுக்கு 5000 மெம்பர்களாவது சேர்க்கப்பட வேண்டும். செட்டி நாட்டிலும் விருதுநகரிலும் தீவிரமாக அங்கத்தினர் சேர்க்கப்படுவது கேட்டு நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள்.

மற்றும், நாம் எந்த தேர்தலில் வெற்றி பெற நினைத்தாலும், ஏன்? அபேட்சகராய் நிற்க நினைப்பதானாலும் அத்தொகுதி ஓட்டர்கள் எல்லோருக்கும் அங்கத்தினர்களாகச் சேர்க்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதுதான் நமது கட்சியின் உண்மையான பலத்திற்கு ஆதாரமாகும். மற்றபடி பொது உடைமையும், போலி சுயராஜ்ஜியத்தையும், மதமூட நம்பிக்கையையும் பாமர மக்களிடம் சொல்லி ஏமாற்றி ஓட்டு வாங்குவதோ அல்லது சர்க்காரைக் கெஞ்சி பதவி பெறுவதோ இனி ஆபத்தாகவும், தற்கொலை யாகவும், பயனற்றதாகவும், பரிகசிக்கத்தக்க தாகவும்தான் முடியும். அன்றியும் அதனால் சில தனிப்பட்டவர்கள் சுயநலம் அடைய லாமே ஒழிய, ஓட்டுக் கொடுத்த ஓட்டர்களுக்கு ஒன்றும் செய்ய முடியாது, ஆதலால் கூடுமானவரை வயது வந்தவர்களையெல்லாம் அங்கத்தினர்கள் ஆக்க முயற்சி செய்யுங்கள்.

திருமணம்

இத்திருமணத்தில் நான் என்ன புதிதாகப் பேசப் போகிறேன். இந்த முறை திருமணம் இப்போது நாட்டில் சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது. அதிலும் இந்த நாடார் சமு தாயத்தில் இதுவே முறையும் உரிமையுமாக ஆகிவிட்டது. ஆதலால் இந்தத் திருமண முறையைப் பற்றி என்ன பேசுவது என்பது தோன்றவில்லை. பொதுவாகவே திருமணம் என்பதற்கு எந்த முறை தகுதியானது என்று சொல்லுவதற்கு ஒரு முறையுமே கிடையாது. ஏதோ பழக்க வழக்கம் பெரியோர் நடந்தது என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்ல முடியாது! அதிலும் திராவிடர்களாகிய நமக்கு எந்தமுறை இருந்தது, எது சரி என்று எடுத்துக்காட்ட ஒன்றுமேயில்லை. புல வர்கள் ஏதாவது பிதற்றலாம், ஆனால் அது அவர்களுக்கே புரியாததாகத்தான் இருக்கும்.

திருமணத்தின் அவசியம்

இந்த உலகத்தில் சொத்தைப் பற்றியும், மேல் உலகம் என்பதில் மோட்சம் என்பதைப் பற்றியும் லட்சியம் இல்லாவிட்டால் திருமணம் என்பதாக, வாழ்க்கை ஒப்பந்தம் என்பதாகக்கூட எதுவும் தேவையில்லை. நாம் தேடிய சொத்துக்கு நாம் பெற்ற பிள்ளை இருக்க வேண்டும் என்பதே திருமணத்தின் முக்கிய நோக்கமாகும். அதற்கும் அந்தந்த சமுதாயப்படி சொத்தை அனுபவிக்க சிலருக்கு ஆண் பிள்ளை வேண்டும், சிலருக்கு பெண்பிள்ளை வேண்டும். தேவதாசிகளும், மறுமக்கட்தாயம் உள்ளவர்களும், தங்கள் சொத்துக்குப் பின் சந்ததியாக உரிமைக்கு பெண் குழந்தைகள் பெறவும், இல்லாவிட்டால் பெண்குழந்தையை தத்துக்கு எடுக்கவும் ஆசைப்படுகிறார்கள்; மற்றவர்கள் நம் போன் றவர்கள் ஆண் குழந்தை பெறவும், பிறக்கா விட்டால் ஆண்குழந்தைகளைத் தத்து எடுத்துக் கொள்ளவும் செய்கிறோம். இதற் காகவேதான், திருமணம் பெரிதும் சடங்காக, ஒப்பந்தமாக, பதிவாக சட்டத்திற்குள் அடங்கியதாகச் செய்ய வேண்டியிருக்கிறது. இந்த நிலை மாறிவிட்டால் திருமணம் என்கின்ற வார்த்தையே மறைந்துபோகும்.

அதனால்தான் நான் இந்த முறைகூட முடிந்த முடிவல்ல என்று அடிக்கடி சொல்லி வருகிறேன். இனி 40, 50 வருஷங்கழிந்த பின்பு  அதாவது இந்த சொத்து முறைகள் மாறி பொது உடைமைமுறை வந்து தாண்டவ மாடும்போது இந்த முறைகூட இருக்காது என்பதோடு இதை ஒரு மூட நம்பிக்கை; காட்டுமிராண்டிக் காலமுறை என்று சொல்ல வேண்டி வரும் என்பதோடல்லாமல் இன்று உங்களில் பலரால் புரட்சிக்காரன் என்று கூறப்படுகிற என்னை ஒரு மூட நம்பிக் கைக்காரனான வைதிகப்பிடுங்கல் இராம சாமி என்று ஒருவன் இருந்தான் என்று என்னை உங்கள்  பிள்ளைகள் பேரன்மார்கள் சொல்லும்படியான  நிலைகூட வந்துவிடும் என்று நான் சொல்லுவதுண்டு.

நம் திருமண முறை ஏது?

ஆகையால் திருமணத்திற்கு ஒரு கட்டுப் பாடுதான் வேண்டியிருக்கிறதே ஒழிய, முறை ஒன்றும் இன்று தேவையில்லை இங்கு கட்டுப்பாடே வேண்டாத காலம் வருமென் றால் முறை வேண்டிய காலம் எதற்காக வேண்டியிருக்கும்? ஒரு சமயம் கட்டுப்பாடு வேண்டியதில்லை என்கின்ற தன்மை நடைபெற, கட்டுப்பாடும் முறையும் வேண் டியதாக இருக்கலாம். இன்று நாமாகிய திராவிடர்களுக்கு நம்மைப் பற்றிய சரித் திரமும், நம் நாட்டைப் பற்றிய தன்மை களும்கூடத் தெரியவில்லையானால், நம் திருமணத்திற்கு என்ன முறை சிறந்தது என்று எப்படிக் கண்டுபிடிக்க முடியும்? அப்படித்தான் ஒன்று இருந்திருந்தாலும் அதைப் பற்றி இன்று பேசுவது எப்படி அறிவுடைமையும், பொருத்தமுடையது மாகும்? இன்று நாம் எலக்ட்டிரிக் (மின்சார) விளக்கு வெளிச்சத்தில் இருந்துகொண்டு, திராவிடர்களுக்கு முன்காலத்தில் விளக்கு எப்படி இருந்தது என்று ஆராய்ச்சி செய்தால், அது பழங்காலத்து மக்களுக்கு இருந்த அறிவைப்பற்றி, குறிக்க உதவுமே தவிர அதைப் பயன்படுத்த முடியுமா? நாம் ஆகாயக் கப்பலில் பறந்து கொண்டு பழங்கால திராவிடர் எப்படிப் பிரயாணம் செய்தார்கள் என்று கண்டுபிடிக்க ஆராய்ச்சி நடத்தினால் அது பழங்கால மக்கள் தன்மையை அறிந்து கொள்ள முடியுமே தவிர, அந்தக் காலத்து வாகனத்துக்குப் போக முடியுமா?

 

- விடுதலை நாளேடு 21. 9. 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக