ஞாயிறு, 8 நவம்பர், 2015

கடவுள் அனாதியா? - தந்தை பெரியார்


வினா:- அவர்கள் ஏன் கடவுளை நம்பவில்லை?
விடை:- பொது ஜனங்கள் சந்தர்ப்பப் படியுள்ள கடவுள் நமது அறிவுக்கு அதீதமானதென்று அவர்கள் கூறுகிறார்கள்.
வினா:- கடவுள் உண்மையை நிரூபித்துக் காட்ட முடியாதா?
விடை:- சிலர் முடியும் என்கிறார்கள். சிலர் முடியாது என்கிறார்கள்.
வினா:- கடவுளுண்மைக்குக் கூறப்படும் ஆதாரங்கள் எவை?
விடை:- முதல் ஆதாரம் காரண, காரிய வாதம்.
வினா:- அதை விளக்கிக்கூறு.
விடை:- எதற்கும் ஒரு காரணம் இருக்கவேண்டும். எனவே, பிரபஞ்சத் துக்கும் ஒரு கர்த்தா இருக்க வேண்டும். அந்தக் கர்த்தாவே கடவுள்.
வினா: இது ஒரு பலமான வாதமல்லவா?
விடை: பலமான வாதந்தான். ஆனால், முடிவானதல்ல.
வினா:- ஏன்?
விடை:- யாவற்றிற்கும் ஒரு காரண மிருக்க வேண்டுமானால், கடவுளுக்கும் ஒரு காரணமிருக்க வேண்டுமே.
வினா:- கடவுள் அனாதியாக இருக்கக் கூடாதா?
விடை:- காரணமில்லாமலே கடவு ளுக்கு இயங்க முடியுமானால் காரண மில்லாமல் காரியமில்லை என்ற வாதமே அடியற்று வீழ்ந்து விடுகிறது.
வினா:- அப்புறம்?
விடை:- காரணமின்றி அனாதி கால மாக கடவுள் இயங்க முடியுமானால், பிரபஞ்சமும் எக்காரணமுமின்றி அனாதிகாலமாக இயங்க முடியும். வினா:- கடவுளுக்கும் ஒரு காரணமுண்டு என சம்மதித்தால் என்ன நஷ்டம் வந்து விடப்போகிறது?
விடை:- அப்படியானால் அந்தக் காரணத்துக்கு மூலகாரணமென்ன வென்று ஆராய வேண்டியதாக ஏற்படும். அவ்வாறு ஆராயத் தொடங்கினால் முடிவே ஏற்படாது.
வினா:- வேறு வாதமென்ன?
விடை: பூர்ணத்துவ வாதம்.
வினா:-  அது என்ன? விளக்கிக் கூறு?
விடை:  அதாவது நாம் அபூரண ராக இருந்தாலும், (குறைபாடுடையவர் களாக இருந்தாலும்) பூரணமான ஒரு பொருள் உண்டென்ற உணர்ச்சி நமக்கு இருந்து கொண்டு இருக்கிறது. அந்த உணர்ச்சி அந்தப் பூரணப் பொருளின் சாயல் என்று நம்பப்படுகிறது.
வினா:- அதனால் நாம் ஊகிக்க வேண்டியதென்ன?
விடை:- அந்த உணர்ச்சி நமது உள்ளத்துள் இருந்து கொண்டு இருப்ப தினால் அதற்கு ஆதாரமாக ஒன்று இருக்க வேண்டுமென்றும், அதுவே கடவுள் என்றும் ஊகிக்க இடமிருக்கிறது.
வினா:- மேலும் கொஞ்சம் விளக்குக!
விடை:- ஒரு பூரண வஸ்துவின் பிரதிபிம்பம் நமது உள்ளத்துத் தோன்ற வேண்டுமானால் அது உள்பொருளாக இருக்க வேண்டும் அது உள்பொருளாக இல்லையானால் பூரணமாக இருக்க முடியாது.
வினா:- அப்படியானால் முடிவு என்ன?
விடை:- கடவுளைப்பற்றிய உணர்ச்சி நமக்கு இருப்பதினால் கடவுள் ஒன்று இருக்க வேண்டும். அப்படி ஒன்று இல் லையானால் நமக்கு அந்த உணர்ச்சி ஏற்பட்டிருக்கவே செய்யாது என்பது தான் முடிவு.
வினா: இந்த வாதம் சரியானது தானா?
விடை:- முதல்வாதத்தைப் போல இது அவ்வளவு உறுதியானதல்ல.
வினா:- ஏன்?
விடை:- பூரணத்துவம் ஒரு குணம். உண்மை ஒரு நிலைமை அவை இரண்டும் சம்பந்தமற்றவை. ஒரு பெரிய பட்டணம் கடலில் ஆழ்ந்து கிடப்ப தாகவோ, மேக மண்டலத்தில் மிதந்து கொண்டிருப்பதாகவோ நமது உள்ளத்துள் ஒரு உணர்ச்சி ஏற்படலாம். ஆனால் அப்பேர்ப்பட்ட ஒரு பட்ட ணம் இருக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை.  அது போல ஒரு பூரண வஸ் துவைப்பற்றிய உணர்ச்சி நமக்கு இருப் பதனால் ஒரு பூரண வஸ்து இருக்க வேண்டுமென்ற கட்டாயமுமில்லை.
வினா:- வேறொரு உதாரணத்தினால் விளக்கிக் காட்டு.
விடை:- பூமி பரந்திருப்பதாக வெகுகாலம் மக்கள் நம்பி வந்தார்கள். அந்த உணர்ச்சி உலகத்தின் பிரதி பிம்பமாக இருக்க முடியாது. ஏனெனில் பரப்பான பூமி இல்லவே இல்லை.
வினா:- அப்படியானால் பூரண வஸ்துக்களும் அபூரண வஸ்துக்களும் நமது மனோ கற்பிதம் தானா?
விடை: ஆம்
வினா:- அடுத்தவாதம் என்ன?
விடை: அடுத்தது உருவக வாதம்.
வினா: அதை விளக்கு
விடை:- வினாடி, நிமிஷம், மணி காட் டும் முறையில் ஒரு கடிகாரம் உருப் படுத்தப்பட்டிருப்பதினால் அது ஒரு நோக்கத்துடன் உண்டு பண்ணப் பட்டிருக்கிறதென்றும், அதற்கு ஒரு கர்த்தா இருக்க வேண்டுமென்றும் நாம் அறிகிறோம். அதுபோல உலகம் ஒரு நோக்கத்தோடு சிருஷ்டிக்கப்பட்டிருப்ப தினால் அதற்கு ஒரு கர்த்தா இருக்க வேண்டும். அந்த கர்த்தாவே கடவுள்.
வினா:- இந்த வாதம் எப்பேர்ப்பட் டது?
விடை:- கடிகாரத்தை உலகத்துக்கு உவமையாகக்கூற முடியாது. கடிகாரம் எதற்காக உண்டு பண்ணப்பட்ட தென்று கூறிவிடலாம். ஆனால் உலகம் எதற்காக உண்டு பண்ணப்பட்ட தென்று கூறுவது அவ்வளவு சுலபமான காரியமல்ல.
வினா:- பிரபஞ்ச அமைப்பு கடிகார அமைப்புப்போல அவ்வளவு தெளிவான தல்லவா?
விடை: தெளிவாக இருந்தால் இரகசியங்களுக்கு இடமே இல்லை.
வினா:- கடிகாரத்தைப் பற்றி நாம் பூரணமாக அறிந்திருப்பது போல பிரபஞ்சத்தைப்பற்றி நாம் பூரணமாக அறியவில்லையென்று நீ கூறுகிறாயா?
விடை:- ஆம், கடிகாரத்தின் அமைப்பை நமக்குத் தெளிவாக விளக்கிக் கூறமுடியும். பிரபஞ்ச அமைப்பைத் தெளிவாக விளக்கிக் கூற முடியாது.
வினா:- இந்த வாதத்தைப் பற்றி வேறு ஏதாவது சொல்ல வேண்டிய துண்டா?
விடை: கடிகாரத்தைப் பார்த்தவுடன் அதை உண்டு பண்ணியவன் ஒருவன் இருக்க வேண்டுமென்று அறியலாமே யன்றி கடிகார உற்பத்திக்குக் காரணமான பொருள்களை உண்டு பண்ணினவன் ஒருவன் இருக்க வேண்டுமென்றும் சொல்ல முடியாது.
வினா : வேறு என்ன?
விடை : உலகத்தை உண்டு பண்ணி யவன் ஒருவன் உண்டென்று ஒப்புக் கொண்டாலும் உலகத்தை சிருஷ்டித் தவன் ஒருவன் இருப்பதாக நமக்கு ருசுப்படுத்த முடியாது.
வினா : இம்மாதிரியான சங்கடங்கள் பல இருப்பதினால் பிரஸ்தாப விஷயத் தில் நாம் கைகொள்ள வேண்டிய நிலை என்ன?
விடை : நாம் அந்தரங்கச் சுத்தி யோடு ஆராய வேண்டும். பிடிவாதமாக எதையும் நம்பக்கூடாது. திறந்த மனத்தோடு உண்மையை அறிய முயலவேண்டும்!
வினா : கடவுள் என்ற பெயரை நாம் எந்தப் பொருளில் வழங்கவேண்டும்?
விடை : ஜீவகோடிகளின் உயர்ந்த லட்சியத்தைக் குறிக்கும் பொருளாகவே நாம் வழங்க வேண்டும்.
வினா : அப்படியானால் சிலரின் தெய்வங்கள் உத்தமமானவை என்றும் சிலரின் தெய்வங்கள் மோசமானவை என்றும் ஏற்படாதா?
விடை : ஆம்; நிச்சயமாக ஏற்படும். ஒவ்வொரு மனிதனும் அவனவன் லட்சியத்துக்கும் கடவுளுக்கும் அளவுகோலாக இருக்கிறான்.
வினா : மேலும் கொஞ்சம் விளக்கு.
விடை : நமது கண் பார்வை எட் டும் அளவுக்கு நமக்குப் பார்க்க முடியும் அதுபோல நம் மனோசக்திக்கு இயன்ற அளவிலே நமக்குச் சிந்திக்கவும் விரும்பவும் முடியும்.
வினா: அப்படியானால் கடவுளைச் சிருஷ்டித்தது யார்?
விடை : ஒவ்வொருவனும் தன் கட வுளைச் சிருஷ்டித்துக் கொண்டான்.
குடிஅரசு -கட்டுரை (உரையாடல்) 03.05.1936
-விடுதலை ஞா.ம.,2.8.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக