திங்கள், 16 நவம்பர், 2015

கிராமச் சீர்திருத்தம் என்பது புரட்டுதோழர்களே!


-தந்தை பெரியார்
கிராமதிகாரிகளும், ஆரம்ப ஆசிரியர்களும் ஆகிய இரு கூட்டத்தார்கள் அவர்களது தொழிலின் காரணமாக அடிமைகளேயா வார்கள். ஏனெனில், இருவரும் அரசியல் முறைப்படி இரு இலாகாவின் கடைசித்தர அடிமைகள்.
விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால் கிராம அதிகாரிகள் தலைவிதி தாசில்தார், ரிவின்யூ டிவிஷன் ஆபீசர் முதலியோருடைய பேனா முனையில் அடங்கி உள்ளதாகும்.

இந்த கிராம அதிகாரிகளுடையது மாத்திரமல்லாமல், இவர்களது பின் சந்ததிகளுடைய தலைவிதியும் அது போன்றதேயாகும். கிராம அதிகாரிகள் சர்க்கார் உத்தியோகஸ்தர்களுக்கு முறிச்சீட்டு எழுதிக் கொடுத்த அடிமை என்று சொன்னால் மறுப்பதற்குப் போதிய காரணங்கள் கிடையாது.
அதுபோலவே ஆரம்ப ஆசிரியர்கள் தலையெழுத்தும் இன்ஸ்பெக்டர் ஆப் ஸ்கூல், ஜில்லா போர்ட் பிரசிடெண்ட், சேர்மென் ஆகியவர்கள் கை பேனா முனையில்தான் இருக்கிறது என்பது என் அபிப்பிராயம்.
இவர்களுக்கு அளிக்கப்படும் நற்சாட்சிப் பத்திரங்கள் எல்லாம் இவர்கள் நல்ல நிபந்தனை இல்லாத அடிமைகளா என்பதைப் பொருத்ததே தவிர, இவர்களின் நடத்தையையோ, சாமர்த்தியத்தையோ பொருத்தது என்று அடியோடு சொல்லிவிட முடியாது.
ஆனால், இவர்கள் மேல் அதிகாரிகளால் யோக்கியமாய் கையாளப்படுவார்களே யானால், இவர்களும் நல்ல யோக்கியர்களாகவும், கெட்டிக்காரர்களாகவும் அமைவார்களானால் இவர்களால் ஜன சமூகத்துக்கு எவ்வளவோ நன்மை செய்ய வசதி இருக்கிறது.
இவர்களது நிலைமை அடிமைத்தன்மையானது என்றாலும், இவர்களது பதவி நல்ல பொறுப்பும், பயனும் உள்ளது என்பதை நான் அழுத்தம் திருத்தமாய்ச் சொல்லுவேன். இவர்கள் புது உலகத்தை சிருஷ்டிக்கலாம். கிராமாதிகாரி என்பவர் கிராம மக்களுக்குத் தகப்பனார் ஆவார்.
சிட்டி பாதர் (City Father) என்பதுபோல் இவர்கள் வில்லேஜ் பாதர்ஸ் (Village Fathers) ஆவார்கள். அதுபோலவே ஆரம்ப ஆசிரியர்களும் பிள்ளைகளுக்கு வெளிச்சத்தைக் கொடுத்து அந்த வெளிச்சத்திலேயே வாழ்நாள் முழுதும் நடக்கும்படிச் செய்யக்கூடிய ஒரு உயர்ந்த தச்சன் ஆவார்கள். இவர்கள் இருவரும் இன்றைய உலக வாழ்வில் ஒரு முக்கியமான ஸ்தானம் வகிப்பவர்களாவார்கள்.
தோழர் வேலாயுதம் அவர்கள் இவ்விருவரும் கிராமத்தை எந்த எந்த வழியில் முன்னுக்குக் கொண்டு வரலாம் என்பதைப் பற்றி பலவழிகள் சொன்னார்கள் என்றாலும், நானும் ஒரு வழி சொல்லுகிறேன். அந்த ஒரே வழியின் மூலம்தான் கிராமங்களை முன்னுக்குக் கொண்டு வரலாமே ஒழிய, மற்ற எந்த வழிகளாலும் கிராமங்களை முன்னுக்குக் கொண்டுவர முடியாது என்பது என் அபிப்பிராயம்.
கிராம முன்னேற்றம்
அந்த வழி என்னவென்றால், நாட்டில் கிராமங்களே இல்லாமல் செய்து விடுவதுதான். ஏனெனில், கிராமம் என்பது ஒருவித வருணாசிரம தர்ம முறையில் கீழான ஜாதிக்குச் சமமாய் இருப்பது.
மேல்ஜாதியானுக்கு உழைத்துப்போட வேண்டியது எப்படி கீழ்ஜாதியானின் கடமையாக இருந்து வருகின்றதோ, அதாவது கீழ்ஜாதியான் ஒப்புக்கொண்டாலும், ஒப்புக்கொள்ளா-விட்டாலும் ஜாதிமுறையில் கட்டுப்பட்டு இருப்பதன் காரணமாகவே எப்படி கீழ்ஜாதியான் என்பவன் உழைப்பவனாகவும், மேல்ஜாதியான் என்பவன் அவ்வுழைப்பை அனுபவிப்பவனாகவும் தானாகவே இருந்துவர முடிகின்றதோ அதுபோலவே பட்டணங்கள் மேல்ஜாதியாகவும்,
கிராமங்கள் கீழ்ஜாதியாகவும் இருந்துவருகின்றன. எப்படி கீழ்ஜாதிக்காக எவ்வளவுதான் பாடுபட்டு அவர்கள் முன்னேற்றத்துக்காக நாம் எவ்வளவுதான் உழைத்தாலும், அவர்கள் அடியோடு ஜாதி மதத்தை விட்டுவிட்டு வேறு மதத்திற்குப் போய்விட்டால் ஒழிய அவர்களது கீழ் ஜாதித்தன்மை ஒழிவதில்லையோ,
அதுபோல் மேல்ஜாதித்தன்மையும் ஒழிவதில்லையோ அதுபோலவேதான் கிராமங்கள்  அடியோடு ஒழிந்து கிராமவாசி என்கின்ற மதம் மாறி பட்டணவாசி, நகரவாசி என்கின்ற மதக்காரன் ஆனால் ஒழிய, கிராமவாசி கஷ்டம் ஒழியப்போவதில்லை.
ஆதலால், கிராம அதிகாரிகளும், ஆரம்ப ஆசிரியர்களும் கிராம முன்னேற்றம் என்னும் துறையில் ஏதாவது உழைக்க வேண்டும் என்கின்ற ஆசை இருந்தால் அவர்கள் கிராம ஜனங்களையெல்லாம் நயத்திலோ, பயத்திலோ பட்டணங்கள், நகரங்கள் ஆகியவற்றுக்குத் துரத்திவிடுவதேயாகும்.
கிராம முன்னேற்றம் என்றால் என்ன? கிராம ஜனங்களுடைய முன்னேற்றம் என்பதேயாகும். கிராம ஜனங்கள் முன்னேற்றம் என்றால் என்ன? கிராம ஜனங்களுடைய சவுக்கியமேயாகும்.
கிராம ஜனங்களுடைய சவுக்கியம் என்றால் என்ன? கிராம ஜனங்கள் பட்டணத்தில் உள்ள ஜனங்கள் அடைகின்ற சவுகரியங்களையும், சுகங்களையும் அடையவேண்டும் என்பதாகவே ஆக வேண்டும் அல்லவா?
அப்படிக்கில்லாமல் கிராமத்துக்கு இட்டேரி போட்டு ஒரு கிணறு வெட்டிக்கொடுத்து, ஒரு பள்ளிக்கூடம் கட்டிவைத்து கம்பு இப்படி விதைக்கிறது, சோளம் இப்படி அறுக்கிறது, விறகு இப்படி உடைக்கிறது, ஆடு-_மாடு இப்படி மேய்க்கிறது, பால்_வெண்ணெய் இப்படி எடுத்து நகரத்துக்காரனுக்குக் கொண்டுவந்து கொடுத்து-விட்டுப் போவது, சாணி இப்படிச் சேகரம் செய்வது,
எருமுட்டை இப்படித் தட்டுவது, ஏர் இப்படி உழுவது, களை இப்படி எடுப்பது, தண்ணீர் இப்படிப் பாய்ச்சுவது, இப்படி அறுப்பது, அறுத்து பட்டணத்தானுக்கு இப்படிக் கொண்டுவந்து சேர்ப்பது என்பன முதலியவற்றைக் கிராம மக்களுக்குச் சொல்லிக் கொடுத்தால் போதுமா?
அதுபோலவே கைத்தொழில் விஷயத்திலும் இப்படிப் பஞ்சு அரைப்பது, இப்படிப் பஞ்சு கொட்டுவது, இப்படி ராட்டினத்தில் நூல் நூற்பது, இப்படி நூல் கொண்டுவந்து பட்டணத்தில் விற்றுவிட்டு உப்பு, மிளகாய், கடுகு, மிளகு, சீரகம் வாங்கிக்கொண்டு போவது என்பன போன்றவை சொல்லிக் கொடுத்தால் போதுமா?
இவற்றால் எல்லாம் கிராமவாசி சினிமா பார்க்க முடியுமா? நல்ல துணிமணி, மேல்சட்டை போட முடியுமா? பார்க்கில் உலாவ முடியுமா? அவன் பெண்டு, பிள்ளை  ஷி.ஷி.லி.சி. இல்லா விட்டாலும் தாய் பாஷையில் கையெழுத்துப் போடவாவது கற்றுக்கொள்ள முடியுமா? அல்லது கிராமவாசிகளுக்கு இந்த உரிமை, மனுவோ கடவுளோ பிறவியிலேயே கொடுக்கவில்லையா?
சூத்திரன், முதல் மூன்று வருணத்தானுக்கு உழைக்கவே பிறந்தான். சூத்திரன் பணம் வைத்துக்கொண்டிருந்தால் பலாத்காரமாய் மேல்ஜாதிக்காரன் பிடுங்கிக் கொள்ளலாம் என்கின்ற மனுதர்ம சாஸ்திரம்-போல், கிராமவாசி பட்டணவாசிக்கு உழைத்துப் போடவே பிறந்தான், கிராமவாசி பணம் வைத்துக் கொண்டிருந்தால், வக்கீலும், வியாபாரியும், லேவாதேவிக்காரனும் கழுத்தைத் திருகி, பிடுங்கிக் கொள்ளலாம் என்று ஏதாவது, கினு சாஸ்திரம் இருக்கிறதா?
கிராமவாசியை மனிதன் என்று இன்று யாராவது மதிக்கிறார்களா? அவர்களின் வாழ்க்கை மிருக வாழ்க்கையைவிட வேறு வழியில் மாற்றம் இருக்கிறதா?
இன்று இந்தியாவில் 100க்கு 8 பேர் படித்து இருக்கிறார்கள் என்றால், அந்த 8 பேர் யார்? கிராமவாசிகளுள் படித்தவர் விகிதாசாரம் என்ன? அவர்களிலும் 100க்கு 8 பேர் படித்து இருக்கிறார்களா? மேல்ஜாதிக்காரர்கள் 100க்கு 100 பேர், பட்டணவாசிகள் 100க்கு 50 அல்லது 60 பேர் ஆக இந்தக் கூட்டத்தாரின் எண்ணிக்கைப் பெருக்கத்தால்தான் எல்லா மக்களுக்கும் இந்தியாவில், 100க்கு 8 வீதம் கணக்கு ஆகிறதே தவிர, கிராமவாசிகள் 100க்கு 2, 3 பேர் கூட படித்து இருக்கவில்லை.
ஒரு கிராமம் என்றால் ஒரு பணக்காரன் ஆதிக்கமும், மற்ற மக்களை அவன் அடக்கி ஆளுவதும், அந்தப் பணக்காரன் பட்டணத்தான்-களுக்கு அடிமையாகி மற்ற கிராம ஜனங்களை அரித்துக் கொண்டு வந்து கொடுப்பதும் என்பதல்லாமல் வேறு என்ன நிலையில் கிராமம் இருக்கிறது என்று பாருங்கள்.
கிராமநிலை குப்பை மேடு, கக்கூஸ், ஜலதாரை நாற்றம், தரித்திரக் குச்சுகள், நோய் உருவங்கள், முட்டாள்தனமும், மூட-நம்பிக்கையும் தாண்டவம் என்பவை போன்றவை அல்லாமல், வேறு என்ன காணமுடிகின்றது என்று நீங்களே யோசித்துப் பாருங்கள். நமது நாட்டில் வரிகள் முழுவதும் கிராமவாசிகள் உழைப்பையே அஸ்திவாரமாய்க் கொண்டதாகும். அவர்களை நாம் மனுஷ வர்க்கத்தில் சேர்ப்பதில்லை.
ஆனால், அவர்களுக்காகவே பாடுபடுகிறோம் என்று வேஷம் போட்டு, நாம் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளுகிறோம். நமது சுயராஜ்ஜியத்தாலோ, நமது பூரண சுயேச்சையாலோ, சமுக முன்னேற்றத்தாலோ, ராமராஜ்ஜியத்தாலோ கிராமவாசிகளுக்கு  ஏற்படும் நன்மை என்ன? இதுவரை ஏற்பட்டதென்ன? என்று நீங்களே யோசித்துப்-பாருங்கள். இந்திய காங்கிரஸ் சர்வாதிகாரியான அல்லது சூத்திரதாரியான தோழர் காந்தியாரின் கிராம முன்னேற்றத் திட்டம் என்ன என்று பாருங்கள்.
கிராமவாசிகள் பெட்டிகளில் வெள்ளி நாணயம் இருக்கக்கூடாது என்று காந்தியார் பலதடவை சொல்லி இருக்கிறார். நெல்லுக் குத்தவேண்டும், கருப்பட்டி காய்ச்ச வேண்டும், ராட்டினம் நூற்கவேண்டும் என்பது போன்ற திட்டங்கள் மூலம் 1000 வருஷத்துக்கு முன்னால் இருந்த உலகத்துக்குப் போகச் சொல்லுகிறார்.
இதனால் கிராமம்தான் ஆகட்டும், கிராமவாசிதான் ஆகட்டும், எப்படி முன்னுக்கு வரமுடியும்? என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். நகரத்தில், பட்டணத்தில் இருக்கிற ஒரு தொழிலாளிக்கோ, வீதி கூட்டுபவனுக்கோ உள்ள சவுகரியம், அனுபவம் கிராமாந்தர மிராசுதாரனுக்கு இல்லை என்றால் நீங்கள் நம்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.
இயந்திரசாலைத் தொழிலாளிகளைப் பற்றிப் பிரமாதமாகப் பேசுகிறோம்; அவர்கள் நன்மையே உலக நன்மை என்று பிரச்சாரம் செய்கிறோம். அவர்களாலேயே உலகம் இருக்கிறது என்று சொல்லுகின்றோம். இயந்திரசாலைத் தொழிலாளிகளின் உழைப்பை-விட கிராமவாசிகள் உழைப்பு கொஞ்சமானதா? அல்லது இயந்திரசாலைத் தொழிலாளிகளால் நாட்டுக்கு ஏற்படுகின்ற நன்மையைவிட கிராமவாசிகளால் ஏற்படும் நன்மை குறைந்ததா? என்று யோசித்துப் பாருங்கள்.
ஆனால் அவர்கள் நிலைமையையும், கிராமவாசிகளின் நிலைமையையும் சிறிது ஒப்பிட்டுப் பாருங்கள், கிராமவாசிகள் நிலை எவ்வளவு பரிதாபகர-மானது என்று பாருங்கள்.
என்றாலும், ஒரு விஷயத்தில் நான் நம்பிக்கையும், மகிழ்ச்சியும் அடைகிறேன். என்னுடைய ஆசை தானாகவே நிறைவேறி வருகிறது. அதாவது கிராமங்கள் தானாகவே அழிந்து வருகின்றன. கிராம ஜனங்கள் பட்டணங்களுக்குத் தானாகவே குடி ஏறி வருகிறார்கள். இந்த 25 வருஷத்தில் பழைய கிராமங்கள் ஒன்றுக்குப் பகுதி ஆகிவிட்டன.
பட்டணங்கள் ஒன்றுக்கு ஒன்றரை, இரண்டு பங்குகூட ஜனப்பெருக்கம் ஆகிப் பெருத்துவிட்டன. உதாரணமாக, இந்த ஈரோட்டை எடுத்துக் கொள்ளுங்கள். 1910இல் பதினாறாயிரம் ஜனங்கள் ஈரோட்டில் இருந்தார்கள். 1920இல் 22 ஆயிரம் ஜனங்கள் ஆனார்கள். 1930இல் 34 ஆயிரம் ஜனங்கள் ஆனார்கள். 1936இல் இப்போது கிட்டத்தட்ட நாற்பதாயிரம் ஜனங்கள் ஆகி இருப்பார்கள்.
இதுபோலவே நமது ஜில்லாவிலேயே கோயமுத்தூர், திருப்பூர், பொள்ளாச்சி முதலிய நகரங்கள் இரட்டிப்பு ஆகிவருகின்றன. இந்த ஜனங்கள் எங்கிருந்து உற்பத்தி ஆனார்கள்? சொல்லுங்கள் பார்க்கலாம். கிராமங்கள் காலி ஆகிவருகின்றன. கிராம ஜனங்களுக்குப் பட்டணவாசத்தில் மய்யல் ஏற்பட்டுவிட்டது. இனி அதைத் தடுக்க யாராலும் ஆகாது என்பதை மனதில் வையுங்கள்.
ஒரு சமூகம் முன்னேற்றம் அடைந்தது என்றால் அந்தச் சமூகத்தில் எப்படி கீழ்ஜாதி, ஈன ஜாதி மக்கள் என்பவர்கள் இருக்கக்-கூடாதோ, அதுபோலவே ஒரு நாடு முன்னேற்றம் அடைந்தது என்றால் அந்த நாட்டில் கிராமங்கள், பட்டிகள், தொட்டிகள் இருக்கக்கூடாது என்பது என் கருத்து. நாடெல்லாமே நகரங்களாய் இருக்க வேண்டும்.
சூரியன், சந்திரன், தென்றல் எப்படி எல்லோருக்கும் பொதுவோ, அப்படியே பொதுவாழ்க்கை போக்கியங்கள் எல்லோருக்கும் பொதுவாய் இருக்க வேண்டும்; பட்டணத்தில் இருப்பதால் மாத்திரம்தான் அனுபவிக்க முடிகின்றது, கிராமத்தில் இருப்பதால் அனுபவிக்க முடிகிறதில்லை என்கின்ற நிபந்தனை இருக்கக்கூடாது.
சமதர்மம் ஓங்கும் நாடுகளில் கிராமம் என்பதாக ஒன்று இல்லை. வேண்டுமானால் ஒரு நகரத்தில் 25 லட்சம் பேர் இருக்கலாம், மற்றொரு நகரத்தில் 250 பேர் இருக்கலாம், பாடும், அனுபவமும் இருவருக்கும் ஒரே மாதிரிதான்.
இந்த சவுகரியம் செய்ய பொது உடைமையோ, சமதர்மமோ, சட்ட மறுப்போ, ஒத்துழையாமையோ, பூரண சுயேச்சையோ தேவையில்லை; ஜனப்பிரதிநிதிகள், ஜனத்-தலைவர்கள் யோக்கியர்களாக இருந்தால் போதும்.
அவர் அப்படி இல்லாவிட்டாலும் ஆரம்ப ஆசிரியர்களும், கிராம அதிகாரிகளு-மாவது இந்த வேலை செய்தால் போதும். நீங்கள் ஒருவரும் செய்யாவிட்டாலும் இயற்கை செய்யப் போகிறது; செய்து கொண்டு இருக்கிறது. அதைத் தடுக்காமல் இருந்தாலும் போதும்.
(31-10-1936 அன்று ஈரோடு கிராம உத்தியோகஸ்தர் சங்க ஆண்டு விழாவில் கிராம அதிகாரிகளும் ஆரம்ப ஆசிரியர்களும் என்பது பற்றி தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு)
- குடிஅரசு - 22.11.1936
உண்மை இதழ்,15-28.2.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக