திங்கள், 16 நவம்பர், 2015

மாணவர் எழுச்சி மகிழ்ச்சியளிக்கிறது! - தந்தை பெரியார்


தகுதி பார்த்துதான் மாணவர்களுக்கு உயர்ந்த படிப்பு, படிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்ற சட்டம் திராவிட மாணவர்களுக்குப் பெரிதும் கேடு விளைவித்துள்ளது.இச்சட்டம் செய்வதில் அடிப்படையான நோக்கம் திராவிடர்களின் முன்னேற்றத்தைத் தடுத்துப் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தைப் பெருக்குவது என்பதுதான்.
மேலும் ஆங்காங்குள்ள உயர்நிலைப் பள்ளிகளின் பார்ப்பன ஆசிரியர்கள் திராவிட மாணவர்களுக்குப் பலவகையாலும் தொல்லைகள் கொடுத்து வருகின்றனர். பல பள்ளிக்கூடங்களில் திராவிட இன உணர்ச்சிபெற்ற திராவிட மாணவர்களைத் தேர்தலில் வெற்றிபெறாவண்ணம் ஆரியத் தலைமையாசிரியர்கள் முட்டுக்கட்டை போடுகிறார்கள்.
வாய்மையில் வழுவாத  திருவள்ளுவரின் படத்தை வகுப்பு அறையில் வைக்கவேண்டுமென்று திராவிட மாணவர்கள் விரும்பினால் அதற்கு ஆரிய ஆசிரியர்கள் பெரும் முட்டுக்கட்டை போடுகிறார்கள். அதோடுமாத்திரமன்றி வடநாட்டுப் பார்ப்பனத் தலைவர்களின் படத்தை திறந்துவையுங்கள் என்று ஞானோபதேசம் செய்கின்றனர். வேறு சில பள்ளிகளில் கருப்புச்சட்டையணிந்து பள்ளிக்குச் செல்லக்கூடாது என்றும், பெரியார் பேட்ஜு சட்டையில் குத்திக் கொண்டு பள்ளிக்குச் செல்லக் கூடாதென்றும் கட்டளையிடுகின்றனர். அதே நேரத்தில் வடநாட்டுத் தலைவர்களின் உருவம் பதித்த  பேட்ஜுகளைக் கதர்ச்சட்டையில் குத்திக்கொண்டு பள்ளிக்குவரும் மாணவர்களைக் கண்டிப்பதில்லை. அதற்கு மாறாகக் கருப்புச் சட்டையணிந்து பள்ளிக்கு வரும் மாணவர்களைப் பற்றிப் புகார் செய்யுங்கள் என்று கதர்ச்சட்டை அணிந்த மாணவர்களை ஏவி விடுகின்றனர் பார்ப்பன ஆசிரியர்கள்.
சில பள்ளிகளில் காங்கிரஸ் இயக்கத்தைச் சார்ந்த குறிப்பிடத்தக்கவர்களைக் கொண்டு கூட்டம் நடத்துகிறார்கள். ஆனால் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்களையோ, அல்லது தமிழன் என்ற உணர்ச்சி பெற்றவர்களையோ அவர்கள் எவ்வளவு தகுதியுடையவர்களாயினும் பள்ளிகளில் மாணவர்கள் அழைத்து கூட்டத்தில் பேசவைக்கவேண்டுமென்று விரும்பினால் தலைமையாசிரியர்கள் தடைசெய்கின்றனர். தடை செய்வது மாத்திரமன்றி அப்படிப் பட்டவர்களை வரவழைக்கவேண்டும் என்று கூறும் மாணவர்களின் பிற்கால வாழ்க்கையைக் கெடுத்துவிடவும் செய்கின்றனர். சில மாணவர்கள் எதற்கும் அஞ்சாது இனவுணர்ச்சிபெற்ற திராவிடத் தலைவர்களைக் கொண்டு கூட்டம் நடத்தித்தான் தீருவோம் என்று கூறினால், அரசியலில் சம்பந்தப்பட்டவர்கள் பள்ளிகளில் வந்து சொற்பொழிவாற்றக் கூடாது; அங்ஙனம் அவர்கள் சொற்பொழிவாற்றினால் மாணவர்கள் மனம் சிதறுண்டுவிடும்.   அவர்கள் செவ்வனே பாடங்களைப் படிக்கமாட்டார்கள் என்று பொய்க் காரணத்தைக்காட்டி இனவுணர்ச்சிபெற்ற மாணவர்களின் முயற்சியைத் தடைசெய்கிறார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்கள் தகுதியிருப்பினும் இராவிடினும் பள்ளிகளில் வந்து சொற்பொழிவாற்றலாமோவென்று கேட்கிறோம். அவர்கள் மாத்திரம் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களல்லவா? பின்னர் ஏன் திராவிடவுணர்ச்சி பெற்றவர்களையும்,  தமிழன்  என்ற உணர்ச்சி பெற்றவர்களையும் பள்ளிகளில் பேச அனுமதிப்பதில்லை?
சில பள்ளிகளில் திராவிடமாணவர்கள் நன்றாகப்படித்து முதல்  மார்க்கு பெறும் வண்ணம் தேர்வு எழுதினாலும் பார்ப்பன ஆசிரியர்கள் வேண்டுமென்றே அவர்களுக்கு குறைந்த மார்க்கு போட்டுச் சிறிதும் தகுதியில்லாத பார்ப்பன மாணவர்களுக்கு முதல் மார்க்கு கொடுக்கிறார்கள்.
வேறு சில பள்ளிகளில் காலையில், செத்தமொழியான  வடமொழியில்தான் இறை வணக்கம் பாடவேண்டும், தமிழ் மொழியில் இறை வணக்கம் பாடக்கூடாது என்று பார்ப்பன ஆசிரிரியர்கள் கூறுகிறார்கள். மீறி தமிழில்தான் இறைவணக்கம் பாடவேண்டும் என்று சொல்லும் மாணவர்கள் பார்ப்பன ஆசிரியரின் சூழ்ச்சிக்கு ஆளாகாமலிருப்பதில்லை. இன்னும் சில பள்ளிகளில் பார்ப்பன மாணவர்களுக்கெனத் தனியான உணவு விடுதிகளும்,   திராவிட மாணவர்களுக்கென தனியான உணவு விடுதிகளும் வைத்துள்ளனர். சமத்துவத்தையும், சமரசத்தையும் போதிக்கும் பள்ளிகளில் ஜாதி வித்தியாசம் ஏன்? என்று மாணவன் கேட்டால் அப்படிக்கேட்கும் மாணவன் பள்ளியிலிருந்து நீக்கப்படுகின்றான்.
மாணவர்களின் பாடத்திட்டத்தில் திராவிடர் களை அடிமைப்படுத்துவதற்குக் கருவிகளாயிருந்த புராணங்களைச் சேர்த்து அவைகளையும் படித்துத் தேர்ச்சிபெறவேண்டும் என்றுள்ளது. சில பள்ளிகளில் திராவிட உணர்ச்சிபெற்ற ஆசிரியர்கள் இருப்பார்களானால் அவ்வாசிரியர் களைத் தொலைத்துக் கட்டுவதற்குப் பார்ப்பன ஆசிரியர்களும், பார்ப்பனப் பாதந்தாங்கும் ஆசிரியர்களும் சதிசெய்கின்றனர்; மாணவர்களைத் தூண்டிவிட்டு இனவுணர்ச்சி பெற்ற நல்லாசிரியர்கள்மீது புகார் செய்யச் சொல்லுகிறார்கள். அதன் காரணமாகப் பல திராவிட ஆசிரியர்கள் வேலையினின்றும் விலக்கப்படுகிறார்கள்.
ஒருசில பள்ளிக்கூடங்களில் பார்ப்பன ஆசிரியர்கள் கருங்காலி மாணவர்களைத் தூண்டிவிட்டு ஆசிரியர்களையும் அடிக்கச் செய்கின்றனர். அடிபட்ட ஆசிரியர் மேலிடத்தில் நியாயத்திற்குச் சென்றால், பார்ப்பன ஆதிக்கம் பெற்ற மேலிடம் நீதி விழைந்து சென்ற ஆசிரியர்தான் தவறிழைத்தவர் என்று தீர்ப்பு கூறுகிறது.
இனவுணர்ச்சி கொண்ட மாணவர்கள் கல்விபயிலும் ஒரு பல்கலைக் கழகத்திற்கே ஆண்டுதோறும் அரசியலார் அளித்துவரும் பணவுதவியை நிறுத்திவிடவேண்டும் என்று சட்டசபையில் கூறப்படுகின்றது.
இன்னும் போகப் போக காங்கிரஸ் கட்சியைத் தவிர்த்து ஏனைய கட்சியை ஆதரிக்கும் எந்த மாணவனும் கல்விச்சாலையில் கல்வி பயிலக்கூடாது என்று சட்டம் இயற்றினாலும் இயற்றுவார்கள்! யாரறிவார்?
இன்னோரன்ன குறைபாடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இவற்றிற்கெல்லாம் காரணம் நாட்டு ஆட்சியும், அதிகாரபீடமும் பார்ப்பனர்களிடத்திலும், அவர்களின் அடிவருடி களிடத்திலும் இருப்பதுதான். இந்நிலை மாறினால் ஒழிய திராவிட மாணவர்களின் இழிவு நீங்காது என்று திட்டமாகக் கூறிவிடலாம்.
இவற்றை மாற்றுவதற்குத் திராவிட மாணவர்கள் என்ன செய்யமுடிவு செய்துள்ளனர்? இழிநிலை மாறுவதற்கு ஒரே ஒரு மருந்துதான் உண்டு. அதுதான் இனப்புரட்சி. அதுவும் ஒற்றுமையுடன் கூடிய இனப்புரட்சிதான் எளிதில் இழிநிலையைப்போக்கும்.
இப்போது திராவிட மாணவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் இனவுணர்ச்சிபெற்று விட்டனர். இனஉணர்ச்சிப் பெற்ற மாணவர்களெல்லாம் தங்கள் இனவுணர்ச்சியால் எழும் சக்திகளை ஒன்று  திரட்டி ஒரு பெரும் புரட்சி செய்தல் வேண்டும். அங்ஙனம் பெரும் புரட்சி செய்தால்தான் திராவிட மாணவர்களுக்கு இப்போதுள்ள இழிவுகளைப் போக்கமுடியும். அப்பெரும் புரட்சிதான் பாராளுமன்றம் முதல் பஜனைமடம் வரையில் பரவியிருக்கும் பார்ப்பன ஆதிக்கத்தை அடியோடு ஒழித்துத் திராவிடர்களை மக்களாக ஆக்கும்.
இன இழிவைப்போக்க எழுச்சி பெற்ற மாணவர்கள் செய்யப் போகும் தொண்டு சற்றுக் கடினம்தான். கரடுமுரடான பாதையையன்றோ செம்மைபடுத்த வேண்டும்? என்றாலும் தாங்கள் மேற்கொண்ட பணியை சலியாது ஆற்றுவர் என்பது திண்ணம். காரணம் அவர்கள் உலக வரலாறுகளை படிப்பவர்கள், சாம்ராஜ்யங்கள் சரிவுற்ற சரித்திரங்களை படிப்பவர்கள் முதலாளிகளின் ஆட்சியை ஒழித்துத் தொழிலாளர்களின் ஆட்சியை நிறுவிய தீரச்செயலை நன்குணர்ந்தவர்கள். எனவே அவர்கள் எதற்கும் அஞ்சார்கள்.
அதோ புரட்சி வாடை வீசுகிறது!
கோடை விடுமுறையில் அவர்கள் மாவட்டம் தோறும் செய்யும் பிரசாரந்தான் புரட்சியின் முதல் அறிகுறி. அதுதான் புரட்சி வாடை. இப்புரட்சிவாடை வரப்போகும் பெரும் புரட்சிக்கு வித்து என்று துணிந்து கூறலாம்.
எனவே, மாவட்டந்தோறும் உள்ள திராவிடர் கழகத் தோழர்கள் அடுத்த மாதம் தொடக்கத்தில் பிரசாரம் செய்யும் மாணவர்களை நன்கு பயன்படுத்திக்கொள்வார்களாக! உறுதியாக வருங்காலத்தில் இன இழிவு ஒழியும்!
குடிஅரசு, கட்டுரை, 19.04.1947
குறிப்பு : அன்றைக்கு பெரியார் பேசியதை இன்றைக்கு அய்.அய்.டி.யில் பெரியார்-அம்பேத்கார் வாசகர் வட்டத் தடை - மற்றும் பி.ஜே.பி. ஆட்சியுடன் ஒப்பிட்டு, பள்ளி பற்றி பேசியதை பல்கலைக் கழகம், அய்.அய்.டி. வரை விரிவு படுத்திப் பாருங்கள். அய்யா சென்னது அப்படியே பொருந்துவதை அறியலாம்.
-விடுதலை,1-15.6.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக